Hanuman's Law | Vana Parva - Section 149 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
ஹனுமான் தனது பெரும் உடலை பீமனுக்குக் காட்டுவது; சௌகந்திக வனத்திற்குச் செல்லும் பாதையை ஹனுமான் பீமனுக்குக் காட்டுவது; நால்வகை மனிதர்களின் கடமைகளை ஹனுமான் பீமனுக்கு உரைப்பது.
பீமசேனன் {ஹனுமானிடம்} சொன்னான், "உமது முந்தைய வடிவத்தைக் காணாது நான் செல்ல மாட்டேன். உம்மிடம் நான் உதவி பெறக்கூடியவனாக இருந்தால், நீர் உமது சொந்த உருவை எனக்குக் காட்ட வேண்டும்" என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் குரங்கு {ஹனுமான்} சிரித்துக் கொண்டே தான் கடலைத் தாண்டிய போது கொண்டிருந்த உருவை வெளிக்காட்டினான். தனது தம்பியை {பீமனை} திருப்தி செய்ய விரும்பிய ஹனுமான் உயரத்திலும் அகலத்திலும் மாபெரும் உருவெடுத்தான். அளக்கமுடியா பிரகாசம் கொண்ட அந்தக் குரங்கு {ஹனுமான்}, மரங்களடர்ந்த அந்த வாழைத் தோப்பை மறைத்த படி விந்தியமென வளர்ந்து நின்றான். மலையைப் போல உருவெடுத்த தாமிர விழிகளும், கூரிய பற்களும், புருவம் சுருங்கிய குறியுடைய முகமும் கொண்ட அந்த வானரம் {ஹனுமான்}, தனது நீண்ட வாலை ஆட்டியபடி எல்லாப் புறங்களிலும் வியாபித்துக் கிடந்தான். குருக்களின் மகன் {பீமன்} தனது அண்ணனின் பெருத்த உருவத்தைக் கண்டு மலைத்ததால் அவனுக்குத் திரும்பத் திரும்ப மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது. சூரியனைப் போன்ற பிரகாசத்துடனும், பொன் மலையைப் போலவும், எரியும் ஆகாயம் போலவும் இருந்த அவனைக் கண்ட பீமன் தனது கண்களை மூடிக் கொண்டான். பிறகு ஹனுமான் பீமனிடம் புன்னகையுடன், "ஓ! பாவமற்றவனே, இந்த அளவுக்கு மட்டுமே எனது உருவை உன்னால் காண முடியும். எனினும், நான் எனது உருவத்தை நான் விரும்பியவாறு இதை விட அதிகமாகப் பெருக்கிக் கொண்டே போக முடியும். ஓ பீமா, எதிரிகளுக்கு மத்தியில் எனது உருவம் சுயசக்தி கொண்டு தானே அதிகமாக வளரும்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விந்திய மலையைப் போல இருந்த ஹனுமானின் கடுமை நிறைந்த அற்புத உடலைக் கண்ட வாயுத் தேவனின் மகன் {பீமன்} தடுமாறிப் போனான். மயிர் சிலிர்த்தவனாய் இருந்த உயர்ந்த பண்புகளுடைய மனம் கொண்ட பீமன், தனது கரங்களைக் கூப்பி, ஹனுமானிடம், "ஓ தலைவா, உமது உடலின் பெரும் அளவுகளைக் கண்டேன். ஓ உயர்ந்த பலம் கொண்டவரே, உமது சக்தியால் உம்மைக் குறைத்துக் கொள்ளும். உதிக்கும் சூரியனைப் போலவும், அளவிட முடியாதவராகவும், கட்டுப்படுத்தப்பட முடியாதவராகவும் மைநாக மலையைப் போலவும் இருக்கும் உம்மை என்னால் காண முடியவில்லை. ஓ வீரரே, நீர் அருகில் இருந்த போதும் ராமன் ராவணனை தானே எதிர்த்துச் சென்றான் என்பதில் இன்று எனது இதயம் ஆச்சரியம் கொள்கிறது. உமது கரத்தின் பலத்தால் நீர் ஒருவரே இலங்கையையும், அதன் போர்வீரர்களையும், குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் அழித்திருக்க முடியுமே. ஓ வாயுத்தேவனின் மகனே {ஹனுமாரே}, உம்மால் அடைய முடியாதது எதுவுமில்லை. ராவணனும், அவனைப் பின்பற்றுவோர் அனைவரும் சேர்ந்து ஒருங்கே வந்தாலும் போரில் உம் ஒருவருக்கு அவர்கள் அனைவரும் சேர்ந்தும் நிகராக மாட்டார்கள்" என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பீமனால் இப்படிச் சொல்லப்பட்ட வானரத்தலைவன் ஹனுமான் பாசமாக முறையான வார்த்தைகளால் பதிலளித்தான். ஹனுமான், "ஓ வலுத்த கரம் கொண்டவனே, ஓ பாரதா {பீமா}, நீ சொல்வது போலத்தான் {உண்மைதான்}. ஓ பீமசேனா, அந்த ராட்சசர்களில் இழிந்தவன் {இராவணன்} எனக்கு நிகராக மாட்டான். ஆனால் உலகங்களின் முள்ளான ராவணன் என்னால் கொல்லப்பட்டிருந்தால், ரகு மகனின் {ராமனின்} புகழுக்குக் களங்கம் ஏற்பட்டிருக்கும். அதற்காகவே நான் அவனை விட்டேன். அந்த ராட்சசர்களின் தலைவனையும், அவனது அடிபொடிகளையும் கொன்று, சீதையைத் தனது நகரத்திற்குக் கொண்டு வந்த அந்த வீரன் {ராமன்}, மனிதர்கள் மத்தியில் தனது புகழை நிலைக்க வைத்தான். ஓ! பெரும் ஞானியே, உனது சகோதரர்களுக்கு நன்மை செய்ய விரும்பியும் வாயுத்தேவனால் காக்கப்பட்டும் பேறுடனும் மங்களகரமாகவும் செல்.
ஓ! குருக்களில் முதன்மையானவனே {பீமனே}, இவ்வழி சௌகந்திக வனத்திற்குச் செல்கிறது. (இத்திசையில் முன்னேறினால்) யக்ஷர்களாலும் ராட்சசர்களாலும் காக்கப்பட்டு வரும் குபேரனின் நந்தவனத்தை நீ காணலாம். உனது சுயபலத்தால் நீ பூக்களைப் பறிக்காதே. குறிப்பாக மனிதர்களிடம் மதிப்பைப் பெறும் தகுதி தேவர்களுக்கு இருக்கிறது. ஓ பாரதக் குலத்திற்சிறந்தவனே, காணிக்கைகள், ஹோமங்கள், மதிப்பிற்குரிய வணக்கங்கள், மந்திரங்கள் உரைத்தல் மற்றும் துதி ஆகியவற்றால் தேவர்கள் மனிதர்களுக்கு அருளை வழங்குகிறார்கள். ஓ பாரதா {பீமா}, ஓ குழந்தாய், எனவே, கடுஞ்செயல் புரியாதே. உனது வகைக்கான {வர்ணத்துக்கான} கடமைகளில் இருந்து வழுவாதே. உனது கடமைகளைப் பற்றிக் கொண்டு, உயர்ந்த அறநெறியை புரிந்து கொண்டு பயின்று வா. கடமைகளை அறியாது, முதியோர்களைச் சேவிக்காது இருந்தால் பிருஹஸ்பதியைப் போன்ற மனிதர்களும் அறம் மற்றும் பொருளை உணர மாட்டார்கள். தீமை நன்மையென்ற பெயரிலும், நன்மை தீமை என்ற பெயரிலும் வரும் வழக்குகளின் வேறுபாடுகளை ஒருவன் உறுதி செய்து கொள்ள வேண்டும். இது போன்ற வழக்குகளில் புத்திகூர்மையற்றவர்கள் குழம்பிவிடுவார்கள். தர்ம நோன்புகளிலிருந்து நெறி உருவாகிறது; நெறி வேதங்களில் நிறுவப்பட்டிருக்கிறது; வேதங்களிலிருந்து வேள்விகள் வந்தன; வேள்விகள் மூலம் தேவர்கள் நிறுவப்படுகின்றனர்; வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி செய்யப்படும் வேள்விகளாலும் தர்மவிதிகளாலும் தேவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். மனிதர்கள், பிருஹஸ்பதி மற்றும் உசானஸ் {சுக்ரன்} ஆகியோரின் விதிகளைப் பின்பற்றியும், தங்கள் தொழில்களாலும் தங்களைப் பராமரித்துக் கொள்கின்றனர். கூலிகள் பெறுவதன் மூலமும், வரிகள் வசூலிப்பதன் மூலமும், வியாபாரம், விவசாயம் மற்றும் மாடு ஆடு வளர்ப்பு ஆகியவற்றின் மூலமும் இந்த உலகம் பராமரிக்கப்படுகிறது.
தொழில் மூலமே உலகம் பிழைத்திருக்கிறது. மூன்று வேதங்கள் {கல்வி}, விவசாயம், வணிகம், அரசமைப்பு உருவாக்குதல் ஆகியவை இருபிறப்பாளர்களின் {அந்தண, க்ஷத்திரிய, வைசிய வர்ணத்தாரின்} தொழில்கள் என ஞானமுள்ளோரால் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையும் {வர்ணமும்} தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைப் பின்பற்றித் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. இவை சரியாகப் பின்பற்றப்படும்போது உலகம் எளிதாகத் தன்னைப் பராமரித்துக் கொள்கிறது. எனினும், மக்கள் நேர்மையாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாததாலும், வேத தகுதியற்றிருப்பதாலும், அரசற்று இருப்பதாலும் உலகம் அநீதியால் சூழப்படுகிறது. மனிதர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்யவில்லை என்றால் அழிந்து போவார்கள். ஆனால் இந்த மூன்று தொழில்களையும் சரியாகப் பின்பற்றினால் தர்மம் செழிக்கும். அந்தணர்களின் தர்மம் ஆன்மாவின் ஞானத்தை அடைவதாகும். இந்த வகையின் {வர்ணத்தின்} நிறம் மட்டுமே அண்டம் முழுவதும் ஒன்றாகவே இருக்கிறது {the hue of that order alone is universally the same}. வேள்விக் கொண்டாட்டம், கல்வி, பரிசுகள் கொடை ஆகியவை நன்கு அறியப்பட்ட {அனைத்து வகையினருக்கும் [வர்ணத்தாருக்கும்]} பொதுவான மூன்று கடமைகளாகும்.
வேள்விகள் நடத்துவதும், கல்வி கற்பிப்பதும், பரிசுகள் ஏற்பதும் ஒரு அந்தணனின் கடமையாகும். (குடிமக்களை) ஆள்வது க்ஷத்திரியனின் கடமையாகும்; (கால்நடை) வளர்த்தல் வைசியனின் கடமையாகும்; இருபிறப்பாளர் வகைகளுக்கு {பிராமணர்களுக்கு} சேவை செய்வதே சூத்திரனின் கடமையாகும். சூத்திரர்கள் பிச்சை எடுக்கக்கூடாது; ஹோமங்கள் செய்யக்கூடாது; நோன்புகள் நோற்கக்கூடாது; அவர்கள் தங்கள் தலைவனின் {முதலாளியின்} வசிப்பிடத்தில் வசிக்க வேண்டும். ஓ! குந்தியின் மகனே {பீமா}, உனது தொழில் (குடிமக்களை) பாதுகாக்கிற க்ஷத்திரியத் தொழிலாகும். புலன்களில் இருந்து விடுபட்டு, எளியவனாக இருந்து உனது கடமைகளைச் செய். அனுபவம் நிறைந்த மனிதர்களுடன் ஆலோசனை நடத்துபவனும், நேர்மையான, புத்திசாலியான, கல்வி கற்ற அமைச்சர்களால் உதவப்படுபவனுமான மன்னன் மட்டுமே ஆளலாம். தீமைக்கு அடிமையாக இருக்கும் மன்னன் தோல்வியைச் சந்திக்கிறான். சரியான தண்டனையும், நல்ல உதவிகளையும் செய்யும் மன்னனாலேயே உலகம் பாதுகாப்பாக இருக்கிறது.
எனவே, {ஒரு மன்னன்} பகை நாட்டின் இயல்பையும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும், எதிரிகளின் கூட்டாளிகளையும், அவர்களின் செழிப்பு மற்றும் அழிவையும், அவர்கள் அதிகாரத்தை அடைந்த வழிகளையும் ஒற்றர்கள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒற்றர்கள் ஒரு மன்னனின் முக்கியத் துணைவர்களாவார்கள்; நுண்நயம் {திறமை}, ராஜதந்திரம், உள்ளத்துணிவு, தண்டனை தரும் முறை, அருள் மற்றும் புத்திகூர்மை ஆகியன வெற்றிக்கு வழிவகுக்கும். பிரிவோ அல்லது சமாதானம், பரிசு, சண்டைமூட்டுதல், தண்டனை, பார்வை ஆகியவை இணைந்தோ வெற்றியைக் கொடுக்கும்.
ஓ! பாரதர்களின் தலைவா {பீமா}, அரசியலுக்கு {அரசாட்சிக்கு} வேர் இராஜதந்திரமாகும்; இராஜதந்திரம் ஒற்றர்களின் முக்கியத் தகுதியாகும். சரியான தீர்மானங்கள் அரசியலில் வெற்றியைக் கொடுக்கும். ஆகையால், அரசியலில் அந்தணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட வேண்டும். ரகசிய காரியங்களில், பெண்களுடனோ, மூடனுடனோ, சிறுவனுடனோ, பேராசைக்காரனுடனோ, பைத்தியக்காரனுடனோ ஆலோசிக்கக் கூடாது. ஞானமுள்ளோரிடம் மட்டுமே ஆலோசிக்க வேண்டும். செயல்களைத் திறன் படைத்த அலுவலர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும்.
நட்புடன் உள்ள மனிதர்கள் மூலம் அரசாட்சி செய்ய வேண்டும். மூர்க்கர்களை எல்லாக் காரியங்களிலும் விலக்க வேண்டும். தர்ம காரியங்களில் பக்திமான்களையும், பொருளீட்டுவதில் கற்றறிந்தவர்களையும், குடும்பப் பாதுகாப்புக் காரியங்களில் அலிகளையும் {eunuch = நபும்சகர் = அலி}, நேர்மையற்ற காரியங்களில் குரூர்களையும் நியமிக்க வேண்டும். எதிரிகளின் செயல்களில் செய்யத்தக்கது, செய்த்தகாதது, அவர்களது பலம் மற்றும் பலமற்ற தன்மை, ஆகியவற்றையும், தன் ஒற்றர்களைக் கொண்டும், பகைநாட்டு ஒற்றர்களைப் பயன்படுத்தியும் அறிய வேண்டும். நேர்மையான மனிதர்களுக்குச் சாதகமாக அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; சட்டத்தை மதிக்காதவர்கள், அடங்காத மனிதர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு மன்னன் நீதியுடன் தண்டனையும், உதவியும் செய்யும்போது, சட்டத்தின் ஆட்சி சரியாகப் பராமரிக்கப்படும். ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {பீமா}, அறிவதற்குக் கடினமான ஒரு மன்னனின் கடமைகளை நான் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
மன அமைதியுடன் இவற்றைப் பின்பற்றி உனது வகைக்கான {வர்ணத்திற்கான} செயலைச் செய். அந்தணர்கள் அறத்தகுதி, புலனடக்கம், வேள்விகள் மூலம் சொர்க்கத்தை அடைகின்றனர். வைசியர்கள் கொடை, விருந்தோம்பல், அறச்செயல்கள் மூலம் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். க்ஷத்திரியர்கள் குடிமக்களைப் பாதுகாத்தும் தண்டித்தும், காமம், விரோத மனப்பான்மை, கோபம் ஆகியவற்றால் பாதிக்கபடாதிருந்தும் தெய்வீக உலகங்களை அடைகிறார்கள். (குடிமக்களை) நீதியுடன் தண்டித்தால் ஒரு மன்னன் நல்ல மனிதர்கள் அடையும் உலகத்தை அடைகிறான்.