Yudhishthira's lament! | Vana Parva - Section 143 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
கடும் பாதைகளைக் கடந்து வந்த திரௌபதி மயங்கி விழுவது; பாண்டவர்கள் அதிர்ச்சியுறுவது; யுதிஷ்டிரன் அழுது புலம்புவது; பிறகு பீமன் யுதிஷ்டிரனின் கட்டளையின்பேரில் கடோத்கசனை வரவழைப்பது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் உயர்ஆன்ம மகன்கள் {பாண்டவர்கள்} இரண்டு மைல்கள் தூரம் முன்னேறுவதற்குள், கால்நடையாகச் செல்லும் பயணத்திற்குப் பழக்கப்படாத திரௌபதி விழுந்தாள். பாஞ்சாலனின் {துருபதனின்} அப்பாவி மகள் {திரௌபதி} இந்தத் துன்பத்தால் ஏற்பட்ட களைப்பினாலும், தனது அதீத மென்மையாலும் மயங்கினாள். ஒன்றுக்கொன்று நெருக்கத்துடன் யானையின் துதிக்கையைப் போன்று இருந்த தனது தொடைகளை ஒரு ஆதரவுக்காக பற்றிக் கொண்டிருந்தவள், நடுங்கியவாறு வாழை மரம் விழுவதைப் போலத் திடீரென விழுந்தாள். அந்த அழகானவள் {திரௌபதி} ஒடிந்த கொடி போல விழுவதைக் கண்ட நகுலன் முன்னே ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்தான். அவன் {நகுலன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாஞ்சாலன் மகளான இந்தக் கரிய விழியாள் {திரௌபதி}, களைப்பால் தரையில் விழுந்துவிட்டாள். எனவே, ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் இவளைக் கவனியும். துன்புறத்தகாதவளும் மெல்ல நடப்பவளுமான இந்த மங்கை {திரௌபதி} இப்படிப்பட்ட கடும் நிலைகளை அடைய நேரிட்டது. பயணக் களைப்பால் இவள் {திரௌபதி} மிகுந்த துன்பத்தை அடைந்திருக்கிறாள். ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, எனவே நீர் இவளைத் தேற்றும்" என்றான் {நகுலன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நகுலனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பீமனும், சகாதேவனும் மிகுந்த துக்கத்துடன் அவளை {திரௌபதியை} நோக்கி விரைவாக ஓடி வந்தனர். பலமற்று, முகம் வாடியிருக்கும் அவளைக் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவளை {திரௌபதியை} வாரி மடியில் எடுத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான். யுதிஷ்டிரன், "வசதிக்குப் பழக்கப்பட்ட இவள் {திரௌபதி}, நன்றாகப் பாதுகாக்கப்பட்டு, படுக்கையில் அற்புதமான விரிப்புகள் கொண்ட அறைகளில் தூங்க வேண்டிய இந்த அழகானவள் {திரௌபதி}, இப்படித் தரையில் விழுந்து கிடக்கிறாளே! ஐயோ! அனைத்து அற்புதமான பொருட்களுக்கும் தகுதி வாய்ந்த இவளுடைய {திரௌபதியுடைய} மிருதுவான பாதங்களும், தாமரை போன்ற முகமும் இப்படி என்னால் (மட்டுமே) கருநீல நிறத்தை அடைந்தனவே. ஓ! என்ன காரியம் செய்தேன்! பகடைக்கு அடிமையான முட்டாளாகி, வனவிலங்குகள் நிறைந்த கானகத்தில் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} என்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தேனே! பாண்டுவின் மகன்களைத் தலைவர்களாக அடைந்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையிலேயே துருபதர்களின் மன்னனான இவளது தந்தை {துருபதன்} இந்த அகன்ற கண்ணுடையவளை {திரௌபதி} அளித்தான். நம்பிய எதையும் அடையாமல், பயணத்தின் களைப்பினாலும், சோகத்தாலும், பாவியான என்னால் தரையில் விழுந்து உறங்குகிறாளே" என்று புலம்பினான் {யுதிஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்தபோது, தௌமியரும் பிற முக்கிய அந்தணர்களும் அந்த இடத்திற்கு வந்தனர். பிறகு அவர்கள் மரியாதை நிறைந்த தங்கள் ஆசிகளால் அவனை {யுதிஷ்டிரனைச்} சமாதானப்படுத்தினர். ராட்சசர்களை விரட்ட வல்ல மந்திரங்களைச் சொல்லி சில சடங்குகளையும் செய்தனர். (பாஞ்சாலியின்) உடல்நிலை தேறுவதற்கான மந்திரங்களை அந்தப் பெருந்துறவிகளை உரைத்தனர். பாண்டவர்களின் ஆறுதல் தரும் உள்ளங்கைகளால் தொடப்பட்டும், நீர்த்துளிகள் அடங்கிய குளிர்ந்த காற்று வீசப்பட்டும் ஆறுதல் அடைந்த அவள் {திரௌபதி}, படிப்படியாகப் புலனுணர்வை அடைந்தாள். களைப்படைந்த அந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} புலனுணர்வு அடைவதைக் கண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அவளை {திரௌபதியை} மான் தோலில் கிடத்தி ஓய்வெடுக்கச் செய்தனர். அனைத்து மங்கலக் குறிகளும் கொண்டு சிவந்திருந்த அவளுடைய {திரௌபதியுடைய} கால்களை, வில்லின் நாணால் வடுபட்ட தங்கள் கைகளால் நகுலனும் சகாதேவனும் மெல்லப் பிடித்து விட்டனர். குருக்களில் முதன்மையானவனான நீதிமானான யுதிஷ்டிரனும் அவளுக்கு ஆறுதல் அளித்தவாறே பீமனிடம், "ஓ! பீமா, (நம்முன்னால்) இன்னும் கடக்க வேண்டிய கடுமை நிறைந்தனவும் பனிமூடியனவுமான பல மலைகள் உள்ளன. நீண்ட கரமுடையவனே {பீமா}, இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} இவை யாவையும் எப்படிக் கடக்கப் போகிறாள்?" என்று கேட்டான். அதற்குப் பீமன், "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும், இந்த இளவரசியையும் {திரௌபதியையும்}, மனிதர்களில் காளையரான இந்த இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்} நானே சுமந்து செல்ல முடியும். எனவே, ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது மனதில் துயரத்தை வளர்த்துக் கொள்ளாதீர். அல்லது, ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது உத்தரவின் பேரில், என் பலத்துக்குச் சமமானவனும், விண்ணை அதிகாரம் செய்யவல்லவனும் ஹிடிம்பையின் மகனுமான வலிமைமிக்கக் கடோத்கசன் நம் அனைவரையும் சுமந்து செல்வான்" என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு யுதிஷ்டிரனின் அனுமதியுடன், பீமன் தனது ராட்சச மகனை நினைத்தான். தந்தையால் {பீமனால்} நினைக்கப்பட்ட மாத்திரத்தில் பக்திமிக்கக் கடோத்கசன் பாண்டவர்களையும், அந்தணர்களையும் வணங்கியவாறு கூப்பிய கரங்களுடன் அங்கே தோன்றினான். அவர்களும் அவனை {கடோத்கசனை} பாசத்துடன் விசாரித்தனர். பிறகு அவன் {கடோத்கசன்}, கடும் பராக்கிரமம் கொண்ட தனது தந்தையிடம் {பீமனிடம்}, "உம்மால் நினைக்கப்பட்டதால், நான் உம்மைச் சேவிப்பதற்காக அதிவிரைவாக வந்தேன். ஓ! நீண்ட கரம் கொண்டவரே, எனக்குக் கட்டளையிடும். நீர் என்ன கட்டளையிட்டாலும் அதை என்னால் நிச்சயம் செய்ய முடியும்" என்றான். இதைக் கேட்ட பீமசேனன், அந்த ராட்சசனைத் {கடோத்கசனைத்} தனது மார்புறத் தழுவினான்.