Valarama's agony! | Vana Parva - Section 119 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
பாண்டவர்களுக்கு ஏற்பட்ட நிலையையும், துரியோதனன் பூமி ஆள்வதையும் நினைத்து பலராமன் வருந்துவது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} கேட்டான், "ஓ! தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, பாண்டுவின் மகன்களும், விருஷ்ணிகளும் புனிதமான இடமான பிரபாசத்தை அடைந்ததும் என்ன செய்தனர்? அவர்கள் அனைவரும் பலம்பொருந்திய ஆன்மாவைக் கொண்டவர்கள். அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் அறிந்த விருஷ்ணிகளும் பாண்டுவின் மகன்களும் நட்பு ரீதியான மதிப்பீட்டின்படியே ஒருவரை ஒருவர் அணுகுவர். ஆகையால், அவர்களுக்குள் என்ன உரையாடல் நடந்தது?"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கடற்கரையில் இருக்கும் புனிதமான இடமான பிரபாசத்தை விருஷ்ணிகள் அடைந்தபோது, அவர்கள் பாண்டுவின் மகன்களைச் சூழ்ந்து அவர்களுக்காகக் காத்திருந்தனர். பிறகு பசும்பால், குருக்கத்திப்பூ {Kunda Flower}, சந்திரன், வெள்ளி மற்றும் தாமரையின் வேரைப் போன்ற நிறம் கொண்டு, காட்டு மலர்மாலை அணிந்து, கலப்பையை ஆயுதமாகக் கொண்ட தாமரை இதழ்போன்ற கண்களைக் கொண்ட பலராமன், "ஓ! கிருஷ்ணா, "பெருந்தன்மை கொண்ட யுதிஷ்டிரன், ஜடா முடியுடன் வனவாசம் செய்து மரவுரி தரித்து இத்தகு இழி நிலையில் இருப்பதால் அறப்பயிற்சி நன்மைக்கோ அல்லது நேர்மையற்ற செயல்கள் தீமைக்கோ இட்டுச் செல்வதை நான் காணவில்லை. இப்போது துரியோதனன் பூமியை ஆள்கிறான். இருப்பினும் இந்தப் பூமி அவனை இன்னும் விழுங்கவில்லை.
இதனால், குறைந்த அறிவுடைய மனிதன்கூட, அறம் சார்ந்திருப்பதைவிட, தீய வழி வாழ்வே சரியானது என்றே நம்புவான். துரியோதனன் வளமிக்க நிலையிலும், யுதிஷ்டிரன் அரியணை திருடப்பட்டும் இப்படித் துன்புற்றால், இக்காரியத்தில் மக்கள் என்ன செய்வார்கள்? இந்தச் சந்தேகமே அனைத்து மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. நேர்மையான வழியில் சென்று, உண்மையில் கண்டிப்புடன், இதயத்தில் தயாளத்துடன், அறத்தேவன் {தர்மதேவன்_எமதர்மன்} மூலம் உதித்த மக்கள் தலைவன் {யுதிஷ்டிரன்} இங்கே இருக்கிறான். இந்தப் பிருதையின் மகன் {யுதிஷ்டிரன்}, நாட்டையும் இன்பத்தையும் கொடுப்பானேயொழிய, வாழ்வதற்காக ஒருபோதும் நேர்மையான பாதையில் இருந்து விலக மாட்டான்.
பீஷ்மர், கிருபர், அந்தணரான துரோணர், சபையின் மூத்த உறுப்பினரான வயோதிக மன்னன் {திருதராஷ்டிரன்} ஆகியோர் பிருதையின் மகன்களை வெளியேற்றிய பிறகு எப்படி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்? தீயமனம் கொண்ட பாரதக் குலத்தின் தலைவர்களுக்கு ஐயோ. பூமிக்குத் தலைவனான அந்த இழிந்த பாவி {திருதராஷ்டிரன்}, தனது குலத்தின் மூதாதையார்களை வேறு உலகத்தில் சந்திக்கும்போது, அவர்களிடம் என்ன சொல்வான்? தன்னை மீறி நடக்காத மகன்களை அரியணையில் இருந்து விரட்டிய பிறகு, பழியில்லா வகையில் அவர்களை நடத்தியதாக அவனால் சொல்ல முடியுமா? தன் மனக்கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு அவன் {திருதராஷ்டிரன்} குருடனாகிவிட்டான். அவன் செய்த எந்தச் செயலால் இப்படிப் பூமியில் உள்ள அனைத்து மன்னர்களைக் காட்டிலும் குருடாகிப் போனான்? தனது நாட்டிலிருந்து குந்தியின் மகன்களை வெளியேற்றியதால் அல்லவா அப்படி ஆனான்?
தனது மகன்களுடன் சேர்ந்து மனிதத்தன்மையற்ற இக்குற்றச் செயலைச் செய்திருக்கும் விசித்திரவீரியனின் மகன் {திருதராஷ்டிரன்}, இறந்தவர்கள் உடலை எரிக்கும் இடத்தில் மலர்கள் நிறைந்த தங்க மரங்களைக் காண்கிறார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் தோள்களை உயர்த்தி., தங்கள் சிவந்த பெரிய கண்களை உருட்டி முறைத்துப் பார்த்த போது, அவர்களது தீய ஆலோசனையை இவர் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் அச்சமற்ற முறையில் அவர் போருக்குத் தேவையான ஆயுதங்களுடனும், தம்பிகளின் துணையுடனும் இருந்த யுதிஷ்டிரனைக் கானகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
ஓநாயைப் போலப் பெரும்பசியுடனும் உண்ணும் விருப்பத்துடனும் இங்கே இருக்கும் பீமன், போருக்குத் தேவையான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளின் பலத்தாலேயே ஒரு படையணியையே அழிக்கக் கூடிய ஆற்றல் படைத்தவன். போர்க்களத்தில் இருக்கும் பெரும் படைகளும் இவனது வெறும் போர்க் கர்ஜனையை மட்டுமே கேட்டு முற்றிலும் காலியாகும். இப்போது அந்தப் பலம் வாய்ந்தவன் பசியாலும், தாகத்தாலும் துன்புற்று, களைப்பு தரும் பயணங்களால் மெலிந்திருக்கிறான். ஆனால் அவன் தன் கைகளில் கணைகளையும், பிற போர் ஆயுதங்களையும் ஏந்தி எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்தால், அவன் தனது கானக வாழ்வின் துயரங்களை நினைவு கூர்ந்து, தனது எதிரிகளைக் கொல்வான். இது நிச்சயமாக நடக்கும் என நான் கருதுகிறேன்.
இந்த முழு உலகத்திலும் இவனது {பீமனது} பலத்துக்கும் வீரத்துக்கும் இணையாக வேறு எந்த ஒரு ஆன்மாவும் பெருமை பேச முடியாதே. ஐயோ, இவனது உடல் குளிராலும், வெப்பத்தாலும் காற்றாலும் மெலிந்து போயிருக்கிறதே. ஆனால், அவன் போரிட எழுந்து நின்றால், எதிரிகளில் ஒரு மனிதனையும் விடமாட்டான். இந்தப் பெரும் போர்வீரனான இந்தப் பலம் நிறைந்த பீமன், தேரில் ஏறி, ஓநாயின் பசி கொண்டு தனி ஒருவனாகக் கிழக்குத் திசையில் இருந்த மனிதர்களின் ஆட்சியாளர்களை மொத்தமாகப் போரில் வென்று காயமில்லாமல் பத்திரமாகத் திரும்பினான். அதே பீமன், மரவுரி தரித்து, கானகத்தில் இழி வாழ்வு வாழ்ந்து துயரத்தில் இருக்கிறான்.
இந்தப் பலமிக்கச் சகாதேவன் தெற்கில் உள்ள மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தியவன். கடற்கரையில் கூடியிருக்கும் அந்த மனிதர்களின் தலைவர்கள் துறவியின் கோலத்தில் இவனைக் காண்கிறார்கள். போர்க்களத்தில் வீரமிக்க நகுலன் தனி ஒருவனாக மேற்குத் திசை ஆண்ட மன்னர்களை வீழ்த்தியவன். அவன் இப்போது கனிகளையும் கிழங்குகளையும் உண்டு ஜடாமுடி தரித்து, உடலெல்லாம் அழுக்கடைந்து கானகத்தில் திரிகிறான். தேரில் ஏறினால் ஒருபெரும் போர்வீராங்கனையும் ஒரு மன்னனின் {துருபதனின்} மகளுமான இவள் {திரௌபதி}, வேள்விச் சடங்கின் போது வேள்விப் பீடத்தில் இருந்து உதித்தவளாவாள். எப்போதும் மகிழ்ச்சிக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இவள், கானகத்தில் துயர்நிறைந்த வாழ்வை எப்படி வாழ்கிறாள்? வாழ்வின் இன்பங்களுக்கு அறமே தலைமையானது. இனபத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அறத்தேவன் மகன் {யுதிஷ்டிரன்}, வாயுத்தேவன் மகன் {பீமன்}, தேவர்களின் தலைவன் {இந்திரன்} மகன் {அர்ஜுனன்}, தேவ மருத்துவர்கள் {அசுவினி தேவர்கள்} மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோர் தேவர்களின் மகன்களாக இருந்தும் எப்படி அனைத்து வசதிகளையும் இழந்து கானகத்தில் துயர்வாழ்வு வாழுகின்றனர்? அறத்தின் மகன் வீழ்ந்த போது, அவனது மனைவியும், தம்பிமாரும், தொடர்பவர்களும், அவனும் விரட்டப்பட்ட போது துரியோதனன் எப்படி வளம்பெறத் துவங்கினான்? ஏன் இந்தப் பூமி தனது அனைத்து மலைகளுடன் அடங்கிப் போகவில்லை?" என்று கேட்டான் {பலராமன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.