"I will serve thy feet reverentially!" said Karna! | Vana Parva - Section 248 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
துரியோதனனைத் தேற்றி, தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க கர்ணன் செய்த முயற்சி…
கர்ணன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், "ஓ! மன்னா, இன்று உனது நடத்தை குழந்தைத்தனமாக இருக்கிறது. ஓ! வீரா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, நீ பகைவனால் வீழ்த்தப்பட்டபோது, பாண்டவர்கள் உன்னை விடுவித்தனர் என்பதில் நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? ஓ குரு குலத்தின் மகனே {துரியோதனா}, மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்கள், அதிலும் குறிப்பாக (அவர்களில்) ஆயுதமேந்துவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், தாங்கள் ஏகாதிபதியால் அறியப்பட்டவர்களாக இருப்பினும், அறிப்படாதவர்களாக இருப்பினும், தங்கள் மன்னனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்ய வேண்டும். எதிரிப்படையின் தலைவர்களை நசுக்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், அவர்களாலேயே {அந்த எதிரிகளாலேயே} வீழ்த்தப்படுவதும், பின்பு தங்கள் துருப்புகளால் மீட்கப்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருவதே.
மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும், ஆயுதமேந்துவதைத் தொழிலாகக் கொண்டவர்கள், எப்போதும் ஒருங்கிணைந்து, மன்னனுக்காகத் தங்கள் சக்தியில் சிறந்ததை வெளிப்படுத்த வேண்டும். ஓ! மன்னா {துரியோதனா}, உனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் பாண்டவர்கள் உன்னை {தற்செயலாக} விடுவித்திருந்தாலும், அதில் நீ வருந்த என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களில் சிறந்தவனே {துரியோதனா}, உனது துருப்புகளுக்குத் தலைமை தாங்கி போர்க்களத்திற்கான அணிவகுப்பின் முன்னணியில் நீ சென்று கொண்டிருந்த போது, அவர்கள் {பாண்டவர்கள்} உன்னைத் தொடர்ந்து வரவில்லை. அஃது தங்கள் பங்குக்கு அவர்கள் செய்த முறையற்ற செயலாகும். இதற்கு முன்பே அவர்கள் உன் அடிமையாகி, உன் அதிகாரத்தின் கீழ் வந்துவிட்டார்கள். எனவே, துணிவும், பலமும் கொண்டு போர்களத்தில் புறம்காட்டாதவர்களான அவர்கள்
{பாண்டவர்கள்}, இப்போது உனக்கு உதவி செய்வது {அவர்களது} கடனே.
அவர்களது {பாண்டவர்களின்} ஆடம்பர உடைமைகளையெல்லாம் நீ அனுபவித்து வருகிறாய். {ஆயினும்} ஓ! மன்னா {துரியோதனா}, அவர்கள் உயிருடன் இருப்பதைப் பார்! உணவைத் துறந்து சாவதாக அவர்கள் தீர்மானிக்கவில்லை. நீ அருளப்பட்டிரு! ஓ! மன்னா {துரியோதனா} எழுந்திரு! நீண்ட காலத்திற்குப் பெரும் துன்பத்தில் இருப்பது உனக்குத் தகாது. ஓ! மன்னா {துரியோதனா}, மன்னனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் மன்னனுக்கு ஏற்புடையதைச் செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? ஓ! மன்னா {துரியோதனா}, எனது வார்த்தைகளுக்கு ஏற்ப நீ செயல்படவில்லை எனில், நானும் இங்கேயே இருந்து, உன் பாதங்களை மரியாதையுடன் சேவிப்பதில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, உன் துணையை இழந்து நான் வாழ விரும்பவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, உணவைத் துறந்து உன்னைக் கொன்று {தற்கொலை செய்து} கொள்ள நீ தீர்மானித்தாயானால், பிற மன்னர்களுக்கு நீ சாதாரணமான கேலிப் பொருளாகிவிடுவாய்" என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கர்ணனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் துரியோதனன், இவ்வுலகில் இருந்து விடைபெறுவதாக உறுதியாகத் தீர்மானித்திருந்ததால், தன் இருக்கையில் இருந்து எழும்ப விரும்பவில்லை."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.