The option chose by Yuthishthira | Adi Parva - Section 148 | Mahabharata In Tamil
(ஜதுக்கிரகப் பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : வாரணாவதத்திற்குள் நுழைந்த பாண்டவர்கள்; பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு இட்டுச் சென்ற புரோசனன்; மாளிகையின் தன்மையை அறிந்து கொண்ட யுதிஷ்டிரன்; சுரங்கம் தோண்ட வேண்டும் என்று பீமனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...
The option chose by Yuthishthira Adi Parva - Section 148 | Mahabharata In Tamil |
ஓ! ஏகாதிபதியே, அந்த நகருக்குள் நுழைந்த அவ்வீரர்கள், முறையாகத் தங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் வசிப்பிடத்துக்குச் சென்றனர்.(6) பிறகு, நகர அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கும், அதன்பின்பு சூதர்கள், மற்றும் வைசியர்கள் வசிப்பிடங்களுக்கும், ஏன் சூத்திரர்களின் வசிப்பிடங்களுக்கும் கூடச் சென்றனர்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குடிமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாண்டவர்கள், புரோசனனைத் தங்களுக்கு முன்னால் செல்லவிட்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8) பின்பு அவர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்ட அரண்மனைக்குச் சென்றனர். புரோசனன் அவர்களுக்கு முன்பு உணவையும், நீரையும், படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், எல்லாவகைப் பொருட்களையும் வைத்தான்.(9) விலையுயர்ந்த ஆடைகளைப் பூண்டு கொண்ட பாண்டவர்கள், புரோசனனாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு, வாரணாவதத்திலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தனர்.(10)
அப்படியே பாண்டவர்கள் அங்கே பத்து இரவுகள் தங்கினார்கள். அவ்வீடு சபிக்கப்பட்ட வீடாயிருப்பினும், புரோசனன் அவர்களிடம் "இஃது 'அருளப்பட்ட வீடு' என அழைக்கப்படுகிறது" என்று சொன்னான்.(11) அதன்பிறகு அந்த மனிதர்களில் புலிகள், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அந்த மாளிகைக்குள் கைலாசத்திற்குள் புகும் குஹ்யகர்கள் (யக்ஷர்கள்} போல புரோசனனுடன் நுழைந்தனர்.(12) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அந்த வீட்டை ஆய்வு செய்து, பீமனிடம் அஃது எரியத்தக்கப் பொருட்களால்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தான்.(13)
அரக்கைத் {அரக்கு} தயார் செய்யும்போது அதனுடன் கலக்கப்பட்ட நெய் மற்றும் கொழுப்பின் வாசத்தை நுகர்ந்து கண்ட யுதிஷ்டிரன் பீமனிடம், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இவ்வீடு உண்மையிலேயே எரியத்தக்க பொருட்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது தெளிவாகத் தெரிகிறது.(14) நமது எதிரி, நம்பத்தகுந்த கட்டுமானக் கலைஞர்களைக் கொண்டு, சணல், குங்கிலியம், காய்ந்த புல், வைக்கோல், மூங்கில் ஆகியவற்றைத் தெளிந்த நெய்யில் ஊறவைத்து, அவற்றைக் கொண்டு இவ்வீட்டை அழகாகக் கட்டியிருக்கிறான். தீயவனும், பாவியும், துரியோதனனின் உத்தரவின்படி செயல்படுபவனுமான இந்தப் புரோசனன், என்னை நம்பிக்கைக்குரியவனாகக் காணும்போது எரித்தவிடலாம் என்ற நோக்கோடு இங்கே தங்கியிருக்கிறான்.(15,16) ஆனால், ஓ! பிருதையின் மகனே {பீமனே}, பெரும் புத்திக்கூர்மை கொண்ட விதுரர், இந்த ஆபத்தை உணர்ந்தே என்னை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார்.(17) நம் மீது கொண்ட பாசத்தால், எப்போதும் நமது நன்மையையே விரும்பும் நமது சிறிய தகப்பனார், அனைத்தையும் அறிந்து கொண்டு, துரியோதனனின் கட்டளையால் இந்தப்பாவிகளால் கமுக்கமாகக் கட்டப்பட்ட இந்த ஆபத்தான வீட்டைப் பற்றி நமக்குச் சொல்லியிருக்கிறார்" என்றான்.(18)
இதைக் கேட்ட பீமன், "ஐயா, இஃது எரியத்தக்க பொருட்களால் கட்டப்பட்ட வீடு என்பதை நீர் அறிந்தால், உடனே நாம் இந்த இடத்தைவிட்டு அகன்று நாம் முதலில் தங்கியிருந்த இடத்திற்கே[1]திரும்புவது நமக்கு நன்மையைத் தரும்" என்றான்.(19)
[1] பாண்டவர்கள் வாரணாவதத்திற்கு வந்ததும், வேறெங்கோ ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும். பிறகு, புரோசனனால் அழைக்கப்பட்டு அரக்கு மாளிகைக்கு வந்திருக்க வேண்டும்.
யுதிஷ்டிரன், "நாம் இங்கேயே வாழ வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐயத்திற்கிடமில்லாமல் எச்சரிக்கையுடனும், உணர்வுகள் விழிப்பான நிலையிலும் நாம் வாழும்போதே, ஏதாவது செய்து இங்கிருந்து தப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.(20) புரோசனன் நமது முகச் சுருக்கங்களைக் கண்டு கொண்டால் {நாம் ஐயுறுகிறோம் என்பதை அறிய வந்தால்}, அவன் விரைவாகச் செயல்பட்டுத் திடீரென நம்மை எரித்துக் கொன்றுவிடக் கூடும்.(21) உண்மையில் புரோசனன் அவதூறையும், பழிபாவத்தையும் சிறிதும் மதிக்காதவனாவான். துரியோதனனின் உத்தரவுக்கிணங்கியே அந்தப் பாவி இங்குத் தங்கியிருக்கிறான்.(22) நாம் எரிக்கப்பட்டால் பீஷ்மர் கோபம் கொள்வாரா? அப்படிக் கோபப்பட்டுக் கௌரவர்களின் கோபத்திற்கு அவர் ஏன் ஆளாகப் போகிறார்?(23) அல்லது நமது பாட்டனான பீஷ்மரும், மற்ற குரு குலத்தின் காளைகளும், தீய காரியங்களுக்கு எதிராகச் சீறும் அறச்சீற்றம் கொண்டு கோபமடையவும் வாய்ப்பிருக்கிறது.(24) எவ்வாறிருப்பினும், எரிக்கப்படுவதற்கு அஞ்சி, நாம் இங்கிருந்து தப்பித்தோமென்றால், ஆட்சியை விரும்பும் துரியோதனன், நாம் இருக்கும் இடத்தைத் தேடித் தனது ஒற்றர்களைக் கொண்டு நமக்கு மரணத்தை ஏற்படுத்துவான்.(25)
நமக்கு அதிகாரமும் இல்லை; பலமும் இல்லை. ஆனால், துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நமக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ இல்லை. ஆனால் துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நாம் செல்வமற்றிருக்கிறோம். துரியோதனனுக்கோ கருவூலம் முழுமையும் அவனது கட்டுக்குள் இருக்கிறது.(26) எந்த வழிமுறையைக் கையாண்டாவது நம்மை அவனால் கொல்ல முடியும் என்பது நமக்குத் தெளிவாகவில்லையா? எனவே, நாம் இந்தப் பாவியை (புரோசனனை) ஏமாற்றி, நாட்களைக் கடத்திச் சிறிது காலத்திற்கு நம்மை மறைத்துக் கொள்வோம் {தலைமறைவாக இருப்போம்}.(27) வேட்டையாடும் வாழ்வை நோற்று இப்பூமியில் திரிந்து வருவோம். அப்போது, தப்புவதற்குள்ள வழிகள் அனைத்தையும் நாம் அறிந்திருப்போம்.(28) மேலும், இன்றே, மிகக் கமுக்கமாக {இரகசியமாக} நமது அறைக்குள் ஒரு சுரங்கப் பாதையை உண்டாக்குவோம். இவ்வழியில் செயல்பட்டு, நாம் செய்வதனைத்தையும் மறைத்தே செய்து வந்தால், நெருப்பால் நம்மை உட்கொள்ள முடியாது.(29) நாம் இங்கேயே தங்கி, புரோசனனோ, வாரணாவத குடிமக்களோ அறியாத வண்ணம், நமது பாதுகாப்புக்கான அனைத்தையும் செய்ய வேண்டும், நாம் தப்புவதையும் அவர்களில் ஒருவரும் அறியக்கூடாது" என்றான்".(30)
ஆதிபர்வம் பகுதி 148ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |