The acquisition of Righteousness! | Shanti-Parva-Section-310 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 137)
பதிவின் சுருக்கம் : ஆறமீட்டல் மற்றும் அறிவு ஈட்டல் ஆகியவற்றைக் குறித்து ஜனக மன்னன் வசுமானுக்கு விளக்கிச் சொன்ன பிராமண முனிவர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு காலத்தில், ஜனக குல மன்னன் ஒருவன் {மன்னன் வசுமான்}, வசிப்பாரற்ற காடுகளில் மானைத் தேடித் திரிந்து கொண்டிருந்தபோது, பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு மேன்மையான பிராமணரை அல்லது முனிவரைக் கண்டான்.(1) சுகமாக அமர்ந்திருந்த அந்த முனிவருக்குத் தலைவணங்கிய அந்த மன்னன் வசுமான், அவர் அருகில் அமர்ந்து, அவர் அனுமதியுடன் இந்தக் கேள்வியைக் கேட்டான்:(2) "ஓ! புனிதமானவரே, நிலையற்ற உடலைக் கொண்டவனும், ஆசைகளுக்கு அடிமையாக இருப்பவனுமான ஒரு மனிதனுக்கு இம்மையிலும், மறுமையிலும் எது உயர்ந்த நன்மையை உண்டாக்கும்?" என்று கேட்டான்(3) மன்னனால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு இவ்வாறு கேட்கப்பட்டவரும், தவத் தகுதி கொண்டவருமான அந்த முனிவர் நன்மைமிக்க வார்த்தைகளை அவனிடம் சொன்னார்.(4)
முனிவர் {மன்னன் வசுமானிடம்}, "உன் மனத்திற்கு ஏற்புடைய வகையில் இம்மையையும், மறுமையையும் நீ விரும்பினால், கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்பில்லாதவற்றைச் செய்வதை நீ தவிர்க்க வேண்டும்.(5) நல்லோருக்கு அறமே நன்மையானது. நல்லோருக்கு அறமே புகலிடமாக இருக்கிறது. அறத்திலிருந்தே அசையும் மற்றும் அசையாத உயிரனங்களுடன் கூடிய மூவுலகங்களும் உண்டாகின.(6) ஓ! ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் ஆவலும், விருப்பமும் கொண்டவனே, ஆசைக்குரிய பொருட்களில் நீ இன்னும் தெவிட்டாமல் இருப்பது எவ்வாறு? ஓ! சிறு மதிகொண்டோனே, நீ தேனைக் காண்கிறாயேயன்றி, பள்ளத்தைக் காணாத குருடனாக இருக்கிறாய்.(7) அறக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவன் அறமீட்டுவதில் தன்னை நிறுவிக் கொள்வதைப் போலவே அறிவுக்கனிகளை ஈட்ட விரும்பும் ஒருவனும் தன்னை அறிவை ஈட்டுவதில் நிறுவி கொள்ள வேண்டும்.(8) தீய மனிதன் ஒருவன், அற விருப்பத்தின் காரணமாக, களங்கமற்ற தூய செயலொன்றைச் செய்ய முனைந்தால், அவனது ஆசை நிறைவடைவது சாத்தியமில்லாமல் போகிறது. மறுபுறம், நல்லோனொருவன் அறமீட்டும் விருப்பத்தால் தூண்டப்பட்டுக் கடினமான ஒரு செயலைச் செய்ய முனைந்தாலும், அஃது அவனுக்கு எளிதாக இருக்கிறது.(9) காட்டில் வசிக்கும் ஒருவன், நகரத்தில் வாழும் இல்லறத்தாரின் இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் காட்டுத் துறவியாக அல்லாமல் நகரவாசியாகவே பார்க்கப்படுவான். அதே போல நகரத்தில் வசிக்கும் ஒருவன், வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய இன்பநிலையை அனுபவித்துக் கொண்டிருந்தால், அவன் நகரவாசியாக அல்லாமல் காட்டுவாசியாகவே பார்க்கப்படுவான்.(10)
செயல்களின் அறத்தகுதிகளை உறுதி செய்து கொண்டு, செயல்களைத் தவிர்த்து, குவிந்த புலன்களுடன், எண்ணம், சொல் மற்றும் செயலில் அறப்பயிற்சிக்கு உன்னை நீ அர்ப்பணிக்க வேண்டும்.(11) காலம், இடம் ஆகியவற்றின் ஆதிக்கத்தைத் தீர்மானித்து, நோன்புகளையும், தூய்மையாக்கும் பிற சடங்குகளையும் செய்து தூய்மையடைந்து, வன்மம் இல்லாமல் நல்லோருக்குப் பெருங்கொடைகளை அளிக்க வேண்டும்.(12) நேர்மையான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டும் ஒருவன், அதைத் தகுந்தோருக்குக் கொடையளிக்க வேண்டும். ஒருவன் கோபத்தைக் கைவிட்டு கொடையளிக்க வேண்டும்; கொடையளித்த பிறகு, அதுகுறித்து வருந்தவோ, அதைப் பற்றிப் பேசவோ கூடாது.(13) கருணை நிறைந்தவனும், தூய்மையானவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், பேச்சில் வாய்மை கொண்டவனும், வெளிப்படைத்தன்மை கொண்டவனும், பிறப்பால் தூய்மையானவனுமான பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(14) ஒரே கணவனைக் கொண்டவளும், தன் கணவன் சார்ந்த வகையைச் சார்ந்தவளுமான தாய்க்குப் பிறந்த ஒருவன் தூய பிறப்பைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில், ரிக், யஜுஸ் மற்றும் சாமம் எனும் மூன்று வேதங்களை அறிந்தவனும், (வேள்விகள் செய்வது, பிறரின் வேள்விகளைச் செய்து கொடுப்பது, கல்வி, கற்பித்தல், கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) ஆறு கடமைகளை முறையாகச் செய்பவனுமான அத்தகைய பிராமணன், கொடைகளுக்குத் தகுந்தவனாகக் கருதப்படுகிறான்.(15)
செயல்படுபவன், காலம் மற்றும் இடம் ஆகியவற்றின் தன்மைக்கேற்றபடி, அறம் மறமாகவும், மறம் அறமாகவும் மாறுகிறது.(16) பாவமானது, ஒருவனுடைய உடலில் உள்ள புழுதியைப் போல அகற்றப்பட வேண்டும். சிறியதை சிறு முயற்சியாலும், பெரியதை பெரிய முயற்சியாலும் அகற்ற வேண்டும்.(17) ஒரு மனிதன் தன் குடலின் மாசகற்றிய பிறகு, தன் உடலமைப்பில் (நலம் தரும் சத்து மருந்தாக) மிக நன்மையான செயலைச் செய்யும் நெய்யை உட்கொள்ள வேண்டும். அதே போலவே, ஒருவன் களங்கமனைத்திலும் இருந்து தன்னைத் தூய்மை செய்து கொண்டு, அறமீட்டுவதில் தன்னை நிறுவி கொண்டால் அந்த அறமானது மறுமையில் உயர்ந்த மகிழ்ச்சியை நிச்சயம் உண்டாக்கும்.(18) உயிரினங்கள் அனைத்தின் மனத்திலும் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் இருக்கின்றன. தீய எண்ணங்களில் இருந்து மனத்தை விலக்கி, அதை நற்சிந்தனைகளை நோக்கிச் செலுத்த வேண்டும்.(19) ஒருவன் தன்னுடைய வகைக்குண்டான நடைமுறைகளை எப்போதும் மதிக்க வேண்டும். எனவே, நீ உன் வகைக்கான நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளும் வகையில் செயல்படுவாயாக.(20)
ஓ! பொறுமையற்ற ஆன்மா கொண்டவனே, பொறுமையைப் பயில்வாயாக. ஓ! மூட புத்தி கொண்டவனே, புத்தியடைய முனைவாயாக. அமைதியற்றவனே அமைதியை நாடுவாயாக, ஞானமற்றவனே, ஞானத்துடன் செயல்பட முனைவாயாக.(21) அறவோரின் தோழமையுடன் திரியும் ஒருவன் இம்மைக்கும், மறுமைக்குமான நன்மையான வழிமுறைகளைத் தன் சொந்த சக்தியின் மூலமே அடைவான்.(22) அரசமுனியான மஹாபிஷன் உறுதியற்றவனாக இருந்ததால் சொர்க்கத்தில் இருந்து விழுந்தான். யயாதியும் கூட, (தற்பெருமை பேசியதன் விளைவால்) தன் தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்ததும் (சொர்க்கத்தில் இருந்து வீசியெறியப்பட்டாலும்) அவன் தன் உறுதியினால் இன்பவுலகங்களை மீண்டும் அடைவதில் வென்றான்.(23) அறவோர் மற்றும் தவத்தகுதி கொண்ட கல்விமான்களுடன் சேர்வதால் நீ பெரும் புத்தியையும், உனக்கான உயர்ந்த நன்மையையும் நீ அடைவாய்" என்றார் {அந்த முனிவர்}".(24)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தவசியின் இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், நல்ல மனோநிலை கொண்டவனுமான மன்னன் வசுமான், ஆசைத் தேடல்களைத் தன் மனத்தில் இருந்து விலக்கி, அதை {மனத்தை} அறமீட்டுவதில் நிறுவினான்".(25)
சாந்திபர்வம் பகுதி – 310ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |