Pulastya and Narada bade farewell! | Vana Parva - Section 85c | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "புஷ்கரையில் ஒருவன் தவம் பயில வேண்டும்; மஹாலயத்தில் ஒருவன் தானம் செய்ய வேண்டும்; மலைய மலைகளில் ஒருவன் ஈமச் சிதையில் ஏற வேண்டும்; பிருகுதுங்கத்தில் ஒருவன் உணவைப் புறந்தள்ளி உடலைக் கைவிட வேண்டும். புஷ்கரை, குருக்ஷேத்திரம், கங்கை, {கங்கை யமுனை} சங்கமம் ஆகியவற்றில் நீராடும் ஒருவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். கங்கையின் பெயரை உரைக்கும் ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான்; அதைக் {கங்கையைக்} காண்பவன் செழிப்பை அடைகிறான்; அதில் நீராடி, அதன் நீரைப் பருகுபவன் தனக்கு முன்பும் பின்புமான ஏழு தலைமுறைகளைப் புனிதப்படுத்துகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கங்கையின் நீர் ஒரு மனிதனின் எலும்பை எவ்வளவு காலம் தொட்டுக் கொண்டிருக்குமோ அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறான். பக்தியுடன் புனித தீர்த்தங்களுக்கும், புனிதமான இடங்களுக்கும் புனிதப்பயணம் செய்யும் பலனையும் அவன் அடைகிறான். கங்கையைப் போன்று வேறு எந்தத் தீர்த்தமும் கிடையாது, கேசவனைப் {கிருஷ்ணன் (அ) விஷ்ணு} போன்று வேறு எந்தத் தெய்வமும் கிடையாது, அந்தணனுக்கு மேன்மையானவன் யாரும் கிடையாது என்று பெருந்தகப்பனே {பிரம்மனே} சொல்லியிருக்கிறான். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, கங்கை பாயும் பகுதிகள் புனிதமான ஆசிரமங்களாகக் கருதப்பட வேண்டும். கங்கைக்கரையில் இருக்கும் நிலப்பகுதிகள் துறவின் வெற்றிக்கு உகந்ததாகக் கருதப்பட வேண்டும்.
(தீர்த்தங்கள் குறித்த) இந்த உண்மையான விளக்கத்தை ஒருவன் மறுபிறப்பாளர்களுக்கும் {பிராமணர்களுக்கும்}, பக்திமான்களுக்கும், தனது மகனுக்கும், நண்பர்களுக்கும், சீடர்களுக்கும் தன்னை நம்பி இருப்பவர்களுக்கும் உரைக்கலாம். அருளப்பட்ட ஒப்பற்ற புனிதமான இந்த உரை ஒருவனைச் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும். புனிதமான, பொழுதுபோக்கான ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் இந்த உரை உயர்ந்த மதிப்பையும், உயந்த பலன்களையும் தருகிறது. அனைத்துப் பாவகளையும் அழிக்கும் இந்தப் புதிர் பெரும் முனிவர்களால் கவனத்துடன் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
அந்தணர்களுக்கு மத்தியில் இதை உரைப்பதால் ஒருவன் சொர்க்கத்திற்கு உயர்கிறான். தீர்த்தங்களின் இந்த விவரிப்பு மங்களகரமான, சொர்க்கத்தைக் கொடுக்க வல்லது புனிதமானது; எப்போதும் அருளப்பட்டிருக்கும் அது ஒருவனின் எதிரிகளை அழிக்கிறது; அது எல்லாக் காரியங்களிலும் முதன்மையானதாக இருந்து புத்திகூர்மையை அதிகரிக்கிறது. பிள்ளையற்றவன் இந்த உரையைப் படிப்பதால் மகனைப் பெறுகிறான், ஏதுமற்றவன் செல்வத்தைப் பெறுகிறான், அரச வழியில் வந்தவன் முழு உலகத்தையும் அடைகிறான், வைசியன் செல்வத்தைப் பெறுகிறான், சூத்திரன் அவனது விருப்பங்களை அடைகிறான், அந்தணன் (இந்த உலகத்தின்) கடலைக் கடக்கிறான். ஒருவன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பலவகைப்பட்ட தீர்த்தங்களின் பலன்களைத் தினமும் கேட்பதால், தனது முந்தைய பல பிறவிகளின் சம்பவங்களை நினைவுகூர்ந்து சொர்க்கத்தில் மகிழ்கிறான்.
இங்கே உரைக்கப்பட்டிருக்கும் தீர்த்தங்களில் சிலவற்றை எளிதாக அடையலாம், சில அடையக் கடினமானதாகும். ஆனால் அனைத்துத் தீர்த்தங்களையும் காணும் விருப்பம் கொண்டவன், கற்பனையால் கூட அவற்றுக்குப் பயணம் செய்யலாம். வசுக்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், மருதர்கள், அசுவினிகள், தேவர்களுக்கு இணையான முனிவர்கள் ஆகியோர் பலன்களை அடைய விரும்பி இந்தத் தீர்த்தங்களில் நீராடியிருக்கின்றனர். ஓ அற்புதமான நோன்புகள் நோற்கும் குரு குலத்தவனே {பீஷ்மா}, நான் சொல்லிய முறைகளின் படியும், புலனடக்கத்துடனும் இத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்தால், உனது தகுதியை நீ வளர்த்துக் கொள்வாய். கற்ற பக்திமான்கள், தங்கள் சுத்திகரிக்கப்பட்ட புலன்களாலும், கடவுள் நம்பிக்கையாலும், வேத அறிவாலும் இத்தீர்த்தங்களை அடைய இயலும்.
ஓ கௌரவனே {பீஷ்மா} நோன்புநோற்காதவன், ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவன்; சுத்தமில்லாதவன், திருடன், வக்கிர புத்தியுள்ளவன் ஆகியோர் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. நீ எப்போதும் அறம்பயில்பவனாகவும், சுத்தமான நடத்தையுள்ளவனாகவும் இருக்கிறாய். ஓ அறம்சார்ந்தவனே, அறம் அறிந்தவனே {பீஷ்மா}, உனது அறத்தால் உனது தந்தையையும், பாட்டனையும், பெரும் பாட்டன்களையும், பிரம்மாவைத் தலைமையாகக் கொண்ட தேவர்களையும், முனிவர்களையும் எப்போதும் திருப்தி செய்திருக்கிறாய். ஓ பீஷ்மா, வாசவனைப் {இந்திரனைப்} போல இருக்கும் நீ வசுக்களின் உலகை அடைந்து, பூமியில் நிலைத்த புகழுடன் இருப்பாய்" என்றார்.
நாரதர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படி மகிழ்ச்சியுடன் பேசிய சிறப்புமிக்கப் புலஸ்திய முனிவர், மிகவும் திருப்தி கொண்டவராய் பீஷ்மரிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, சாத்திரங்களின் உண்மைகளை நன்றாகப் புரிந்த பீஷ்மன், புலஸ்தியரின் உத்தரவின் பேரில் உலகம் முழுவதும் சுற்றினான். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா}, இப்படியே பீஷ்மன் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் தனது உயர்ந்த பலன்வாய்ந்த பயணத்தைப் பிரயாகையில் முடித்தான். இக்குறிப்புகளின் படி உலகத்தைச் சுற்றும் மனிதர் நூறு குதிரை வேள்விகளின் உயர்ந்த கனியை அடைந்து, அதன் பிறகு முக்தியை அடைவான்.
ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, முன்பு குருக்களில் முதன்மையான பீஷ்மன் அடைந்தது போல நீயும் எட்டுக் குணங்களுடன் கூடிய பலன்களை அடைவாய். நீ துறவிகளை அத்தீர்த்தங்களுக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று {எட்டு மடங்கு} மிகப் பெரிதான பலன்களை அடைவாய். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} ராட்சசர்களின் தொந்தரவுகள் கொண்ட தீர்த்தங்களை உன்னையன்றி யாரும் அடைய முடியாது. அதிகாலையில் எழுந்து, தீர்த்தங்களைக் குறித்து தெய்வீக முனிவர்கள் அருளியிருக்கும் உரைகளை உரைப்பவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
முனிவர்களில் முதன்மையான வால்மீகி, கசியபர், அத்ரேயர், குண்டஜடரர், விஸ்வாமித்திரர், கௌதமர், அசிதர், தேவலர், மார்க்கண்டேயர், காலவர், பரத்வாஜர், வசிஷ்டர், உத்தாலக முனிவர், தனது மகனுடன் கூடிய சௌனகர், துறவிகளில் சிறந்த வியாசர், முனிவர்களில் முதன்மையான துர்வாசர், பெரும் தவமியற்றிய ஜாபாலி ஆகிய துறவை செல்வமாகக் கொண்ட சிறப்புமிக்க முனிவர்கள் உன்னிடம் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஓ பலம்பொருந்திய மன்னா {யுதிஷ்டிரா} நீ அத்தீர்த்தங்களைக் காணச் செல்.
ஓ சிறப்புமிக்க ஏகாதபதி {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி கொண்ட லோமசர் என்ற பெயர் கொண்ட பெரும் முனிவர் ஒருவர் உன்னிடம் வருவார். ஓ அறம் சார்ந்தவனே {யுதிஷ்டிரா}, அவர் சொல்வதையும், நான் சொல்லியிருப்பதையும் ஏற்று அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செல். இதனால் நீ மன்னன் மகாபிஷனைப் போலப் பெரும்புகழை அடைவாய். ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த யயாதி போல, புரூரவஸ் போல நீ உனது தன்னறத்தால் பிரகாசிப்பாய். பகீரதன் போலவும், சிறப்புமிக்க {தசரத} ராமன் போலவும் மன்னர்களுக்கு மத்தியில் நீ சூரியனாக ஒளிர்வாய். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, முனி அல்லது இக்ஷவாகு போலவோ அல்லது பெரும் புகழ் கொண்ட புரு அல்லது வைனியன் போலவோ நீ உலகத்தால் கொண்டாடப்படுவாய். பழங்காலத்தில் விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, தனது அனைத்து எதிரிகளையும் எரித்து மூன்று உலகத்தையும் ஆண்டு, மனத்துயரத்தில் இருந்து விடுபட்டான். தனது எதிரிகளை எல்லாம் கொன்ற அவன் தனது குடிமக்களைச் {தேவர்களைச்} சிறப்புற ஆண்டான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, உனது வகைக்கான {க்ஷத்திரிய} முறைகளுடன் முழு உலகத்தையும் அடைந்து, உனது அறத்திற்காக நீ இப்பூமியில் கார்த்தவீரியார்ஜுனனைப் போலப் புகழப்படுவாய்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதிக்கு {யுதிஷ்டிரனுக்கு} இப்படி ஆறுதலளித்த சிறப்பு மிக்க நாரத முனிவர், மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்} விடைபெற்றுக் கொண்டு அங்கேயே மறைந்து போனார். அறம்சார்ந்த யுதிஷ்டிரன் அக்காரியத்தை ஆலோசித்து, தீர்த்தங்கள் குறித்த பலன்களைத் துறவிகளுக்கு உரைக்க ஆரம்பித்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.