Yudhishthira's prayer to mother goddess Durga! | Virata Parva - Section 6 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 6)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் துர்க்கையம்மனைத் துதிப்பது; துர்க்கையம்மன் யுதிஷ்டிரனுக்குக் காட்சி கொடுத்து, வரங்களளித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன், காண்பதற்கினிய விராட நகரத்திற்குச் செல்லும் வழியில் இருந்த போது, யசோதையின் கருவறையில் பிறந்தவளும்; நாராயணனால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை ஏற்று, இடையர் நந்தரின் {நந்தகோபரின்} குலத்தில் உதித்தவளும்; செழிப்பையும், (வழிபடுபவர்) குடும்பத்தையும் (குடும்பப் புகழையும்) மேம்படுத்துபவளும்; கம்சனுக்கு அச்சமூட்டியவளும்; அசுரர்களை அழித்தவளும்; இந்த அண்டத்தின் உயர்ந்த தேவியுமான {பரமேஸ்வரியுமான} தெய்வீக துர்க்கையை {துர்க்கையம்மனை} மனதாரத் துதித்தான். கல்மேடையில் (கம்சனால்) தூக்கி வீசப்பட்டபோது வானத்தில் உயர்ந்து எழுந்தவளும்; வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையும்; தெய்வீக மாலைகள் அணிந்திருப்பவளும்; தெய்வீக ஆடைகள் தரித்திருப்பவளும்; கத்தி, கேடயம் ஆகியவற்றைத் தாங்கியவளும்; துன்பம் நிறைந்த நேரங்களில், புதைகுழியில் உள்ள மாட்டைப் {மாடு} போல, பாவத்தில் மூழ்கிய வழிபாட்டினர், தங்கள் {பாவச்} சுமைகளை அகற்றும் பொருட்டு, நித்திய அருள் வழங்கும் தன்னை {பரமேஸ்வரியான அவளை} அழைக்கும்போது எப்போதும் காப்பவளுமான அந்தத் தேவியை {துர்க்கையம்மனை} யுதிஷ்டிரன் வணங்கினான்.
அந்தத் தேவியின் {துர்க்கையின்} காட்சியைப் பெற, தனது தம்பிகளுடன் விரும்பிய மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளை அழைக்க (அங்கீகரிக்கப்பட்ட) பாடல்களில் இருந்து பெறப்பட்ட, அவளது பல்வேறு பெயர்களைச் சொல்லித் {துர்க்கையம்மனைத்} துதித்தான். யுதிஷ்டிரன், “ஓ! வரங்களை அளிப்பவளே {துர்க்கையம்மனே}, உன்னை வணங்குகிறேன். ஓ! கிருஷ்ணனைப் போன்றவளே, ஓ! கன்னிகையே, ஓ! பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளே, ஓ! புதிதாக உதித்த சூரியனைப் போன்ற பிரகாசமான உடல் கொண்டவளே, ஓ! முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே, ஓ! நான்கு கரங்களும், நான்கு முகங்களும் கொண்டவளே, ஓ! உருண்ட அழகிய இடைகளும், பருத்த முலைகளும் கொண்டவளே, ஓ! மரகதங்கள் மற்றும் நீலமணிக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவளே, ஓ! மேல் புஜத்தில் சிறந்த கடகங்களை அணிந்தவளே.
ஓ! தேவி {துர்க்கையம்மனே}, நாராயணனின் மனைவியான பத்மாவைப் {மகாலட்சுமியைப்} போலப் பிரகாசிப்பவள் நீயே. ஓ! தெய்வீக உலகங்களில், உன் உண்மை வடிவத்திலும், உன் பரிசுத்தமான பிரம்மச்சரியத்துடனும் அதிகாரம் செய்பவள் நீயே, கருமேகங்களைப் போன்ற கரிய முகத்துடன் சங்கர்ஷணரைப் போல அழகாக இருப்பவள் நீயே. இந்திரனுக்கு மதிப்பளிக்கும் வகையில் எழுப்பப்படும் கொடிமரங்களைப் {இந்திரத்வஜத்தைப்} போன்ற நீண்ட இரு கரங்களைக் கொண்டவள் நீயே. பாத்திரம், தாமரை மலர், மணி, சுருக்குக் கயிறு {பாசம்}, வில், பெரும் சக்கரம் மற்றும் பல்வேறு பிற ஆயுதங்களையும் உனது மற்ற (ஆறு) கரங்களில் கொண்டவள் நீயே. இந்த அண்டத்தில் பரிசுத்தமான பண்பை அடைந்த ஒரே பெண் {பரிசுத்த ஸ்த்ரீ} நீயே! சிறந்த குண்டலங்களால் அருளப்பட்ட அழகிய காதுகள் கொண்டவள் நீயே.
ஓ! தேவி, நிலவை அறைகூவி அழைக்கும் அழகு முகம் கொண்டவள் நீயே. சிறந்த கிரீடமும், பாம்பு உடல்களால் செய்யப்பட்ட உடையுடன் கூடிய அழகிய பின்னலும், உருண்டு வளைந்த பிரகாசமான இடைகளும் கொண்டவள் நீயே. பாம்புகளால் சூழப்பட்ட மந்தர மலை போல விளங்குபவள் நீயே. தலையில் நிமிர்ந்து நிற்கும் மயில் தோகைகளால் அதிகமாகப் பிரகாசிப்பவள் நீயே. நித்திய கன்னியாக நோன்பு நோற்று {கௌமார விரதம் இருந்து}, தேவலோகங்களைப் பரிசுத்தமாக்கியவள் நீயே. ஓ! மஹிஷாசுரனைக் [1] கொன்றவளே, இதற்காகவே {கௌமார விரதம் இருப்பதால்} மூவுலகங்களின் பாதுகாப்புக்காகத் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே. ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவளே, எனக்கு உனது அருளைத் தருவாயாக, என்னிடம் கருணை காட்டுவாயாக, நான் பெறும் மங்கலங்கள் அனைத்துக்கும் நீயே ஊற்றுக்கண்ணாவாயாக.
ஜெயமும், விஜயமும் நீயே. போர்க்களத்தில் வெற்றியை அளிப்பவள் நீயே. ஓ! தேவி, எனக்கு வெற்றியைக் {ஜெயத்தைக்} கொடுப்பாயாக. துயரமிக்க இந்த நேரத்தில் எனக்கு வரங்களையும் {விஜயத்தையும்} கொடுப்பாயாக. மலைகளில் முதன்மையான விந்தியமே உனது நித்திய வசிப்பிடமாகும். ஓ! காளி, ஓ காளி, மது, ஊண் {இறைச்சி}, {ஆடு, கோழி முதலிய} விலங்கு பலிகள் ஆகியவற்றில் மகிழும் பெரும் காளி {மஹாகாளி} நீயே. விரும்பிய இடம் செல்லும் திறன் கொண்டு, வழிபாட்டினருக்கு வரங்கள் அளிப்பவளான உனது பயணங்களில், பிரம்மனும் பிற தேவர்களும் எப்போதும் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். பாரங்களை அகற்றுபவள் என உன்னை அழைப்பவர்களுக்கும், பூமியில் நாள் உதிக்கும்போது {அதிகாலையில்} உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை. {துயர் களையும் பொருட்டு உன்னை நினைப்பவர்களுக்கும், விடியற்காலையில் உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகளும் செல்வமும் கிடைப்பது அரிதன்று}.
அடர்ந்த காட்டுப்பகுதியில் துன்புறும்போதும், பெருங்கடலில் மூழ்கும் போதும், அத்துன்பங்களில் இருந்து மக்களை மீட்பதாலே அனைவராலும் துர்க்கை [2] என்று அழைக்கப்படுபவள் நீயே. கொள்ளையர்களால் தாக்கப்படும்போதும், காடுகள், அடர்ந்த காட்டுப்பகுதிகள் {வனாந்திரங்கள்}, கடல்கள், நீரோடைகள் ஆகியவற்றைக் கடப்பதில் ஏற்படும் துன்பத்தின் போதும், மனிதர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பவள் நீயே. ஓ! தேவி, உன்னை நினைக்கும் மனிதர்கள் எப்போதும் வீழ்வதில்லை. புகழ் நீயே, செழிப்பு நீயே, உறுதி {நிலைமாறாதவள்} நீயே, வெற்றி நீயே, மனைவி நீயே, மனிதர்களின் வாரிசுகள் நீயே, அறிவு {ஞானம்} நீயே, அறிவாற்றல்{புத்தி} நீயே.
சந்திப்பொழுதுகள் இரண்டும் {அதிகாலை, அந்திமாலை}, இரவு உறக்கம், சூரிய சந்திர ஈரொளிகள், அழகு, பொறுமை {மன்னிக்கும் குணம்}, கருணை மற்றும் பிற அனைத்தும் நீயே. பக்தர்களால் வழிபடப்படும்போது, விலங்குகள், அறியாமை, குழந்தைகள் இழப்பு, செல்வமிழப்பு, நோய், மரணம், அச்சம் ஆகியவற்றை அகற்றுபவள் நீயே. நாட்டை இழந்த நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! பரமேஸ்வரியே {உயர்ந்த தேவியே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவளே, உன்னைச் சிரம் தாழ்த்தி வணங்கும் எனக்கு, பாதுகாப்பை அருள்வாயாக! உண்மையின் {சத்தியத்தின்} படி செயல்பட்டு வரமளிக்கும் உண்மையாகவும் {சத்தியமாகவும்} எங்களுக்கு ஆவாயாக! {ஓ சத்ய ஸ்வரூபிணி! நீ எங்கள் விஷயத்தில் ஸத்யமாக இருப்பாயாக}. ஓ! துர்க்கையே, உனது பாதுகாப்பை நாடும் யாவருக்கும் கருணைகாட்டுபவளே, உன்னை வழிபடுபவர்கள் யாவரிடமும் பாசம் கொண்டவளே, எனக்குப் பாதுகாப்பை வழங்குவாயாக!” என்றான் {யுதிஷ்டிரன்}.
[1] "மஹிஷாசுரன், ரம்பாசுரனின் மகனாவான். இந்த வல்லமைமிக்க அசுரனைக் கொல்வதற்காகவே பற்பல வருடங்களுக்கு முன்பு துர்க்கை போரிட வேண்டியிருந்தது. இக்கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது. இந்தக் காலத்திலும், இலையுதிர்காலத்தில் வங்கத்தில் நடைபெறும் துர்கா பூஜை விழாவில் பெரும் வழிபாடுகளுடன் இந்தத் தேவி வணங்கப்படுகிறாள்.” என்கிறார் கங்குலி.[2] "துர்க்கை என்றால் "சிரமங்களில் மீட்பவள்" என்பது சொல்லுக்குச் சொல் சரியான பொருளுடையது" என்கிறார் கங்குலி.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} துதிக்கப்பட்ட அந்தத் தேவி {துர்க்கையம்மன்}, அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்கு} காட்சியளித்தாள். அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய அவள் {துர்க்கையம்மன்}, “ஓ! வலிய கரங்கள் கொண்ட மன்னா, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. எனது அருளால் கௌரவ அணியில் உள்ளவர்களைக் கொன்று முறியடித்த பிறகு, போர்க்கள வெற்றி விரைவில் உனதாகும். உனது நாட்டை முட்களற்றதாக்கி {எதிரகளற்றதாக்க}, நீ மீண்டும் முழுப் பூமியின் தலைவனாவாய். ஓ! மன்னா, உனது தம்பிகளுடன் கூடிய நீ, பெரும் மகிழ்ச்சியையும் அடைவாய். எனது அருளால், மகிழ்ச்சியும், உடல் நலனும் உனதாகும்.
இந்த உலகில் உள்ளவர்கள் {மனிதர்கள்}, என் பண்புகளையும், சாதனைகளையும் உரைத்தால், தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, முழு மனநிறைவு கொள்வார்கள். நான் அவர்களுக்கு, நாட்டையும், நீண்ட வாழ்நாளையும், அழகிய மேனியையும், வாரிசுகளையும் அளிப்பேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வனவாசத்தில் இருப்பவர்களோ, நாட்டில் இருப்பவர்களோ, போர்க்களத்தின் மத்தியில் இருப்பவர்களோ, எதிரிகளின் ஆபத்தில் இருப்பவர்களோ, காட்டிலோ, அணுகமுடியாத பாலைவனங்களிலோ, கடல்களிலோ, அடர்ந்த காடுகள் கொண்ட மலையிலோ இருந்து உன்னைப் போலவே {உன் முறையில்} என்னை அழைப்பவர்கள், இந்த உலகில் அடையமுடியாதது எதுவுமில்லை.
பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, இந்தச் சிறந்த பாடலை கேட்பவனோ, பக்தியுடன் மீண்டும் தானே உரைப்பவனோ, தான் செய்யும் அனைத்துத் தொழில்களிலும் வெற்றியடைவான். நீங்கள் விராட நகரத்தில் வசிக்கும் வரை, எனது அருளால், குருக்களின் ஒற்றர்களோ, மத்ஸ்ய {விராட} நாட்டில் வசிப்பவர்களோ உங்களை அடையாளம் காண்பதில் வெற்றியடைய மாட்டார்கள்" என்றாள் {துர்க்கையம்மன்}. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து {ரக்ஷை செய்து}, எதிரிகளைத் தண்டிப்பவனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி {துர்க்கையம்மன்} அங்கேயே, அப்படியே மறைந்து போனாள்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.