Kamagita- How to overcome desire? | Aswamedha-Parva-Section-13 | Mahabharata In Tamil
(அஸ்வமேதிக பர்வம் - 13)
பதிவின் சுருக்கம் : ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "மம {என்னுடையது} என்னும் இரண்டக்ஷரம் ஸம்ஸாரத்திற்குக் காரணமாகும்; நமம {என்னுடையதன்று} என்பது சாஸ்வதமான பிரம்மத்தை அடையக் காரணமாகும். ஆகையால், பிரம்மத்திற்குக் காரணமான பற்றின்மையும், ஸம்ஸாரத்திற்குக் காரணமான பற்றும் சித்தத்திலேயே காணப்படாமலிருந்து கொண்டு பிராணிகளைச் சண்டையிடும்படி செய்கின்றன. ஸம்சயமில்லை" என்றிருக்கிறது.
ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)
உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)
(காமன் சொல்கிறான்) ("அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "எவன் ஆயுதத்திலுள்ள {ஜபாதி சாஸ்திரத்திலுள்ள} பலத்தைத் தெரிந்து கொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்கிறானோ அவனுடைய அந்த ஆயுதத்தில் {மனத்தில்} நான் மறுபடியும் தோன்றுகிறேன்" என்றிருக்கிறது.
வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும் {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்" என்றான் காமன்}.(19)
ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக" என்றான் {கிருஷ்ணன்}".(23)
அஸ்வமேதபர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |