Why did you become a eunuch? | Virata Parva - Section 45 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 20)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : உத்தரன் அர்ஜுனனிடம் அவன் ஏன் அலியாக நேரிட்டது என்பது குறித்து வினவுவது; அர்ஜுனன் அளிக்கும் விளக்கம்; அர்ஜுனன் தனியாகவும், கௌரவர்கள் அணியாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டி உத்தரன் அஞ்சுவது; அர்ஜுனன் உத்தரனுக்குத் துணிவூட்டி தேரை நடத்தச் செய்தது...
உத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “ஓ! வீரரே {அர்ஜுனரே}, என்னைத் தேரோட்டியாகக் கொண்ட இந்தப் பெரிய தேரில் ஏறும். (எதிரிப்) படையின் எந்தப் பகுதிக்குள் நீர் ஊடுருவ வேண்டும்? உம்மால் கட்டளையிடப்படும் நான், உம்மை அங்கே அழைத்துச் செல்வேன்!” என்றான்.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, “ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அஞ்சுவதற்கான எந்தக் காரணமும் உனக்கில்லை. ஓ! பெரும் வீரா, நான் உனது எதிரிகளைப் போர்க்களத்தில் முறியடிப்பேன். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, நீ வசதியாக {சுகமாக} இரு. நடக்கவிருக்கும் அடிதடிச்சண்டையில் {melee}, பயங்கரமான பெரிய சாதனைகளைச் செய்து, நான் உன் எதிரிகளுடன் போரிடுவேன். எனது தேரில் அந்த அம்பறாத்தூணிகள் அனைத்தையும் விரைந்து கட்டு. (அவற்றுக்கிடையில்) இருக்கும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், முனை பளபளப்பாக்கப்பட்டதுமான ஒரு வாளை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொள்” என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அர்ஜுனனின் இந்தச் சொற்களைக் கேட்ட உத்தரன் அனைத்துச் சோம்பலையும் கைவிட்டான். மரத்தில் இருந்து விரைந்து இறங்கி, தன்னுடன் அர்ஜுனனின் ஆயுதங்களைக் கொண்டு வந்தான். பிறகு அர்ஜுனன் அவனிடம் {உத்தரனிடம்}, “நான் கௌரவர்களுடன் போரிட்டு, உனது பசுக்களை மீட்பேன். என்னால் பாதுகாக்கப்பட்ட நிலையில், இந்தத் தேரின் மேல் பாகம் உனக்கு ஒரு அரணாக இருக்கும். வழிகளும், குறுகிய சந்துகளும் மற்றும் தெருக்களின் இதர பகுதிகளும் அந்த அரண் {கோட்டை} கொண்ட நகரத்தின் மாளிகைகளாக இருக்கும். இந்த எனது கரங்கள், அதன் {அரணின்} மதில்களாகவும் நுழைவாயில்களாகவும் இருக்கும். இந்தத் திரிதண்டமும் {ஏர்க்கலப்பை போன்ற இந்தத்தண்டும்}, எனது அம்பறாத்தூணியும் எதிரிகள் அணுகாதபடி தற்காப்பு படைகளாக அமையும். ஒற்றையானதும், பிரம்மாண்டமானதுமான எனது இந்தப் பதாகையே {கொடியே}, உனது நகரத்தில் இருக்கும் அனைத்துக் கொடிகளுக்கும் சமமாக இருக்காதா? இந்த எனது வில்லின் நாண், கவண்பொறிகளாகவும் {Catapult – உண்டிவில் போன்று கோட்டை மதில்களில் பொருத்தப்படும் ஒரு பொறி}, தகரிகளாகவும் {பழங்காலத்தில் இருந்த பீரங்கி போன்ற ஒரு பொறி} செயல்பட்டு, முற்றுகையிட்டிருப்போரின் ஆவிகளின் மீது ஏவுகணைகளை உமிழும். தூண்டப்பட்ட எனது கோபம் அவ்வரணை வல்லமைமிக்கதாகச் செய்யும். {அப்போது எழும்} எனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி உனது தலைநகரின் பேரிகைகளை ஒத்திருக்காதா? காண்டீவம் தாங்கிய என்னால் ஓட்டப்படும் இந்தத் தேர், எதிரிப்படையால் வீழ்த்த முடியாததாக இருக்கும். ஓ! விராடனின் மகனே {உத்தரா}, உனது அச்சங்கள் விலகட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “நான் இவற்றைக் கண்டு இனியும் அஞ்சமாட்டேன். போரில், கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, இந்திரனுக்கும் உள்ள உறுதியைப் போன்ற உமது உறுதியை நான் அறிவேன். ஆனால் இவற்றை நினைத்துப் பார்க்கும்போது, நான் தொடர்ந்து மனக்குழப்பத்துக்கு உள்ளாகிறேன். ஒரு நிச்சயமான முடிவுக்கு வர இயலாத மூடனாக இருக்கிறேன். இவ்வளவு அழகிய அங்கங்களும், மங்கலக்குறிகளையும் கொண்ட ஒரு மனிதன், எத்தகு துயர்நிறைந்த சூழல் வந்தால் தனது ஆண்மையை இழப்பான் {அலியாவான்}? உண்மையில் உம்மைக் கண்டால் மகாதேவனோ {சிவனோ}, இந்திரனோ, கந்தர்வர்களின் தலைவனோ {குபேரனோ}, மூன்றாவது பாலினப் போர்வையில் {மாறுவேடத்தில்} வசிப்பது போலத் தெரிகிறது” என்றான் {உத்தரன்}.
அதற்கு அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் எனது அண்ணனின் {யுதிஷ்டிரரின்} ஆணையை ஏற்றுக் கொண்டு, ஓராண்டு முழுவதும் இந்த நோன்பை நோற்று வருகிறேன் என்பதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {உத்தரா}, உண்மையில் நான் அலியில்லை. ஆனால், இன்னொருவரின் {ஊர்வசியின்} விருப்பத்திற்கு {சாபத்துக்கு} அடிபணிந்தும், அறத்தகுதிகளில் விருப்பம் கொண்டுமே, நான் இந்த அலித்தன்மையேற்கும் நோன்பை நோற்று வந்தேன். ஓ! இளவரசே {உத்தரா}, நான் இப்போது அந்த நோன்பை முடித்துவிட்டேன் என்பதை அறிந்து கொள்” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “இப்போது என் சந்தேகம் முற்றிலும் ஆதாரமற்றது என்று என்னைக் காணச் செய்ததால், ஒரு மகத்தான உதவியை இன்று நீர் எனக்குச் செய்திருக்கிறீர். உண்மையில், ஓ! மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, உம்மைப் போன்ற ஒரு மனிதன் அலியாக இருக்க முடியாது. போர்க்களத்தில் எனக்கு இப்போது ஒரு கூட்டாளியைப் பெற்றுவிட்டேன். என்னால் இப்போது தேவர்களுடன் கூடப் போரிட முடியும். எனது அச்சங்கள் விலகின. நான் என்ன செய்ய வேண்டும்? எனக்குக் கட்டளையிடும். கற்ற ஆசானால் தேரோட்டப் பயிற்றுவிக்கப்பட்ட நான், ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, எதிரிப் படைத்தலைவர்களின் தேர்களை உடைக்கவல்ல உமது குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பேன். ஓ! மனிதர்களில் காளையே {அர்ஜுனரே}, வாசுதேவனின் தாருகனைப் போன்றோ, சக்ரனின் {இந்திரனின்} மாதலி போன்றோ, நான் திறமைமிக்கத் தேரோட்டி {ரதசாரதி} என்பதை அறிந்து கொள்ளும்.
(உமது தேரின்) வலதுகை துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டிருப்பதும், ஓடும்போது {அதன்} குளம்புகள் {பாதம்போன்ற அடிக்கால்கள்} தரையில் படுவது அரிதாகவே தெரிவதுமான இந்தக் குதிரை, கிருஷ்ணனின் சுக்ரீவத்திற்கு {சுக்ரீவம்} ஒப்பாயிருக்கிறது. தன் இனங்களில் முதன்மையானதும், இடது துருவத்தில் {நுகத்தடியில்} பூட்டப்பட்டதுமான இந்த மற்றொரு அழகிய குதிரையை, மேகபுஷ்பத்துக்கு {மேகபுஷ்பம்} இணையான வேகம் கொண்டதாக நான் கருதுகிறேன். தங்கக்கவசம் பூண்டதும், இடதுபுறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டதுமான இந்த (மூன்றாவது) அழகிய குதிரையை, வேகத்தில் சைப்பியத்திற்கு {சைப்பியம்} நிகரானதாகவும், அதைவிடப் பலத்தில் மேன்மையானதாகவும் நான் கருதுகிறேன். வலப்புறத்தின் பின்புறத்தில் பூட்டப்பட்டிருக்கும் இந்த (நான்காவது) அழகிய குதிரையை, வேகத்திலும் பலத்திலும் வலாஹகத்திற்கு {வலாஹகம்} மேன்மையானதாக நான் கருதுகிறேன். உம்மைப்போன்ற ஒரு வில்லாளியைப் போர்க்களத்தில் சுமப்பதற்கு இந்தத் தேர் தகுதிவாய்ந்ததாக இருக்கிறது. நீரும் இந்தத் தேரில் இருந்து போரிடத் தகுதி வாய்ந்தவராக இருக்கிறீர். இதைதான் நான் நினைக்கிறேன்” என்றான் {உத்தரன்}.
வைம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு பெரும் சக்தி கொண்ட அர்ஜுனன், தனது கரங்களில் இருந்த கடகங்களைக் {சங்கு வளையங்களைக்} களைந்து, தங்கத்தால் இழைக்கப்பட்ட அழகிய கையுறைகளை அணிந்து கொண்டான். பிறகு, சுருண்ட தனது கரிய கூந்தலை, ஒரு வெண்துணியால் கட்டினான். பிறகு முகம் கிழக்கு பார்த்தபடி, அந்த அற்புதத் தேரில் அமர்ந்த வலிமைமிக்கக் கரங்கள் கொண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, தனது உடலைச் சுத்திகரித்து, ஆன்மாவைக் குவித்து, தன் மனதில் தனது அனைத்து ஆயுதங்களையும் நினைவுகூர்ந்தான் {தியானித்தான்}. அனைத்து ஆயுதங்களும் வந்து, அரசமகனான பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஒப்பற்றவனே {அர்ஜுனா}, நாங்கள் இங்கே இருக்கிறோம். ஓ! இந்திரனின் மகனே, நாங்கள் உனது பணியாட்கள்” என்று சொல்லின. அவற்றை வணங்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, அவற்றைத் தனது கரங்களில் பெற்றுக் கொண்டு, அவற்றிடம் {அந்த ஆயுதங்களிடம்}, “எனது நினைவில் வசிப்பீர்களாக” என்றான் {அர்ஜுனன்}.
தன் அனைத்து ஆயுதங்களையும் அடைந்த அந்த வீரன் {அர்ஜுனன்} மகிழ்ச்சியாகத் தெரிந்தான். பிறகு, விரைந்து தனது வில்லான காண்டீவத்தில் நாணேற்றி, அதில் நாணொலி எழுப்பினான். அவ்வில்லின் நாணொலி இரு பலமிக்கக் காளைகளின் மோதலைப் போல் அதிக ஒலியுடன் இருந்தது. அப்படிப் பூமியை நிறைத்த அவ்வொலி பயங்கரமானதாக இருந்தது. எல்லாப்புறங்களிலும் வீசிய காற்று உக்கிரமாக வீசியது.
விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.
விழுந்து கொண்டிருந்த விண்கற்களின் மழை அடர்த்தியாக இருந்தது [1]. அனைத்துப்புறங்களும் இருளில் மூழ்கின. வானத்தில் பறவைகள் அங்குமிங்கும் பறந்தன. பெருமரங்கள் நடுங்கத் தொடங்கின [2]. இடியின் வெடிச்சத்தம் பெருவொலியாக இருந்தது. தனது தேரில் இருந்து விற்களில் சிறந்த தனது வில்லின் நாணில், அர்ஜுனன் எழுப்பிய நாணொலியே அது என்பதை அவ்வொலியில் இருந்தே குருக்கள் {கௌரவர்கள்} அறிந்து கொண்டனர்.
[1] “சில உரைகள் ஒரே பெரிய விண்கல் விழுந்ததாகச் சொல்கின்றன” என்கிறார் கங்குலி.[2] “சில உரைகளில் மஹா-துருமம் {Maha-drumam) என்பதற்குப் பதில், பாரதத் துவிஜம் {Bharata dwijam} என்றும் மஹா-ஹர்தம் {Maha-hardam} என்று இருக்கின்றன. அப்படியென்றால் “(எதிரிப்படையின்) பதாகைகள் {கொடிகள்} நடுங்க ஆரம்பித்தன” என்றும் “பெரும் குளங்கள் கலங்கின” என்றும் பொருள் வரும்” என்கிறார் கங்குலி.
பிறகு உத்தரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாண்டவர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, நீர் தனியாக இருக்கிறீர். இந்தப் பலமிக்கத் தேர்வீரர்களோ பலராக இருக்கின்றனர். அனைத்து வகை ஆயுதங்களிலும் திறம்பெற்ற இந்த அனைவரையும் போர்க்களத்தில் நீர் எப்படி வெல்லப்போகிறீர்? ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனரே}, நீர் ஒரு தொண்டருமற்றிருக்கிறீர்; அதே வேளையில் கௌரவர்களுக்குப் பலர் இருக்கின்றனர். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {அர்ஜுனரே}, உம்மருகில் இருக்கும் நான் இதற்காகவே அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன்” என்றான் {உத்தரன்}.
உரத்தச் சிரிப்பை வெடித்துச் சிரித்த பார்த்தன் {அர்ஜுனன்}, அவனை {உத்தரனை} நோக்கி, “ஓ! வீரா {உத்தரா}, அஞ்சாதே. கோஷயாத்திரை நிகழ்வில், வலிமைமிக்கக் கந்தர்வர்களுடன் நான் போரிட்ட போது, நட்புடன் என்னைப் பின்பற்றி வந்த {தொண்டர்} யாரை பெற்றிருந்தேன்? காண்டவத்தில் {காண்டவ வனத்தில்} தேவர்கள் மற்றும் தானவர்கள் பலருடன் பயங்கர மோதலில் ஈடுபட்ட எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? வலிமைமிக்க நிவாடகவசர்கள் மற்றும் பௌலோமர்களுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} சார்பாக நான் போரிட்ட போது, எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்? ஓ! குழந்தாய் {உத்தரா}, பாஞ்சால இளவரசியின் {திரௌபதியின்} சுயம்வரத்தில் எண்ணற்ற மன்னர்களுடன் நான் மோதிய போது, அந்தப்போர்க்களத்தில் எனக்கு எந்தக் கூட்டாளி இருந்தான்?
ஆசான் துரோணராலும், சக்ரனாலும் {இந்திரனாலும்}, வைஸ்ரவணனாலும், யமனாலும், வருணனாலும், அக்னியாலும், கிருபராலும், மதுகுலத்தின் கிருஷ்ணனாலும், பினகைதாங்கியாலும் (சிவனாலும்) ஆயுதங்களில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்போது, நான் ஏன் இவர்களுடன் போரிட முடியாது? எனது தேரை விரைந்து நடத்து. உனது இதய நோய் அகலட்டும்” என்றான் {அர்ஜுனன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.