Hanuman's description of Yugas! | Vana Parva - Section 148 | Mahabharata In Tamil
(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)
ஹனுமான் சொன்ன யுகங்களின் விளக்கம்
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இப்படிச்சொல்லப்பட்ட வலிமையான கரங்களைக் கொண்ட பலமிக்கப் பீமசேனன், பாசத்துடனும், இதய மகிழ்ச்சியுடனும், தனது அண்ணணான வானரத் தலைவன் ஹனுமானை வணங்கி, மென்மையான வார்த்தைகளில், "என்னைவிடப் பேறு பெற்றவர்கள் யாரும் இல்லை; நான் எனது அண்ணனைக் கண்டுவிட்டேன். இது எனக்குச் செய்யப்பட்ட மிகப்பெரும் ஆதரவு; நான் உம்மிடம் மிகத் திருப்தி கொண்டேன். நீர் எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இப்போது விரும்புகிறேன். ஓ வீரரே, சுறாக்கள் மற்றும் முதலைகளின் வசிப்பிடமான கடலை தாண்டிய நேரத்தில், நீர் அடைந்த ஒப்பற்ற வடிவத்தைக் காண விரும்புகிறேன். அப்படிச் செய்தால் நான் திருப்தி கொள்வேன். உமது வார்த்தைகளையும் நம்புவேன்" என்றான்.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெரும் வானரம் {ஹனுமான்} சற்றே சிரித்து, "அந்த வடிவத்தை நீயோ, வேறு எவரோ காண இயலாது. அந்த யுகத்தில் இருந்த நிலைகள் வேறு. அந்த நிலை இப்போது இல்லை. கிருத யுகத்தில், பொருட்களின் நிலை ஒன்று, திரேதா யுகத்தில் மற்றொன்று, துவாபர யுகத்தில் இன்னும் ஒன்று என்ற நிலையே இருந்தது. இந்த யுகத்தில் அழிவு நடைபெறுகிறது; என்னிடம் இப்போது அந்த வடிவம் இல்லை. நிலம், நதிகள், செடிகள், பாறைகள், சித்தர்கள், தேவர்கள், தெய்வீக முனிவர்கள் வேறு வேறு யுகங்களில் பொருட்களின் நிலைகளுக்கு இணங்கியும் காலத்திற்கு இணங்கியுமே இருக்கின்றன. ஆகையால், ஓ! குருகுலத்தைத் தழைக்க வைப்பவனே, எனது முந்தைய வடிவத்தைக் காண விரும்பாதே. யுகத்துடன் இணக்கமாகவே நான் இருக்கிறேன். நிச்சயமாக, காலம் தவிர்க்க முடியாதது" என்றான் {ஹனுமான்}.
பீமசேனன் {ஹனுமானிடம்}, "யுகங்களின் கால அளவையும், ஒவ்வொரு யுகத்தின் வகைமுறைகள், சடங்குகள், அறம், இன்பம் மற்றும் பொருள், செயல்கள், சக்தி, வாழ்வு {பிறப்பு}, மரணம் {இறப்பு} ஆகியவற்றை எனக்குச் சொல்லும்" என்று கேட்டான். அதற்கு ஹனுமான், "ஓ குழந்தாய் {பீமா}, ஒரே நித்திய தர்மம் மட்டுமே நடைமுறையில் இருந்த யுகம் கிருதம் என்று அழைக்கப்படுகிறது. யுகங்களில் சிறந்த அந்தச் யுகத்தில் அனைவரும் தர்மத்தில் சரியாக இருந்தனர். ஆகையால் அப்போது எந்தத் தர்மச் செயல்களுக்கும் தேவை ஏற்படவில்லை. பிறகு அறத்திற்கு எந்தச் சீரழிவும் ஏற்படவில்லை; மக்களும் குறையவில்லை {இறப்பில்லை}. இதன் காரணமாகவே அந்த யுகம் கிருதம் {சரியானது} என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த யுகம் குறைவை அடைந்தது.
ஓ! குழந்தாய் {பீமா}, கிருத யுகத்தில், தேவர்களோ, பேய்களோ {dmons அசுரர்களோ}, கந்தர்வர்களோ, யக்ஷர்களோ, ராட்சசர்களோ, நாகர்களோ கிடையாது. அப்போது வாங்குவதும் விற்பதும் இல்லாதிருந்தது. சாம, ரிக், யஜுர் என எதுவும் இல்லை. உடல் உழைப்பு எதுவும் அப்போது இல்லை. வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் நினைத்த மாத்திரத்தில் கிடைத்தன. உலகைத் துறப்பதே ஒரே தகுதியாக இருந்தது. அந்த யுகத்தில் நோயோ, புலன்களின் சிதைவோ இல்லை. கோபம், பெருமை {கர்வம்}, பாசாங்குத்தனம், குழப்பம், விருப்பமின்மை, தந்திரம், பயம், துன்பம், பொறாமை, பேராசை ஆகியன அப்போது இல்லை. இதன் காரணமாகவே, யோகிகளின் தலைமைப் புகலிடமான, பரப்பிரம்மனை அனைவரும் அடைந்தனர். வெண்நிறம் அணிந்த நாராயணனே உயிரினங்களின் ஆன்மாவாக இருந்தான்.
கிருத யுகத்தில், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரது தனித்துவமான பண்புகள் அனைத்தும் இயற்கையாக இருந்தன. அவர்கள் தங்களுக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்தனர். அப்போது பிரம்மனே ஒரே புகலிடமாக இருந்தான். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் இயற்கையாகவே பிரம்மனை அடைவதாக இருந்தது. அவர்களது ஞானத்தின் நோக்கம் பிரம்மனாகவே இருந்தது. அவர்களது அனைத்துச் செயல்களும் பிரம்மனைக் குறித்தே இருந்தன. இவ்வழியில் அனைத்து வகையினரும் தகுதியை அடைந்தனர். ஒரே சீரான ஆன்மாவே அவர்களது தியான நோக்கமாக இருந்தது. அப்போது ஒரே மந்திரம் தான் (ஓம் என்ற மந்திரம் மட்டும்தான்) இருந்தது. ஒரே கட்டளையே இருந்தது. பலதரப்பட்ட பண்புகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே வேதத்தையே பின்பற்றினார்கள். அவர்களுக்கு ஒரே தர்மமே {மதமே} இருந்தது. காலத்தின் பிரிவுகளின் படி அவர்கள், எந்த நோக்கத்தையும் கொள்ளாமல் நால்வகை வாழ்வுகளை மேற்கொண்டதால் அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைந்தனர். பிரம்மத்துடன் தன்னை அடையாளம் காண்பதே கிருத யுகத்தின் தர்மமாக {மதமாக} இருந்தது. கிருத யுகத்தில் நான்கு வகைகளின் {வர்ணங்களின்} அறங்கள் நான்கு பிரிவுகள் {கால்கள்} உடையதாக இருந்தது. முக்குணங்கள் {சத்வம், ரஜஸ், தமஸ்} இல்லாத அந்த யுகமே கிருத யுகமாகும்.
திரேதா யுகத்தின் தன்மையையும் என்னிடம் இருந்து கேட்டுக் கொள். இந்த யுகத்திலேயே வேள்விகள் அறிமுகமாகின. அறமும் கால் இழந்தது. (உயிரினங்களின் ஆன்மாவாக இருக்கும்) நாராயணன் சிவப்பு நிறத்தை ஏற்றான். மனிதர்கள் உண்மையைப் {சத்தியத்தைப்} பயின்று, தங்களைத் தர்மங்களிலும், தர்மச் சடங்குகளிலும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதுமுதல் வேள்விகளும், பலதரப்பட்ட தர்ம நோன்புகளும் நடைமுறைக்கு வந்தன. திரேதா யுகத்தில் மக்கள் நோக்கத்தை அடைவதை பல வழிகளில் செய்யத் தொடங்கினர். அவர்கள் செயல்கள் மூலமாகவும் கொடைகள் மூலமாகவும் அவற்றை அடைந்தனர். அவர்கள் அறத்தின் பாதையில் இருந்து வழுவாதிருந்தார்கள். அவர்கள் தவத்திற்கு அர்ப்பணிப்புடன் இருந்தனர். நால் வகைகளும் {வர்ணங்களும்} தங்கள் கடமைகளைச் சரியாகப் பின்பற்றிச் சடங்குகளைச் செய்தனர். திரேதா யுகத்தின் மனிதர்கள் இப்படியே இருந்தனர்.
துவாபர யுகத்தில் அறம் ஒரு பாதிக் குறைந்தது {இரு கால்கள் குறைந்து, இரு கால்களில் நின்றது}. நாராயணன் மஞ்சள் நிறத்தை அணிந்தான். வேதங்கள் நான்காகப் பிரிக்கப்பட்டன. சில மனிதர்கள் நான்கு வேதங்களை அறிந்தனர், சிலர் மூன்று வேதங்களை அறிந்தனர், சிலர் ஒரு வேதத்தை அறிந்திருந்தனர். மேலும் சிலர் ரிக்கைக் கூட அறியவில்லை. சாத்திரங்கள் இப்படிப் பகுக்கப்பட்டபிறகு செயல்கள் அதிகரிக்கத் தொடங்கின. மக்கள் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, துறவிலும் கொடையிலும் ஈடுபட்டனர். முழு வேதத்தையும் பயிலும் திறனற்றதால், அது பல பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. அறிவு குறைந்ததன் விளைவாகச் சிலரே உண்மையில் நிலைத்திருந்தார்கள். மக்கள் சத்தியத்தில் இருந்து வழுவிய போது, பலதரப்பட்ட நோய்களும், காமம் {ஆசை} பெருகவும், இயற்கைப் பேரிடர்களும் ஏற்பட ஆரம்பித்தன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தவம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். சிலர் வாழ்வில் நல்ல காரியங்களை விரும்பியோ அல்லது சொர்க்கத்தை விரும்பியோ வேள்விகள் கொண்டாடினர். துவாபர யுகம் தொடங்கியதும் மனிதர்கள் அவர்கள் செய்யும் அக்கிரமங்களால் சிதைவுக்குள்ளாகினர்.
ஓ! குந்தியின் மகனே {பீமா}, கலி யுகத்தில் அறம் ஒரே காலில் நிற்கிறது. இந்த இரும்பு யுகத்தின் தொடக்கத்தில் நாராயணன் கருப்பு நிறத்தை அணிகிறான். இந்த யுகத்தில் வேதங்களும் நெறிகளும், அறம், வேள்விகள், அற நோன்புகள் ஆகியன பயன்பாட்டில் இருந்து விழுகின்றன. ஈதி {அதிக மழை, வறட்சி, எலிகள், வெட்டுக் கிளி, பறவைகள், அண்டை நாட்டுப் பகை மன்னர்கள் - ஆகிய பயிருக்கு சாதகமற்ற ஆறு பொருள்கள்}, நோய், களைப்பு, கோபம், பிற குறைபாடுகள், இயற்கைப் பேரிடர், துயரம், பற்றாக்குறை பயம் ஆகியன உண்டாகும். யுகம் கரையும்போது, அறமும் குறைவடைகிறது. அறம் குறையும் போது, உயிரினங்கள் அழிகின்றன. உயிரினங்கள் அழிந்தால் இயற்கை அழிவைச் சந்திக்கிறது. யுக முடிவில் செய்யப்படுகிற அறச் செயல்கள் எதிர்மறை பலன்களை அளிக்கின்றன. பல யுகங்கள் வாழ்வன கூட இம்மாற்றங்களுக்கு ஆட்படுகின்றன. ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலை அறிந்ததால் இதைச் சொல்கிறேன். ஒரு நல்ல மனிதன் ஏன் மிதமிஞ்சிய பொருளைக் {பயனற்றதைக்} குறித்து ஆவலாக இருக்க வேண்டும்? ஓ! நீண்ட கரங்கள் கொண்டவனே {பீமா}, ஒவ்வொரு யுகத்தின் தன்மைகள் குறித்து முழுமையாகச் சொல்லிவிட்டேன். உனக்கு நன்மை உண்டாகட்டும். இனி நீ திரும்பிப் போ" என்றான் {ஹனுமான்}.