The | Vana Parva - Section 309 | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வம்)
ஓர் அந்தணரின் ஆசிரமத்தில் இருந்து அவரது அணிகளையும், கடைக்கோலையும் ஒரு மான் தூக்கிச் செல்வது; அந்த அந்தணர் பாண்டவர்களிடம் வந்து அவற்றை மீட்டுத் தரும்படி கோருவது; தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரன் அந்த மானைத் தேடிச் செல்வது; பாண்டவர்கள் அம்மானைக் கண்டடைவது; நீண்ட நேரம் துரத்தி ஆயுதங்கள் வீசியும் மானைத் துளைக்க முடியாதது; மான் திடீரென மறைவது; அனைவரும் ஒரு மரத்தடியில் அமர்வது; நகுலன் துயரத்துடன் பேசுவது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தங்கள் மனைவி {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, பாண்டவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கிருஷ்ணை {திரௌபதி} கடத்தப்பட்டதால் பெரும் துயரடைந்த மங்காப் புகழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் காம்யக வனத்தைவிட்டு, காண்பதற்கு இனிய காட்சிகள் கொண்டதும், மரங்களும், இனிய பழங்களும் கிழங்குகளும் நிறைந்த துவைத வனத்திற்குத் திரும்பினான். தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டுவின் மகன்கள் பழங்களை மிகச் சொற்பமாக உண்டு, கடும் நோன்புகள் பயின்று அங்கே வசிக்கலாயினர். எதிரிகளை அடக்குபவர்களான, குந்தியின் மகனான அறம்சார்ந்த மன்னன் யுதிஷ்டிரன், பீமசேனன், அர்ஜுனன், மற்றும் மாத்ரியிடம் பாண்டுவுக்குப் பிறந்த மற்ற மகன்கள் {நகுலனும் சகாதேவனும்}, கடும் நோன்புகள் பயின்று துவைத வனத்தில் வசித்து வந்தபோது, ஓர் அந்தணரின் காரணமாகப் பெரும் சிக்கலுக்கு ஆளானார்கள். எனினும் அக்காரியம் அவர்களது எதிர்கால மகிழ்ச்சிக்காகவே வந்ததாக அமைந்தது. அந்தக் குருக்களில் முதன்மையானோர் {பாண்டவர்கள்}, அந்த வனத்தில் வசித்து வந்தபோது ஏற்பட்ட சிக்கலைக் குறித்தும், இறுதியில் அது அவர்களுக்குக் கொடுத்த மகிழ்ச்சியைக் குறித்தும் உனக்கு முழுமையாகச் சொல்கிறேன். அதை நீ கேள்!
ஒரு முறை, ஒரு மான் திரிந்து கொண்டிருந்த போது, தவத்துறவுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஓர் அந்தணருக்குச் சொந்தமான இரு அரணிகளும் {#}, ஒரு கடைக்கோலும் {#} அதன் கொம்புகளில் மாட்டிக் கொண்டன. அதன்பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேகம் கொண்ட, நீண்ட எட்டுகள் வைக்கும் திறன் கொண்ட அந்தச் சக்தி மிக்க மான், அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆசிரமத்தை விட்டு வெகு வேகமாக ஓடியது. ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தப் பொருட்கள் இப்படித் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட அந்த அந்தணர், தனது அக்னிஹோத்ரம் குறித்துக் கவலை கொண்டு, விரைவாகப் பாண்டவர்கள் முன் வந்தார். நேரத்தைக் கடத்தாமல், காட்டில் தனது தம்பிகளுடன் அமர்ந்திருந்த அஜாதசத்ருவிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த துயர் மிகுந்த அந்த அந்தணர், இந்த வார்த்தைகளைச் சொன்னார் “ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு மான் உலவிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரும் மரத்தில் மாட்டப்பட்டிருந்த எனது அரணிகளும், கடைக்கோலும், அதன் {மானின்} கொம்புகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது. ஓ! மன்னா, பெரும் வேகம் கொண்ட அந்தச் சக்திமிக்க மான், நீண்ட எட்டுகள் வைத்து ஆசிரமத்தை விட்டு வேகமாக, அந்தப் பொருட்களுடன் ஓடிவிட்டது. ஓ! மன்னா, அதன் கால் தடங்களைக் கொண்டு அந்தச் சக்தி மிக்க மானை கண்டடைந்து, ஓ! பாண்டுவின் மகன்களே எனது அக்னிஹோத்ரம் நின்றுவிடாதவாறு, எனது அந்தப் பொருட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்" {என்றார் அந்த அந்தணர்}.
அந்த அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் மிகவும் கவலை கொண்டான். அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது வில்லை எடுத்துக் கொண்டு, தனது தம்பிகளுடன் வெளியே கிளம்பினான். கவசம் பூண்டு, தங்கள் விற்களை எடுத்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், அந்த அந்தணருக்குச் சேவை செய்யும் நோக்கோடு, மானைத் தேடி விரைவாக வெளியே சென்றனர். நீண்ட தூரத்திற்கு முன்னரே அந்த மானைக் கண்டுபிடித்த அந்தப் பலமிக்கப் போர்வீரர்கள், அதன்மீது முள் அம்புகளையும், எறிவேல்களையும், கணைகளையும் அடித்தனர். ஆனால், பாண்டுவின் மகன்களால் அதனை எவ்வகையிலும் துளைக்க முடியவில்லை. அவர்கள் அதைக் கொல்ல நினைத்து, அதைத் தொடர்ந்து செல்லத் திணறிய போது, அந்தச் சக்திமிக்க மான் திடீரென மறைந்து போனது. மானின் மீதிருந்த தங்கள் பார்வையைத் தொலைத்த உன்னத மனம் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன்கள், களைத்துப் போய், ஏமாற்றம் அடைந்து, பசி மற்றும் தாகத்தால் பாதிக்கப்பட்டு அந்தக் காட்டின் ஆழத்தில் {நடுவில்} இருந்த ஓர் ஆல மரத்தை அடைந்து, அதன் குளிர்ந்த நிழலில் அமர்ந்தார்கள். அப்படி அவர்கள் அமர்ந்த பிறகு, சோகத்தால் வாட்டப்பட்ட நகுலன், பொறுமையின்மையால் உந்தப்பட்டு, குரு குலத்தின் மூத்த அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நமது குலத்தில் {முயற்சியின்மையால்} அறம் எப்போதும் தியாகம் செய்யப்பட்டது கிடையாது; செருக்கால் செல்வத்தையும் இழந்தது கிடையாது. கேட்கப்பட்ட போது எந்த உயிரினத்துக்கும் "இல்லை!” என்று எப்போதும் சொன்னதில்லை. பின்னர் ஏன் தற்போதைய இந்நிகழ்வில், நாம் {அந்தணர் கேட்டு இல்லை என்று சொல்லும்} இந்தப் பெருந்துன்பத்தை அடைந்திருக்கிறோம்?” என்று கேட்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.