Krishna met the Pandavas! | Vana Parva - Section 118 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கிருஷ்ணன், பலராமன் மற்றும் பல விருஷ்ணி குலத்தோர் பாண்டவர்களைச் சந்திப்பது; அவர்களிடம் பாண்டவர்கள் தங்கள் நிலையை விளக்குவது; பாண்டவர்கள் நிலை கண்டு அவர்கள் வருந்துவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பெருமைமிக்க ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} தனது பயணத்தைத் தொடர்ந்து, கடற்கரையோரமாகப் பல வித்தியாசமான இடங்களுக்குச் சென்று, புரோகித சாதியைச் சேர்ந்த மனிதர்கள் அடிக்கடி செல்லும் புனிதமான காண்பதற்கினிய பல இடங்களில் நீராடினான். ஓ பரிக்ஷித்தின் மகனே {ஜனமேஜயா}, அவன் {யுதிஷ்டிரன்} உரிய முறையில் தனது தம்பிகளுடன் நீராடி அனைத்திலும் புனிதமான ஒரு அற்புதமான நதிக்குச் {பிரசஸ்தை} சென்றான். அங்கேயும் அந்தப் பெருமை மிக்க மன்னன் மூழ்கி, தனது மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் கொடுத்து, இருபிறப்பாளர் வர்க்கத்தின் {அந்தணர்களின்} தலைவர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுத்தான்.
பிறகு அவன் {யுதிஷ்டிரன்} கடலில் நேரடியாக விழும் கோதாவரி நதிக்குச் சென்றான். அங்கே அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபட்டான். பிறகு அவன் திராவிட நிலத்தில் உள்ள கடலை அடைந்து, அகஸ்தியரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு புனிதமான இடத்திற்குச் சென்று, அதையும் கடந்து புண்ணியமிக்கப் பரிசுத்தமான இடங்களுக்கும் சென்றான். பிறகு அந்த வீரம் மிகுந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்தன்மையுடைய புனித இடங்களுக்கும் {நாரீ தீர்த்தங்களுக்கும்} சென்றான். அங்கே அவன், வில்தாங்குபவர்களில் தலைவனான அர்ஜுனனின் நன்கு அறியப்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சாதனைக் கதைகளைக் கேட்டான். அங்கே புரோகித வர்க்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களின் {அந்தணர்களின்} பாராட்டுகளைப் பெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.
ஓ! பூமியின் பாதுகாவலா! அந்த உலகத்தின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து அந்தப் புனிதமான இடங்களில் நீராடினான். அர்ஜுனனின் வீரத்தைப் புகழ்ந்து அந்த இடத்தில் மகிழ்ச்சியாகத் தனது நேரத்தைக் கடத்தினான். பிறகு அவன், அந்தக் கடற்கரையை ஒட்டிய புனிதமான இடங்களில் ஆயிரம் {1000} பசுக்களைக் கொடுத்தான். பிறகு, தனது தம்பிகளிடம் அர்ஜுனன் எப்படிப் பசுக்களைத் தானம் கொடுத்தான் என்று மகிழ்ந்து சொன்னான். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒன்றன்பின் ஒன்றாகக் கடற்கரையோரமுள்ள சூர்ப்பாரகம் என்ற பெயரில் அழைக்கப்படும் அனைத்திலும் புனிதமான இடத்தை அடையும் வரை, பல புனிதமான இடங்களையும், மற்றப் பல புனிதமான இடங்களையும் இதய விருப்பம் நிறைவேறி தரிசித்தான்.
பிறகு கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைக் கடந்து உலகத்தில் கொண்டாடப்படும் ஒரு கானகத்தை அடைந்தான். பழங்காலத்தில் அங்கே தேவர்கள் தவம்பயின்றனர். அறம்சார்ந்தவர்களான மனிதர்களின் ஆட்சியாளர்கள் பலர் பல வேள்விச் சடங்குகளை அங்கே செய்திருந்தனர். நீண்டு பருத்து அழகான கரங்களைக் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்}, அங்கே வில்லேந்துபவர்களில் முதன்மையான ரிசீகரின் மகனது கொண்டாடப்படும் பலிப்பீடத்தைக் கண்டான். அப்பீடம் தவசிகளாலும், வழிபடத்தக்க அறம்சார்ந்தவர்களாலும் சூழப்பட்டிருந்தது. பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைத்துத் தேவர்கள், வசுக்கள், வாயு, மற்றும் இரண்டு தெய்வீக மருத்துவர்கள், சூரியன் மகனான யமன், செல்வத்தின் தலைவன், இந்திரன், விஷ்ணு, படைப்புத் தலைவன் {பிரம்மன்}, சிவன், சந்திரன், நாளின் ஆசிரியர் {சூரியன்}, நீர்த்தலைவன், சத்யஸ்கள் கூட்டம், மூதாதையர்கள், தொடர்பவர்களுடன் கூடிய ருத்திரர், கல்வித் தேவதை {சரஸ்வதி}, சித்தர்கள் கூட்டம் மற்றும் பல இறவாத தேவர்களின் புனிதமான காண்பதற்கினிய சன்னதிகளை {கோவில்களை} கண்டான்.
அக்கோவில்களில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} பல உண்ணாநோன்புகள் நோற்று, பெருமளவில் ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். தனது உடலுடன் அனைத்து புண்ணிய இடங்களிலும் மூழ்கி, மீண்டும் சூர்ப்பாரகத்திற்கு வந்தான். அவன் தனது தம்பிகளுடன் அதே கடற்கரைக்கு வந்து, உலகம் முழுவதும் அந்தணர்களால் புகழ் பரப்பப்பட்ட புனிதமான இடமான பிரபாசத்துக்கு வந்தான். இரு பெரிய சிவந்த கண்களைக் கொண்டவன், அங்கே தனது தம்பிகளுடன் நீராடி, மூதாதையர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தினான். மற்ற அந்தணர்களும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, லோமசருடன் சேர்ந்த அதையே செய்தனர்.
பனிரெண்டு நாட்களுக்குக் காற்று மட்டும் நீர் மட்டுமே உண்டு வாழ்ந்தான். பிறகு எல்லாப்புறமும் நெருப்பு சூழ இரவும் பகலும் {ஆன்ம} சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்தான். இப்படியே அறம் சார்ந்த மனிதர்களில் பெரியவன் {யுதிஷ்டிரன்} தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். இப்படி அவன் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மன்னன் {யுதிஷ்டிரன்} கடும் தவமிருக்கிறான் என்ற செய்தி பலராமனையும், கிருஷ்ணனையும் எட்டியது. விருஷ்ணி குலத்தில் இரு தலைவர்களும் தங்கள் படைகளுடன் அஜமீட குலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிரனிடம் வந்தனர். உடலெல்லாம் அழுக்குடன் தரையில் படுத்துக் கிடந்த பாண்டுவின் மகன்களையும், துன்ப நிலையில் இருந்த துருபதன் மகளையும் {திரௌபதியையும்} கண்ட அவர்களது துயரம் பெரிதாக இருந்தது. கதறி அழுவதை அவர்களால் நிறுத்த முடியவில்லை.
பிறகு, துரதிர்ஷ்டத்தால் வீழ்த்த முடியாத வீரம் கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ராமனையும் {பலராமனையும்}, கிருஷ்ணனையும், சாம்பனையும், கிருஷ்ணனின் மகனையும் {பிரத்தியும்னனையும்}, சினியின் பேரனையும் {சாத்யகியையும்}, மற்ற விருஷ்ணிகளையும் சந்தித்து உரிய வகையில் மரியாதை செலுத்தினார். பிறகு அவர்கள் அனைவரும் பதிலுக்குப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} அதே போல மரியாதை செலுத்தினர். பிறகு அவர்கள் அனைவரும், ஓ மன்னா {ஜனமேஜயா}, இந்திரனைச் சுற்றி அமரும் தேவர்களைப் போல யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். மிகவும் திருப்தியடைந்த அவன் {யுதிஷ்டிரன்}, தனது எதிரிகளின் அனைத்து சூழ்ச்சிகளையும், தாங்கள் காட்டில் எப்படி வசித்தனர் என்பதையும், அர்ஜுனன் ஆயுத அறிவியலைக் கற்க எப்படி இந்திரனின் வசிப்பிடம் சென்றான் என்பதையும் விவரித்து, இதயத்தால் மகிழ்ந்தான். அவர்களும் அவனிடம் இருந்து அனைத்து செய்திகளை அறிந்து மகிழ்ந்தனர். ஆனால் பாண்டவர்கள் மிகவும் மெலிந்திருப்பதைக் கண்ட பெருந்தன்மையுடைய கம்பீரமான விருஷ்ணிகளால் கண்ணீர் சிந்துவதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் உணர்ந்த வேதனையால், அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் தடையற வழிந்து கொண்டிருந்தது" என்றார் {வைசம்பாயனர் ஜனமேஜயனிடம்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.