TamilYudhishthira spoke to Dhaumya | Vana Parva - Section 86 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
அர்ஜுனன் இல்லாத துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தௌமியரிடம் காம்யகத்தில் வசிக்க தனக்கு விருப்பமில்லை எனவும், வேறு இடம் ஏதாவது சொல்லுங்கள் எனவும் கோருதல்....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "புத்திகூர்மை கொண்ட நாரதரின் கருத்தையும், தனது தம்பிகளின் கருத்துகளையும், உறுதிபடுத்திக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பெருந்தகப்பனைப் {பிரம்மாவைப்} போல இருந்த தௌமியரிடம், "வீழ்த்தப்பட முடியாத வீரமும், நீண்ட கரங்களும், அளவிடமுடியாத புத்திகூர்மையும் கொண்ட மனிதர்களில் புலியான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} ஆயுதங்கள் அடைவதற்காக நான் அனுப்பிவிட்டேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே {தௌமியரே}, திறனுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவத்துடனும், மேன்மையான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான தன்மையுடனும், எனக்கு அர்ப்பணிப்புள்ளவனுமாக அந்த வீரன் {அர்ஜுனன்} இருந்தான்.
ஓ அந்தணரே {தௌமியரே}, எதிரிகளை அழிப்பவர்களும், பராக்கிரமம் நிறைந்தவர்களுமான கிருஷ்ணனையும், அர்ஜுனனையும், சக்தி வாய்ந்த வியாசர் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரோ அந்த அளவு நானும் அவர்கள் இருவரையும் குறித்து அறிந்து வைத்திருக்கிறேன். வாசுதேவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஆறு பண்புகள் கொண்ட விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். இது நாரதரும் அறிந்ததே. அவர் {நாரதர்} என்னிடம் இது குறித்து எப்போதும் பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் நரன், நாராயணன் என்ற முனிவர்கள் என்பதையும் நான் அறிவேன். திறனுள்ளவன் {அர்ஜுனன்} என்பதை அறிந்தும் நான் அவனை {அர்ஜுனனை} (இப்பணிக்காக {ஆயுதம் அடையும் பணிக்காக}) அனுப்பினேன். இந்திரனுக்குச் சற்றும் குறையாத (பணி முடிக்க) முழுத் திறமை கொண்ட அந்தத் தெய்வ மகனை {son of god}, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணவும், அவனிடம் {இந்திரனிடம்} இருந்து ஆயுதங்களைப் பெறவும் அனுப்பி வைத்தேன்.
பீஷ்மரும் துரோணரும் அதிரதர்கள். கிருபரும், துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} வெல்லப்படமுடியாதவர்கள்; பெரும்பலம் வாய்ந்த இந்த வீரர்களைத் திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} தனது படைத்தலைவர்களாக நியமித்திருக்கிறான். இவர்கள் அனைவரும் வேதமறிந்தவர்கள்; வீரர்கள்; அனைத்து ஆயுதங்களின் அறிவையும் பெற்றவர்கள். பெரும் பலம் கொண்ட இவர்கள் அனைவரும் அர்ஜுனனிடம் போரிட எப்போதும் விருப்பமுடியவர்கள்.
தெய்வீக ஆயுதங்களை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த கர்ணனும், பெரும் பலம் வாய்ந்த போர்வீரனாவான். ஊக்கம் கொண்ட அவனது ஆயுதங்களின் நிமித்தமாக அவன் வாயுத்தேவனின் பலத்தைக் கொண்டிருக்கிறான். அவனே {கர்ணனே} நெருப்புச் சுடராக இருக்கும்போது அவனது அம்புகள் அந்நெருப்பின் நாக்குகளாக இருக்கின்றன. தோலுறையிட்ட அவனது இடது கையின் அறைகள் {slaps - அடிகள்} சுடரின் படப் படவெனும் சத்தத்தைக் கொடுக்கின்றன. {கர்ணன் என்ற நெருப்புக்கு} போர்க்களத்தின் தூசியே புகையாக இருக்கிறது. காற்றால் உந்தப்பட்ட நெருப்பு போல, திருதராஷ்டிரனின் மகன்களால் உந்தப்பட்ட கர்ணன், யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் மரணத்தால் அனுப்பப்பட்ட நெருப்பைப் போல, வைக்கோல் குவியலைப் போன்ற எனது துருப்புகள் அத்தனையையும் சந்தேகமற உட்கொண்டுவிடுவான்.
தாங்க முடியாத காண்டீவம் என்ற வானவில்லுக்கு அடியில் வரிசையாகத் தெரியும் வெண் குதிரைகள் என்ற வெண்நாரைகளுடனும், தெய்வீக ஆயுதங்கள் என்ற கடும் மின்னலுடனும், அர்ஜுனன் என்ற பலம்பொருந்திய மேகக்குவியல், கிருஷ்ணன் என்ற பலம்வாய்ந்த காற்றின் துணை கொண்டு, கர்ணன் எனும் பிரகாசிக்கும் சுடரைத் தனது {அர்ஜுனனின்} கணைகள் என்ற மழையால் தடுமாற்றமில்லாத உறுதியுடன் அணைக்க முடியும்.
மேற்கண்ட வாக்கியம் படிக்கச் சிரமமாக இருப்பதாக எனக்குப் படுகிறது. ஆகையால் ஒரு சிறு விளக்கம். {காண்டீவம் = வானவில், வெண்குதிரைகள் = வெண் நாரைகள், அர்ஜுனன் = மேகக்குவியல், கிருஷ்ணன் = காற்று, கர்ணன் = நெருப்பு, அர்ஜுனனின் கணைகள் = மழை. இதை,}
{"தான் ஏந்தியிருக்கும் வானவில்லுக்கடியில் தெரியும் வெண் நாரைகளால் இழுக்கப்படும் மேகக்குவியல், காற்றின் உந்துதலால் நெருப்பிடம் சென்று கடும் மின்னலுடன் மழையைப் பொழிந்து அந்நெருப்பை அணைப்பது போல, காண்டீவத்துக்கு அடியில் தெரியும் வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அர்ஜுனன், கிருஷ்ணனால் உந்தப்பட்டு, தெய்வீக ஆயுதங்களுடன் கர்ணனிடம் சென்று கணைகளைப் பொழிந்து அவனைக் கொல்ல முடியும்" என்றும் படிக்கலாம்.}
{"மேகக்குவியலான அர்ஜுனன், வானவில்லான காண்டீவத்தைப் பிடிக்கும்போது, அந்த வானவில்லான காண்டீவத்துக்கு அடியில் தெய்வீக ஆயுதங்கள் மின்னலைப் போலவும், மேகக்குவியலான அவனை இழுத்துச் செல்லும் குதிரைகள் நாரைகள் [கொக்குகள்] போலவும் தெரியும். அப்போது, கிருஷ்ணன் என்ற காற்றின் உந்துதலால், கர்ணன் என்ற நெருப்பினிடம், அர்ஜுனன் என்ற மேகக்குவியல் சென்று, தனது கணைகள் என்ற மழையைப் பொழியும்போது கர்ணன் என்ற நெருப்பு அணைந்துவிடும்" என்றும் படிக்கலாம்.}
எதிரி நகரங்களைக் கைப்பற்றும் பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் முழுமையுடனும் உயிரோட்டத்துடனும் அடைவான் என்பதில் சந்தேகமில்லை. தனி ஆளாகவே அவன் அவர்கள் {மேற்சொன்ன வீரர்கள்} அனைவருக்கும் சமம் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால் போரில் அந்த எதிரிகளை வீழ்த்துவது (எங்களுக்கு) இயலாது. அனைத்து நோக்கங்களிலும் சிறந்த வெற்றியை அடைந்தவர்கள் அவர்கள். தான் ஏற்றுக் கொண்ட பணியில், அதன் பாரம் தாங்காது விழுபவனல்ல பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}. ஆகையால், எதிரிகளை அடக்கும் அந்த அர்ஜுனன், தெய்வீக ஆயுதங்களின் முழுமையான வசதிகளுடன் திரும்பி வருவதை நாம் காண்போம்.
இருப்பினும், மனிதர்களில் சிறந்த அந்த வீரன் இல்லாமல், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய எங்களால் {பாண்டவர்களால்}, இந்தக் காம்யகத்தில் {காம்யக வனத்தில்} ஓய்ந்திருக்க இயலவில்லை. ஆகையால், உணவும் கனிகளும் நிறைந்த காண்பதற்கினிய வேறு புனிதமான வனத்தை எங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும். மேகங்கள் கூடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கும் *சாதகப் பறவை போலக் கலைக்க முடியாத பராக்கிரமமும், போர்க்குணமும் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கப் போகிறோம். அப்படி நாங்கள் காத்திருக்க பக்திமான்கள் வசிக்கும் கானகமாக அஃது இருக்க வேண்டும். மேலும், மறு பிறப்பாளர்களுக்காக {பிராமணர்களுக்காகத்} திறந்திருக்கும் சில ஆசிரமங்களையும், தடாகங்கள், ஓடைகள், அழகான மலைகள் ஆகியவற்றையும் எங்களுக்குச் சொல்லும். ஓ அந்தணரே {தௌமியரே}, அர்ஜுனன் இல்லாததால், இந்தக் காம்யக வனத்தில் வசிக்க எனக்கு விருப்பமில்லை. நாங்கள் வேறு எங்காவது செல்ல விரும்புகிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.
*********************************************************
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.