"I was captured" said Duryodhana! | Vana Parva - Section 246 | Mahabharata In Tamil
(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)
போர்க்களத்தில் நடந்த விவரங்களைத் துரியோதனன் கர்ணனுக்குச் சொல்லல்; கந்தர்வர்களால் தானும் தன் குடும்பத்தாரும், நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டதையும், யுதிஷ்டிரன் கட்டளையின் பேரில் அர்ஜுனன், பீமன் மற்றும் நகுல சகாதேவர்கள் கந்தர்வர்களுடன் போரிட்டதையும் துரியோதனன் கர்ணனிடம் சொன்னது;
துரியோதனன் {கர்ணனிடம்} சொன்னான், "ஓ! ராதேயா {கர்ணா}, நடந்தது என்ன என்பதை நீ அறியமாட்டாய். எனவே, நான் உனது வார்த்தைகளால் சீற்றமடையவில்லை. பகைவர்களான கந்தர்வர்களை எனது சக்தியால் நானே வீழ்த்தியதாக நீ நினைக்கிறாய். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {கர்ணா}, உண்மையில் எனது துணையுடன் என் தம்பிகள் நீண்ட நேரம் கந்தர்வர்களுடன் போரிட்டனர். உண்மையில், இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், அந்த வீரமிக்கக் கந்தர்வர்கள், தங்கள் மாய சக்திகள் பலவற்றைப் பயன்படுத்தி, வானத்திற்கு உயர்ந்து எங்களுடன் போரிட்டனர். அவர்களுடனான மோதல் சம தன்மையை இழந்தது. தோல்வி எங்களுடையதாகியது. சிறை பிடிக்கவும் பட்டோம்.
எங்கள் பணியாட்கள், ஆலோசகர்கள், பிள்ளைகள், மனைவியர், துருப்புகள், வாகனங்களோடு கூடி பெருந்துன்பத்தில் இருந்த எங்கள் அனைவரையும் அவர்கள் ஆகாய மார்க்கமாக எடுத்துச் சென்றனர். அப்போதுதான், எங்கள் வீரர்களில் சிலரும், வீரமிக்க அதிகாரிகளில் சிலரும், உதவி கேட்போருக்கு எப்போதும் மறுக்காத வீரர்களான பாண்டுவின் மகன்களிடம் சென்றனர். அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்ற அவர்கள் {நமது வீரர்கள்}, "திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் இங்கே தனது தம்பிகளோடும், நண்பர்களோடும், மனைவியரோடும் கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆகாய மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறான். நீங்கள் அருளப்பட்டிருங்கள். அரச குடும்பப் பெண்களோடு இருக்கும் மன்னனை விடுவியுங்கள்! குரு குல பெண்களுக்கு எந்த அவமானமும் நேராமல் இருக்கட்டும்" என்று சொல்லினர்.
அவர்கள் இப்படிப் பேசியதும், அற ஆன்மா கொண்ட பாண்டு மகன்களில் மூத்தவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளைச் சமாதானப்படுத்தி, எங்களை விடுவிக்கும்படி உத்தரவிட்டான். பிறகு, தங்கள் ஆயுத சக்தியைக் கொண்டு சாதிக்கும் திறன் இருந்தும், மனிதர்களில் காளைகளான அந்தப் பாண்டவர்கள், கந்தர்வர்களை அடைந்து, மென்மையான வார்த்தைகளில் எங்களை விடுவிக்கச் சொன்னார்கள். இப்படிச் சமாதானமான வார்த்தைகளால் கேட்கப்பட்டும், கந்தர்வர்கள் எங்களை விடுவிக்க மறுக்கவே, பெரும் சக்தி கொண்டவர்களான அர்ஜுனன், பீமன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} ஆகியோர் கந்தர்வர்கள் மீது கணை மாரி {அம்பு மழை} பொழிந்தனர்.
பிறகு அந்தக் கந்தர்வர்கள், போரிடுவதைக் கைவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன், துயரத்துடன் இருந்த எங்களை இழுத்த படியே வானத்தின் வழியே தப்பி ஓடினர். பின்னர்த் தெய்வீக ஆயுதங்களை எதிரிகளின் மீது பயன்படுத்திக் கொண்டிருந்த தனஞ்சயனால் {அர்ஜுனனால்} எல்லாப்புறங்களிலும் அம்புகளாலான வலை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். கூரிய கணைகளால் அடர்த்தியாகப் பின்னப்பட்ட அந்த வலை அனைத்துத் திசைகளையும் மூடியிருப்பதைக் கண்ட அவனது {அர்ஜுனனின்} நண்பனான கந்தர்வர்கள் தலைவன் {சித்திரசேனன்}, தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். சித்திரசேனனும், அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டு, ஒருவரின் நலனை மற்றவர் விசாரித்துக் கொண்டனர். பாண்டுவின் மற்ற மகன்களும் அந்தக் கந்தர்வர்கள் தலைவனைத் {சித்திரசேனனைத்} தழுவினர். பதிலுக்கு அவனும் அவர்களைத் தழுவினான். பிறகு மரியாதை நிமித்தமான விசாரிப்புகள் அவர்களுக்குள் நடந்தது. பிறகு அந்த வீரமிக்கக் கந்தர்வர்கள், தங்கள் ஆயுதங்கள் மற்றும் கவசங்களைத் துறந்து, பாண்டவர்களுடன் நட்புகூடிய ஆவியில் கலந்தனர். சித்திரசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஒருவருக்கொருவர் மரியாதையுடன் வணங்கிக் கொண்டனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.