Yudhishthira meets Virata! | Virata Parva - Section 7 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 7)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் விராடனைச் சந்தித்து அவனிடம் பிழைப்புக்காக வந்ததாகச் சொன்னது; விராடன் யுதிஷ்டிரனைப் பணியமர்த்தி அவன் கேட்ட வேண்டுதல்களை ஏற்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் யுதிஷ்டிரன், வைடூரியத்தால் இழைக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்டிருந்த பாச்சிகைகளைத் {பகடைக் காய்களை} தனது துணியில் கட்டி, அதைக் கக்கத்தில் {அக்குளில்; கைக்குழியில்} பிடித்துக் கொண்டான். மனிதர்களின் சிறப்புவாய்ந்த தலைவனும், குரு குலத்தைத் தழைக்க வைக்கும் உயர் ஆன்மா கொண்டவனும், மன்னர்களால் மதிக்கப்படுபவனும், கட்டுக்கடங்காத வல்லமை கொண்டவனும், கடும் விஷம் கொண்ட பாம்பு போன்றவனும், மனிதர்களில் காளையும், பலம் அழகு பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், மேன்மை கொண்டவனும், அடர்த்தியான மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போன்றோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பு போன்றோ இப்போது இருந்தாலும், தெய்வீக உருவம் கொண்டவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, புகழ் பெற்ற விராட மன்னன் தனது சபையில் அமர்ந்திருந்தபோது முதலில் தோன்றினான்.
மேகங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் நிலவைப் போலவும், முழு நிலைவைப் போன்ற அழகிய முகமும் கொண்டிருந்த பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தனது தொண்டர்களுடன் கண்ட மன்னன் விராடன், தனது ஆலோசகர்களிடமும் {அமைச்சர்களிடமும்}, இருபிறப்பாளர்களிடமும் {பிராமணர்களிடமும்}, தேரோட்டிகளிடமும், வைசியர்களிடமும், பிறரிடமும், “எனது சபைக்கு முதல் முறையாக வந்திருக்கும் மன்னனைப் போல இருக்கும் இவன் யார் என்பதை விசாரியுங்கள். இவன் அந்தணனாக இருக்க முடியாது. இவனே மனிதர்களில் ஆண்மகன் என நான் நினைக்கிறேன் {Methinks he is a man of men}. இவனிடம் அடிமைகளோ, தேர்களோ, யானைகளோ {மட்டும்தான்} இல்லை. இருப்பினும் இவன் இந்திரனைப் போலப் பிரகாசிக்கிறானே. இவனது மேனியில் இருக்கும் குறிகள், இவனைப் புனித பட்டம் பெற்று மணிமுடி கொண்டவனாகக் குறிக்கின்றன. இதுவே எனது நம்பிக்கை. இவன் எந்த வித தயக்கமும் இன்றி, தாமரைக் கூட்டத்தை அணுகும் ஒரு மதம் கொண்ட யானை போல என்னை அணுகுகிறானே!” என்றான் {விராடன்}.
மன்னன் {விராடன்} இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மனிதர்களில் காளையான யுதிஷ்டிரன் விராடனின் முன்பு வந்து அவனிடம், “ஓ! பெரும் மன்னா, அனைத்தையும் தொலைத்துவிட்டு, பிழைப்புக்காக உம்மிடம் வந்திருக்கும் ஓர் அந்தணனாக என்னை அறிவீராக! ஓ! பாவமற்றவரே, ஓ! தலைவா {விராடரே}, உமது கட்டளையின் கீழ் பணி செய்து வாழ்வதற்கு நான் விரும்புகிறேன் [1]” என்றான். இதனால் மிகவும் மகிழ்ந்த மன்னன் {விராடன்} அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நல்வரவு. நீ வேண்டிய நியமனத்தை ஏற்றுக் கொள்" என்றான். அந்த மன்னர்களில் சிம்மத்தை {யுதிஷ்டிரனை}, அவன் வேண்டிய பதவியிலேயே நியமித்த மன்னன் விராடன், பிறகு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய், பற்றுதலால் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதியில் {நாட்டில்} இருந்து நீ இங்கே வந்திருக்கிறாய்? உனது பெயர், குடும்பம் {கோத்ரம்} ஆகியவை என்ன என்பதையும், உனக்கு எதில் ஞானம் இருக்கிறது என்பதையும் உண்மையாகச் சொல்" என்று கேட்டான் {விராட மன்னன்}.
[1] “வேறு இடங்களில் அப்படியே வேறு பொருளைக் கொடுத்தாலும், Kamachara [kāmacaras] என்பது நீலகண்டரால் இப்படியே விளக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கங்குலி.
யுதிஷ்டிரன் {விராட மன்னனிடம்}, “எனது பெயர் கங்கன் [Kanka; kaṅketi], நான் வையாக்கிரர் [Vaiyaghra; vaiyāghrapadyaḥ] {வ்யாக்ரபாதர்} [2] என்று பெயரால் அழைக்கப்படும் குடும்பத்துக்குரிய {கோத்ரத்திற்குரிய} அந்தணனாவேன். பகடை வீசுவதில் நான் நிபுணன். முன்பு நான் யுதிஷ்டிரருக்கு நண்பனாக இருந்தேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.
[2] புலி போலப் பாய்பவன் என்ற பொருள் உடைய "வ்யாக்ரபாத" என்ற பெயர் யமனுக்குடையது. எனவே யுதிஷ்டிரன், தன்னை அவனது {யமனின்} வழியில் வந்தவன் என்று சொல்லி, உண்மையைச் சொல்வதாகப் பண்டிதர்கள் பொருள் கொள்கிறார்கள்.
விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நீ விரும்பும் எந்த வரத்தையும் நான் கொடுப்பேன். நீ மத்ஸ்யத்தையே {மத்ஸ்ய நாட்டையே} {ஆள வேண்டுமென்றாலும்} ஆண்டுக் கொள். நான் உனக்கு அடிபணிந்து இருப்பேன். தந்திரமான சூதாடிகள் கூட எனக்குப் பிடித்தமானவர்களே. ஆனால், மறுபுறம் நீயோ தேவனைப் போல இருக்கிறாய். எனவே, நீ நாட்டைப் பெறத் தகுதி வாய்ந்தவனே" என்றான் {விராடன்}.
யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {விராடரே}, இழிந்த மனிதர்களோடு (பகடையின் காரணமாக) எந்தவித சர்ச்சைகளிலும் {தகராறுகளிலும்} என்னை ஈடுபடுத்தக்கூடாது என்பதே எனது முதல் வேண்டுகோள். மேலும், (பகடையில்) என்னால் வீழ்த்தப்பட்ட (என்னால் வெல்லப்பட்ட) மனிதன், செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. உமது அருளால் எனக்கு இந்த வரம் கிடைக்கட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.
விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “உன்னை வெறுப்படையச் செய்யும் ஒருவன் நிச்சயம் என்னால் கொல்லப்படுவான். அவனே இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} ஒருவனாக இருந்தால், அவன் எனது நாட்டில் இருந்து விரட்டப்படுவான். கூடியிருக்கும் குடிமக்கள் இதைக் கேட்கட்டும்! கங்கன் இந்த அரசாங்கத்துக்கு என்னைப் போலவே தலைவனாவான். நீ (கங்கன்) எனது நண்பனாக இருந்தாலும், நான் பயணிப்பது போன்ற வாகனங்களிலேயே நீயும் பயணிக்கலாம். உன் பொறுப்பில் நிறைய ஆடைகளும், பல்வேறு வகையான உணவு வகைகளும், பானங்களும் இருக்கும். எனது காரியங்களில் அகம் {உட்புற} புறம் {வெளிப்புற} ஆகிய இரண்டையும் {இரண்டு காரியங்களையும்} நீயே கவனிப்பாயாக. உனக்காக எனது கதவுகள் அனைத்தும் திறந்திருக்கும். வெளியே பணி செய்யும் மனிதர்களும், சூழ்நிலையால் பலவீனப்பட்டவர்களும் உன்னிடம் விண்ணப்பிக்கும் போது, அது எந்த நேரமானாலும், அவர்களின் வார்த்தைகளை என்னிடம் சொல். அவர்கள் என்ன விரும்பினாலும், நான் அதை நிச்சயம் கொடுப்பேன். என்னுடன் நீ வசிக்கும் வரை உனக்கு எந்த அச்சமும் வேண்டாம்" என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி விராட மன்னனின் பேட்டியை பெற்று, அவனிடம் {விராடனிடம்} வரங்களையும் பெற்ற அந்த மனிதர்களில் வீரக்காளை {யுதிஷ்டிரன்} அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். அவன் {யுதிஷ்டிரன்} அங்கே வாழ்ந்து வந்த போது, யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.