Vajradatta defeated! | Aswamedha-Parva-Section-76 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 61)
பதிவின் சுருக்கம் : பகதத்தன் மகனான வஜ்ரதத்தனை வென்ற அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதர்களின் தலைவா, நூறு வேள்வி செய்தவனுக்கும் {இந்திரனுக்கும்}, விருத்திரனுக்கும் இடையில் நடந்த போரைப் போல அர்ஜுனனுக்கும், அந்த இளவரசனுக்கும் {வஜ்ரதத்தனுக்கும்} இடையில் நடந்த போர் இவ்வாறே மூன்று நாள் நீடித்தது.(1)
நான்காம் நாளில், பெரும் வலிமை கொண்ட வஜ்ரதத்தன் உரக்கச் சிரித்துக் கொண்டே அர்ஜுனனிடம், "ஓ! அர்ஜுனா, நில், நிற்பாயாக. உன்னால் உயிருடன் தப்ப இயலாது. உன்னைக் கொன்று என் தந்தைக்கு {பகதத்தருக்குச்} செய்ய வேண்டிய நீர்ச்சடங்கை {தர்ப்பணத்தை} முறையாக நான் செய்யப் போகிறேன்.(3) உன் தந்தையின் நண்பரும், வயது முதிர்ந்தவருமான என் தந்தை பகதத்தர், அவருடைய முதுமையின் விளைவால் உன்னால் கொல்லப்பட்டார். எனினும், சிறுவனான என்னுடன் நீ போரிடுவாயாக[1]" என்றான்.(4)
[1] "பகதத்தன், அர்ஜுனனின் தந்தையான இந்திரனின் நண்பனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நீ வயது சென்றவரும், என்னுடைய தந்தையுமான பகத்தராஜரையும், என் பிதாவினுடைய பிராயமுதிர்ந்தவரான நண்பரையும் துன்பப்படுத்திக் கொன்றாய். இப்போது பாலனான என்னுடன் போர் புரி" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வயது முதிர்ந்த என் தந்தை பகதத்தர் உன் தந்தையின் நண்பராவார். வயது முதிர்ந்தவரான அவர் கொல்லப்பட்டார். வயது வராத சிறுவனாக இருப்பினும் நீ இப்போது என்னுடன் போரிடுவாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "குருக்ஷேத்திரப் போரில் பகதத்தன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான். பகதத்தன் இந்திரனின் நண்பனாவான். அவ்வாறே, அவன் அர்ஜுனனுடைய தந்தையின் நண்பனாவான்" என்றிருக்கிறது.
ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, இவ்வார்த்தைகளைச் சொன்ன மன்னன் வஜ்ரதத்தன், சினத்தில் நிறைந்தவனாகப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} நோக்கித் தன் யானையைத் தூண்டினான்.(5) பெரும் நுண்ணறிவுமிக்க வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், ஆகாயத்தையே வெட்ட விரும்பி செல்வதைப் போலத் தனஞ்சயனை நோக்கி விரைந்தது.(6) அந்த யானைகளின் இளவரசன், மழையால் ஒரு மலையை நனைக்கும் நீல மேகத் திரளைப் போலத் தன் துதிக்கையின் முனையில் வெளிப்பட்ட நீரைப் பொழிந்து {ஜலத்திவலையால்} அர்ஜுனனை நனைத்தது.(7) உண்மையில் அம்மன்னனால் தூண்டப்பட்ட அந்த யானை, ஒரு மேகத்தைப் போல மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டே, தன் வாயில் வெளிப்பட்ட ஆழ்ந்த ஒலியுடன் பல்குனனை நோக்கி விரைந்தது.(8)
உண்மையில் வஜ்ரதத்தனால் தூண்டப்பட்ட அந்த யானைகளின் இளவரசன், வலிமைமிக்கக் குருக்களின் தேர்வீரனை நோக்கி விரைவாக நகர்ந்து, தன் நடையால் மகிழ்ச்சியில் ஆடுவதைப் போலத் தெரிந்தது.(9) வஜ்ரதத்தனின் அந்த விலங்கு தன்னை நோக்கி வருவதைக் கண்டவனும், பகைவர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கவனுமான தனஞ்சயன், தன் காண்டீவத்தைச் சார்ந்து, அச்சத்தால் நடுங்காமல் தன் நிலையில் நின்றான்.(10) தன் பணியை நிறைவேற்றத் தடையாக இருக்கும் வஜ்ரதத்தனை நினைத்து, (பாண்டவர்களிடம் பிராக்ஜோதிஷ) வீடு கொண்ட பழைய பகையையும் நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன், கோபத்தால் பெரிதும் தூண்டப்பட்டவனாக அந்த மன்னனை எதிர்த்தான்.(11) சினத்தால் நிறைந்தவனான தனஞ்சயன், பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தன் கணைப்பொழிவின் மூலம் அந்த விலங்கின் முன்னேற்றத்தைத் தடுத்தான்.(12)
அழுகுடன் கூடிய (வடிவம் கொண்ட) அந்த யானைகளின் இளவரசன், அர்ஜுனனால் இவ்வாறு தடுக்கப்பட்டு, முள் சிலிர்த்த முள்ளம்பன்றியைப் போலப் பல கணைகளால் உடல் துளைக்கப்பட்டுத் தன் முன்னேற்றத்தை நிறுத்தியது.(13) தன் யானையின் முன்னேற்றம் தடைபட்டதைக் கண்ட பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, சினத்தால் மதியிழந்தவனாகக் கூர் முனை கணைகள் பலவற்றை அர்ஜுனன் மீது ஏவினான்.(14) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், பகைவரைக் கொல்லும் தன் கணைகள் பலவற்றால் அந்தக் கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான். இந்த அருஞ்செயல் அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(15)
கடுஞ்சினத்தால் தூண்டப்பட்ட பிராக்ஜோதிஷர்களின் மன்னன் {வஜ்ரதத்தன்}, ஒரு மலைக்கு ஒப்பான தன் யானையை மீண்டும் அர்ஜுனனுக்கு எதிராக வலுக்கட்டாயமாகத் தூண்டினான்.(16) மீண்டும் தன்னை நோக்கி முன்னேறிவரும் அவ்விலங்கைக் கண்ட அர்ஜுனன், நெருப்பின் தழலுக்கு ஒப்பானதும், பெருஞ்சக்தி கொண்டதுமான ஒரு கணையைப் பெரும்பலத்துடன் ஏவினான்.(17) ஓ! மன்னா, பாண்டுவின் மகனால் முக்கிய அங்கங்கள் ஆழமாகத் தாக்கப்பட்ட அந்த விலங்கு, வஜ்ரத்தால் தளர்ந்த மலைச் சிகரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தது.(18) தனஞ்சயனின் கணையால் தாக்கப்பட்ட அந்த யானை பூமியில் கிடந்த போது, இந்தரின் வஜ்ரத்தால் {இடியால்} தளர்ந்து பூமியில் விழுந்து கிடக்கும் ஒரு பெரும் மலைப் பாறையைப் போலத் தெரிந்தது.(19)
வஜ்ரதத்தனின் யானை பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடந்த போது, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, யானையுடன் சேர்ந்து விழுந்து கிடந்த அந்த மன்னனிடம், "அஞ்சாதே.(20) உண்மையில், வலிமையும், சக்தியும் கொண்ட யுதிஷ்டிரர், என்னை இந்தப் பணியில் நிறுவும்போது இந்தச் சொற்களையே சொன்னார், "ஓ! தனஞ்சயா, (உன்னுடன் போரில் ஈடுபடும்) மன்னர்களை நீ கொல்லாதே.(21) ஓ! மனிதர்களில் புலியே, பகை மன்னர்களை முடக்கிவிட்டாலே உன் பணி நிறைவடைந்ததாக நீ கருத வேண்டும். ஓ! தனஞ்சயா, உன்னுடன் போரிட வரும் அந்த மன்னர்களின் போர்வீரர்களையும் நீ கொல்லாதே.(22) உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருடன் யுதிஷ்டிரனின் குதிரை வேள்விக்கு வருமாறு அவர்களை அழைப்பாயாக" {என்றார்}.(23)
ஓ! மன்னா, என் அண்ணனின் இந்த ஆணைகளைக் கேட்டிருக்கும் நான் உன்னைக் கொல்ல மாட்டேன். எழுவாயாக; அச்சம் உனதாக வேண்டாம்; ஓ! பூமியின் தலைவா, பாதுகாப்பாகவும், நலமாகவும் உன் நகரத்திற்குத் திரும்புவாயாக.(24) ஓ! பெரும் மன்னா, சைத்ர மாதத்தின் முழு நிலவு நாளில் {சித்ரா பௌர்ணமியில்} நடைபெறும் நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் அவ்வேள்விக்கு நீ வருவாயாக" என்றான்.(25)
இவ்வாறு அர்ஜுனனால் சொல்லப்பட்டவனும், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டவனுமான அந்தப் பகதத்தனின் அரச மகன் {வஜ்ரதத்தன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
அஸ்வமேதபர்வம் பகுதி – 76ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |