Sacred spots of the eastern quarter! | Vana Parva - Section 87| Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கிழக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துயருற்று, ஊக்கங்குறைந்தவர்களாகப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்ட பிருஹஸ்பதி போன்ற தௌமியர், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, "ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பாவங்களற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் அந்தணர்களால் அங்கீகரிக்கப்பட்ட புனிதமான ஆசிரமங்களையும், பகுதிகளையும், தீர்த்தங்களையும், மலைகளையும் சொல்லும்போது கேட்டுக் கொள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உரைக்கும்போது, துருபதன் மகளுடனும் {திரௌபதியுடனும்}, உனது தம்பிமாருடன் சேர்ந்து கேட்கும் நீ, ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} உனது துயரத்தில் இருந்து விடுபடுவாய். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதைக் கேட்பதாலேயே நீ பலன்களை அடைவாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் சொல்லும் அந்த இடங்களுக்குப் பயணிப்பதால் அதை விட நூறு மடங்கு பலன்களை அடைவாய்.
ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் எனது நினைவில் உள்ளவரை, ஓ யுதிஷ்டிரா, முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அழகான கிழக்குத் திசை நாடுகளைக் குறித்துச் சொல்கிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் திசையில், தேவர்களாலும் மதிக்கப்படும் நைமிஷம் என்ற இடம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தேவர்களுக்குச் சொந்தமான பல புனிதமான தீர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே தேவர்களால் வழிபடப்படும் அழகான மற்றும் புனிதமான கோமதி {நதி} இருக்கிறது. தேவர்களின் வேள்விப் பகுதியும், சூரியனின் வேள்விக் கம்பமும் அங்குதான் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அரசத் துறவிகளால் பெரிதாக மதிக்கப்பட்டுக் கயை என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த புனிதமான மலை இருக்கிறது. அந்த மலையில் தேவர்களால் வழிபடப்பட்டுப் பிரம்மசரம் என்று அழைக்கப்படும் மங்களகரமான தடாகம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனின் மகன்களில் ஒருவனாவது கயைக்குப் பயணப்பட வேண்டும் அல்லது குதிரை வேள்வியைச் செய்ய வேண்டும் அல்லது நீலக் காளையைத் தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவனுக்கு முன்பும் பின்புமான பத்துத் தலைமுறைகள் விடுதலை பெறும் என்பதால் தான், பழங்காலத்தவர்கள், ஒரு மனிதன் பல மகன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.
ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கயசிரம் என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு பெரும் நதி ஓடுகிறது. கயசிரத்தில் ஓர் ஆல மரம் இருக்கிறது. அங்குப் பித்ருக்குக்குப் படைக்கப்படும் உணவு நித்திய தன்மை பெறுவதால் அந்த ஆல மரத்தை நித்திய ஆலம் என்று அந்தணர்கள் அழைக்கிறார்கள். அந்த இடத்தின் வழியாக ஓடும் பெரும் நதி பல்கு என்று பெயரால் அறியப்படுகிறது. அதன் நீர் புனிதத்தன்மை வாய்ந்தது. ஓ பாரதர்களில் காளையே, அந்த இடத்தில் அதிகமான கிழங்குகளும், பல வகையான கனிகளையும் தனது கரையில் கொண்ட கௌசிகி என்ற நதியும் ஓடுகிறது. அங்கேதான் தவத்தைச் செல்வமாகக் கொண்ட விஸ்வாமித்திரர் தனது அந்தணத் தன்மையை அடைந்தார். அந்தத் திசையில் {கிழக்கில்} தான் புனிதமான கங்கையும் இருக்கிறது. அதன் கரையில் தான் {அந்தணர்களுக்கு} ஏராளமான பரிசுகளுடன் பல வேள்விகளைச் செய்தான் பகீரதன்.
பாஞ்சால நாட்டில் உத்பலாவனம் என்ற காடு இருக்கிறது எனவும், குசிக குலத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரர் தனது மகனுடன் சேர்ந்து அங்கு வேள்விகளைச் செய்தார் எனவும், அங்கு மனித சக்திக்கு மீறிய விஸ்வாமித்திரரின் நினைவுச்சின்னத்தைக் கண்ட ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, தனது வம்சாவளியின் புகழை உரைத்தார் எனவும் சொல்கிறார்கள். காம்யகத்தில், குசிகரின் மகன் {விசுவாமித்திரர்} இந்திரனுடன் சேர்ந்து சோமச்சாற்றைப் பெருமடக்காகக் குடித்தார். பிறகு தனது க்ஷத்திரிய வகையைக் கைவிட்ட அவர் {விசுவாமித்திரர்}, "நான் ஓர் அந்தணன்" என்று சொல்ல ஆரம்பித்தார்.
பிரயாகை_அலகாபாத் உத்திரபிரதேசம் |
அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் பெருந்தகப்பனே {பிரம்மனே} பழங்காலத்தில் இங்கே வேள்வி செய்திருக்கிறான். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா} இதன் காரணமாகவே அந்த இடம்
ஓ குருகுலத்தவனே, அங்கே தான், பிருகு குலத்தில் சிறப்புமிக்க ராமனுக்குப் {பரசுராமனுக்குப்} புனிதமான மகேந்திரம் என்றழைக்கப்படும் மலையும் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே பழங்காலத்தில் பெருந்தகப்பன் {பிரம்மா} வேள்விகளை நடத்தியிருக்கிறான். ஓ யுதிஷ்டிரா, அங்கேதான் புனிதமான பாகீரதி ஒரு தடாகத்துக்குள் நுழைந்து, புனிதமான ஆறாக, பலன்கள் அளிக்கும் பிரம்மசரமாக ஆகிறது. பாவங்கள் கழுவப்பட்ட மனிதர்களால் வசிக்கப்படும் அதன் கரையைப் பார்ப்பதாலேயே ஒருவன் பலன்களை அடைந்து விடுகிறான். அந்தத் திசையில் {கிழக்கில்}, கேதாரம் என்று அழைக்கப்படும் உயர் ஆன்ம மதங்கரின் அற்புதமான ஆசிரமம் இருக்கிறது. அது {கேதாரம்} புனிதமானது என்றும், மங்களகரமானது என்றும் உலகத்தால் கொண்டாடப்படுகிறது.
நிஷாதர்களின் மன்னன் {நளன்} தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்ந்திருந்ததும், கனிகளும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்து இருந்ததும் காண்பதற்கினியதாகவும் இருக்கும் குண்டோதம் என்று அழைக்கப்படும் மலை அங்கேதான் இருக்கிறது. அங்கேதான் துறவிகளால் அருளப்பட்டிருக்கும் காண்பதற்கினிய தேவ வனம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலையின் உச்சியில்தான் பாகுகா மற்றும் நந்தா நதிகள் இருக்கின்றன. ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, நான் கிழக்குத் திசையில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்கள் மற்றும் புனிதமான இடங்களைச் சொல்லிவிட்டேன். மற்ற மூன்று திசைகளிலும் இருக்கும் புனிதமான தீர்த்தங்கள், நதிகள், மலைகள், மற்றும் புனிதமான இடங்களைக் குறித்துக் கேள்" என்றார் தௌமியர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.