Karna peeled off his mail! | Vana Parva - Section 308 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
அந்தண வேடத்தில் வந்த இந்திரன் கர்ணனிடம் கவசத்தையும் குண்டலங்களையும் கேட்பது; கர்ணன் அது தனது உயிரை அழிக்கும் என்று சொல்லி மறுப்பது; இந்திரன் அதைத்தவிர வேறு எதுவும் வேண்டாமென்பது; அவற்றுக்கு ஈடாக வேறு ஏதேனும் இந்திரன் அளிக்க வேண்டும் என்று கர்ணன் கோருவது; இந்திரன் வாசவி என்ற சக்தி ஆயுதத்தைத் தருவதாகக் கர்ணனுக்குச் சொல்வது; அதை ஏற்ற கர்ணன் தனது கவசத்தையும் குண்டலங்களையும் அறுத்து இந்திரனுக்குக் கொடுப்பது; கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த கௌரவர்கள் துயரையும், பாண்டவர்கள் மகிழ்ச்சியையும் அடைவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தண வேடம் தரித்து வந்த போது, அவனைக் கண்ட கர்ணன் {இந்திரனிடம்}, “நல்வரவு!” என்றான். அவனது {அந்த அந்தணரின்} நோக்கத்தை அறியாத அதிரதனின் மகன் {கர்ணன்}, அந்த அந்தணனிடம் {இந்திரனிடம்}, “தங்கத்தாலான அட்டிகை {#}, அழகிய காரிகைகள் {#}, அபரிமிதமான பசுக்களுடன் நிறைந்த கிராமங்கள் ஆகியவற்றில் நான் எதை உமக்குக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன் {இந்திரன்}, “நான் தங்கத்தாலான அட்டிகையையோ, அழகிய காரிகைகளையோ வேறு ஏதும் ஏற்புடைய பொருளையோ உன்னிடம் கேட்கவில்லை. அவைகளைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பாயாக. ஓ!பாவமற்றவனே {கர்ணா}, நீ உனது நோன்பில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாய் என்றால், (உனது மேனியில் இருக்கும்) உன் உடலுடன் ஒட்டிப்பிறந்த இந்தக் கவசத்தையும், இந்தக் காது குண்டலங்களையும் அறுத்து எனக்கு அளிப்பாயாக!” என்றான். இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! அந்தணரே, நான் உமக்கு வீடு தோட்டத்துடன் கூடிய நிலத்தையும், அழகிய காரிகைகளையும், பசுக்களையும், கழனிகளையும் {fields} கொடுப்பேன்; ஆனால் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் உமக்குத் தர இயலாதவனாக இருக்கிறேன்!” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிக் கர்ணனால் பலவிதமான வார்த்தைகளில் மறுக்கப்பட்டாலும், ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்த அந்தணன் {அதாவது இந்திரன்} வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. கர்ணன் தன் சக்தியால் இயன்றவரை அவனைச் சமாதானப்படுத்தி, முறையாக வழிபட்டாலும், அந்த அந்தணர்களில் சிறந்தவன் வேறு எந்த வரத்தையும் கேட்கவில்லை. அந்த அந்தணர்களில் முதன்மையானவன் {இந்திரன்}, வேறு எந்த வரத்தையும் கேட்காத போது, ராதையின் மகன் {கர்ணன்}, அவனிடம் {இந்திரனிடம்} புன்னகையோடு, “ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, எனது கவசம் எனது உடலோடு பிறந்தது, இந்தக் காது குண்டலங்கள் அமிர்தத்தில் இருந்து எழுந்தவை. இவற்றாலேயே உலகங்களில் நான் கொல்லப்பட முடியாதவனாக இருக்கிறேன். எனவே, அவற்றை என்னால் பிரிய முடியாது. ஓ! அந்தணர்கள் மத்தியில் உள்ள காளையே, செழிப்பு நிறைந்ததும், எதிரிகளற்றதுமான இந்த முழு உலகத்தின் அரசாட்சியை என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீராக! ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே, எனது காது குண்டலங்களையும், என்னுடலுடன் பிறந்த கவசத்தையும் நான் இழந்தால், எதிரிகளால் வெல்லத்தக்கவன் ஆகிவிடுவேன்!” என்றான் {கர்ணன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பகனைக் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்தவன் {இந்திரன்} வேறு வரத்தைக் கேட்காத போது, கர்ணன் அவனிடம் {இந்திரனிடம்} மீண்டும் புன்னகையுடன், “ஓ! தேவர்களுக்குத் தேவா, ஓ! தலைவா {இந்திரா}, இதற்கு முன்பே நான் உன்னை அடையாங்கண்டு கொண்டேன். ஓ! சக்ரா {இந்திரா}, நீயே தேவர்களுக்குத் தலைவனாதலால், உனக்கு நான் பயனில்லாத வரத்தை அளிப்பது முறையாகாது! மறுபுறம், நீயே படைப்பாளனும், அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனாக இருப்பதால், நீயே எனக்கு வரங்களை அளிக்க வேண்டும்! ஓ! தேவா {இந்திரா}, நான் இந்தக் கவசத்தையும், காது குண்டலங்களையும் உனக்கு அளித்தால், நான் அழிவைச் சந்திப்பேன் என்பது நிச்சயம். நீயும் கேலிக்குள்ளாக்கப்படுவாய். எனவே, ஓ! சக்ரா {இந்திரா}, எனது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் எடுத்துக் கொண்டு அதற்கீடாக ஏதாவது ஒன்றை எனக்கு அளிப்பாயாக! இல்லையெனில், நான் அவற்றை உனக்குத் தர மாட்டேன்!” என்றான் {கர்ணன்}. உடனே சக்ரன் {இந்திரன் கர்ணனிடம்}, “நான் உன்னிடம் வருவதற்கு முன்பே, சூரியன் எனது நோக்கத்தை அறிந்து, அனைத்தையும் உனக்கு விளக்கிருக்கிறான் என்பதில் ஐயமில்லை! ஓ கர்ணா, நீ விரும்பியது போலவே ஆகட்டும்! ஓ மகனே, வஜ்ராயுதத்தைத் தவிர, நீ பெற விரும்புவது யாது என்பதை எனக்குச் சொல்!” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இந்திரனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மகிழ்ச்சியில் நிறைந்து, தனது காரியம் நிறைவேறப்போவதைக் கண்டு வாசவனை {இந்திரனை} அணுகி, தடுக்கப்பட முடியாத கணையைப் பெற எண்ணி, இந்திரனிடம், “ஓ! வாசவா, எனது கவசத்துக்கும் காது குண்டலங்களுக்கும் ஈடாகத் தடுக்கப்பட இயலாததும், போரின் பொருட்டு அணிவகுக்கும் எதிரிக் கூட்டத்தை அழிக்கத் தகுதி வாய்ந்ததுமான கணையொன்றை எனக்குத் தருவாயாக!” என்றான் {கர்ணன்}.
உடனே, ஓ! பூமியின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, ஒருக்கணம் அந்தக் கணையை மனதில் நிறுத்தி (அதை அங்குக் கொண்டுவரும் பொருட்டு), வாசவன் {இந்திரன்} கர்ணனிடம், உனது காது குண்டலங்களையும், உனது உடலுடன் ஒட்டிப் பிறந்த கவசத்தையும் எனக்கு அளித்து, அதற்கு ஈடாகச் சில நிபந்தனைகளின் பேரில் இந்தக் கணையைப் பெற்றுக் கொள்! நான் போர்க்களத்தில் தைத்தியருடன் மோதும்போது, கலங்கடிக்கப்படாத இந்தக் கணை, எனது கைகளால் வீசப்பட்டு, எதிரிகளை நூற்றுக்கணக்கில் அழித்து, நோக்கம் நிறைவேறியதும் எனது கைக்கே திரும்பி வந்துவிடும். எனினும், உனது கையில் இந்தக் கணை, ஓ! சூதனின் மகனே {கர்ணா}, உனது எதிரியில் பலமிக்க ஒரே ஒருவனைக் கொல்லும். அந்தச் சாதனையை அடைந்த பின்னர், அது உறுமிக்கொண்டும், சுடர்விட்டுக்கொண்டும் என்னிடம் திரும்பிவிடும்!” என்றான் {இந்திரன்}.
அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “நான் யாருக்கு அஞ்சி இருக்கிறேனோ, அந்தப் பெரும் கர்ஜனை செய்யும் தீ போன்று சூடான என்னுடைய ஓர் எதிரியைக் கடும்போரில் கொல்ல நான் விரும்புகிறேன்" என்றான். அதற்கு இந்திரன், “அப்படிக் கர்ஜிக்கும் பலம் நிறைந்த எதிரியை நீ போர்க்களத்தில் கொல்வாய். ஆனால், நீ கொல்ல நினைக்கும் அவன், சிறப்பு மிக்க ஒரு நபரால் பாதுகாக்கப்படுகிறான். "வெல்லப்படமுடியாத பன்றி {வராகம்}” என்றும், “புரிந்துகொள்ளப்பட முடியாத நாராயணன்" என்றும் {பஜ்ஞவராகன் என்றும் வெல்லப்படாத நாராயணன் என்றும்} வேதம் அறிந்தவர்களால் அழைக்கப்படும் அந்தக் கிருஷ்ணன் அவனைப் பாதுகாத்து வருகிறான்!” என்றான். அதற்குக் கர்ணன் {இந்திரனிடம்}, “அது அப்படியே இருந்தாலும், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, ஒரே ஒரு சக்திவாய்ந்த எதிரியை {நிச்சயம்} அழிக்கும் அந்த ஆயுதத்தை எனக்குக் கொடுப்பாயாக! எனது பங்குக்கு நான் எனது கவசத்தையும், காது குண்டலங்களையும் எனது மேனியில் இருந்து அறுத்து உனக்குக் கொடுப்பேன். எனினும், இதனால் காயப்படும் எனது உடல் காணச்சகியாதது ஆகாமல் நீ அருள வேண்டும்!” என்றான்.
இதைக் கேட்ட இந்திரன் {கர்ணனிடம்}, “ஓ! கர்ணா, நீ உண்மையை நோற்க {சத்தியத்தைப் பேண} உள்ளதால், உனது மேனி காணச்சகியாததாகவோ, வடு உடையதாகவோ ஆகாது. ஓ! பேச்சால் அருளப்பட்டவர்களில் சிறந்தவனே, ஓ! கர்ணா, நீ உனது தந்தையைப் போலவே சக்தியும் நிறமும் கொண்டிருப்பாய். கோபத்தில் பித்தேறி, உன்னிடம் வேறு ஆயுதங்கள் இருக்கும்போதோ, உனது உயிருக்கு உடனடி ஆபத்து இல்லாதபோதோ இந்தக் கணையை நீ ஏவினால், இது உன்மேலேயே விழும்" என்றான். கர்ணன் {இந்திரனிடம்}, “ஓ! சக்ரா {இந்திரா}, நீ சொல்வது போலவே, எனது உயிருக்கு உடனடி ஆபத்து இருக்கும்போது மட்டுமே நான் இந்த வாசவி {இந்திரசக்தி} கணையை வீசுவேன்! இதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன்!” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சுடர்விடும் கணையைப் பெற்றுக் கொண்ட கர்ணன், தனது இயற்கை கவசத்தை உரிக்கத் தொடங்கினான். தனது உடலை வெட்டிக் கொள்ளும் கர்ணனைக் கண்ட தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதக் கூட்டம் சிம்ம கர்ஜனை புரிந்தது. அப்படிக் கர்ணன் தனது கவசத்தை உரித்துக் கொண்டிருந்த போது முகத்தில் எந்தவித கடும் மாற்றத்தையும் {விகாரத்தையும்} காட்டிக் கொள்ளவில்லை. மனிதர்களில் வீரனான அவன் {கர்ணன்}, மீண்டும் மீண்டும் புன்னகைத்துக் கொண்டே ஆயுதம் கொண்டு தனது உடலை அறுத்துக் கொண்டிருந்த போது, தேவலோக பேரிகைகள் {#} முழங்கின; தெய்வீக மலர் மாரி பொழிந்தது. தனது சிறந்த கவசத்தைத் தனது மேனியில் இருந்து அறுத்தெடுத்த கர்ணன், இன்னும் {குருதி} சொட்டிக் கொண்டிருந்த அதை {கவசத்தை} வாசவனிடம் {இந்திரனிடம்} கொடுத்தான். தனது காதுகளில் இருந்து காதுகுண்டலங்களையும் அறுத்த அவன், அவற்றையும் இந்திரனிடம் கொடுத்தான்.
இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே அவன் கர்ணன் என்று அழைக்கப்பட்டான். கர்ணனை இப்படி ஏமாற்றி அவனை உலகப் புகழடையச் செய்த சக்ரன், பாண்டு மகன்களின் காரியம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாக எண்ணி புன்னகைத்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அவன் {கர்ணன்} சொர்க்கத்திற்கு உயர்ந்தான். கர்ணன் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் துயருற்று செருக்கிழந்தார்கள். மறுபுறம், பிருதையின் {குந்தியின்} மகன்கள், தேரோட்டியின் மகனுக்கு {கர்ணனுக்கு} ஏற்பட்ட அவல நிலையை அறிந்து, மகிழ்ச்சியால் நிறைந்தனர்.”
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “பாண்டுவின் மகன்களான அவ்வீரர்கள் அந்நேரத்தில் எங்கிருந்தனர்? இந்த வரவேற்கத்தக்க செய்தியை அவர்கள் யார் மூலம் அறிந்தார்கள்? வனவாசத்தின் பனிரெண்டாவது ஆண்டுக் கழிந்ததும் அவர்கள் என்ன செய்தார்கள்? ஓ! சிறப்புமிக்கவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக!” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சைந்தவர்கள் தலைவனை {ஜெயத்ரதனை} வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட அவர்கள், காட்டில் தங்கள் வனவாசத்தின் வலி நிறைந்த காலத்தை முழுதும் கடத்தி, மார்க்கண்டேயர் உரைத்த தேவர்கள் மற்றும் முனிவர்கள் குறித்த பழங்கதைகளைக் கேட்ட பிறகு, மனிதர்களில் வீரர்களான அவர்கள் காம்யக வனத்தில் இருந்த தங்கள் ஆசிரமத்தில் இருந்து, தங்கள் அனைத்து தேர்களுடனும், தொண்டர்களுடனும், தேரோட்டிகள், பசுக்கள், தங்களைத் தொடர்ந்த குடிமக்கள் ஆகிய அனைவருடனும் புனிதமான துவைத வனத்திற்கு மீண்டும் சென்றனர்.
*********பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் முற்றிற்று*********
பதிவிரதா மஹாத்மியப் பர்வம் வனபர்வத்தின் பகுதி 297ழோடு முடிந்திருக்க வேண்டும். இந்த 308ம் பகுதியில் குண்டல ஹரணா பர்வம் முடிவடைய வேண்டும். குண்டலா ஹரணா பர்வம் என்பது வனபர்வத்தின் 298 முதல் 308 வரையுள்ள பகுதிகளைக் கொண்டதாகும். ஆனால் இவற்றைக் கங்குலி கையாளவில்லை. எனவே நாமும் கங்குலியின் வழியிலேயே செல்கிறோம்.
அடுத்து வரும் வனபர்வத்தின் 309ம் பகுதியில் இருந்து ஆரணேயப் பர்வம் ஆரம்பிக்கும்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.