Gandhari's lamentation unto Krishna! | Stri-Parva-Section-16 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 01) [ஸ்திரீ பர்வம் - 07]
பதிவின் சுருக்கம் : ஞானக்கண்ணால் போர்க்களத்தைக் கண்ட காந்தாரி; காந்தாரிக்கு ஞானக்கண் அளித்த வியாசர்; சோகத்தில் அழும் தன் மருமகள்களைக் கிருஷ்ணனுக்குக் காட்டிய காந்தாரி; களநிலவரத்தைக் கிருஷ்ணனுக்கு வர்ணித்து அழுது புலம்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, போர்க்களத்தில் இருந்து தொலைவாக இருந்த அந்த இடத்தில் நின்று கொண்டு, தன் ஞானக்கண்ணால் குருக்களின் படுகொலையைக் கண்டாள்.(1) தன் தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} அர்ப்பணிப்புடன் இருந்த அந்த உயர்ந்த அருளைக் கொண்ட பெண்மணி {காந்தாரி}, எப்போதும் உயர்ந்த நோன்புகளை நோற்று வந்தாள். கடுந்தவங்களைச் செய்து கொண்டிருந்த அவள், எப்போதும் உண்மை நிறைந்த பேச்சைக் கொண்டிருந்தாள்.(2) புனிதச் செயல்களைச் செய்யும் பெருமுனிவர் வியாசரால் கொடுக்கப்பட்ட வரத்தின் விளைவால், அவள் ஆன்ம அறிவையும் சக்தியையும் கொண்டவளானாள். அப்போது அந்தப் பெருமாட்டி பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள்.(3) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தக் குரு குல பெருமாட்டி {காந்தாரி}, அருகில் இருந்து பார்ப்பவளைப் போல, காணப்பயங்கரமானவையும், அற்புதக் காட்சிகள் நிறைந்தவையுமான போராளிகளில் முதன்மையானவர்களுடைய போர்க்களத்தைத் தொலைவிலிருந்தே கண்டாள்.(4) எலும்புகளும், தலைமுடியும் எங்கும் சிதறிக் கிடக்க, குருதியோடையால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் களம், அனைத்துப் பக்கங்களிலும் ஆயிரமாயிரம் சடலங்களால் விரவப்பட்டுக் கிடந்தது.(5)
யானைகள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் பிறவகைப் போராளிகளின் குருதியால் மறைக்கப்பட்டிருந்த அதில், தலையற்ற முண்டங்களும், உடல்களற்ற தலைகளும் நிறைந்திருந்தன.(6) மேலும் அது {அந்தப் போர்க்களமானது}, யானைகள், குதிரைகள், ஆண்கள், பெண்கள், நரிகள், நாரைகள், அண்டங்காக்கைகள், கங்கங்கள், காக்கைகள் ஆகியவற்றின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(7) மனித ஊனுண்ணும் ராட்சசர்களின் விளையாட்டுக்களமாக அஃது இருந்தது. அன்றில்களும், கழுகுகளும் நிறைந்த அதில் நரிக்கூட்டங்களின் மங்கலமற்ற ஒலி எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8)
பிறகு வியாசரின் ஆணையின் பேரில் மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் தலைமையிலான பாண்டுவின் மகன்கள் அனைவருடனும், வாசுதேவனுடனும் {கிருஷ்ணனுடனும்} மற்றும் குரு பெண்கள் அனைவருடனும் போர்க்களத்தை நோக்கிச் சென்றான்.(9,10) தங்கள் தலைவர்களை இழந்தவர்களான அந்தப் பெண்கள், குருக்ஷேத்திரத்தை அடைந்து, கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் தங்கள் சகோதரர்கள், மகன்கள், தந்தைமார் மற்றும் கணவர்கள் ஆகியோர் இரைதேடும் விலங்குகளாலும், நரிகள், அண்டங்காக்கைகள், காக்கைகள், பேய்கள் {பூதங்கள்}, பிசாசங்கள், ராட்சசர்கள் மற்றும் இன்னும்பிற இரவு உலாவிகளாலும் உண்ணப்படுவதைக் கண்டனர்.(11,12)
ருத்திரனின் விளையாட்டுக் களத்தில் காணப்படும் காட்சிகளுக்கு ஒப்பான அந்தப் பேரழிவைக் கண்ட பெண்கள், உரக்கக் கதறியபடியே தங்கள் விலைமதிப்புமிக்க வாகனங்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கினர். தாங்கள் இதுவரை கண்டிராத காட்சியைக் கண்ட அந்தப் பாரதக் குலப் பெண்கள், தங்கள் அங்கங்களில் பலம் குறைவதை உணர்ந்து, கீழே தரையில் விழுந்தனர்.(14) வேறு சிலரோ, தங்கள் புலனுணர்வுகளை இழந்து மயக்கமடைந்தனர். உண்மையில், பாஞ்சாலப் பெண்களும், குருகுலப் பெண்களும் சொல்லொண்ணாத் துயரில் மூழ்கினர்.(15) அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான அந்தச் சுபலன் மகள் {காந்தாரி}, துயரில் பீடிக்கப்பட்ட பெண்களின் கூச்சலை அனைத்துப் பக்கங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த அந்தப் பயங்கரக் களத்தைக் கண்டு,(16) மனிதர்களில் முதன்மையானவனும், தாமரைக் கண்ணனுமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினாள்.
குருக்களின் முற்றான அழிவைக் கண்டு, அக்காட்சியால் துயரத்தில் நிறைந்த அவள் {காந்தரி - கிருஷ்ணனிடம்}, இவ்வார்த்தைகளைச் சொன்னாள்:(17) "ஓ! தாமரைக்கண் மாதவா {கிருஷ்ணா}, என் இந்த மருமகள்களைப் பார். தங்கள் தலைவர்களை இழந்து, கலைந்த கேசங்களுடன், பெண் அன்றில் கூட்டத்தைப் போல, துயரால் இவர்கள் பரிதாபகரமாகக் கதறுவதைப் பார்.(18) சடலங்களை அடைந்த அவர்கள், அந்தப் பெரும் பாரதத் தலைவர்களின் நினைவுகளைத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்கள், சகோதரர்கள், தந்தைமார் மற்றும் கணவர்களை நோக்கிப் பெருங்கூட்டமாக அங்கேயும், இங்கேயும் ஓடுகிறார்கள்.(19) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, தங்கள் பிள்ளைகளை இழந்தவர்களும், வீரர்களின் தாய்மாருமான அவர்கள் அனைவராலும் இந்தக்களமே மறைக்கப்பட்டிருப்பதைப் பார். அதோ அந்தப் பகுதிகள், துணைவர்களை இழந்தவர்களும், வீரர்களின் துணைவர்களுமான {மனைவிகளுமான} அவர்களால் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்.(20) மனிதர்களில் புலிகளான பீஷ்மர், கர்ணன், அபிமன்யு, துரோணர், துருபதன், சல்லியன் ஆகியோரால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்தப் போர்க்களமானது சுடர்மிக்க நெருப்புகளைக் கொண்டிருப்பதைப் போலத் தெரிவதைப் பார்.(21), உயரான்மப் போர்வீரர்களின் தங்கக் கவசங்கள், விலைமதிப்புமிக்க ரத்தினங்கள், அங்கதங்கள், கேயூரங்கள் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்.(22) வீரர்களின் கையில் இருந்து வீசப்பட்ட ஈட்டிகள் {சக்திகள்} மற்றும் முள்பதிக்கப்பட்ட தண்டங்கள் {பரிகங்கள்} ஆகியவற்றாலும், வாள்கள், பல்வேறு வகைகளிலான கூரிய கணைகள் மற்றும் விற்கள் ஆகியவற்றாலும் அது விரவப்பட்டுக் கிடப்பதைப் பார்.(23)
ஒன்றாகக் கூடியிருக்கும் இரைதேடும் விலங்குகள் நின்றுகொண்டோ, விளையாடிக் கொண்டோ, கிடந்த நிலையிலோ தாங்கள் விரும்பியபடி இருக்கின்றன.(24) ஓ! பலமிக்க வீரா, போர்க்களம் இவ்வாறே இருக்கிறது. ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இக்காட்சியால் நான் துயரில் எரிந்து கொண்டிருக்கிறேன். ஓ! மதுசூதனா, (அனைத்தும் எவற்றால் உண்டானவையோ) அந்த ஐம்பூதங்களே {பஞ்சபூதங்களே} பாஞ்சாலர்களையும், குருக்களையும் அழித்திருக்கின்றன என நான் நினைக்கிறேன்.(26) கடுமைநிறைந்த கழுகுகளும், ஆயிரக்கணக்கான பிற பறவைகளும், குருதிதோய்ந்த உடல்களின் கவசங்களைப் பிடித்து இழுத்து அவற்றை விழுங்குகின்றன.(27) ஜெயத்ரதன், கர்ணன், துரோணர், பீஷ்மர், அபிமன்யு போன்ற வீரர்கள் இறப்பார்கள் என்று எவர் கருதியிருப்பார்கள்?(28) ஐயோ, ஓ! மதுசூதனா, கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பினும் அவர்களும் கொல்லப்பட்டார்கள். கழுகுகளும், கங்கங்களும், அண்டங்காக்கைகளும், பருந்துகளும், நாய்களும், நரிகளும் அவர்களை உண்கின்றன.(29)
அதோ அங்கே, துரியோதனன் தரப்பில் போரிட்டவர்களும், கோபத்தில் களம் புகுந்தவர்களுமான அந்த மனிதர்களில் புலிகள், அணைந்த நெருப்புகளைப் போல இப்போது கீழே விழுந்து கிடக்கின்றனர்.(30) அவர்கள் அனைவரும் மென்மையான, தூய்மையான படுக்கையில் உறங்கத் தகுந்தவர்களாவர். ஐயோ, ஆனால் அவர்கள் இடரில் மூழ்கி இன்று வெறுந்தரையில் உறங்குகிறார்கள்.(31) அவர்களது புகழைப் பாடும் துதிபாடிகளால் முன்பு எப்போதும் அவர்கள் மகிழ்விக்கப்பட்டார்கள். {அப்படிப்பட்ட} அவர்கள், இப்போது, நரிகளின் கடுமையான மங்கலமற்ற ஊளையைக் கேட்கின்றனர்.(32) அங்கங்களில் சந்தனக்குழம்பையும், ஜவ்வாது பொடியையும் பூசிக்கொண்டு, விலைமதிப்புமிக்கப் படுக்கைகளில் முன்பு உறங்கிய அந்தச் சிறப்புமிக்க வீரர்கள், ஐயோ, இப்போது புழுதியில் உறங்குகின்றனர்.(33) இந்தக் கழுகுகளும், ஓநாய்களும், அண்டங்காக்கைகளுமே இப்போது அவர்களது ஆபரணங்களாகியிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மங்கலமற்ற கடும் இரைச்சலை உண்டாக்கும் அந்த உயிரினங்கள் இப்போது அவர்களின் உடல்களை இழுத்துச் செல்கின்றன.(34) போரில் திளைப்பவர்களும், உற்சாகமிக்கவர்களாகத் தெரிபவர்களுமான அந்த வீரர்கள், ஏதோ இன்னும் உயிரோடு இருப்பதைப் போலத் தங்களின் அருகில் கூரிய கணைகளையும், நன்கு கடினமாக்கப்பட்ட வாள்களையும், பிரகாசமான கதாயுதங்களையும் கொண்டிருக்கின்றனர்.(35)
அழகையும், நல்ல நிறத்தையும், கொண்டவர்களும், தங்க மாலையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான முதன்மையான வீரர்கள் பலரும், தரையில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.(36) பருத்த கரங்களைக் கொண்ட வேறு சிலர், ஏதோ தங்கள் அன்புக்குரிய மனைவியரைத் தழுவிக் கொள்வதைப் போலக் கதாயுதங்களைத் தழுவிக் கொண்டு உறங்குகின்றனர்.(37) கவசம் பூண்ட இன்னும் சிலர், தங்கள் கரங்களில் பிரகாசமான ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர். ஓ! ஜனார்த்தனா, இரைதேடும் விலங்குகள் அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதாகக் கருதி அவர்களைச் சிதைக்காமல் இருக்கின்றன.(38) கழுத்துகளில் பசும்பொன்னாலான அழகிய மாலைகளை அணிந்திருக்கும் வேறு சில சிறப்புமிக்க வீரர்கள், அனைத்துப் பக்கங்களிலும் சிதறிக் கிடந்து, ஊனுண்ணும் விலங்குகளால் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.(39) அதோ அங்கே, ஆயிரக்கணக்கான கடும் நரிகள், மரணத்தால் அசையாமல் கிடக்கும் சிறப்புமிக்க வீரர்கள் பலரின் கழுத்தைச் சுற்றியிருக்கும் தங்க ஆரங்களை இழுத்துக் கொண்டிருக்கின்றன.(40)
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட துதிபாடிகள் பலரின் பாடல்களாலும், துதிகளாலும் முன்பு மகிழ்விக்கப்பட்ட அவர்கள்,(41) இப்போது துயரால் பீடிக்கப்பட்டு, அவர்களைச் சூழ்ந்து அமர்ந்து கொண்டு அழுது புலம்பும் அழகிய பெண்களால் சூழப்பட்டிருக்கிறார்கள்.(42) அந்த அழகிய பெண்களின் முகங்கள் மங்கியிருந்தாலும், செந்தாமரைகளின் கூட்டத்தைப் போல இன்னும் ஒளியுடனேயே இருந்தன.(43) அந்தக் குரு மங்கையர் தங்கள் தங்கள் தொண்டச்சிகளுடனும், தோழிகளுடனும் சேர்ந்து அழுவதை நிறுத்திவிட்டனர். அவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்துள்ளனர். சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர்கள் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(44) கோபத்துடன் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் அந்த அழகிகளின் முகங்கள், காலைச் சூரியனைப் போவோ, தங்கத்தைப் போலவோ, புடம்போட்ட தாமிரத்தைப் போலவோ பிரகாசமாக இருக்கின்றன.(45)
முற்றுபெறாத பொருள் கொண்ட தங்கள் ஒவ்வொருவரின் புலம்பல்களையும் கேட்ட அம்மங்கையரால், அனைத்துப் பக்கத்திலும் இருந்து வெடித்த உரத்த துயர ஓலங்களின் விளைவாக அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.(46) அவர்களில் சிலர், நீண்ட பெருமூச்சுகளைவிட்டு, மீண்டும் மீண்டும் புலம்பல்களில் ஈடுபட்டுத் துயரால் திகைப்படைந்து தங்கள் உயிரையே விடுகின்றனர்.(47) அவர்களில் பலர், (தங்கள் மகன்கள், கணவர்கள், அல்லது தந்தைமாரின்) உடல்களைக் கண்டு அழுது, உரக்க ஓலமிடுகின்றனர். வேறு சிலர் தங்கள் மென்மையான கரங்களால் தங்கள் தலைகளில் அடித்துக் கொள்கின்றனர்.(48) பூமியானது, துண்டிக்கப்பட்ட தலைகள், கரங்கள் மற்றும் பிற அங்கங்கள் ஒன்று கலந்த நிலையில் விரவப்பட்டு, பெருங்குவியல்களாகச் சேர்ந்து, இந்தப் பேரிடரின் அடையாளங்களோடு மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.(49) பேரழகைக் கொண்ட தலையற்ற முண்டங்கள் பலவற்றையும், உடல்களற்ற தலைகள் பலவற்றையும் கண்ட அந்த அழகிகள், உணர்விழந்து போய் நீண்ட நேரமாகத் தரையில் கிடக்கின்றனர்.(50)
குறிப்பிட்ட தலைகளைக் குறிப்பிட்ட உடல்களுடன் பொருத்திப் பார்க்கும் அப்பெண்கள், துயரால் உணர்விழந்து மீண்டும் தங்கள் தவறுகளைக் கண்டு, "இஃது இவருடையதல்ல" என்று சொல்லி மீண்டும் மிகுந்த துன்பத்துடன் அழுகின்றனர்.(51) வேறு சிலர், கணைகளால் துண்டிக்கப்பட்ட கரங்களையும், தொடைகளையும், கால்களையும் ஒன்றாக இணைத்து, (மீட்கப்பட்ட அந்த வடிவங்களைக் கண்டு) மீண்டும் மீண்டும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்.(52) பாரத மங்கையர் சிலர், விலங்குகள், பறவைகளால் சிதைக்கப்பட்டு, தலைகள் வெட்டப்பட்டிருந்த தங்கள் தலைவர்களின் உடல்களைக் கண்டு, அவற்றை அடையாளம் காண முடியாமல் தவிக்கின்றனர்.(53) வேறு சிலரோ, ஓ! மதுசூதனா, எதிரிகளால் கொல்லப்பட்ட தங்கள் சகோதரர்கள், தந்தைமார், மகன்கள் மற்றும் கணவர்களைக் கண்டு, தங்கள் கரங்களால் தங்கள் தலைகளை அடித்துக் கொள்கின்றனர்.(54)
சதை மற்றும் குருதியால் சகதியாகி இருக்கும் பூமியானது, இன்னும் வாளைப் பிடியில் கொண்டிருக்கும் கரங்களாலும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளாலும் கடக்கப்பட முடியாததாக இருக்கிறது.(55) சிறு துயரையும் இதற்கு முன்பு அனுபவித்திராத அந்தக் களங்கமற்ற மங்கையர், தங்கள் சகோதர்கள், தந்தைமார், மகன்கள் ஆகியோர் களத்தில் பரவிக் கிடப்பதைக் கண்டு இப்போது சொல்லொணாத் துயரத்தில் மூழ்கியிருக்கின்றனர்.(56) ஓ! ஜனார்த்தனா, சிறந்த பிடரியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகிய குதிரைக் குட்டிகளுக்கு ஒப்பானவர்களான திருதராஷ்டிரர் மருமகள்களைப் பார்.(57) ஓ! கேசவா, அழகிய வடிவங்களைக் கொண்ட அந்த மங்கையர் இத்தகு தன்மையை அடைந்திருப்பதைக் காண்பதைவிடச் சோகமான காட்சி எனக்கு வேறு என்ன இருக்க முடியும்?(58) ஓ! கேசவா, என் மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் எதிரிகளால் கொல்லப்பட்டதை நான் காண்பதால், நான் என் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களை இழைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை" {என்றாள் காந்தாரி}.(59) துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காந்தாரியின் கண்கள் தன் மகன் (துரியோதனனின்) மேல் விழுந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(59)
ஸ்திரீ பர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |