Somaka and Jantu! | Vana Parva - Section 127 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சோமகன் மகனில்லாதிருப்பது; தனது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுப்பது; சோமகன் தனது புரோகிதரிடம் நூறு மகன்கள் பிறக்க வழி கேட்பது; மன்னன் வேள்வியில் தனது ஒரே மகனை பலி கொடுத்தால் நூறு பிள்ளைகள் பிறப்பார்கள் என்று குடும்பப் புரோகிதர் சொல்வது...
யுதிஷ்டிரன் {லோமசரிடம்} கேட்டான், "ஓ உரைப்பவர்களில் சிறந்தவரே {லோமசரே}! மன்னன் சோமகன் கொண்டிருந்த சக்தி மற்றும் பலத்தின் எல்லை எது? அவனது செயல்களைக் குறித்தும், அவனது சக்தி குறித்தும் உள்ளபடியே அறிய விரும்புகிறேன்"
லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ யுதிஷ்டிரா! சோமகன் என்ற பெயரில் ஒரு அறம்சார்ந்த மன்னன் இருந்தான். ஓ! மன்னா, அவனுக்கு, கணவனுக்குச் சரியான பொருத்தமான நூறு {100} மனைவியர் இருந்தனர். அவன் {சோமகன்} பெரும் அக்கறை எடுத்துக் கொண்டும், அவர்களில் ஒரு மகனைப் பெற முடியவில்லை. நீண்ட காலம் கடந்தும் அவன் மகனற்றவனாகவே தொடர்ந்தான். ஒரு சமயம், அவன் முதிர்ந்த வயதடைந்த பிறகும் ஒரு மகனைப் பெற அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருந்தான். அப்போது அந்த நூறு மனைவியரில் ஒருத்தியிடம், ஜந்து என்ற பெயர் கொண்ட மகன் பிறந்தான். அனைத்து அன்னையரும் அவனைச் சுற்றி அமர்ந்து கொள்வதும், அவனை {ஜந்துவை} மகிழச்செய்யும் பொருட்களை அனைவரும் கொடுப்பதும் வழக்கம்.
ஒரு நாள் அந்தப் பிள்ளையில் இடையில் ஒரு எறும்பு கடிக்க நேர்ந்தது. அந்தப் பிள்ளையும் வலியால் சத்தமாகக் கதறினான். உடனே அத்தாய்மார்கள், பிள்ளை எறும்பால் கடிக்கப்பட்டதைக் கண்டு மிகவும் துன்புற்றார்கள். மேலும் அவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு மிகவும் அழுதார்கள். இதனால் அங்கே ஆரவாரவொலி எழுந்தது. திடீரென அவ்வலியின் கதறல், குடும்பப் புரோகிதர் அருகிருக்க அமைச்சர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த பூமியின் ஆட்சியாளனை {சோமகனை} (அவனின் காதுகளை) அடைந்தது. பிறகு அம்மன்னன் {சோமகன்} அது என்னவென்ற தகவலைக் கேட்டனுப்பினான். அரச துதிபாடி {பொதுவாக வாயிற்காப்போன்}, அது அவனது மகனைக் குறித்த காரியம் என்று விளக்கினான். சோமகன் தனது அமைச்சர்களுடன் எழுந்து, பெண்கள் இருந்த அந்தப்புரத்திற்கு விரைந்தான். ஓ! எதிரிகளை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, அங்கே வந்ததும், அவன் {சோமகன்} தனது மகனுக்கு ஆறுதல் கூறினான். இப்படிச் செய்த பிறகு, பெண்களின் அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்த மன்னன், தனது குடும்பப் புரோகிதர் மற்றும் அமைச்சர்களுடன் அமர்ந்தான்.
சோமகன் {குடும்பப் புரோகிதரிடம்}, "ஒரே மகனைக் கொண்டிருப்பது இகழத்தக்கது! இதற்கு நான் மகனற்றவனாகவே இருந்திருக்கலாம். அனைத்து உயிரினங்களும் நோய்வாய்ப்படும் சாத்தியம் இருப்பதைக் கருதினால் ஒரே பிள்ளை கொண்டிருப்பது தொல்லையே. ஓ! அந்தணரே, ஓ! எனது தலைவா! நான் பல பிள்ளைகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நூறு மனைவியரையும் நான் மணந்தேன். அதுவும் அவர்களைச் சோதித்தறிந்து, எனக்கு அவர்கள் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றறிந்த பிறகே மணந்தேன். ஆனால் அவர்களுக்குப் பிள்ளைகளில்லை. அனைத்து வகையிலும் முயன்று, பெரும் முயற்சிக்குப் பின்னர் அவர்கள் ஜந்து என்ற ஒரு மகனைப் பெற்றார்கள். இதைவிடப் பெரிதாகத் துக்கம் தரக்கூடியது எது? ஓ! இரு பிறப்பாளர்கள் சாதியில் {அந்தணர்களில்} மிக அற்புதமானவரே! நான் வயதால் வளர்ந்து மூப்படைந்துவிட்டேன். எனது மனைவியரும் அப்படியே. இருப்பினும் இந்த ஒரே மகன்தான் அவர்களின் நாசியில் மூச்சாக இருக்கிறான். அவன் எனக்கும் அப்படியே இருக்கிறான். ஒருவன் நூறு மகன்களைப் பெறக்கூடிய ஏதாவது சடங்கு இருக்கிறதா? (அப்படி ஒன்று இருந்தால்), அது சிறியதா அல்லது பெரியதா என்றும், செய்வதற்கு எளிதானதா அல்லது கடுமையானதா என்றும் சொல்லும்" என்று கேட்டான்.
குடும்பப் புரோகிதர் {மன்னன் சோமகனிடம்}, "ஒரு மனிதன் நூறு மகன்கள் பெறக்கூடிய ஒரு அறச்சடங்கு இருக்கிறது. ஓ! சோமகா, உன்னால் அதைச் செய்ய முடியும் என்றால், நான் அதை உனக்கு விவரிக்கிறேன்" என்றார்.
சோமகன், "அது நன்மையோ அல்லது தீமையோ, நூறு மகன்களைப் பிறக்க வைக்கக்கூடிய அச்சடங்கு ஏற்கனவே முடிந்ததாக எடுத்துக் கொள்ளும். அருளப்பட்ட நீர் அதை எனக்கு விளக்குவதே தகும்" என்றான்.
அதற்கு அந்தக் குடும்பப் புரோகிதர், "ஓ! மன்னா {சோமகா}, நான் ஒரு வேள்வியைச் செய்ய அனுமதி. அதில் நீ உனது மகனான ஜந்துவைத் தியாகம் செய்ய வேண்டும். பிறகு, குறைந்த நாட்களிலேயே உனக்கு அழகான நூறு மகன்கள் பிறப்பார்கள். ஜந்துவின் கொழுப்பு தேவர்களுக்குப் படையலாக நெருப்பிலடப்படும்போது, அந்தத் தாய்மார் அதில் வரும் புகையை முகர்ந்து பார்க்க வேண்டும். அது வீரமும் பலமும் மிக்கப் பல மகன்களை அவர்களுக்குக் கொடுக்கும். ஜந்து, மீண்டும் அதே தாயினிடத்தில் உனக்கே மகனாகப் பிறப்பான். அவனது முதுகில், தங்கத்தாலான ஒரு குறி {மச்சம்} தோன்றும்" என்றார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.