Enter Hanuman! | Vana Parva - Section 145 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
காற்றில் அடித்துவரப்பட்ட தாமரையைப் பார்த்து திரௌபதி மகிழ்தல்; அதே போன்ற மலர்களைப் பறித்து வருமாறு திரௌபதி பீமனிடம் வேண்டுதல்; மலர் வேட்டைக்குக் கிளம்பிய பீமன்; மலையைக் கலங்கடித்து ஒரு தடாகத்தை அடைவது; தடாகத்தில் நீராடி மீண்டும் மலர் வேட்டை; மலரைத் தேடி செல்லும் பாதையில் ஹனுமான் படுத்திருப்பது; ஹனுமான் பீமனைத் தடுப்பது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சுத்தத்தைக் கடைப்பிடித்த அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்} அங்கே தனஞ்சயனை {அர்ஜுனனைக்} காணும் எதிர்பார்ப்புடன் ஆறு இரவுகள் வசித்தனர். அப்போது அங்கே திடீரென்று வடகிழக்கில் இருந்து காற்று விசியது. அக்காற்று, சூரியனைப் போன்று பிரகாசித்த ஆயிரம் இதழ் கொண்ட தெய்வீகத் தாமரையை ஒன்றை அங்கே கொண்டு வந்து சேர்த்தது. அழகான, சுத்தமான, பூமியில் இல்லாத நறுமணம் கொண்ட அந்தத் தாமரை காற்றால் அடித்துவரப்பட்டுத் தரையில் கிடப்பதை பாஞ்சாலி {திரௌபதி} கண்டாள். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த அற்புதமான அழகான தாமரையை {சௌகந்திக மலரை} அடைந்த அந்த அருளப்பட்டவள் {திரௌபதி} மிகவும் மகிழ்ந்து பீமசேனனிடம், "ஓ! பீமரே, நறுமணத்தின் தோற்றுவாயைத் தன்னகத்தே கொண்ட மிக அழகான இந்தத் தெய்வீக மலரைப் பாரும். ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே, இது எனது இதயத்தை மகிழ்விக்கிறது. இது {இந்த மலர்} நீதிமானான யுதிஷ்டிரருக்கு வழங்கப்படும். எனது திருப்திக்காக இதே போன்ற மலர்களைப் பறித்துக் கொண்டு வாரும். அவற்றை நான் காம்யக வனத்தில் இருக்கும் நமது ஆசிரமத்திற்குக் கொண்டு செல்வேன். ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {பீமரே}, என்னிடம் உமக்கு அன்பிருந்தால், இதே வகை மலர்களை எண்ணிக்கையில் பறித்து வாரும். நான் அவற்றை நமது ஆசிரமத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்" என்றாள். இதைச் சொல்லிவிட்டு, அந்த அழகிய பார்வை கொண்ட களங்கமற்ற மங்கை {திரௌபதி}, அம்மலரை எடுத்துக் கொண்டு நீதிமானான யுதிஷ்டிரனிடம் சென்றாள்.
தனது அன்பிற்குரிய ராணியின் விருப்பத்தை அறிந்த மனிதர்களில் காளையான பெரும்பலமிக்கப் பீமன் அவளை {திரௌபதியைத்} திருப்தி செய்யும் பொருட்டு உடனே கிளம்பினான். மலர்களைப் பறிக்கும் நோக்குடன் அவன் {பீமன்} மலர் வந்த திக்கை நோக்கி காற்றை எதிர்த்துக் கொண்டு மிகுந்த வேகத்துடன் சென்றான். பின்புறம் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வில்லையும், கடும் விஷம் கொண்ட பாம்புகளைப் போன்ற கணைகளையும் எடுத்துக் கொண்டு கோபத்தில் செல்லும் சிங்கத்தைப் போலவும், மதங்கொண்ட யானை போலவும் சென்றான். பெரும் வில்லையும் கணைகளையும் எடுத்துச் செல்லும் அவனை {பீமனை} அனைத்து உயிர்களும் கண்டன. சோர்வோ, தளர்வோ, பயமோ, குழப்பமோ எதுவும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மைந்தனும் வாயுவின் (காற்றின்) வாரிசுமானவனை ஆட்கொள்ளவில்லை.
பயமோ குழப்பமோ அற்ற அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் {பீமன்} திரௌபதியைத் திருப்தி செய்ய வேண்டி, தனது கரத்தின் பலத்தை மட்டுமே நம்பி அச்சிகரத்தில் ஏறினான். எதிரிகளைக் கொல்லும் அவன் {பீமன்}, மரங்களும், கொடிகளும், கரும்பாறை பரப்பும் கொண்டு கின்னரர்கள் அடிக்கடி அடையும் அந்த அழகிய சிகரத்தில் ஏறினான். பல்வேறு வண்ணங்களில் தாதுக்களும், தாவரங்களும், விலங்குகளும், பல வண்ண பறவைகளும் அங்கே இருந்தன. அச்சிகரம் முழு ஆபரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பூமாதேவியின் உயர்த்தப்பட்ட கரம் போல இருந்தது. ஒப்பற்ற பராக்கிரமம் கொண்ட அவன் {பீமன்} தனது பார்வையைக் கந்தமாதனத்தின் சரிவுகளில் நிலைக்க வைத்தபடி முன்னேறினான். அங்கே எல்லாப் பருவகாலங்களுக்கும் உரிய அழகான மலர்கள் மலர்ந்திருந்தன. அவன் {பீமன்} மனதில் பல்வேறு எண்ணங்களைச் சுழலவிட்டபடி தனது காதுகளையும் கண்களையும் ஆண் குயில்களும், கருவண்டுகளும் கானமெழுப்பும் பகுதிகளில் நிலைக்க வைத்தபடி சென்றான்.
அனைத்து பருவ காலங்களிலும் பூக்கும் மலர்களின் அரிய நறுமணத்தை நுகர்ந்தபடி அந்தப் பெரும் பராக்கிரமம் கொண்டவன் {பீமன்} மதங்கொண்ட யானையைப் போல அக்கானகத்தில் உலாவினான். கந்தமாதனத்தின் புதிய தென்றல், மலர்களின் நறுமணத்தைச் சுமந்தபடி சில்லென வீசிய போது, அது அவனுக்கு {பீமனுக்குத்} தந்தையின் தீண்டல் போல இருந்தது. இப்படிக் களைப்பு நீங்கிய அவனது உடலில் மயிர்க்கூச்செறிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இருந்த அந்த எதிரிகளை ஒடுக்குபவன், யக்ஷர்களும், கந்தர்வர்களும், தேவர்களும், பிரம்ம முனிவர்களும் வசித்த அம்மலை முழுவதும் தான் தேடி வந்த மலர்களைத் தேடினான். ஏழிலைம்பாலை {Saptachchada) மரத்தின் இலைகளால் வருடப்பட்ட அவன் {பீமன்} மேல் சிவப்பு, கருப்பு, வெள்ளை வண்ண தாதுக்களின் நிறங்கள் பூசப்பட்டன. அதனால் அவன், புனித தைலத்தைக் கொண்டு அலங்கரித்து விரல்களால் பூசப்பட்ட கோடுகளை மேனியில் கொண்டவன் போல இருந்தான். அம்மலையின் பக்கங்களில் மேகங்கள் விரிந்து இருந்ததால், அம்மலைக்குச் சிறகுகள் முளைத்தது போலக் காணப்பட்டது.
நீரூற்றுகளில் இருந்து நீர் விழுவது முத்துக் கழுத்தணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தோன்றியது. அழகிய நிலக்குடைவுகள், தோப்புகள், நில அடுக்குகள், குகைகள் ஆகியன அங்கே {அம்மலையில்} இருந்தன. அப்சரசுகளின் வளையொலிகளுக்கு ஏற்ப அற்புதமான மயில்கள் நடனமாடின. திக்குகளுக்குத் தலைவர்களான யானைகளின் {திக்கஜங்களின்} தந்த நுனிகளால் முட்டப்பட்டுத் தேய்ந்த கற்களையுடைய பாறைபரப்பை அது {அம்மலை} கொண்டிருந்தது. நதிகளின் நீர் மலையில் இருந்து வீழ்வது பார்ப்பதற்கு, அம்மலையின் ஆடை தளர்வதைப் போல இருந்தது. வாயுத் தேவனின் அந்த அருள் நிறைந்த மகன் {பீமன்}, விளையாட்டுத்தனமாகவும், மகிழ்ச்சியுடனும், எண்ணிலடங்கா செடி கொடிகளைத் தனது பலத்தால் தள்ளிக் கொண்டு சென்றான். வாயில் புற்களுடன் இருந்த மான்கள் ஆவலால் அவனைப் பார்த்த படி நின்றன. (இதுவரை) பயமறியாததால், அச்சமடையா அவை, ஓடாமல் நின்றிருந்தன.
தனது காதலியின் {திரௌபதியின்} விருப்பத்தை நிறைவேற்றும் செயலில் ஈடுபட்டிருந்த பாண்டுவின் இளமைமிகுந்த மகன் {பீமன்}, தீரம் கொண்டவனாகவும், தங்க நிறத்தில் பிரகாசிப்பவனாகவும் இருந்தான். சிங்கத்தைப் போன்று வலிமைநிறைந்த உடல் கொண்டிருந்தான். மதம் கொண்ட யானையைப் போல நடந்தான். மதம் கொண்ட யானையின் சக்தியையும் கொண்டிருந்தான். மதம் கொண்ட யானையைப் போன்றே தாமிர நிறத்தில் கண்களைக் கொண்டிருந்தான். மற்றுமொரு மதங்கொண்ட யானையைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருந்த அவன் {பீமன்}, அந்த அழகிய கந்தமாதனத்தைத் தனது அழகிய விழிகளால் கண்டான். அக்காட்சி புதுமையான வகையில் அழகைத் தந்தது. யக்ஷர்கள் மற்றும் கந்தர்வர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் அருகில் அரூபமாக அமர்ந்து கொண்டு, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிக்காட்டியபடி அவனைப் {பீமனைப்} பார்த்துக் கொண்டிருந்தனர். கானகத்தில் வசித்த திரௌபதியைத் திருப்தி செய்யும் நோக்கில், அழகிய கந்தமாதனத்தில் உலவி கொண்டிருந்த அவன் {பீமன்}, துரியோதனனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைத்துப் பார்த்தான்.
பிறகு அவன் {பீமன்}, "தற்போது அர்ஜுனனும் சொற்ப காலம் வசிக்கச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். நானும் மலர்களைப் பறிக்க வந்துவிட்டேன். இப்போது எங்கள் அண்ணனான யுதிஷ்டிரர் என்ன செய்வார்? மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரர், நகுலனையும், சகாதேவனையும், பாசத்தாலும், அவர்கள் வீரத்தின் மேல் கொண்ட சந்தேகத்தாலும் என்னைத் தேடி வர அனுப்ப மாட்டார் என்பது நிச்சயம். எப்படி நான் விரைவாக மலர்களைப் பெறுவது?" இப்படி நினைத்தவாறே, மனிதர்களில் புலி போன்ற அவன் மிக வேகத்துடன் {amain = முழு வேகமாக} பறவைகளின் மன்னனைப் போல {கருடனைப் போல} சென்றான். அவனது மனமும் பார்வையும் அந்த அழகிய மலையின் மீதே நிலைத்திருந்தது. தனது பயணத்தின் விதிகளாகத் திரௌபதியின் வார்த்தைகளைக் கொண்ட, பலமும், காற்றைப் போன்ற வேகமும் கொண்ட பாண்டுவின் மகனான விருகோதர பீமன், தனது மனதையும், பார்வையையும் பூத்திருக்கும் அம்மலையின் சரிவுகளில் நிலைக்க வைத்தபடி பூமி நடுங்குமாறு சம இரவு நாளில் {உத்தராயணத்தில்} வரும் புயலைப் போல மிக விரைவாக யானைக்கூட்டங்களைப் பயமுறுத்தியபடி, சிங்கங்கள் புலிகள், மான்கள் ஆகியவற்றை நடுங்கச் செய்தபடி, பெரும் மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிய்த்தெறிந்தபடி, சென்றான். அவன் அப்படிச் சென்றது ஒரு யானை பெரும் மலைச் சிகரத்தில் ஏறுவது போலவும், இடியோசை கூடி கர்ஜிக்கும் மேகம் நகர்வது போலவும் இருந்தது.
கர்ஜித்தபடி சென்ற பீமனால், விழிப்படைந்த புலிகள் தங்கள் குகைகளை விட்டு வெளி வந்தன. மற்றக் கானக உலாவிகள் {விலங்குகள்} தங்களை மறைத்து ஒளிந்து கொண்டன. வானத்தைப் பாதையாகக் கொண்டவைகள் {பறவைகள்} பயத்தால் (சிறகுகள் விரித்து) எழுந்தன. மான்கூட்டங்கள் விரைவாக ஓடின. பறவைகள் மரங்களை விட்டு அகன்றன. சிங்கங்கள் தங்கள் குகைகளைக் கைவிட்டன. பெரும் பலமிக்கச் சிங்கங்கள் தங்கள் தூக்கம் கலைந்தன. எருமைகள் பார்த்தன. பயத்திலிருந்த யானைகள் கானகத்தை விட்டு ஆழமான காட்டுக்குள் தங்கள் துணைகளுடன் ஓடின. பன்றிகளும், மான்களும், சிங்கங்களும், எருமைகளும், புலிகளும், ஓநாய்களும், கவயங்களும் கூட்டம் கூட்டமாக அலறத் தொடங்கின.
சிவந்த வாத்துகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், வாத்துக்களும், கிளிகளும், ஆண் குயில்களும், அன்றில்களும் குழப்பத்தால் எல்லாத் திசைகளுக்கும் பறந்தன. சில கர்வம் கொண்ட யானைகள் தங்கள் துணைகளால் உந்தப்பட்டும், சில சிங்கங்களும் யானைகளும் கோபமடைந்தும், பீம சேனன் மீது பாய்ந்தன. இதயத்தில் பயங்கொண்டமையால், அந்தக் கடுமை நிறைந்த விலங்குகள் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்து, வாயை அகல விரித்துக் கதறின.
தனது கரத்தின் பலத்தை மட்டுமே நம்பிய அந்தப் பெரும்பலம் வாய்ந்த பாண்டவனான வாயுத்தேவன் மகன் {பீமன்}, ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையையும், ஒரு சிங்கத்தைக் கொண்டு மற்றொரு சிங்கத்தையும் கொல்ல ஆரம்பித்தான். மற்ற விலங்குகளைத் தனது அறைகளாலேயே கொன்றான். பீமனால் இப்படி அடிக்கப்பட்ட சிங்கங்களும், புலிகளும், சிறுத்தைகளும் பயம் நிறைந்து கதறி மலம் மற்றும் சிறுநீர் கழித்தன. அவற்றையெல்லாம் அழித்த பாண்டுவின் பெரும் பலம் கொண்ட அழகிய மகன் {பீமன்} கானகத்தில் நுழைந்து தனது கர்ஜனையால் அதை நிறைத்தான். பிறகு அந்த நீண்ட கரம் கொண்டவன் கந்தமாதனத்தின் சரிவுகளில் ஓர் அழகிய வாழை மரம் பல யோஜனைகளுக்குப் பரந்து நிற்பதைக் கண்டான். பிறகு மதம் கொண்ட சிங்கம் போல அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன் பல மரங்களை உடைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு முன்னேறினான். பலம் நிறைந்த மனிதர்களில் முதன்மையான பீமன், பல பனை மர உயரம் கொண்ட {ஒரு மரத்திற்கு மேல் ஒரு மரம் அடுக்கிய பனை மரங்களின் உயரமுள்ள} பல வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். ஆண் சிங்கம் போன்ற கர்வம் கொண்ட அந்தச் சக்தி மிக்கவன் பெரும் கர்ஜனை செய்தான். பிறகு அவன் {பீமன்} பெரும் உருவத்திலான பல விலங்குகளையும், மான்களையும், குரங்குகளையும், சிங்கங்களையும், எருமைகளையும், நீர் விலங்குகளையும் எதிர்த்து மோதினான்.
அந்த விலங்குகளின் கதறல்களோடு சேர்ந்து பீமனும் கர்ஜித்தான். இந்தப் பேரொலியால் கானகத்தின் தூரப்பகுதிகளில் இருந்த விலங்குகள் கூட அச்சமடைந்தன. விலங்குகள், பறவைகளின் கதறல்களைக் கேட்ட எண்ணற்ற நீர்வாழ் பறவைகள் திடீரெனத் தங்கள் ஈரம்படிந்த சிறகுகளுடன் எழுந்தன. அந்த நீர்வாழ் பறவைகளைக் கண்ட பாரதர்களில் காளை {பீமன்}, அந்தத் திக்குக்குச் சென்று பரந்து விரிந்த அழகான ஒரு தடாகத்தைக் கண்டான். அந்த ஆழமறியாத தடாகத்தின் கரைகளில் இருந்த தங்க வாழை மரங்கள், அங்கு வீசிய மெல்லிய தென்றலால் ஆடி, அந்த இடத்திற்குச் சாமரம் வீசின. குவளைகளும் தாமரைகளும் நிறைந்த அந்தத் தடாகத்துக்குள் உடனே இறங்கி ஆனந்தமாக மதம் கொண்ட யானை போல விளையாடத்தொடங்கினான் பீமன்.
இப்படி அங்கே சிறிது நேரம் விளையாடிய பிறகு, அந்தப் பிரகாசமுடையவன் {பீமன்} எழுந்திருந்து, மரங்கள் நிறைந்த கானகத்திற்குள் வேகமாகச் சென்றான். பிறகு அந்தப் பாண்டவன் {பீமன்} தனது சங்கை எடுத்துப் பலமாக ஊதினான். தனது கரங்களைத் தட்டிய வலிமைமிக்கப் பீமன் சொர்க்கத்தின் அனைத்துப் புள்ளிகளையும் அதிர வைத்தான். சங்கு நாதத்தையும், பீமனின் கர்ஜனையையும், கைத்தட்டல்களையும் கேட்ட மலைகளின் குகைகள் எதிரொலி செய்து கர்ஜித்தன. இடியைப் போன்ற கைத்தட்டல் ஓசையைக் கேட்டுக் குகைகளில் தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்கள் பலமாகக் கர்ஜித்தன. சிங்கங்களின் கர்ஜனையால் பயந்த யானைகள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, பயங்கரமாகப் பிளிறின. இவை அனைத்தும் அந்த மலையை நிறைத்தன.
இப்படி உதிர்க்கப்பட்ட ஒலிகளைக் கேட்ட பீமசேனனின் அண்ணனும், குரங்குகளின் தலைவனுமான வானர ஹனுமான், பீமனுக்கு நல்லது செய்யும் நோக்குடன், சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைத் தடுத்துக் கொண்டிருந்தான். (பீமன்) அந்த வழியைக் கடக்கக்கூடாது என்று எண்ணி, குறுகிய பாதையில் குறுக்காகப் படுத்து, அங்கிருந்த வாழை மரங்களுக்கு அழகூட்டி, பீமனின் பாதுகாப்புக்காக அவ்வழியைத் தடுத்துக் கொண்டிருந்தான். பீமனுக்குச் சாபமோ, தோல்வியோ ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், வாழைத்தோப்புக்குள் நுழைந்த ஹனுமான், தனது பெருத்த உடலை வாழை மரங்களுக்கு மத்தியில் கிடத்தி அரைத்தூக்கத்தில் இருப்பது போலக் கிடந்தான். கொட்டாவி விட்டபடி, தனது நீண்ட வாலை ஆட்டி, அதை இந்திரனின் கம்பம் போல உயர்த்தி, இடியைப் போலச் சத்தம் எழுப்பினான். அந்த மலையின் எல்லாப்புறத்திலும் மாடு கத்துவதைப் போல எதிரொலித்தன. அவனது {ஹனுமனின்} வாலின் அசைவால் அந்த மலையின் சிகரங்கள் நடுங்கத்தொடங்கி, சுற்றிலும் சிதறி விழ ஆரம்பித்தன. மதங்கொண்ட யானைகளின் பிளிறல்களைப் பின்னுக்குத் தள்ளிய அந்த வாலாட்டும் ஒலி அந்த மலைச்சரிவு முழுவதும் பரந்து கேட்டது.
அவ்வொலியைக் கேட்ட பீமனின் உடலில் மயிர்க்கூச்செறிப்பு ஏற்பட்டது. அவன் {பீமன்} அந்த வாழைத்தோப்பு முழுவதும் அவ்வொலி வந்த இடத்தைத் தேடினான். அந்தப் பலம் வாய்ந்தவன் {பீமன்}, ஓர் உயர்ந்த பாறைப் பரப்பில் குரங்குகளின் தலைவனை {ஹனுமானைக்} கண்டான். அவனை {ஹனுமானைக்} காண மின்னலைப் பார்ப்பது போலக் கடினமாக இருந்தது. தாமிர வண்ணத்தில் மின்னலைப் போன்ற அவன் {ஹனுமான்} இருந்தான். அவனது குரலும் இடியைப் போல இருந்தது. அவன் மின்னலைப் போல விரைவாக அசைந்தான். குறுகிய சதை கொண்ட அவனது கழுத்தை அவனது தோள்கள் தாங்கிக் கொண்டிருந்தன. மெலிந்த இடையும் பருத்த தோள்களும் கொண்டவனாக அவன் {ஹனுமான்} இருந்தான். அவனது வால் நீண்ட முடிகளால் மூடப்பட்டு இருந்தது. அது முனையில் சற்று வளைந்து பதாகை போல உயர்ந்திருந்தது.
ஹனுமானின் தலையில், சிறு உதடுகளும், தாமிரம் போன்ற முகமும் நாக்கும், சிவந்த காதுகளும், சுறுசுறுப்பான கண்களும், முனை கூரிய வெண்ணிற பற்களும் இருந்தன. அவனது தலை ஒளிரும் சந்திரனைப் போல இருந்தது. அவனது வாயை வெண்ணிற பற்கள் அலங்கரித்தன. பிடரி பரந்து அசோக மலர்க் குவியல் போல இருந்தன. பொன் வாழை மரங்களுக்கு மத்தியில் அவன் எரியும் நெருப்பைப் போலச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {ஹனுமான்} போதையால் சிவந்த கண்களுடன் பார்த்தான். புத்திசாலியான பீமன், பெருத்த உடல் கொண்ட வலிமைமிக்க அந்தக் குரங்குகளின் தலைவன் {ஹனுமான்} சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையைத் தடுத்துக் கொண்டு இமயமெனப் படுத்திருப்பதைக் கண்டான். அந்தப் பெரும் கானகத்தில் தனிமையில் இருந்த அவனைக் கண்ட நீண்ட கரமுடைய அச்சமற்ற வீரனான பீமன், நீண்ட எட்டுகள் வைத்து அவனை அணுகி, இடியைப் போன்று சத்தமாகக் கர்ஜித்தான். பீமனின் அந்தக் கர்ஜனையால் விலங்குகளும் பறவைகளும் பயந்தன.
எனினும் வலிமை மிக்க ஹனுமான சிறிதளவே தனது கண்களைத் திறந்து, போதையால் சிவந்த கண்களுடன் அலட்சியத்துடன் (பீமனை) பார்த்தான். பிறகு அவனிடம் {பீமனிடம்} ஹனுமான் சிரித்துக் கொண்டே, "நோயுற்ற நான், இனிமையாக உறங்கிக் கொண்டிருந்தேன். ஏன் என்னை நீ எழுப்பினாய்? அறிவுள்ளவனான நீ பிற உயிரினங்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும். விலங்கினத்தைச் சேர்ந்த நாங்கள் அறம் அறியாதவர்கள். ஆனால் அறிவுடைய மனிதர்கள் உயிரினங்களிடம் இரக்கம் காட்டுவார்கள். பிறகு ஏன் உன்னைப் போன்ற அறிவுடையவர்கள், கொடியவற்றைச் செய்து உடலாலும், சொல்லாலும், இதயத்தாலும் {மனதாலும்} அறத்தை அழித்துக் கொள்கிறார்கள்? அறம் என்பதை நீ அறியவில்லை. ஞானமுள்ளோரின் ஆலோசனையையும் நீ பெற வில்லை. எனவேதான், நீ அறியாமையுடன் சிறுபிள்ளைத்தனமாகத் தாழ்ந்த விலங்குகளை அழிக்கிறாய். நீ யார்? மானிடத்தன்மையற்றதும் மனிதர்களற்றதுமான இந்த வனத்திற்கு நீ ஏன் வந்தாய்? ஓ! மனிதர்களில் முதன்மையானவனே இன்று நீ எங்கே செல்லப் போகிறாய் என்பதைச் சொல். இதற்கு மேல் நீ முன்னேற முடியாது. இந்த மலைகள் அடைவதற்கு அரிதானவை. ஓ! வீரனே, தவத்தாலன்றி வேறு முறையில் இவ்வழியை அடையமுடியாது. அந்த இடத்திற்கு வேறு வழியும் கிடையாது. தேவர்களின் இந்தப் பாதை, மனிதர்களால் கடக்க முடியாதது. ஓ! வீரனே, இரக்கத்தின் காரணமாக நான் உன்னைத் தடுக்கிறேன். எனது வார்த்தைகளைக் கேள். இந்த இடத்திற்கு மேல், மேலும் நீ முன்னேற முடியாது. எனவே, ஓ! தலைவா, நில். ஓ! மனிதர்களின் தலைவா இன்று உனது வரவு வரவேற்கப்படுகிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, எனது வார்த்தைகள் ஏற்கத்தக்கது என நீ நினைத்தால், இங்கே ஓய்ந்திருந்து, அமுதத்துக்கு நிகரான கனிகளையும் கிழங்குகளையும் உண்டு திரும்பு. வீணாக அழிவை அடையாதே" என்று சொன்னான் {ஹனுமான்}.