Ghatotkacha carried Draupadi! | Vana Parva - Section 144 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கடோத்கசன் திரௌபதியைச் சுமக்க மற்ற ராட்சசர்கள் பாண்டவர்களையும், அந்தணர்களையும் சுமக்க, பாண்டவர்கள் பல நாடுகளைக் கடந்து கைலாசத்தைக் கண்டு நர நாராயணனின் ஆசிரமத்தில் நிற்கும் பெரும் இலந்தை மரத்தை அடைவது; அங்கே சில காலம் வசித்து மகிழ்வது…
யுதிஷ்டிரன் {பீமனிடம்} சொன்னான், "ஓ! பீமா, வலிமைமிக்கவனும், ராட்சசர்களின் வீரத்தலைவனும், நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனும், உண்மையுள்ளவனும், அறமறிந்தவனுமான சட்டப்படியான உனது மகன் {கடோத்கசன்}, தாமதமில்லாமல் (அவனது) தாயைச் (திரௌபதியைச்) சுமந்து செல்லட்டும். ஓ! கடும் பராக்கிரமம் கொண்டவனே {பீமா}, உனது கரத்தின் பலத்தால், நான் பாஞ்சாலன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து காயப்படாமல் கந்தமாதனம் அடைவேன்"
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தனது தமயனின் {அண்ணன் யுதிஷ்டிரனின்} வார்த்தைகளைக் கேட்ட மனிதர்களில் புலியான பீமசேனன், எதிரிகளை ஒடுக்குபவனான தனது மகன் கடோத்கசனிடம், "ஓ! ஹிடிம்பையின் வெல்லப்பட முடியாத மகனே {கடோத்கசனே}, இந்த உனது அன்னை {மற்றொரு அன்னையான திரௌபதி} மிகவும் சோர்வாக இருக்கிறாள். நீயோ பலவானாகவும் விரும்பிய இடத்திற்குச் செல்லத்தக்கவனாகவும் இருக்கிறாய். எனவே, ஓ! விண்ணதிகாரியே இவளைச் சுமந்து செல். செழுமை உனதாகட்டும்! இவளை உனது தோள்களில் ஏற்றி, அவளுக்குச் சஞ்சலமேற்படுத்தாதவாறு தலைக்கு மேல் வெகு தொலைவில் இல்லாமல் ஒரு வழியை மேற்கொண்டு எங்களுடன் வா" என்றான். அதற்குக் கடோத்கசன், "நீதிமானான யுதிஷ்டிரரையும், தௌமியரையும், கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்} நான் தனி ஒருவனாகவே சுமக்க முடியும் என்கிற போது, இன்று எனக்கு உதவி செய்ய இன்னும் பிறர் இருக்கிறார்கள். எனவே, அப்படிச் சுமப்பதில் என்ன அற்புதம் இருக்கப் போகிறது? ஓ! பாவமற்றவரே {தந்தை பீமரே}, வானத்தில் நகரும் வல்லமையும், நினைத்த உருவை கொள்ளும் வல்லமையும் கொண்ட நூற்றுக்கணக்கான (ராட்சச) வீரர்கள் அந்தணர்களுடன் சேர்த்து உம்மையும் சுமப்பார்கள்" என்றான் {கடோத்கசன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதைச்சொன்ன கடோத்கசன் பாண்டவர்களுக்கு மத்தியில் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியைத்} தூக்கினான். (ராட்சசர்கள்) மற்றவர்கள் பாண்டவர்களைச் சுமக்கத் தொடங்கினர். மேலும் தனது சுய ஆற்றலால், ஒப்பற்ற சுடரொளி கொண்ட லோமசர், சித்தர்களின் பாதையில் இரண்டாவது சூரியனைப் போல நகர்ந்தார். ராட்சசர்கள் தலைவனின் {கடோத்கசனின்} கட்டளையின் பேரில், கடும் பராக்கிரமம் கொண்ட ராட்சசர்களும் அந்தணர்களைச் சுமந்து கொண்டு முன்னேறினர். அழகான கானகங்களைக் கண்டுகொண்டே பெரும் இலந்தை மரத்தை நோக்கி முன்னேறினர்.
அதிவேகம் கொண்ட ராட்சசர்களால் மிகவிரைவாகத் தூக்கிச் செல்லப்பட்ட அந்த வீரர்கள் நெடுந்தூரத்தை குறுகிய தூரம் கடப்பவர்களைப் போலக் கடந்து சென்றார்கள். அவர்களது வழியில், மிலேச்ச மக்களால் நிரம்பிய பல்வேறு ரத்தினச் சுரங்கங்களைக் கொண்ட தடங்களையும் கண்டார்கள். மேலும் அவர்கள் பல்வேறு தாதுக்கள் நிரம்பி, வித்யாதரர்கள் கூட்டத்தால் சூழப்பட்டு, குரங்குகள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் கந்தர்வர்கள் வசித்த, மயில்கள், சமரங்கள், குரங்குகள், மான்கள், கரடிகள், பன்றிகள், கவயங்கள், எருமைகள் நிரம்பிய, குறுக்கே பாயும் நீரோட்டங்கள், பலவகையான பறவைகள், விலங்குகள், மரங்கள் ஆகியவை நிரம்பிய குன்றுகளைக் கண்டார்கள்.
இப்படிப் பல நாடுகளையும், உத்திர குரு நாட்டையும் கடந்து, மலைகளில் முதன்மையான பல அதிசயங்கள் கொண்ட கைலாசத்தைக் கண்டார்கள். அதன் அருகிலேயே, அனைத்துக் காலங்களுக்கும் உரிய கனிகளையும், மலர்களையும் தாங்கும் தெய்வீக மரங்கள் நிறைந்த, நரன் மற்றும் நாராயணனின் ஆசிரமத்தையும் கண்டார்கள். அவர்கள் உருண்ட அடிமரம் கொண்ட அழகிய இலந்தை மரத்தையும் {பதரீ விருக்ஷத்தையும்} கண்டார்கள். அது {அந்த இலந்தை மரம்} இளந்தளிர்களுடன் புதியதாக இருந்தது; பரந்த நிழல் பரப்பிக் கொண்டிருந்தது; அற்புதமான அழகுடன் இருந்தது; தடித்த, மென்மையான, நேர்த்தியான, பசுமையான இலைகள் கொண்டிருந்தது; ஆரோக்கியம் அளிப்பதாக இருந்தது; மாபெரும் கிளைகள் கொண்டிருந்தது; அகன்று பரவியிருந்தது; ஒப்பற்ற காந்தியுடன் இருந்தது; முழுதும் வளர்ந்த சுவை நிறைந்த தேனொழுகும் கனிகளைத் தாங்கிக் கொண்டிருந்தது. இந்தத் தெய்வீக மரம், வலிமைமிக்க முனிவர்க்கூட்டத்தால் அடிக்கடி அடையப்பட்டது. விலங்குகளின் ஆவிகளால் மதம் கொண்ட பறவைகள் அதில் வசித்தன. கொசுக்களும் ஈக்களும் அற்ற, பழங்களும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்த, பச்சைப்புற்களால் மூடப்பட்ட, தேவர்களும், கந்தர்வர்களும் வசித்த இயற்கை சுகாரதாரம் நிறைந்த, அழகான குளிர்ந்த மென்மையான உணர்வுகளைத் தூண்டும் ஒரு இடத்தில் அது {அந்த இலந்தை மரம்} வளர்ந்திருந்தது.
அந்தணர்களுடன் அந்த இடத்தை {இலந்தை மரத்தை} அடைந்த அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் {பாண்டவர்கள்}, மெதுவாக ராட்சசர்களின் தோள்களில் இருந்து இறங்கினார்கள். பிறகு இருபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையர்களுடன் சேர்ந்த பாண்டவர்கள் அங்கே இருந்த நர நாராயணனின் அழகிய ஆசிரமத்தைக் கண்டார்கள். அந்த ஆசிரமம் மனச்சோர்வற்று இருந்தது; புனிதமானதாக இருந்தது; கதிரவனின் கதிர்கள் தொடாத இடத்தில் இருந்தது; பசி, தாகம், வெப்பம் மற்றும் குளிர் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு அனைத்து துக்கத்தையும் விலக்குவதாக இருந்தது; வலிமைமிக்க முனிவர்களால் சூழப்பட்டதாக இருந்தது; சாம, ரிக், யஜுஸ் வேதங்களின் அருள் செயல்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருந்தது; ஓ! மன்னா {ஜனமேஜயா}, அறம் உதறிய {தவிர்த்த} மனிதர்கள் அணுக முடியாததாக இருந்தது; காணிக்கைகளாலும் ஹோமங்களாலும் அழகுடன் இருந்தது; புனிதமாக இருந்தது; நன்கு பெருக்கி {துடைப்பத்தால் கூட்டி} மெழுகி இருந்தது; தெய்வீக மலர்களின் காணிக்கைகளால் {புஷ்ப பலிகளால்} சுற்றிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது; அங்கே வேள்வி நெருப்பின் பலி பீடங்கள், புனித தூபங்கள் {யூபங்கள்} மற்றும் குடங்கள் பரவியிருந்தன. பெரும் நீர்க்குடங்களும், உறிகளும் கொண்டு அனைத்து உயிர்களுக்கும் புகலிடமாக இருந்தது; வேத மந்திரங்கள் அங்கே எதிரொலித்துக் கொண்டே இருந்தன; வசிப்பதற்கு ஏற்ற தெய்வீகமான இடமாக இருந்து களைப்பைப் போக்கியது; பிரகாசத்தினையும் புரியாத சிறப்புகளையும் கொண்டிருந்தது; தெய்வீக குணங்களும் கம்பீரமாக அது {நர நாராயணரின் ஆசிரமம்} இருந்தது.
அந்த ஆசிரமத்தில் கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டும் உண்ணும் பெரும் முனிவர்கள் பலர் வசித்து வந்தனர்; அவர்கள் தங்கள் புலன்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்; அவர்கள் கருப்பு மான் தோல் உடுத்தியிருந்தனர்; சூரியனையும் அக்னியையும் போல அவர்கள் பிரகாசத்துடன் இருந்தனர்; விடுதலையை {முக்தியை} தீவிர நோக்கமாகக் கொண்டு துறவால் தங்கள் ஆன்மாவைப் பெருகச் செய்தனர்; அவர்கள் வானப்பிரஸ்த வகை வாழ்வை வாழ்ந்தனர்; புலனடங்கியவர்களாக இருந்தனர்; பரமாத்மாவை உணர்ந்திருந்தனர்; பெரும் நற்பேறு பெற்றவர்களாக இருந்தனர்; வைதீக மந்திரங்களை அவர்கள் ஓதினர். தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புலன்களில் இருந்து விடுபட்ட தர்மனின் மகனான அளவற்ற சக்தி கொண்டவனும் புத்திகூர்மையுள்ளவனுமான யுதிஷ்டிரன், தனது தம்பிகளை உடன் அழைத்துக் கொண்டு, அம்முனிவர்களை அணுகினான். தெய்வீக அறிவு கொண்ட அந்தப் பெரும் முனிவர்கள் யுதிஷ்டிரனின் வருகையை அறிந்து, அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வேதங்களை உரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நெருப்பு போன்ற அம்முனிவர்கள் யுதிஷ்டிரனுக்கு அருளாசிகள் கூறிய பிறகு, அவனுக்குப் பொருத்தமான வரவேற்பை அளித்தனர். அவர்கள் அவனுக்குத் தெளிந்த நீரையும், மலர்களையும் கிழங்குகளையும் கொடுத்தனர். நீதிமானான யுதிஷ்டிரனும் மரியாதையுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு அம்முனிவர்களின் வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். ஓ! பாவமற்றவனே {ஜனமேஜயா}, பிறகு பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்}, தனது தம்பிகளையும், வேத வேதாங்கங்கள் அறிந்த ஆயிரக்கணக்கான அந்தணர்களையும் அழைத்துக் கொண்டு தெய்வீக மனம் கொண்டு சுக்கிரனின் வசிப்பிடத்தைப் போலவும் சொர்க்கத்தைப் போலவும் இருந்த அந்தப் புனிதமான ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.
அங்கே அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரன்}, பகீரதியால் அழகூட்டப்பட்டு, தேவர்களாலும் தெய்வீக முனிவர்களாலும் வழிபடப்படும் நர நாராயணனின் ஆசிரமத்தைக் கண்டான். பிரம்ம முனிவர்களாலும், தேனொழுகும் கனிகளாலும் நிரம்பிய அவ்வாசிரமத்தைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். அந்த இடத்தை அடைந்த பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவர்கள் அந்தணர்களுடன் கூடி அவ்விடத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள். அங்கே அவர்கள், பலவகையான பறவைகளும், பெருமைமிக்கவர்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்த பிந்து தடாகத்தையும் {பிந்துசரசையும்}, தங்கச் சிகரங்கள் கொண்ட மைநாக மலையையும் கண்டார்கள். பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} கிருஷ்ணையை {திரௌபதியை} அழைத்துக் கொண்டு அனைத்து பருவ காலங்களின் மலர்களும் மின்னும் அற்புதமான வனங்களில் உலவி மகிழ்ச்சி கொண்டான். அங்கே பூத்துக் குலுங்கும் மலர்கள் நிரம்பிய மரங்கள் அனைத்துப் புறங்களிலும் இருந்தன. கனிகளின் பாரத்தால் அவை வளைந்து இருந்தன. எண்ணற்ற ஆண் குயில்கள் இலைகள் மின்னும் அம்மரங்களில் இருந்தன. குளிர்ந்த நிழலை அடர்த்தியாகத் தந்த அந்த மரங்களைக் கண்டு இனிமை அடைந்தனர். அவர்கள் தெளிந்த நீருடைய அழகான தடாகங்கள், தாமரைகளாலும், குவளை மலர்களாலும் நிரம்பி வழிவதைக் கண்டு மகிழ்ந்தனர்.
ஓ! தலைவா {ஜனமேஜயா}, அங்கே தூய நறுமணம் கொண்ட மென்மையான காற்று கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்}, பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. அந்த இலந்தை மரத்திற்கு அருகில், குந்தியின் வலிமைமிக்க மகன், எளிய வீழ்ச்சியும் கொண்ட பாகீரதி, புதிய தாமரைகளுடனும், மாணிக்கம் மற்றும் பவளங்களாலான படித்துறைகள் கொண்டிருப்பதைக் கண்டனர். அங்கே மரங்கள் அடர்ந்திருந்தன. தெய்வீக மலர்கள் பரவிக் கிடந்தன. மனதிற்கு இனிமையாக அச்சூழல் இருந்தது. தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போன, அணுகுவதற்குக் கடினமான அந்த இடத்தில் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கம் பாகீரதி நதியின் புனித நீரால் நீர்க்கடன் செய்தனர். இப்படியே அந்த மனிதர்களில் காளைகளான குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்கள் {பாண்டவர்கள்}, அந்தணர்களை நீர்க்கடன் செலுத்த வைத்தும், தியானம் பயில வைத்தும் அங்கேயே வசிக்க ஆரம்பித்தனர். தேவர்களைப் போன்ற தோற்றம் கொண்ட மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள், திரௌபதியின் பல்வேறு கேளிக்கைகளைச் சாட்சிகளாகக் கண்டு மகிழ்ச்சியை உணர்ந்தனர்.