Nala lived more piteous than thee! | Vana Parva - Section 52b | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)-(Nalopakhyana Parva)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி பீமனால் சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த பாண்டு மகனின் {பீமனின்} தலையை முகர்ந்து பார்த்து, அமைதிப்படுத்தி, "ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனே {பீமனே}, சந்தேகமற நீ காண்டீவத்தைத் தாங்குபவன் {அர்ஜுனன்} துணையுடன், பதிமூன்றாவது {13} வருட முடிவில் சுயோதனனைக் {துரியோதனனைக்} கொல்வாய். ஆனால் ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, ஓ தலைவா, காலம் வந்துவிட்டது என்ற உனது தீர்மானத்தைப் பொறுத்தவரை, பொய்மை என்னிடத்தில் இல்லாத காரணத்தால், நான் பொய்மையைப் பேச அஞ்சுகிறேன். ஓ குந்தியின் மகனே {பீமா}, மோசடிகளின் துணை இல்லாமலேயே, ஒடுக்கமுடியாத தீய துரியோதனனையும் அவனது கூட்டாளிகளையும் நீ கொல்வாய்" என்றான் {யுதிஷ்டிரன்}.
நீதிமானான யுதிஷ்டிரன் பீமனிடம் பேசிக் கொண்டிருந்த போது, அங்கே சிறப்பு மிகுந்த முனிவரான பிருகதஸ்வர் {Rishi Vrihadaswa}வந்தார். அந்த அறம்சார்ந்த துறவியைத் தன் முன் கண்ட நீதிமானான மன்னன் {யுதிஷ்டிரன்} விதிப்படி மதுபர்க்கம் {தேன், தயிர், நெய் மற்றும் வெண்ணையின் கலவை} கொடுத்து அவரை {முனிவர் பிருகதஸ்வரை} வழிபட்டான். அந்தத் துறவி அமர்ந்து, புத்துணர்ச்சி அடைந்ததும், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன் அவர் அருகே உட்கார்ந்து, அவரை நிமிர்ந்து பார்த்து, மிகவும் பரிதாபகரமான தொனியில்,
"ஓ புனிதமானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, பகடையில் திறனுள்ள தந்திரமான சூதாடிகளால் அழைக்கப்பட்டு, எனது செல்வம், நாடு ஆகியவற்றை சூதில் இழந்தேன். நான் பகடையில் திறமையானவனும் கிடையாது. எனக்கு ஏமாற்றவும் தெரியாது. பாவிகள் நியாமற்ற முறைகளைக் கைக்கொண்டு என்னை விளையாட்டில் வீழ்த்தினர். எனது உயிருக்கும் மேலான அன்பான மனைவி {திரௌபதி} பொதுச்சபையின் மத்தியில் இழுத்துவரப்பட்டாள். இரண்டாவது முறையும் என்னை வீழ்த்தி, மான்தோலுடுத்த வைத்து, துயரமான வனவாழ்க்கையை இந்தக் கானகத்தில் வாழும்படி என்னை அனுப்பினர். தற்சமயம் நான் கானகத்தில் துயர்நிறைந்த வாழ்க்கையை துயர்நிறைந்த இதயத்துடன் வாழ்ந்து வருகிறேன். சூதாடும்போது அவர்கள் கடுமையான கொடும் மொழிகளால் பேசியதும், அந்த பகடையாட்டம் சம்பந்தமாக எனது நண்பர்களும் குடிமக்களும் என்னைப்பற்றி பேசியதும் என் மனதிலேயே இருக்கின்றன.
அந்த வார்த்தைகளை நினைத்து நினைத்து இரவு முழுவதும் (தூங்காமல்) துயர் கொள்கிறேன். யாரை நம்பி எங்கள் அனைவரின் வாழ்வுகளும் இருக்கின்றனவோ அந்த சிறப்புமிக்க காண்டீவத்தைத் தாங்குபவனையும் {அர்ஜுனனையும்} இழந்து, கிட்டத்தட்ட உயிரற்றனாகவே நான் இருக்கிறேன். அன்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அந்த இனிய பேச்சு கொண்ட, பரந்த இதயம் கொண்ட பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, அனைத்து ஆயுதங்களையும் பெற்று, எங்களிடம் திரும்பி வருவதை நான் என்று காண்பேன்? என்னைவிட தீயூழ் {துரதிர்ஷ்டம்} கொண்ட மன்னன், வேறு எவனாவது இந்த பூமியில் இருக்கிறானா? இது போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு முன்பு நீர் கண்டதோ கேட்டதோ உண்டா? என்னைப் பொறுத்தவரை, என்னைவிட இழிந்த மனிதன் வேறு எவனும் இருக்க மாட்டான்" என்றான் {யுதிஷ்டிரன்}.
பிருகதஸ்வர் சொன்னார், "ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, 'என்னைவிட பரிதாபகரமான மனிதன் வேறு எவனும் இல்லை' என்று சொல்கிறாய். ஓ பாவமற்ற ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, நீ கேட்பதாயிருந்தால், வரலாற்றில் உன்னைவிட இழிந்த நிலையை அடைந்த மன்னனின் வரலாற்றைச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன் பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} அந்தத் துறவியிடம் {பிருகதஸ்வரிடம்}, "ஓ சிறப்பு மிகுந்தவரே, இதுபோன்ற நிலைக்கு வீழ்ந்த அந்த மன்னனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். சொல்லும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
பிருகதஸ்வர், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கீழே வீழாதவனே, உனது தம்பிகளுடன் சேர்ந்து கவனமாகக் கேள். நான் உன்னைவிட பரிதாபகரமான நிலையை அடைந்த ஒரு இளவரசனின் வரலாற்றைச் சொல்கிறேன். நிஷாதர்களின் கொண்டாடப்பட்ட மன்னனான வீரசேனன் என்ற பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். அவனுக்கு அறம், பொருள் அறிந்த மகனாக நளன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான். அந்த மன்னன் {நளன்} புஷ்கரன் என்பவனால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டு, பேரிடரை அடைந்து, தனது மனைவியுடன் கானகத்தில் வாழ்ந்தான் என நாம் கேள்விப்படுகிறோம். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவன் {நளன்} கானகத்தில் வாழ்ந்த போது, அவனுடன் அடிமைகளோ, தேர்களோ, தம்பிகளோ அல்லது நண்பர்களோகூட கிடையாது. ஆனால் நீயோ தேவர்களைப் போன்ற உனது வீர சகோதரர்களாலும், பிரம்மாவைப் போன்ற மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களாலும் சூழப்பட்டிருக்கிறாய். ஆகையால், துயருறுவது உனக்குத் தகாது" என்றார் {பிருகதஸ்வர்}.
யுதிஷ்டிரன், "ஓ நாவண்மை படைத்தவர்களில் முதன்மையானவரே {முனிவர் பிருகதஸ்வரே}, சிறப்புமிக்க நளனின் வரலாற்றை விரிவாகக் கேட்க நான் விரும்புகிறேன். ஆகையால், அதை எனக்கு நீர் உரைக்க வேண்டும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.