I am a cook! | Virata Parva - Section 8 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 8)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: பீமன் விராடனைச் சந்தித்து அவனிடம் சமையற்காரனாய் வேலை செய்ய வந்ததாகச் சொன்னது; விராடன் பீமனைப் பணியமர்த்தி அவன் கேட்ட நியமனத்தைக் கொடுத்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அழகில் சுடர்விடும் பயங்கர வலிமை கொண்ட மற்றொருவன் {பீமன்} சிங்கத்தைப் போன்ற விளையாட்டு நடையுடன் மன்னன் விராடனை அணுகினான். கையில் சமையல் கரண்டி மற்றும் மத்துடனும், மேலும் கருநிற சாயல் கொண்ட களங்கமும் இல்லாத உயரிய வடிவமைப்புக் கொண்ட வாள் ஒன்றையும் கையில் ஏந்தி, முழு உலகத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியனைப் போல அனைத்துப் புறங்களுக்கும் ஒளியூட்டிக் கொண்டு சமையற்காரன் வேடத்தில் அவன் {பீமன்} வந்தான். மலைகளின் மன்னனைப் போன்ற பலத்தைக் கொண்ட அவன் {பீமன்} கருநிற ஆடை உடுத்தி மத்ஸ்ய மன்னனை {விராடனை} அணுகி அவன் முன்னிலையில் நின்றான்.
மன்னனைப் போன்ற தோற்றம் கொண்ட அவனை {பீமனைக்} கண்ட விராடன் தன்னிடம் கூடியிருந்த குடிமக்களிடம், “சிம்மத்தைப் போன்ற அகன்ற தோள்களும், மிக மேம்பட்ட அழகையும் கொண்ட அந்த இளைஞன் யார்? சூரியனைப் போன்ற அந்த மனிதனை இதற்கு முன் கண்டதே இல்லை. இந்தச் செய்தியை மனதில் சுழற்றியும், இவன் யார் என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை, முயன்று அதிகமாகச் சிந்தித்தாலும், அந்த மனிதர்களில் காளையின் (வருபவனின்) நோக்கத்தை ஊகிக்க முடியவில்லை. அவனைப் பார்த்தால் கந்தர்வ மன்னனைப் போன்றோ, புரந்தரனை {இந்திரனைப்} போன்றோ தோன்றுகிறது. என் கண்களுக்கு முன்பாக நிற்பவன் யார் என்பதை உறுதி செய்யுங்கள். அவன் வேண்டுவதை அவன் விரைவில் பெறட்டும்" என்றான் {விராடன்}.
இப்படி மன்னன் விராடனால் கட்டளையிடப்பட்டதும், வேகமான கால்களையுடைய தூதுவர்கள் குந்தியின் மகனிடம் {பீமனிடம்} சென்று, அந்த யுதிஷ்டிரனின் தம்பியிடம் {பீமனிடம்} மன்னன் சொன்ன யாவற்றையும் சொன்னார்கள். பிறகு அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகன் {பீமன} விராடனை அணுகி, தன் நோக்கத்திற்கு ஏற்ற வார்த்தைகளில், “ஓ !மன்னர்களில் முதன்மையானவரே {விராடரே}, நான் ஒரு சமையற்காரன். என் பெயர் வல்லவன் [Vallava; ballavo]{வல்லன்}ஆகும். உணவுகளைப் பக்குவப்படுத்துவதில் நான் நிபுணன். என்னைச் சமையலறையில் நியமிப்பீராக! [1]” என்றான்.
[1] இங்கே பீமன் தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லுவதாக வேறு பதிப்புகளில் இருக்கின்றன. "பகைவர்களை வதம் செய்பவரே! மகாசூரரே! நான் உம்மை அண்டிப் பிழைப்பதற்காகவே உம்மிடத்தில் வந்திருக்கிறேன். நீரே எங்களைப் போன்ற எளியவர்களைக் காப்பாற்றக் கூடியவர். நான் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவன் . குருவின் நியமனத்தால் பரிசாரகத் தொழிலை ஏற்றுள்ளேன். பருப்பு, ரஸம், பக்ஷணங்கள், பழங்களைச் சார்ந்த பலவித ரசாயனங்கள், மாம்ஸ வகைகள் முதலானவற்றைப் பக்குவம் செய்து சமைக்கும் சாமர்த்தியம் எனக்கு உண்டு. எனக்கு ஸத்ருசமான வேறொரு சமையற்காரன் இவ்வுலகில் கிடைக்க மாட்டான்" என்று பீமன் சொன்னதாக ஸ்ரீ ந்ருஸ்ம்ஹப்ரியா வெளியிட்ட மஹாபாரதப் பதிப்பில் உள்ளது. சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள், இப்பகுதி சம்பந்தமாக http://sacred-texts.com/hin/mbs/mbs04007.htm என்று Sacred-texts வலைத்தளத்தில் உள்ள பூனா பதிப்பில் நான்காம் வர்ணமான சூத்திர வர்ணத்தைக் குறித்து சொல்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். அதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
விராடன் {பீமனிடம்}, “ஓ! வல்லவா, சமையலே உனது அலுவல் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. நீ ஆயிரம் கண் கொண்ட தெய்வத்தை ஒத்திருக்கிறாய். இவர்கள் அனைவர் மத்தியிலும் அருள், அழகு, பராக்கிரமம் ஆகியவற்றில் நீ மன்னனைப் போல இருக்கிறாய்!” என்றான் {விராடன்}.
பீமன் {விராடனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா, முதலில் நான் உனது சமையல்காரனும், பணியாளும் ஆவேன். ஓ! ஏகாதிபதி {விராடரே}, சென்ற நாட்களில் மன்னர் யுதிஷ்டிரர் எப்போதும் என் உணவுகளைச் சுவைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாலும், நான் குழம்பு வகைகளில் மட்டுமே அறிவுடையவன் அல்லன். ஓ! பூமியின் தலைவா {விராடரே}, நான் மல்லனுமாவேன் {மல்யுத்த வீரனுமாவேன்}. எனது பலத்திற்கு ஈடானவர்கள் எவரும் கிடையாது. ஓ! பாவமற்றவரே, சிம்மங்களுடனும், யானைகளுடனும் போரிட்டு, நான் எப்போதும் உமக்கு உற்சாகமூட்டுவேன்" என்றான் {பீமன்}.
விராடன் {பீமனிடம்}, “நான் உனக்கு வரங்களை அளிப்பேன். உனது நிபுணத்துவம் குறித்து நீ விளக்குவதைப் போலவே, நீ விரும்பியவற்றைச் செய்வாயாக. எனினும், இந்த அலுவல் உனக்குத் தகாது என நான் நினைக்கிறேன். கடல்சூழ்ந்த (மொத்த) உலகத்திற்கும் நீ தகுந்தவனாவாய். ஆனால் நீ விரும்பிதைச் செய்வாயாக. நீ எனது சமையலறையின் கண்காணிப்பாளராவாயாக. உனக்கு முன்பு, அங்கே என்னால் நியமிக்கப்பட்டவர்களுக்கு நீ தலைவனாக நியமிக்கப்படுகிறாய்" என்றான் {விராடன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சமையலறையில் {மடைப்பள்ளியில்} நியமனம் பெற்ற பீமன் விரைவில் மன்னன் விராடனுக்குப் பிடித்தமானவன் ஆனான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, விராடனின் மற்ற வேலைக்காரர்களாலும், பிற மனிதர்களாலும் அடையாளம் காணப்படாதவனாக அங்கே அவன் தொடர்ந்து வாழ்ந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.