Aswinis got the right for Soma juice | Vana Parva - Section 125 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சியவனர், இந்திரனை விடுவித்தது; லோமசர் தீர்த்தங்களின் பெருமைகளை விவரிப்பது...
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நூறு வேள்விகள் செய்தவன் (இந்திரன்), தன்னை விழுங்க எண்ணி தன்னைநோக்கி வரும் மரணத் தேவன் போல வாயைத் திறந்து கொண்டு வந்த பயங்கர முகம் கொண்ட பிசாசான மதனைக் கண்டான். தனது கரங்கள் அசைவற்று இருந்ததால், அச்சத்தால் அவன் திரும்பத் திரும்பத் தனது உதட்டோரங்களை நாவால் நனைத்தான்.
பிறகு, அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, சியவனரிடம், "ஓ! பிருகுவின் மகனே! ஓ! அந்தணரே, நான் உண்மையைச் சொல்கிறேன். இன்று முதல் அந்த அசுவினிகள் இருவரும் சோமச்சாற்றைப் பருகும் தகுதி பெறட்டும். என்னிடம் கருணை கொள்ளும்! எனது பணி பயனற்றுப் போகக்கூடாது. இது விதியாகட்டும். ஓ! புரோகித வகையைச் சேர்ந்த தவசியே! உமது பணியும் ஒன்றுமில்லாமல் போகக்கூடாது. இந்த இரு அசுவினிகளும், உம்மால் தகுதிபெற்றதால், சோமச்சாற்றைப் பருகும் உரிமையைப் பெறுவார்கள். மேலும், ஓ பிருகுவின் மகனே, உமது சக்தியின் புகழ் பரவவே நான் இதைச் செய்தேன். உமது சக்திகளைக் காட்ட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதே எனது நோக்கம். சுகன்யாவின் தந்தையின் {மன்னன் சர்யாதியின்} புகழும் எங்கும் பரவ வேண்டும் என்பது எனது மற்றொரு நோக்கம். ஆகையால், என்னிடம் கருணை கொள்ளும். நீர் விரும்பியவாறே அனைத்தும் நடக்கட்டும்" என்றான் {இந்திரன்}.
இந்திரனால் இப்படிச் சொல்லப்பட்டதும், சக்திவாய்ந்த ஆன்மாக் கொண்ட சியவனர் உடனே அமைதியடைந்தார். பிறகு அவர் எதிரி நகரங்களை அழிப்பவனை {இந்திரனை} விடுவித்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சக்திவாய்ந்த தவசி {சியவனர்} பிசாசான மதனை (உண்மையில் போதையை) {மதத்தை} மதுவுக்கும், பெண்களுக்கும், சூதுக்கும், விளையாட்டுக் களத்துக்கும் எனப் பலவாறாகப் பகுத்தளித்தார். இப்படிப் பிசாசான மதனைக் கைவிட்டு சோமச்சாற்றின் பங்கைக் கொடுத்து இந்திரனைத் திருப்திப்படுத்தி, மன்னன் சர்யாதி மற்றத் தேவர்களையும் அசுவினி இரட்டையர்களையும் வணங்கவும் அம்மன்னனின் புகழ் அனைத்து உலகங்களை அடையவும் உதவி செய்தார். பிறகு பேச்சறிந்தவர்களில் சிறந்த அவர் {சியவனர்}, தமது அன்பான மனைவியான சுகன்யாவுடன் அக்கானகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பறவையொலிகளுடன் பளபளக்கும் இதுவே அத்தடாகம். இங்கே நீ உனது தம்பிகளுடன் சேர்ந்து உனது மூதாதையர்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்த வேண்டும். ஓ! பூமியின் ஆட்சியாளா {யுதிஷ்டிரா}, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அதை அடைந்த பிறகு, சிகதாக்ஷத்தைக் கண்டு, ஸைந்தவ வனத்தை அடைந்து, எண்ணற்ற சிறு செயற்கையாறுகளைக் காண வேண்டும். ஓ! பெரும் மன்னா, ஓ! பாரதகுலத்தின் வழித்தோன்றலே, அனைத்து புனிதமான தடாகங்களின் நீரையும் தொட்டு தெய்வமான ஸ்தாணுவின் (சிவன்) பாடல்களைப் {மந்திரங்களைப்} பாடி அனைத்துக் காரியங்களிலும் வெற்றியைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, ஏனென்றால், இது துவாபர மற்றும் திரேதா யுகத்தின் சந்திக்காலம் ஆகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இது ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்ற காலமாகும்.
இந்த இடம் ஒரு மனிதனின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் வல்லமை பெற்றிருப்பதால், இங்கே நீ நீராட வேண்டும். பண்படுத்தப்பட்ட மனங்கள் கொண்ட மனிதர்கள் வாழும் ஆர்ச்சிக மலையும் இங்கே தான் இருக்கிறது. அனைத்துக் காலங்களின் கனிகளும் இங்கே எல்லாக் காலங்களிலும் வளர்கிறது. ஓடைகள் இங்கே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேவர்களுக்குத் தகுந்த அற்புதமான இடம் இது. தேவர்களால் நிறுவப்பட்ட பல உருவங்களிலான புனித கற்குவைகளும் இருக்கின்றன. ஓ! யுதிஷ்டிரா, இதுவே சந்திரனுக்குச் சொந்தமான நீராடும் இடம். இதைச் சுற்றி, இந்தக் கானகவாசிகளான தவசிகளும், வாலகில்யர்களும், காற்றை மட்டுமே உண்ணும் பாவகர்களும் எப்போதும் இருக்கின்றனர். இவையே மூன்று சிகரங்களும், மூன்று நீரோடைகளும் ஆகும். நீ அவற்றை ஒவ்வொன்றாக வலம் வரலாம். பிறகு உனது வசதிக்கேற்ப நீராட வேண்டும்.
ஓ! மன்னா, மனிதர்களை ஆட்சி செய்த சந்தனுவும், சுனகனும், நரநாராயணர்களும் நித்தியமான பகுதிகளை இங்கிருந்துதான் அடைந்தனர். இங்கே இந்த வலிமைமிக்கத் தவசிகளுடன் தேவர்களும் மூதாதையர்களும் இருக்கின்றனர். இந்த ஆர்ச்சிக மலையில் அவர்கள் அனைவரும் தவமிருக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரா, அவர்களுக்கு நீ படையல் செய்ய வேண்டும். ஓ! மனிதர்களைப் பாதுகாப்பவனே, இங்கே தான் அவர்களும், தவசிகளும், பாலில் சமைக்கப்பட்ட சோறை {அரிசியை} உண்கிறார்கள். வற்றாத ஊற்றுக் கொண்ட யமுனை இங்கேதான் இருக்கிறது. ஓ! பாண்டுவின் மகனே, கிருஷ்ணர் {வியாசர்} இங்கேதான் தனது தவவாழ்வை மேற்கொண்டார். ஓ! எதிரிகளின் சடலங்களை இழுத்துச் செல்பவனே, இரட்டைத் தம்பிகளும் {நகுலனும் சகாதேவனும்}, பீமசேனனும், கிருஷ்ணையும் {திரௌபதியும்}, மேலும் நாங்கள் அனைவரும் உம்முடன் இந்த இடத்திற்குச் செல்வோம்.
ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இது இந்திரனுக்குச் சொந்தமான புனித ஊற்றாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, படைத்திடும் தேவனும் {தாதாவும்}, தவிர்த்திடும் தேவனும் {விதாதாவும்}, வருணனும் மேல்நோக்கி எழுந்து, பொறுமையைக் கடைப்பிடித்து, உயர்ந்த நம்பிக்கையைக் கொண்டு இங்கே வசிக்கலாயினர். இந்தச் சிறந்த மற்றும் அனுகூலமான மலை, அன்பும், நேர்மையான மனநிலையும் கொண்ட மனிதர்களுக்குத் தகுந்ததாக இருக்கிறது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சக்திமிக்கத் தவசிகளும் தங்கள் அறச்சடங்குகளைச் செய்ய அடிக்கடி வந்து செல்லும் இதுவே கடும் பாவங்களை அழிக்கவல்ல புனிதமான யமுனையாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பெரும் வில் படைத்த மாந்தாதாவும், அற்புதமான பரிசுகளைக் கொடுக்கவல்லவனும் சகாதேவனின் மகனுமான சோமகனும் இங்கேதான் தேவர்களுக்காக வேள்விச் சடங்குகளைச் செய்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.