Duryodhana spoke to Purochana | Adi Parva - Section 146 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 4)
பதிவின் சுருக்கம் : புரோசனனை அழைத்து அரக்கு வீட்டைக் கட்டும்படி பணித்த துரியோதனன்; விரைவாக வாரணாவதம் சென்று துரியோதன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்த புரோசனன்...
Duryodhana spoke to PurochanaAdi Parva - Section 146 | Mahabharata In Tamil |
அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தில் காளையே, அவன் {துரியோதனன்} தனது அமைச்சனான புரோசனனைத் தனிமையில் அழைத்து, அவனது வலக்கரத்தைப் பிடித்துக் கொண்டு,(2) “ஓ! புரோசனா, செல்வம் நிரம்பிய இந்த முழு உலகும் எனதே. ஆனால் எனக்கு இணையாகவே அஃது உனக்கும் சொந்தமாகும். எனவே, அதைக் காப்பது உனது கடமையாகும்.(3) உன்னை விட நம்பிக்கைக்குரிய அமைச்சர் எனக்கு வேறு யாரும் இல்லை. எனவே, ஓ! ஐயா, எனது ஆலோசனைகளைக் காத்து {ரகசியமாக வைத்துக் கொண்டு}, எனது எதிரிகளை உனது புத்திசாலித்தனமான வழிமுறைகளால் நீ அழிக்க வேண்டும். நான் சொல்வதைப் போலச் செய்வாயாக.(4,5)
திருதராஷ்டிரர், பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்பியிருக்கிறார். அவர்கள் அங்கே திருதராஷ்டிரர் உத்தரவின் பேரில் விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பர்.(6) எனவே, வேகமாகச் செல்லக்கூடியதும், கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதுமான ஒரு தேரில் ஏறி, இன்றே நீ அங்கே செல்ல வேண்டும்.(7) அங்கே சென்று, {நகரின் வெளியே} ஆயுதக் கிடங்கின் அருகில் ஒரு நாற்கோண அரண்மனையைக் கட்டி விலை உயர்ந்த பொருட்களாலும், ஆசனங்களாலும் நிரப்பி, அந்த மாளிகையைக் (துருவியறியும் கண்களுடன்) காத்து வருவாயாக.(8) கிடைக்கும் சணல், பிசின் மற்றும் எளிதாக எரியும் வேறு பொருட்களையும் அதில் (அவ்வீட்டைக் கட்டுவதில்) பயன்படுத்தவும்.(9) சிறிது மண்ணும், நெய்யும், எண்ணெயும், கொழுப்பும் சேர்த்து, அதிக அளவில் அரக்கையும் சேர்த்து அதன் சுவர்களில் பூசச் செய்வாயாக.(10) வீடு முழுவதும் சணலையும், எண்ணெயையும், தூய்மையாக்கப்பட்ட நெய்யையும், அரக்கையும், மரங்களையும் பரப்பி வைத்து பாண்டவர்களோ மற்றவர்களோ அந்த வீடு எளிதாக எரிந்து விடும் என்று முடிவு செய்யாதவாறு அமைப்பாயாக.(11,12)
அப்படிப்பட்ட ஒரு மாளிகையை அமைத்துப் பாண்டவர்களைப் பெரும் மரியாதையுடன் அங்கே அழைத்துச் சென்று, அவர்களைக் குந்தியுடனும், அவர்களது நண்பர்களுடனும் அதில் வசிக்கச் செய்வாயாக.(13) திருதராஷ்டிரர் குறை சொல்லாதவாறு, தொழில் திறமைவாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டு மேலான ஆசனங்களையும், வாகனங்களையும், படுக்கைகளையும் அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பாயாக.(14) காரியம் முடியும் வரை வாரணாவதத்தில் உள்ள எவரும் எதையும் அறியாத வண்ணம் அதைச் செய்ய வேண்டும்.(15) பிறகு, பாண்டவர்கள் நன்றாக உறங்குவதை உறுதி செய்து கொண்டு, அந்த மாளிகையில் வெளிப்புற வாயிலில் அச்சமில்லாமல் நீ தீ வைக்க வேண்டும்.(16) அதன்காரணமாகப் பாண்டவர்கள் எரிந்து சாக வேண்டும். மாளிகை எரிந்ததால் பாண்டவர்கள் இறந்தார்கள் (அஃது ஒரு விபத்து) என்று மட்டுமே மக்கள் சொல்ல வேண்டும்" என்றான் {துரியோதனன்}.(17)
குரு இளவரசனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன புரோசனன், வேகமான கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேரில் வாரணாவதம் சென்றான்.(18) ஓ! மன்னா, அங்கே சென்று நேரங்கடத்தாமல், துரியோதனனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவன் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(19)
ஆதிபர்வம் பகுதி 146ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |