The state of Bhanumathi! | Stri-Parva-Section-17 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 02) [ஸ்திரீ பர்வம் - 08]
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, "ஐயோ, ஓ! மகனே", "ஐயோ, ஓ! மகனே" என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.

