The doors to heaven! | Shanti-Parva-Section-355 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 182)
பதிவின் சுருக்கம் : பிராமணர் தன் விருந்தினரிடம் முக்திக்கான வழிமுறை குறித்துக் கேட்டது; தமக்கும் அதில் ஐயமிருப்பதாக விருந்தினர் சொன்னது...

பிராமணர் {தன் இல்லத்திற்கு விருந்தினராக வந்த பிராமணரிடம்}, "ஓ! பாவமற்றவரே, உமது இனிய உரையாடலின் விளைவால் நான் உம்மிடம் மிகுந்த பற்றைக் கொண்டிருக்கிறேன். நீர் என் நண்பராகிவிட்டீர். நான் உம்மிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன்; கேட்பீராக.(1) ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, ஓர் இல்லறத்தானாக {கிருஹஸ்தாஸ்ரமத்தைச் சேர்ந்தவனாக} என் மகனிடம் கடமைகளை ஒப்படைத்துவிட்டு, மனிதனின் உயர்ந்த கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். ஓ! மறுபிறப்பாளரே, என் பாதை எதுவாக இருக்க வேண்டும்?(2) ஆன்மாவைச் சார்ந்திருந்து ஒரே ஆன்மாவின் இருப்பை அடைய விரும்புகிறேன். ஐயோ, பற்றுகளில் கட்டப்பட்டிருக்கும் என்னால் அந்தப் பணியை நிறைவேற்றுவதில் என்னை நிறுவிக் கொள்ளும் இதயம் உண்மையில் வாய்க்கவில்லை[1].(3) இல்லற நோற்பில் என் வாழ்வின் சிறந்த பகுதி கடந்து விட்டதால், வரப்போகும் காலத்தில் எஞ்சியுள்ள என் வாழ்நாளில் என் {வாழ்வெனும்} பயணத்திற்கான செலவுகளைக் கொடுப்பதற்கான {பரலோகம் செல்வதற்கான} வழிமுறைகளை ஈட்ட விரும்புகிறேன்.(4) உலகமெனும் பெருங்கடலைக கடக்கும் விருப்பம் என் மனத்தில் எழுந்துள்ளது. ஐயோ, (என் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும்) அறமெனும் தெப்பத்தை எப்போது அடையப் போகிறேன்?(5) தேவர்களே கூடத் தங்கள் செயல்களின் கனிகளைப் பொறுத்துக் கொள்ளவும், தண்டிக்கப்படவும் செய்கிறார்கள் என்பதைக் கேட்டும், அனைத்து உயிரினங்களின் தலைக்கு மேலும் யமனின் கொடிக்கம்ப வரிசைகளையும், பறக்கும் கொடிகளையும் கண்டும்,(6) நான் சந்திக்கும் இன்பத்திற்குரிய பல்வேறு பொருட்களில் என் இதயம் இன்பத்தை அடையத் தவறுகிறது. பிச்சையெடுத்துத் திரிந்து கிடைக்கும் பிச்சையில் தங்கள் வாழ்வாதாரத்தைச் சார்ந்திருக்கும் யதிகளைக் கண்டு, யதிகளின் அறத்தில் எனக்கு மதிப்பேதும் உண்டாகவில்லை. ஓ! மதிப்புமிக்க விருந்தினரே, புத்தியின் மற்றும் காரணத்தின் அடிப்படையிலான அறத்தின் துணை கொண்டு, குறிப்பிட்ட கடமைகளின் நடைமுறையில் {அறத்தில்} என்னை நீர் நிறுவுவீராக" என்றார் {முதல் பிராமணர்}".(7)