Vidura spoke in mlechha tongue | Adi Parva - Section 147 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : தொடர்ந்து வந்த நகர மக்களைத் திருப்பி அனுப்பிய யுதிஷ்டிரன்; மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனிடம் பேசிய விதுரன்...
Vidura spoke in mlechha tongueAdi Parva - Section 147 | Mahabharata In Tamil |
பாண்டவர்களைத் தொடர்ந்த குடிமக்களில் சிலர் துன்பத்துடன் செல்லும் பாண்டுவின் மகன்களைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் சத்தமாக,(6) "தீய ஆன்மா கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் ஒரே கண்ணுடன் எந்தப் பொருளையும் பார்ப்பதில்லை. அந்தக் குரு குல ஏகாதிபதி அறத்தின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த மறுக்கிறான்.(7) பாவங்களற்ற யுதிஷ்டிரனோ, பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான பீமனோ, அல்லது குந்தியின் (இளைய) மகனான தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இனி எப்போதும் குற்ற உணர்ச்சி (புரட்சிப் போர் தொடுக்கும் பாவத்தினால் உண்டாகும் குற்ற உணர்ச்சி) கொள்ளத் தேவையில்லை.(8) இவர்களே அமைதியுடன் இருக்கும்போது, மாத்ரியின் சிறப்புமிகுந்த மகன்களால் என்ன செய்ய முடியும்?
இவர்கள் தங்கள் தந்தையின் மூலம் நாட்டையடைந்ததைத் திருதராஷ்டிரனால் பொறுக்க முடியவில்லை.(9) பாண்டவர்கள் அந்தப் பாவகரப் பூமிக்கு நாடு கடத்தப்படுவதில் துயருற வேண்டிய பீஷ்மர், இந்தப் பெரும் அநீதியை எப்படி அனுமதித்தார்?(10) குரு குலத்தைச் சார்ந்த சந்தனுவின் மைந்தனான விசித்திரவீரியனும், அரசு முனியான பாண்டுவும் ஒரு தந்தையைப் போல நம்மைக் கவனித்துக் கொண்டனர்.(11) ஆனால் இப்போதோ, அந்த மனிதர்களில் புலியான பாண்டு தேவலோகம் உயர்ந்துவிட்டான். பாண்டுவின் மைந்தர்களான இந்த இளையவர்களைத் திருதராஷ்டிரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(12) இந்த நாடு கடத்தலை {இவ்வாறு இவர்கள் நாடுகடத்தப்படுவதை} ஏற்காத நாமும், இந்த அற்புதமான நகரத்தையும், நமது இல்லங்களையும் துறந்து, யுதிஷ்டிரன் செல்லுமிடத்திற்கே செல்வோமாக" என்றனர்.(13)
யுதிஷ்டிரனோ, தானே துக்கத்துடன் வந்து கொண்டிருந்தாலும், வழியில் துயருற்ற குடிமக்களின் சொற்களைக் கேட்டுச் சிறிது நேரம் சிந்தித்து, அவர்களிடம்,(14) "மன்னன் {திருதராஷ்டிரர்} நமக்குத் தந்தையைப் போன்றவர்; மதிப்புக்குரியவர்; அவர் நமது ஆன்ம குருவும் நமக்கு முதன்மையானவரும் ஆவார். எப்போதுமே அவர் சொல்வதைச் ஐயம் இல்லாத இதயத்துடன் ஏற்று, செயல்படுத்துவதே நமது கடமையாகும்.(15) நீங்கள் எங்களது நண்பர்கள். எங்களை வலம் வந்து, உங்கள் அருளாசிகளால் எங்களை மகிழ்வித்து, உங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புவீராக.(16) உங்களால் எங்களுக்குக் காரியமாக வேண்டிய காலம் வரும்போது, எங்களுக்கு நன்மை செய்யக்கூடியவையும், ஏற்புடையவையுமான செயல்களை நிச்சயமாக நீங்கள் சாதிப்பீர்கள்" என்றான்.(17)
இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், அக்குடிமக்கள் பாண்டவர்களை வலம் வந்து, தங்கள் ஆசிகளைக் கூறி, தத்தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(18) பாண்டவர்களைக் குடிமக்கள் பின்தொடர்வது நின்றதும், நீதிகளனைத்தும் அறிந்த விதுரன், பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} விழிப்படையச் செய்ய இவ்வாறு பேசினான்.(19) பிதற்றல் மொழியை (மிலேச்சர்களின் மொழி) நன்கறிந்தவனும், கல்விமானுமான விதுரன், மற்றவர் அறியாவண்ணம், அதே மொழியை நன்கறிந்த யுதிஷ்டிரனுக்கு மட்டுமே புரியும்போடி, "அரசியலின் அறிவியலுக்கு ஏற்ப எதிரியின் திட்டங்களைக் கண்டறிந்த ஒருவன், அவற்றைப் புரிந்து கொண்டதும், ஆபத்துகள் அனைத்தையும் விலக்கும் முறையில் நடந்து கொள்ள வேண்டும்.(20) உடலை வெட்டுவதற்கு, இரும்பால் செய்யப்படாத கூரிய ஆயுதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த ஒருவன், அதைத் தடுக்கும் முறைகளையும் அறிந்திருந்தால், அவனுக்குப் பகைவரால் காயமேற்படுத்த முடியாது.(21)
வைக்கோலையும், மரத்தையும் உண்பவனோ {நெருப்போ}, பனியை உலர்த்துபவனோ {சூரியனோ}, ஆழ்ந்த கானகத்தின் துளையில் வசிப்பவர்களை {எலி, முயல் போன்றவைகளை} எரிக்க முடியாது என்பதை அறிந்த அறிவுள்ளவன் பாதுகாப்பாக வாழ்ந்திருப்பான்.(22) குருடன் வழியைப் பார்ப்பதில்லை. குருடனுக்குத் திசைகளின் அறிவும் கிடையாது. உறுதியற்ற ஒருவன் வளத்தை {செழிப்பை} அடைவதில்லை. இதை நினைவில் வைத்துக் கொண்டு, எப்போதும் விழிப்புடனிருப்பாயாக.(23) எதிரிகளால் கொடுக்கப்படும் இரும்பாலாகாத ஆயுதத்தை (எரியக்கூடிய வீடு) எடுக்கும் மனிதன், தனது வசிப்பிடத்தை நரியின் வசிப்பிடம் போல ஆக்கினால் ({பொந்துகளுடன்} வெளியே செல்லும் வழி பல வைத்தால்) நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.(24) ஒரு மனிதன் பயணிப்பதனால் வழிகள் பற்றிய ஞானத்தை அடையலாம். நட்சத்திரங்களின் துணை கொண்டு திசையை அறியலாம். தன்னிடம் உள்ள ஐந்தைக் (ஐம்புலன்களைக்) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவனை, அவனது எதிரிகளால் ஒடுக்க முடியாது" என்றான் {விதுரன்}.(25)
இப்படிச் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், கல்விமான்களில் முதன்மையான விதுரனிடம், "உம்மை நான் புரிந்து கொண்டேன்" என்றான். அப்போது விதுரன், பாண்டவர்களுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிச் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பிறகு, அவர்களை வலம் வந்து, அவர்களிடம் விடைபெற்று தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(26,27)
குடிமக்களும், பீஷ்மரும், விதுரனும் சென்ற பிறகு, குந்தி யுதிஷ்டிரனிடம் வந்து,(28) "மக்கள் முன்னிலையில் க்ஷத்ரி {விதுரன்} சொன்னது எதுவுமே விளங்கவில்லையே. அவர் எதுவுமே சொல்லாதது போலவே இருந்தது. ஆனால் நீயும் அதே போன்ற வார்த்தைகளால், அதே குரலில், பதிலுரைத்தாய். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.(29) நாங்கள் அறிந்து கொள்வதில் தவறில்லை என்றால், நீயும், அவரும் பேசிக் கொண்ட அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டாள்.(30)
யுதிஷ்டிரன், "அறம் சார்ந்த விதுரர், நமக்காகக் கட்டப்பட்டிருக்கும் மாளிகை எளிதில் எரியத்தக்க பொருட்களால் ஆனது என்று என்னிடம் சொன்னார். மேலும், தப்பிக்கும் வழியை நீ அறியாமல் இருக்கக்கூடாது என்றும்,(31) தனது புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தின் அரசாட்சியையும் அடைவான் என்றும் சொன்னார். அதற்கு நான், விதுரரிடம் "நான் உம்மைப் புரிந்து கொண்டேன்" என்று சொன்னேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள் பங்குனி மாதத்தின் எட்டாவது நாளில், ரோஹிணி நட்சத்திரத்தில் வாரணாவதம் வந்து சேர்ந்து, அந்த நகரத்தையும், நகர மக்களையும் கண்டனர்".(33)
ஆதிபர்வம் பகுதி 147ல் உள்ள சுலோகங்கள் :33
ஆங்கிலத்தில் | In English |