Gandiva fell down again! | Aswamedha-Parva-Section-77 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 62)
பதிவின் சுருக்கம் : சைந்தவர்களுடன் போர்புரிகையில் மீண்டும் காண்டீவம் நழுவியது; தெய்வீக முனிவர்களின் ஜபத்தால் புதிய பலம் பெற்றுக் கடும் போர்புரிந்த அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "(குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்) தங்கள் குலம் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கில் எஞ்சி வாழ்ந்த சைந்தவர்களுக்கும், கிரீடம் தரித்தவனான அர்ஜுனனுக்கும் இடையில் ஒரு பெரும்போர் நேர்ந்தது[1]. வெண்குதிரைகளைக் கொண்டவன் தங்கள் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள் {சைந்தவர்கள்}, பாண்டுகுலத்தின் முதன்மையான அவனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவனை எதிர்த்து வெளியே வந்தனர்.(2) கடும் நஞ்சைப் போன்ற அந்தப் பயங்கரப் போர்வீரர்கள், அந்தக் குதிரையைத் தங்கள் நாட்டுக்குள் கண்டு, பீமசேனனின் தம்பியான பார்த்தனிடம் எந்த அச்சமும் கொள்ளாமல் அதைக் கைப்பற்றினர்.(3) கையில் வில்லுடன் தரையில் நின்று குதிரையைக் காத்துக் கொண்டிருந்த பீபத்சுவை {அர்ஜுனனை} எதிர்த்த அவர்கள் அருகில் சென்று அவனைத் தாக்கினர்.(4)
[1] இதற்கு முன் கும்பகோணம் பதிப்பில், "அப்போது பகதத்தகுமாரனான அரசனை ஜயித்து ஸமாதானம் செய்தபின், குதிரை விடுபட்டு ஸிந்துதேசம் சென்றது" என்றிருக்கிறது. கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த வரி இல்லை.
ஏற்கனவே போரில் வீழ்த்தப்பட்டவர்களும், வலிமையும், சக்தியும் கொண்டவர்களுமான அந்த க்ஷத்திரியர்கள், வெற்றியடையும் ஆசையால் உந்தப்பட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவனைச் சூழ்ந்து கொண்டனர்.(5) தங்கள் பெயர்கள், குடும்பங்களின் பெயர்கள் மற்றும் பல்வேறு சாதனைகளை அறிவித்துக் கொண்ட அவர்கள், பார்த்தன் மீது தங்கள் கணைகளைப் பொழிந்தனர்.(6) பகை யானைகளையும் தடுக்கவல்ல கடுஞ்சக்தி கொண்ட கணைமாரியைப் பொழிந்த அந்த வீரர்கள், குந்தியின் மகனைப் போரில் வெல்ல விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(7) கடுஞ்சாதனைகளைச் செய்த அர்ஜுனன் தரையில் நிற்க, தேரில் அமர்ந்திருந்த அவர்கள் அவனோடு போரிட்டனர்.(8)
நிவாதகவசர்களைக் கொன்றவனும், சம்சப்தகர்களை அழித்தவனும், சிந்துக்களின் மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றவனுமான அந்த வீரனை {அர்ஜுனனை} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்கள் தாக்கத் தொடங்கினர்.(9) ஆயிரம் தேர்கள் மற்றும் பத்தாயிரம் குதிரைகளுடன் கூட்டுக்குள் அடைத்ததைப் போல அனைத்துப் பக்கங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்ட அந்தத் துணிவுமிக்க வீரர்கள், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(10) ஓ! குரு குலத்தவனே, போரில் தனஞ்சயனால் ஜெயத்ரதன் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த அவர்கள், கடும் மழை பொழியும் மேகத் திரளைப் போல அந்த வீரன் மீது கடும் கணை மாரியைப் பொழிந்தனர். அந்தக் கணைமாரியில் மறைந்த அர்ஜுனன், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போலத் தெரிந்தான்.(11,12)
ஓ! பாரதா, இரும்புக்கூட்டுக்கு மத்தியில் இருக்கும் ஒரு பறவைக்கு ஒப்பாக அந்தப் பாண்டுவின் முதன்மையான மகன் {அர்ஜுனன்}, கணை மேகங்களுக்கு மத்தியில் இருந்தான்.(13) குந்தியின் மகன் இவ்வாறு கணைகளால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, ஓ! என்றும் ஐயோ என்றும் கதறல்கள் மூவுலகங்களிலும் கேட்டன, சூரியன் தன் காந்தியை இழந்தான்.(14) அப்போது, ஓ! மன்னா, கடுங்காற்று வீசத் தொடங்கியது, அதே வேளையில் சூரியன், சந்திரன் இருவரையும் ராஹு விழுங்கினான்.(15) எரிகொள்ளிகள் பல சூரிய வட்டிலைத் தாக்கி பல்வேறு திசைகளில் விழுந்தன. மலைகளின் இளவரசனான கைலாஸம் நடுங்கத் தொடங்கிற்று.(16)
ஏழு (தெய்வீக) முனிவர்களும், சொர்க்கத்தின் வேறு முனிவர்களும், அச்சமடைந்தவர்களாக, துன்பம் மற்றும் கவலையால் பீடிக்கப்பட்டு வெப்பப் பெருமூச்சுகளை விட்டனர்.(17) அந்த எரிகொள்ளிகள் ஆகாயத்தைத் துளைத்துக் கொண்டு சந்திர வட்டிலிலும் விழுந்தன. திசைப்புள்ளிகள் அனைத்தும் புகையால் நிறைந்து விசித்திரமான தன்மையை ஏற்றன.(18) தங்களுக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருந்த மின்னல் கீற்றுகளுடன் கூடியவையும், பக்கத்துக்குப் பக்கம் எல்லையாக இந்திரவில்லைக் கொண்டவையுமான சிவந்த மேகங்கள், திடீரென ஆகாயத்தை மறைத்துக் கொண்டு, பூமியில் இறைச்சியையும், குருதியையும் பொழிந்தன.(19) அந்த வீரன் {அர்ஜுனன்}, கணைமாரியில் மூழ்கிய போது இயற்கை இத்தன்மையையே அடைந்தது. உண்மையில், பாரதர்களில் முதன்மையான பல்குனன் {அர்ஜுனன்}, இவ்வாறு பீடிக்கப்பட்ட போது இந்த அதிசயங்கள் தோன்றின.(20)
அடர்த்தியான கணை மேகத்தில் மூழ்கிய அர்ஜுனன் திகைப்படைந்தான். அவனது வில்லான காண்டீவம், அவனது உறுதியான பிடியில் இருந்து தளர்ந்து விழுந்தது, அவனது தோலுறையும் நழுவியது.(21) தனஞ்சயன் மயக்கமடைந்தபோது, சைந்தவ வீரர்கள் சற்றும் தாமதிக்காமல், உணர்வற்ற அந்தப் போர்வீரன் மீது எண்ணற்ற வேறு கணைகளை மீண்டும் ஏவினர்.(22) பிருதையின் மகன் {அர்ஜுனன்} நினைவிழந்ததை அறிந்த தேவர்களின் இதயமும் அச்சத்தால் பீடிக்கப்பட்டதால், அவர்கள் பல்வேறு ஆசிகளைக் கூறி அவனது நலத்தை நாடத் தொடங்கினர்.(23) அப்போது தெய்வீகமான ஏழு முனிவர்களும், மறுபிறப்பாள முனிவர்களும், பெரும் நுண்ணறிவைக் கொண்ட பிருதையின் மகனுக்கு வெற்றியைக் கொடுக்க விரும்பி அமைதியான ஜபத்தில் ஈடுபட்டனர்.(24)
இறுதியாக, சொர்க்கவாசிகளின் அந்தச் செயல்களின் மூலம் பார்த்தனின் சக்தி சுடர்ந்தெழுந்தபோது, உயர்திறன் தெய்வீக ஆயுதங்களை அறிந்த அந்த வீரன் {அர்ஜுனன்} ஒரு மலையைப் போல அசையாமல் நின்றான்.(25) பிறகு, குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் தன் தெய்வீக வில்லை இழுத்தான். அவன் மீண்டும் மீண்டும் நாண்கயிற்றை இழுத்த போது, அதனைப் பின்தொடர்ந்து எழுந்தவொலி ஏதோவொரு பெரும் இயந்திரத்தின் உரத்த ஒலிக்கு ஒப்பானதாக இருந்தது[2].(26) மழையைப் பொழியும் புரந்தரனைப் போல அந்தப் பலமிக்க அர்ஜுனன் தன் வில்லில் இருந்து இடையறாத கணைமாரியைத் தன் பகைவரின் மீது பொழிந்தான்.(27) அக்கணைகளால் துளைக்கப்பட்ட சைந்தவப் போர்வீரர்கள், வெட்டுக்கிளிகளால் மறைக்கப்பட்ட மரங்களைப் போல மறைந்துபோனார்கள்.(28)
[2] கும்பகோணம் பதிப்பில், "அர்ஜுனன் திவ்யமான வில்லை நாணொலியிடும்படி செய்தான். அதனுடைய பெரிய ஒலியானது இவ்வுலகில் யந்திரத்தினுடைய ஒலி போல அடிக்கடி உண்டாயிற்று" என்றிருக்கிறது.
அவர்கள் காண்டீவத்தின் ஒலியினாலேயே அச்சமடைந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதயத் துயரினால் அவர்க்ள கண்ணீர் உதிர்த்து, பேரொலியுடன் புலம்பினார்கள்.(29) வலிமைமிக்கவனான அந்தப் போர்வீரன், ஒரு நெருப்புச் சக்கரத்தைப் போன்ற வேகத்துடன் பகைவரின் கூட்டத்திற்கு மத்தியில் திரிந்து, எப்போதும் தன் கணைகளால் அந்தப் போர்வீரர்களைத் துளைத்தான்.(30) வஜ்ரதாரியான பெரும் இந்திரனைப் போலப் பகைவர்களைக் கொல்பவனான அர்ஜுனன், தன் வில்லில் இருந்து அனைத்துத் திசைகளிலும் ஏவிய கணைமாரியானது (மனித வகையைச் சாராத) மாயக் காட்சிக்கு ஒப்பாக இருந்தது.(31) அந்தக் கௌரவ வீரன், பலமிக்கக் கதிர்களால் மேகங்களை விலக்கும் கூதிர் காலச் சூரியனைப் போல, பிரகாசமாகத் தெரிந்த கணை மாரியால், பகைவரின் கூட்டத்தைத் துளைத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(32)
அஸ்வமேதபர்வம் பகுதி – 77ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |