Four of the Pandavas died! | Vana Parva - Section 310 | Mahabharata In Tamil
(ஆரணேயப் பர்வத் தொடர்ச்சி)
தங்கள் தாகத்தை அடக்க நீர் இருக்கும் இடத்தைக் கண்டறிய யுதிஷ்டிரன் நகுலனிடம் சொன்னது; நகுலன் மரத்திலேறி ஒரு தடாகத்தைப் பார்த்தது; நீர் கொண்டு வருவதற்காக நகுலனும், அவனைத் தொடர்ந்த சகாதேவனும், அர்ஜுனனும், பீமனும் அனுப்பப்பட்டு இறந்து போனது; நால்வரும் திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் மனம் வருந்தி, தானே தடாகத்தையும், தனது தம்பிகளையும் தேடிப் புறப்பட்டது....
யுதிஷ்டிரன், “இடர்களுக்கு ஓர் எல்லையே இல்லை. அதே போல அதன் இறுதிக்காரணம் அல்லது செயல்திறன்மிக்கக் காரணத்தை உறுதியாக அறிந்து கொள்ளவும் முடியாது. அறம் {நன்மை} மற்றும் மறங்களின் {தீமையின்} கனிகளை நீதியின் தேவன் {தர்மதேவன் = யமன்} மட்டுமே பிரித்தளிக்கிறான்" என்றான். அதற்குப் பீமன், “அடிமையைப் போலக் கிருஷ்ணையை {திரௌபதியைச்} சபைக்குள் இழுத்துவந்த பிராதிகாமினை அங்கேயே நான் கொல்லாததால்தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்" என்றான். அர்ஜுனன், “சூதனின் மகனால் {கர்ணனால்} உச்சரிக்கப்பட்ட, எலும்பையே துளைக்கும் கடும் வார்த்தைகளுக்கு நான் சீற்றம் கொள்ளாததாலேயே இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான். சகாதேவன், "ஓ! பாரதா {யுதிரஷ்டிரரே}, உம்மைப் பகடையில் சகுனி வீழ்த்திய போது, நான் அவனைக் கொல்லவில்லை. எனவே தான் இந்தப் பேரிடர் நம் மீது விழுந்திருக்கிறது என்பது நிச்சயம்!" என்றான்.”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “மன்னன் யுதிஷ்டிரன், நகுலனிடம், “ஓ! மாத்ரியின் மகனே, இந்த மரத்தில் ஏறி, தொடுவானத்தின் பத்து புள்ளிகளையும் சுற்றிப் பார். நீரோ, நீர்நிறைந்த நிலத்தில் {மட்டுமே} வளரும் அத்தகு மரங்களோ எங்காவது வளர்ந்திருக்கிறதா என்று பார்! ஓ! குழந்தாய், உனது இந்தச் சகோதரர்கள் களைத்துப் போய்த் தாகமாய் இருக்கிறார்கள்" என்றான். அதற்கு, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நகுலன் விரைவாக மரத்தில் ஏறி சுற்றிலும் பார்த்து, தனது அண்ணனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் அருகே இருக்கும் பல மரங்களை நான் பார்க்கிறேன். மேலும் நான் கொக்குகளின் ஒலிகளையும் கேட்கிறேன். எனவே, அங்கே நீர் இருக்கிறது என்பதில் ஐயமில்லை" என்றான்.
உண்மையில் நிலைத்து நிற்கும் குந்தியின் மகனான யுதிஷ்டிரன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, “ஓ! மனதுக்கினியவனே {நகுலா}, நீ சென்று இந்த அம்பறாத்தூணிகளில் நீர் நிறைத்து வா" என்றான். “அப்படியே ஆகட்டும்" என்று தனது அண்ணனின் கட்டளையின் பேரில் உடனே புறப்பட்ட நகுலன், நீர் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறி, விரைவில் அங்கே வந்து சேர்ந்தான். கொக்குகள் நிறைந்த தெளிந்த தடாகத்தைக் கண்ட அவன் {நகுலன்}, அதைக் {நீரைக்} குடிக்க எண்ணினான். அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல், “ஓ! குழந்தாய் {நகுலா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. ஓ! மாத்ரியின் மகனே {நகுலா}, முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு (உனக்கு வேண்டிய அளவுக்கு) எடுத்துச் செல்.” என்றது. இருப்பினும், மிகுந்த தாகத்தில் இருந்த நகுலன் அந்த வார்த்தைகளை மதிக்காமல், அந்தக் குளிர்ந்த நீரைக் குடித்தான். அதைக் குடித்ததும் இறந்து கீழே விழுந்தான்.
ஓ! எதிரிகளை அடக்குபவனே {ஜனமேஜயா}, நகுலனின் தாமதத்தைக் கண்ட குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நகுலனின் வீரச் சகோதரனான சகாதேவனிடம், “ஓ! சகாதேவா, நமது சகோதரனான, உனக்கு முன் பிறந்தவன் {நகுலன்} இங்கிருந்து சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. எனவே, நீ சென்று உன்னுடன் பிறந்த தமையனையும் நீரையும் கொண்டு வா" என்றான். இதற்குச் சகாதேவன், “அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி அதே திசையில் சென்று, அந்த இடத்திற்கு வந்த, தனது அண்ணன் {நகுலன்} தரையில் இறந்து கிடப்பதைக் கண்டான். தனது அண்ணனின் இறப்பால் துயருற்ற அவன், கடும் தாகமடைந்து நீரை நோக்கி முன்னேறிய போது இந்த வார்த்தைகள் அவனுக்குக் கேட்டது, “ஓ குழந்தாய் {சகாதேவா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.”
எனினும் மிகுந்த தாகத்தில் இருந்த சகாதேவன், அந்த வார்த்தைகளை மதியாமல் அந்நீரைக் குடித்தான். அதைக் குடித்துவிட்டு இறந்து கீழே விழுந்தான். பிறகு, குந்தியின் மகனான யுதிஷ்டிரன், விஜயனிடம் {அர்ஜுனனிடம்}, "ஓ! பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனா}, உனது இரு சகோதரர்களும் சென்று நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஓ! எதிரிகளை அடக்குபவனே! நீ அருளப்பட்டிருப்பாய்! நீ அவர்களை திரும்ப அழைத்துக் கொண்டு நீருடன் வா. ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, துயரத்தில் மூழ்கியிருக்கும் எங்கள் அனைவருக்கும் நீயே புகலிடமாவாய்!” என்றான். இப்படிச் சொல்லப்பட்ட புத்திக்கூர்மை கொண்ட குடகேசன் {அர்ஜுனன்}, தனது வில்லையும், கணைகளையும், தனது உருவிய வாளையும் எடுத்துக்கொண்டு நீர்த்தடாகத்தைத் தேடி சென்றான். பிறகு வெள்ளைக் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேருடைய அவன் {அர்ஜுனன்}, நீர் எடுக்க வந்த மனிதர்களில் புலிகளான தனது இரண்டு தம்பிகளும் இறந்து கிடப்பதைக் கண்டான்.
உறங்குவதைப் போல் கிடந்த அவர்களைக் கண்ட மனிதர்களில் சிங்கம் {அர்ஜுனன்}, மிகவும் துயருற்று, தனது வில்லை உயர்த்தி, காட்டையே சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தான். ஆனால் அந்தப் பெரும் காட்டில் அவன் யாரையும் காணவில்லை. பிறகு அவன் (நீரை) நோக்கி ஓடிய போது, வானத்தில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டான். “நீ ஏன் இந்த நீரை அணுகுகிறாய்? வலிமையைப் பயன்படுத்தி நீ இதைக் குடிக்க முடியாது. ஓ! கௌந்தேயா {அர்ஜுனா}, நான் உன்னிடம் கேட்கும் கேள்விக்கு நீ பதிலளிக்க முடியும் என்றால், ஓ! பாரதா {அர்ஜுனா} நீ நீரைக் குடித்து, உனக்குத் தேவையான அளவுக்கு அதை எடுத்துச் செல்லலாம்!” {என்றது அந்தக் குரல்}.
இப்படித் தடுக்கப்பட்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, “என் முன் தோன்றி என்னைத் தடை செய்வாயாக! எனது கணைகளால் நீ கடுமையாகத் துளைக்கப்படும்போது, நீ இது போன்று மீண்டும் பேச மாட்டாய்!” என்றான். இதைச் சொன்ன பிறகு, பார்த்தன் {அர்ஜுனன்}, அனைத்துப் புறங்களையும் மந்திரங்களால் தூண்டப்பட்ட கணைகளைக் கொண்டு நிறைத்தான். ஒலியை மட்டுமே கேட்டு, காட்சிக்குத் தெரியாத குறியை அடிக்கும் தனது திறமையையும் அவன் {அர்ஜுனன்} வெளிப்படுத்தினான். ஓ! பாரதக் குலத்தில் காளையே {ஜனமேஜயா}, தாகத்தால் மிகவும் பாதிக்கப்பட அவன் {அர்ஜுனன்} முள் கணைகளையும், எறிவேல்களையும், இரும்புக் கணைகளையும், கலங்கடிக்கப்பட முடியாத கணைகளையும் எண்ணற்ற வகையில் வானத்தில் பொழிந்தான்.
பிறகு காட்சிக்குப்புலப்படாத யக்ஷன் {அர்ஜுனனிடம்}, “இந்த இடருக்கு என்ன தேவையிருக்கிறது, ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, எனது கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு குடி! எனினும், எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நீ குடித்தால், அதன் பிறகு உடனே நீ சாவாய்" என்றான். இடது கையாலும் வில்லை இழுக்கும் ஆற்றல் பெற்ற பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அந்த வார்த்தைகளை மதியாமல், நீரைக் குடித்து, உடனே இறந்து விழுந்தான். (தனஞ்சயனின் தாமதத்தைக் கண்ட) குந்தியின் மகனான யுதிஷ்டிரன் பீமசேனனிடம், “ஓ! எதிரிகளை அடக்குபவனே {பீமா}, நகுலன், சகாதேவன், பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} ஆகியோர் நீர் இரைக்கச் சென்று வெகு நேரமாகிவிட்டது. இருப்பினும் அவர்கள் இன்னும் வரவில்லை. ஓ! பாரதா {பீமா}, உனக்கு நன்மையே விளையட்டும்! அவர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டு, நீருடன் வா!” என்றான்.
அதன்பிறகு, “அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பீமசேனன், மனிதர்களில் புலிகளான தனது தம்பிகள் எங்கே இறந்து கிடக்கின்றனரோ அங்கே சென்றான். அவன் {பீமன்} தாகத்தில் இருந்தாலும் அவர்களைக் கண்டு மிகவும் துயரப்பட்டான். பிறகு வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {பீமன்}, இது யாரோ ஒரு யக்ஷன் அல்லது ராட்சசனின் செயலாக இருக்கும் என நினைத்தான். பிறகு பிருதையின் {குந்தியின்} மகனான விருகோதரன் {பீமன்}, “இன்று நான் நிச்சயம் சண்டையிட வேண்டும். எனவே, முதலில் நான் தாகந்தணிவேன்" என்று நினைத்தான். பிறகு அந்தப் பாரதக் குலத்தின் காளை {பீமன்} {நீரைக்} குடிக்கும் நோக்குடன் விரைந்து முன்னேறினான். அப்போது, அந்த யக்ஷன் {பீமனிடம்}, “ஓ குழந்தாய் {பீமா}, இது போன்ற துடுக்கான செயலைச் செய்யாதே! இந்தத் தடாகம் ஏற்கனவே எனது உடைமையாக இருக்கிறது. முதலில் எனது கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டு, பிறகு இதன் நீரைக் குடித்து, பிறகு உனக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் செல்.” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி யக்ஷனால் சொல்லப்பட்ட அளவிடமுடியாத சக்தி கொண்ட பீமன், அவனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமலேயே நீரைக் குடித்தான். அப்படி அவன் குடித்த உடனேயே அந்த இடத்திலேயே அவன் இறந்து விழுந்தான். தனது தம்பிகள் தன்னைவிட்டு சென்று நீண்ட நேரம் ஆனதை நினைத்த யுதிஷ்டிரன் சில காலம் பொறுத்தான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, “மாத்ரியின் இரு மகன்களும் ஏன் தாமதிக்கின்றனர்? காண்டீவத்தைத் தாங்குபவன் ஏன் தாமதிக்கிறான்? பெரும் பலம் கொண்ட பீமனும் ஏன் தாமதிக்கிறான்? நான் அவர்களைத் தேடிச் செல்வேன்" என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைத்தான். இப்படித் தீர்மானித்த வலிய கரங்கள் கொண்ட யுதிஷ்டிரன், தனது இதயம் துயரத்தால் எரிய எழுந்தான்.
மனிதர்களில் காளையான குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, “இந்தக் காட்டில் ஏதாவது தீய ஆதிக்கம் இருக்கிறதா? அல்லது இதில் {இந்தக்காட்டில்} தீய மிருகங்களின் தொந்தரவு இருக்கிறதா? அல்லது அவர்கள் அனைவரும் வலிமைமிக்க ஏதாவதோர் உயிரினத்தை அவமதித்தன் விளைவாக விழுந்தார்களா? அல்லது நீர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க முடியாமல், இந்தக் காடு முழுவதும் சுற்றித் தேடித் திரிகிறார்களா? அந்த மனிதர்களில் காளையர் திரும்பி வராததன் காரணம்தான் என்ன?” என்று தனக்குள் நினைத்தான். பிறகு இதே வகையில் தனக்குள் பேசிக்கொண்ட ஏகாதிபதிகளில் முதன்மையான சிறப்புமிக்க யுதிஷ்டிரன், மான்களும், கரடிகளும், பறவைகளும் நிறைந்து, பிரகாசமான பச்சை மரங்களால் அலங்கரிக்கப்பட்டு, கருவண்டுகளின் ரீங்காரத்தாலும், சிறகு படைத்த பாடகர்களின் இனிய கீதங்களாலும் எதிரொலிக்கப்பட்டு, மனித ஒலியே அற்றிருந்த அந்தப் பெரும் காட்டிற்குள் நுழைந்தான். அப்படி அவன் {யுதிஷ்டிரன்} முன்னேறிச் சென்ற போது அவன் தேவ தச்சனாலேயே வடிவமைக்கப்பட்டது போன்ற ஓர் அழகிய தடாகத்தைக் கண்டான். அது {அத்தடாகம்} மஞ்சள் நிறம் கொண்ட மலர்களாலும், தாமரைகளாலும், சிந்துவாரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது {அத்தடாகம்} பிரம்பு {canes}, தாழை {ketakas}, அலரி {karaviras}, அரச {pippalas} மரங்களால் சூழப்பட்டிருந்தது. களைப்பால் பாதிக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரன் அந்தக் குளத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.