Rama showed himself to Yudhishthira! | Vana Parva - Section 117 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
தந்தை ஜமதக்னியின் இறப்புக்குப் பழிவாங்கிய பரசுராமர்; க்ஷத்திரியர்களின் இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்களை உருவாக்கி தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்துவது; பூமியை அந்தணர்களுக்குக் கொடுப்பது; தன்னிடம் இருந்த செல்வத்தை அந்தணர்களுக்குப் பிரித்துக் கொடுப்பது; யுதிஷ்டிரனுக்கும் அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்து ஆலோசனை கூறுவது; யுதிஷ்டிரன் தென்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வது…
ராமர் {பரசுராமர்} சொன்னார், "ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, குற்றம் என்னுடையதே. அந்த அற்ப முட்டாள் பாவிகளான கார்த்தவீரியனின் மகன்கள் கணைகளால் கானகத்தில் இருக்கும் மானைப் போல கொல்லப்பட்டீர். ஓ தந்தையே {தந்தை ஜமதக்னியே}, அறம்சார்ந்து, நேர்மையான பாதையில் தடுமாற்றம் இல்லாது, அசையும் உயிரினங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாதிருந்தீரே. நீர் இவ்வழியில் இறந்து போக விதி எப்படி அனுமதித்து? வயோதிகரும், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும், போரிட விருப்பமில்லாதவருமான உம்மை நூறு கூர்மையான கணைகளால் கொன்றவர்கள் எப்படிப்பட்ட மிக மோசமான பாவத்தை இழைத்திருக்கிறார்கள்? வெட்கமற்ற அந்த மனிதர்கள் தங்கள் செயலை நண்பர்கள் மற்றும் சேவகர்கள் முன்னிலையில் உதவியற்ற எதிர்ப்பில்லாத அறம்சார்ந்த மனிதனைக் கொன்றோம் என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்வார்கள்?"
ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே {யுதிஷ்டிரனே}, இப்படியே தவத்தில் பெருமைமிக்க அவர் {பரசுராமர்} பரிதாபகரமாக அழுது புலம்பி, இறந்து போன தனது தந்தையின் ஈமச்சடங்குகளைச் செய்தார். எதிரிகளின் நகரங்களைக் வெற்றிகொள்ளும் ராமர் {பரசுராமர்} சிதையில் தனது தந்தையின் உடலைத் தகனம் செய்து சபதம் செய்தார். ஓ பாரத குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, போர்க்களத்தில் மிகுந்த வலிமையும், துணிவு மிகுந்த வீர ஆன்மாவும் கொண்டு, மரண தேவனுக்கு ஒப்பாக இருந்த அவர் {பரசுராமர்}, மொத்த படைவீரர்களின் சாதியையும் {க்ஷத்திரியர்களையும்} படுகொலை செய்வதாக சபதம் செய்து, மிகுந்த கோபத்துடன் தனது ஆயுதத்தை எடுத்து, தனியொருவராக கார்த்தவீரியனின் மகன்களைக் கொன்றார்.
ஓ! படைவீரர்கள் சாதியின் {க்ஷத்திரியர்களின்} தலைவா {யுதிஷ்டிரா}, எதிரிகளை அடிக்கும் வல்லமைபெற்ற தலைவரான ராமர் {பரசுராமர்} கார்த்தவீரியன் மகன்களைத் தொடர்ந்த வந்த க்ஷத்திரியர்களை மூன்று முறை அழித்தொழித்தார். அந்த வலிமிக்க தலைவர் ஏழு முறை {3 x 7 = 21 இருபத்தொரு முறையென்று நினைக்கிறேன்} உலகத்தை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்தார்.
சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் அவர்களின் {க்ஷத்திரியர்களின்} இரத்தம் கொண்டு ஐந்து தடாகங்கள் அவரால் {பரசுராமரால்} உண்டாக்கப்பட்டது. அங்கே அந்த பெரும்பலம்வாய்ந்த பிருகு குலக் கொழுந்து {பரசுராமர்} தனது மூதாதையர்களுக்கு நீர்க்கடன் செலுத்தினார். பிருகுவும், ரிசீகரும் அவர் முன்பு உருவம் கொண்டு வந்து ஆலோசனை வழங்கினர்.
பிறகு அச்சமூட்டும் பெயர் கொண்ட ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, ஒரு பெரும் வேள்வியைச் செய்து, தேவர்களின் தலைவனைத் {இந்திரனைத்} திருப்தி செய்து, ஆலோசனை கூறும் புரோகிதர்களுக்கு {ரித்விக்குகளுக்கு} பூமியை வழங்கினார். ஓ மனிதர்களைக் காப்பவனே {யுதிஷ்டிரா}, அவர் {பரசுராமர்} தங்கத்தாலான ஒரு பலிபீடத்தை எழுப்பினார். அது பத்து வியாமா அகலமும் {40 முழம் [ஒரு வியாமா என்பது 4 முழம்]}, ஒன்பது வியாமா {36 முழம்} உயரமும் இருந்தது. அதை பெருமை மிக்க காசியபருக்குப் பரிசாகக் கொடுத்தார் {பரசுராமர்}. பிறகு காசியபரின் உத்தரவின் பேரில் அந்தணர்கள் அந்த பலிப்பீடத்தை பல பங்குகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படியே அவர்கள் {அந்த அந்தணர்கள்} காண்டவாயமர்கள் (பங்கு பிரித்துக் கொண்டவர்கள்) என்ற பெயர் பெற்றனர்.
மகத்தான பலம் கொண்ட படைவீரர் குலத்தை {க்ஷத்திரியர்களை} அழித்தவர் {பரசுராமர்}, பூமியை உயர் ஆன்ம காசியபருக்கு அளித்தார். பின்பு கடுமை மிகுந்த தவத்தில் ஈடுபட்டார். இப்போது அவர் மலைகளின் ஏகாதிபதியான மகேந்திரத்தில் வசிக்கிறார். இப்படியே அவருக்கும் பூமியில் வசித்த அனைத்து படைவீரர்கள் சாதிக்கும் பகைமை ஏற்பட்டது. மகத்தான பலம் கொண்ட ராமர் {பரசுராமர்} இவ்வழியிலேயே மொத்த உலகையும் அடக்கினார்" என்றார் {அக்ருதவ்ரணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு பதினான்காவது சந்திர நாளில் {சதுர்த்தசியில்}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ராமர் {பரசுராமர்}, சரியான நேரத்தில், அங்கிருந்த புரோகித சாதி உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கும்}, அறம் சார்ந்த மன்னனுக்கும் (யுதிஷ்டிரனுக்கும்), அவனது தம்பிகளுக்கும் காட்சி கொடுத்தார். ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தலைவனும் {யுதிஷ்டிரனும்} தனது தம்பிகளுடன் சேர்ந்து ராமரை {பரசுராமரை} வழிபட்டான். ஓ! மனிதர்களை ஆள்பவர்களில் மிகவும் நேர்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே கூடியிருந்த இருபிறப்பாளர் வகையின் உறுப்பினர்களுக்கு {அந்தணர்களுக்கு} அவன் உயர்ந்த மரியாதைகளைச் செலுத்தினான். ஜமதக்னியின் மகனை {பரசுராமரை} வணங்கிய பிறகு, அவரிடம் இருந்து பாராட்டுகளைப் பெற்று, அவரது {பரசுராமரின்} வழிகாட்டுதல் படி அந்த இரவை மகேந்திர மலையில் கழித்து, தெற்குப் பகுதிகளுக்கான தனது பயணத்தைத் தொடங்கினான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.