Kamagita- How to overcome desire? | Aswamedha-Parva-Section-13 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)