The tears of Dussasana! | Vana Parva - Section 247 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
சித்திரசேனன், துரியோதனன் வந்த நோக்கத்தை யுதிஷ்டிரனிடம் வெளிப்படுத்துவது; துரியோதனன் அவமானத்தால் கூனிக் குறுகிப் போவது; தனக்கு நேர்ந்த அவமானத்தால் உணவைத் துறந்து, உயிர் விடப்போவதாகத் துரியோதனன் தீர்மானிப்பது; நீ இல்லாமல் நான் ஆள மாட்டேன் என்று துச்சாசனன் துரியோதனனிடம் கதறி அழுவது; கர்ணன் துரியோதனனுக்குச் சமாதானம் கூறுவது...
துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், "பகை வீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், பிறகு சித்திரசேனனை அணுகி, சிரித்துக் கொண்டே ஆண்மை நிறைந்த வார்த்தைகளால், "ஓ! வீரா, ஓ! கந்தர்வர்களில் முதன்மையானவனே {சித்திரசேனா}, என் சகோதரர்களை விடுவிப்பதே உனக்குத் தகும். பாண்டுவின் மகன்கள் உயிரோடு இருக்கும் வரை அவர்கள் {கௌரவர்கள்} அவமதிக்கப்பட இயலாதவர்கள்" என்றான். இப்படிப் பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனால் சொல்லப்பட்ட கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, ஓ! கர்ணா, துன்பத்தில் மூழ்கி இருக்கும் பாண்டுவின் மகன்களையும் அவர்களது மனைவியையும் காணவே நாம் அந்த இடத்திற்கு வந்தோம் என்ற நமது நோக்கத்தைப் பாண்டவர்களிடம் வெளிப்படுத்தினான்.
அந்தக் கந்தர்வன் நமது ஆலோசனைகளை வெளிப்படுத்திய போது, வெட்கத்தில் மூழ்கிய நான், அங்கேயே மறைந்து போவதற்கு, பூமி ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். பின்பு பாண்டவர்களுடன் கூடிய கந்தர்வர்கள் கட்டப்பட்டிருந்த எங்களை யுதிஷ்டிரனிடம் அழைத்துச் சென்று, நமது ஆலோசனைகளை வெளிப்படுத்தினர். எனது எதிரிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்று, துயரத்தில் மூழ்கி, சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நான், எங்கள் குடும்பப் பெண்களின் கண்களுக்கு முன்பாகவே யுதிஷ்டிரனுக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டேன். ஐயோ, இதைவிட வேறு என்ன பெரிய சோகம் எனக்கு இருக்க முடியும்?
ஐயோ, என்னால் யார் எப்போதும் துன்புறுத்தப்பட்டார்களோ, நான் யாருக்கு எப்போதும் எதிரியாக இருந்தேனோ, அவர்களாலேயே சிறைமீட்கப்பட்டேன். எனது உயிருக்காக அவர்களுக்குக் கடன்பட்ட நான் இழிந்தவனாகி விட்டேனே. ஓ! வீரா {கர்ணா}, இவ்வழியில் பெறப்பட்ட உயிரோடு இருப்பதைவிட, நான் அந்தப் பெரும் போர்க்களத்தில் மரணத்தைச் சந்தித்திருந்தால் அது மேலானதாக இருந்திருக்குமே. நான் கந்தர்வர்களால் கொல்லப்பட்டிருந்தால், எனது புகழ் உலகம் முழுதும் பரவியிருக்கும். நானும் இந்திரனின் சொர்க்கத்தில், நித்தியமான அருளுடன், மங்களமான பகுதிகளை அடைந்திருப்பேன்.
அதனால், மனிதர்களில் காளைகளே, நான் இப்போது என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கேளுங்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது, நான் அனைத்து உணவையும் துறந்து இங்கேயே தங்கியிருப்பேன். எனது தம்பிகள் அனைவரும் ஹஸ்தினாபுரம் செல்லட்டும். கர்ணன் உட்பட எனது நண்பர்கள் அனைவரும், மற்றும் துச்சாசனன் தலைமையிலான எங்கள் உறவினர்கள் அனைவரும் இப்போதே தலைநகர் திரும்பட்டும். எதிரியால் அவமதிக்கப்பட்ட நான் அங்கே {தலைநகருக்கு} வரவே மாட்டேன். முன்பு எதிரியிடம் இருக்கும் மதிப்பைப் பறித்து, எனது நண்பர்களின் மதிப்பை எப்போதும் உயர்த்திய நான், இப்போது எனது நண்பர்களுக்குக் கவலையையும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுப்பவனாகிவிட்டேன். யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} சென்று மன்னரிடம் {திருதராஷ்டிரரிடம்} நான் என்ன சொல்வேன்?
பீஷ்மர், துரோணர், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, விதுரர், சஞ்சயன், சோமதத்தன் மற்றும் பிற மதிக்கத்தக்க மூத்தவர்கள் என்னிடம் என்ன கேட்பார்கள்? பிற வகைகளைச் சேர்ந்த முக்கிய மனிதர்களும், சுதந்திரமான தொழில் செய்யும் மனிதர்களும் என்னிடம் என்ன கேட்பார்கள்? நான்தான் அவர்களுக்கு மறுமொழியாக என்ன சொல்வேன்? இதுவரை எதிரிகளின் தலைக்கு மேல் இருந்து, அவர்களின் மார்புகளை மிதித்த நான், இப்போது அந்நிலையில் இருந்து விழுந்துவிட்டேன். அவர்களிடம் இனி நான் எப்படித்தான் பேசுவேன்? செழிப்பு, அறிவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடையும் ஆணவமிக்க மனிதர்கள், வெறுமை பொங்கிய என்னைப் போலவே, அபூர்வமாகவே அருள் காலத்தை அனுபவிப்பார்கள்.
ஐயோ, அறியாமையால் வழிநடத்தப்பட்டு மிகவும் முறையற்ற, தீய செயலைச் செய்த முட்டாள் ஆனதால், நான் இத்தகைய துயரத்தில் விழுந்தேனே. இனியும் உயிரை என்னால் தாங்க முடியாததால், நான் பட்டினி கிடந்து சாவேன். எதிரியால் துயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட, துணிச்சல் மிகுந்த எவன்தான் {Man of spirit} தனது இருப்பை {தன் வாழ்நாளை} நீண்ட காலம் நீட்டிச் செல்வான்? கர்வம் கொண்ட நான், ஆண்மையற்றுப் போய், துயரத்தில் மூழ்கியதை, பராக்கிரமம் கொண்ட பாண்டவர்கள் பார்த்ததால் எதிரிகளின் நகைப்புக்குள்ளானேன்" என்றான் {துரியோதனன்}
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதுபோன்ற நினைவுகளுக்கு வழி கொடுத்துக் கொண்டிருந்த துரியோதனன், துச்சாசனனிடம், "ஓ! துச்சாசனா, ஓ! பாரதக் குலத்தவனே, எனது இவ்வார்த்தைகளைக் கேள்! நான் உனக்கு வழங்கும் இந்த {அரச} பட்டத்தை ஏற்று, என் இடத்தில் மன்னனாக இரு. கர்ணானாலும், சுபலனின் மகன்களாலும் பாதுகாக்கப்பட்ட பரந்த பூமியை நீ ஆட்சி செய். மருதர்களைப் பார்த்துக் கொள்ளும் இந்திரனைப் போல, உன் தம்பிகளைப் பேணிப் பராமரித்து, அவர்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெறுவாயாக. நூறு வேள்விகளைச் செய்தவனைச் {இந்திரனைச்} சார்ந்திருக்கும் தேவர்களைப் போல, நண்பர்களும் உறவினர்களும் உன்னைச் சார்ந்து இருக்கட்டும். சோம்பலில்லாமல் நீ எப்போதும் அந்தணர்களுக்கு பணிக்கொடை கொடுக்க வேண்டும். உனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நீ எப்போதும் புகலிடமாக இரு. தேவர்களைப் பார்த்துக் கொள்ளும் விஷ்ணுவைப் போல, எப்போதும் உனது அனைத்து இரத்த உறவுகளை நீ பார்த்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களை நீ எப்போதும் பேணிப் பாதுகாக்க வேண்டும். உனது நண்பர்களுக்கு மகிழ்ச்சியூட்டும்படியும், உனது எதிரிகளைக் கண்டித்தும் இந்த உலகத்தை ஆட்சி செய்; போ!" என்றான் {துரியோதனன்}.
பிறகு அவனது {துச்சாசனனின்} கழுத்தைக் கட்டிக் கொண்ட துரியோதனன், மீண்டும் "போ!" என்றான். அவனது {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்ட துச்சாசனன், உற்சாகத்தை முற்றிலும் இழந்து, பெருந்துயரில் மூழ்கி, கண்ணீரால் அடைபட்ட குரலுடன், கைகள் கூப்பி, தனது அண்ணனுக்குச் சிரம் தாழ்த்தி, "மனம் இரங்குவீராக" என்றான். இப்படிச் சொல்லிய அவன் கனத்த இதயத்துடன் கீழே பூமியில் விழுந்தான். துயரால் தாக்கப்பட்ட அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தனது அண்ணனின் பாதங்களில் கண்ணீர் சிந்தி மீண்டும், "இது நடக்காது! இந்தப் பூமி பிளந்து போகலாம், ஆகாயம் துண்டு துண்டாகலாம், சூரியன் தனது பிரகாசத்தை இழக்கலாம், சந்திரன் தனது குளுமையைக் கைவிடலாம், காற்று அதன் வேகத்தைக் கைவிடலாம், தனது இருப்பிடத்தில் இருந்து இமயம் நகரலாம், சமுத்திரத்தின் நீர் வற்றிப் போகலாம், நெருப்பு தன் வெப்பத்தைக் கைவிடலாம், எனினும், ஓ! மன்னா {துரியோதனரே}, ஒருபோதும் நீரில்லாமல் {நீயில்லாமல்} இந்தப்பூமியை நான் ஆளமாட்டேன்" என்றான். துச்சாசனன் மீண்டும், "மனம் இரங்கும், ஓ! மன்னா! {துரியோதனரே}, நமது குலத்தில் மன்னனாக நூறாண்டு காலம் உம்மால் மட்டுமே இருக்க முடியும்" என்றான். மன்னனிடம் {துரியோதனனிடம்} இப்படிப் பேசிய துச்சாசனன், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் வழிபாட்டுக்குரிய தனது அண்ணனின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, இனிய குரல் கொண்டு அழத் தொடங்கினான்.
துச்சாசனனும், துரியோதனனும் இப்படி அழுவதைக் கண்ட கர்ணன் பெருந்துயரத்துடன் அவர்கள் இருவரையும் அணுகி, "குரு இளவரசர்களே, சாதாரண மனிதர்களைப் போல, அறிவற்றுப் போய், ஏன் துயருக்கு ஆளாகிறீர்கள்? கவலையோடு இருக்கும் மனிதனின் துயரத்தை, அவனது கண்ணீர் ஒருபோதும் நீக்காது. அழுகை ஒருவனின் துயரை நீக்க முடியாது என்கிற போது, இப்படிச் சோகத்துக்கு வழி கொடுப்பதால் உங்களுக்கு லாபமென்ன? இத்தகு நடத்தையால் எதிரியை மகிழ்ச்சியூட்டாது, பொறுமையை உங்கள் துணைக்கு அழையுங்கள். ஓ! மன்னா {துரியோதனா}, உன்னை விடுவித்து, பாண்டவர்கள் தங்கள் கடமையையே செய்திருக்கிறார்கள். மன்னனின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் வசிக்கும் அவர்கள், எப்போதும் மன்னனுக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பாண்டவர்கள், உனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் உன்னால் பாதுகாக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். சாதாரண மனிதனைப் போல இத்தகு துயரத்தில் ஆழ்வது உனக்குத் தகாது. உணவைக் கைவிட்டு, உயிரை விடப்போவதாக நீ தீர்மானித்ததைக் கண்ட உனது இரத்த உறவுகளான தம்பிகள் அனைவரும் சோகமாகவும், உற்சாகமற்றும் இருப்பதைப் பார். நீ அருளப்பட்டிரு! எழுந்து உனது நகரத்திற்கு வா, உனது இரத்த உறவுகளான தம்பிகளுக்கு ஆறுதல் கூறு" என்றான் {கர்ணன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.