The heir of Bhagadatta! | Aswamedha-Parva-Section-75 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 60)
பதிவின் சுருக்கம் : பிராக்ஜோதிஷ நாட்டுக்குச் சென்ற குதிரை; குதிரையைக் கைப்பற்றிய வஜ்ரதத்தன்; அர்ஜுனனுக்கும், வஜ்ரதத்தனுக்கும் இடையில் நடந்த போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்த முதன்மையான குதிரை பிராக்ஜோதிஷ நாட்டுக்குள் சென்று அங்கே திரியத் தொடங்கியது. போரில் வீரமிக்கவனான பகதத்தனின் மகன் இதைக் கண்டு (அர்ஜுனனுடன் மோதுவதற்காக) வெளியே வந்தான்.(1) ஓ! பாரதர்களில் தலைவா, மன்னன் வஜ்ரதத்தன் {யஜ்ஞதத்தன்}, தன் நாட்டுக்குள் வந்த (வேள்விக்) குதிரையைக் கண்டு, (அதைப் பிடிப்பதற்காகப்) போரிட்டான்.(2) பகதத்தனின் அரசமகன், தன் நகரத்தைவிட்டு வெளியே வந்து, அங்கே வந்த குதிரையைப் பீடித்து (அதைக் கைப்பற்றி) தன் இடத்தை {பட்டணத்தை} நோக்கித் திரும்பிச் சென்றான்.(3) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட குருகுலத் தலைவன் {அர்ஜுனன்} இதைக் கண்டு, விரைவாகத் தன் காண்டீவத்தை வளைத்துத் திடீரெனத் தன் பகைவனை நோக்கி விரைந்தான்.(4) காண்டீவத்திலிருந்து வெளிப்பட்ட கணைகளால் திகைப்படைந்த பகதத்தனின் வீர மகன் {வஜ்ரதத்தன்}, குதிரையை விட்டுவிட்டுப் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து தப்பி ஓடினான்[1].(5)
[1] "ஒவ்வொரு பதிப்பிலும் உள்ள உரை பிழையானதாக இருக்கிறது. வெளிப்படையான காரணங்களுக்காக, பார்தமுபாத்ரவத் என்பதற்குப் பதிலாகப் பார்ததுபாத்ரவத் என்று நான் கொள்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிறகு, வீரனான (அந்த) அரசன் காண்டீவத்தினின்று விடப்பட்ட பாணங்களால் புத்தி கலங்கி அந்தக் குதிரையை விட்டுவிட்டு அர்ஜுனனை எதிர்த்து வந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "காண்டீவத்தில் இருந்து வெளிப்பட்ட கணைகளால் மன்னன் பீடிக்கப்பட்டான். அந்தத் துணிவுமிக்கவன் குதிரையை விடுவித்து, பார்த்தனைத் தாக்கினான்" என்றிருக்கிறது. ஆனால் கங்குலி சொல்வது போல, அவர் அந்தப் பொருளைக் கொள்ளவில்லை என்றால், சுலோகம் 5க்கும் 6க்கும் இடையில் பெருத்த வேறுபாடு ஏற்படுகிறது.
போரில் தடுக்கப்பட முடியாதவனான அந்த முதன்மையான மன்னன் {வஜ்ரதத்தன்}, மீண்டும் தன் தலைநகருக்குள் நுழைந்து, கவசம் பூண்டு, யானைகளின் இளவரசனான தன் யானையில் ஏறி வெளி வந்தான்.(6) அந்த வலிமைமிக்கத் தேர்வீரன், தன் தலைக்கு மேல் வெண்குடையைக் கொண்டிருந்தான், அவனுக்குப் பால்போன்ற நிறத்தில் இருந்த வெண்சாமரம் வீசப்பட்டது.(7) சிறுபிள்ளைத்தனம் மற்றும் மூடத்தனத்தால் அவன், பாண்டவர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனும், போர்க்களத்தில் பயங்கரச் செயல்களுக்காகப் புகழ்பெற்றவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போர்புரிய அவனை அறைகூவியழைத்தான்.(8) சினம் தூண்டப்பட்ட அந்த இளவரசன், முழு மலைக்கு ஒப்பானதும், மதப்பெருக்குள்ள கன்னப்பொட்டுகளும், வாயும் கொண்டதுமான தன் யானையை அர்ஜுனனை நோக்கித் தூண்டினான்.(9) உண்மையில் அந்த யானை, மழைபொழியும் பெரும் மேகத்திரளைப் போலத் தன் மதத்தைப் பெருக்கியது. தன் இனத்தைச் சேர்ந்த படையின் சாதனைகளைத் தடுக்க வல்ல அது, (போர் யானைக்குரிய) உடன்பாட்டுவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. போரில் தடுக்கப்படமுடியாததான அது, கட்டுப்பாட்டைக் கடந்த மதங்கொண்டிருந்தது.(10)
இரும்பு அங்குசத்தைக் கொண்டு அந்த இளவரசனால் தூண்டப்பட்ட அந்தப் பெரும் யானை, (பறந்து வரும் மலையைப் போல) ஆகாயத்தையே பிளப்பது போல (முன்னேறிச் செல்வதாகத்) தெரிந்தது. ஓ! மன்னா, ஓ! பாரதா, தன்னை நோக்கி முன்னேறிவரும் அதனைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, சினத்தில் நிறைந்தவனாகப் பூமியில் நின்றபடியே, அதன் முதுகில் இருந்த இளவரசனோடு மோதினான்.(12) கோபத்தில் நிறைந்திருந்த வஜ்ரதத்தன், நெருப்பின் சக்தியைக் கொண்டவையும், (காற்றில் செல்லும்போது) வேகமாகப் பறக்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஒப்பானவையுமான பெரும் எண்ணிக்கையிலான தோமரங்களை அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(13) எனினும், அர்ஜுனன், காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு அந்தத் தோமரங்களில் சிலவற்றை இரண்டாகவும், சிலவற்றை மூன்றாகவும் வெட்டினான். ஆகாயத்தில் பறக்கும் தன் கணைகளைக் கொண்டே அவன் அவற்றை ஆகாயத்திலேயே வெட்டினான்.(14) இவ்வாறு தன் தோமரங்கள் வெட்டப்பட்டதைக் கண்ட பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, எண்ணற்ற பிற கணைகளைத் தொடர்ச்சரமாக அர்ஜுனனை நோக்கி ஏவினான்.(15)
இதனால் சினம் கொண்ட அர்ஜுனன், தங்கச் சிறகுகளுடன் கூடிய நேராகச் செல்லும் எண்ணற்ற கணைகளைப் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்} மீது முன்னைவிட வேகமாக ஏவினான்.(16) பெருஞ்சக்தி கொண்ட வஜ்ரதத்தன், சீற்றமிக்க மோதலில் பெரும் பலத்துடன் தாக்கப்பட்டு, அந்தக் கணைகளால் துளைக்கப்பட்டுப் பூமியில் விழுந்தான். எனினும், நனைவுநிலை அவனைக் கைவிடவில்லை {அவனுக்கு நினைவு தவறவில்லை}.(17) வெற்றியை விரும்பும் பகதத்தன் மகன் {வஜ்ரதத்தன்}, அந்தப் போருக்கு மத்தியில் மீண்டும் யானைகளின் இளவரசனான தன் யானையின் மீது ஏறி, மிக நிதானமாக எண்ணற்ற கணைகளை அர்ஜுனன் மீது ஏவினான்.(18) கோபத்தால் நிறைந்த ஜிஷ்ணு, நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களைப் போலத் தெரிந்தவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் பலவற்றைப் போலத் தெரிந்தவையுமான எண்ணற்ற கணைகளை அந்த இளவரசன் மீது ஏவினான்.(19) அவற்றால் துளைக்கப்பட்ட அந்த வலிமைமிக்க யானை, பெருமளவிலான குருதியைச் சிந்தி, செஞ்சுண்ண நிறத்தில் நீரை வெளியிடும் சிற்றோடைகள் பலவற்றைக் கொண்ட ஒரு மலையைப் போலத் தெரிந்தது[2]" {என்றார் வைசம்பாயனர்}.(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பெரிய யானையானது, அந்தப் பாணங்களால் அடிக்கப்பட்டு உதிரத்தைப் பெருக்கிக் கொண்டு அப்பொழுது அநேகமான அருவிகளுள்ளதும், மலைகளுள் சிறந்ததுமான இமய மலை போல விளங்கிற்று" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "இந்தக் கணைகள் நெருப்பைப் போன்ற தழல்விட்டன. அவற்றால் துளைக்கப்பட்ட அந்தப் பெரும் யானையில் இருந்து, மலைகளின் இந்திரனான ஹிமாலயத்தில் பாயும் பல ஓடைகளைப் போல குருதி பாயத் தொடங்கியது" என்றிருக்கிறது.
அஸ்வமேதபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |