Drona warned again! | Virata Parva - Section 46 | Mahabharata In Tamil
(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 21)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சங்கொலியைக் கேட்டு உத்தரன் நடுங்குவது; அர்ஜுனனின் குதிரைகள் தரையில் விழுவது; அர்ஜுனன் அவற்றை நிமிர்த்தி, உத்தரனுக்குத் துணிவூட்டியது; துரோணர் கண்ட துர்நிமித்தங்கள்; துரோணர் துரியோதனனை எச்சரிப்பது; பிறகு பசுக்களை முன்னே விட்டு, அனைவரையும் போருக்குத் தயாராக அணிவகுக்கச் செய்யும்படி துரோணர் துரியோதனனிடம் கோருவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “உத்தரனைத் தனது தேரோட்டியாகக் கொண்டு, அந்த வன்னிமரத்தை வலம் வந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது ஆயுதங்கள் அத்தனையையும் தன்னுடன் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். சிங்க உருவம் பொறிக்கப்பட்ட பதாகையை இறக்கி, வன்னிமரத்தின் அடியில் வைத்த அந்தப் பலமிக்கத் தேர்வீரன் {அர்ஜுனன்}, தனது தேருக்கு உத்தரனைத் தேரோட்டியாக வைத்துக் கொண்டு புறப்பாட்டான். விஸ்வகர்மனால் வகுக்கப்பட்ட தெய்வீக மாயையில் உருவானதும், சிங்க வால் கொண்ட குரங்கின் உருவம் தாங்கியதுமான தனது தங்கப்பதாகையை அந்தத் தேரில் ஏற்றினான். உண்மையில் அவன் {அர்ஜுனன்} அக்னி அளித்த கொடையை எண்ணிப் பார்த்தவுடனேயே, அவனது {அர்ஜுனனின்} விருப்பத்தை அறிந்து கொண்டு, மனித சக்திக்கு அப்பாற்பட்ட உயிரினங்களை அந்தப் பதாகையில் இடம்பெறச் செய்தான் {விஸ்வகர்மன்}.
அழகிய தயாரிப்பான அந்தக் கொடியையும், அதனுடன் இணைக்கப்பட்ட அம்பறாத்தூணிகளையும் கொண்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீக அழகுடையதுமான அந்த அற்புத கொடிக்கம்பம் வானத்தில் இருந்து திடீரென அவனது தேரில் விழுந்தது. அந்தப் பதாகை {கொடி}, தனது தேருக்கு வந்ததைக் கண்ட அந்த வீரன் {அர்ஜுனன்}, அதை முறையாக வலம் வந்தான். குரங்கு பதாகை கொண்ட குந்தியின் மகனும், ஸ்வேதவாகனன் என்று அழைக்கப்பட்டவனுமான பீபத்சு {அர்ஜுனன்}, உடும்புத் தோலாலான விரலுறைகளை அணிந்து கொண்டு, தனது வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிப் புறப்பட்டான்.
பெரும் பலம் கொண்டவனான அந்த எதிரிகளை அடிப்பவன் {அர்ஜுனன்}, தனது பெரிய சங்கை எடுத்துப் பலமாக ஊதி, எதிரிகளை மயிர்ச்சிலிர்க்கச் செய்யும் இடியின் ஓசையை எழுப்பினான். அவ்வொலியைக் கேட்ட, வேகம் கொண்ட அந்தக் குதிரைகள், தங்கள் முட்டிகளை மடக்கித் தரையில் விழுந்தன. பெரிதும் அஞ்சிய உத்தரனும் கீழே தேர்க்காலில் அமர்ந்தான். பிறகு குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தானே கடிவாளத்தைப் பிடித்து, குதிரைகளை எழுப்பி, அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டு வந்தான்.
பிறகு உத்தரனை ஆரத்தழுவி, அவனுக்கு உற்சாகமூட்டும் வகையில், “ஓ! இளவரசர்களில் முதன்மையானவனே {உத்தரா}, அஞ்சாதே. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, பிறப்பால் நீயொரு க்ஷத்திரியன். ஓ! மனிதர்களில் புலியே {உத்தரா}, பிறகேன் எதிரிகளுக்கு மத்தியில் நீ உற்சாகமிழக்கிறாய்? பல சங்குகளின் ஒலிகளையும், பல பேரிகைகளையும், போருக்காக அணிவகுக்கப்பட்ட தலைவர்களுக்கு மத்தியில் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் இதற்கு முன்னர் நீ கேட்டிருப்பாயே. எனினும், ஏதோ சாராரண மனிதனைப் போல, இந்தச் சங்கொலியால் உற்சாகமிழந்து, கலக்கமடைந்து, நீ ஏன் பயந்து போயிருக்கிறாய்?” என்றான் {அர்ஜுனன்}.
உத்தரன் {அர்ஜுனனிடம்}, “பல சங்கொலிகளையும், படையணியில் நிறுத்தப்பட்டிருக்கும் பல யானைகளின் பிளிறல்களையும் கர்ஜனைகளையும் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இத்தகு சங்கொலியை நான் எப்போதும் கேட்டதில்லை. மேலும் இது போன்ற ஒரு பதாகையை நான் எப்போதும் கண்டதில்லை. இது போன்ற நாணொலியை இதற்கு முன்னர் நான் எப்போதும் கேட்டதில்லை. அய்யா, உண்மையில், இந்தச் சங்கொலியாலும், வில்லின் நாணொலியாலும், இந்தப் பதாகையில் இருக்கும் உயிரினங்களின் மனிதசக்திக்கு அப்பாற்பட்ட கதறல்களாலும், இந்தத் தேரிச் சக்கரங்களின் சடசடப்பொலியாலும், எனது மனம் மிகவும் குழப்பமடைந்துள்ளது. திசை குறித்த எனது பார்வையும் குழம்பிப் போயிருக்கிறது. எனது இதயம் வலியால் பீடிக்கப்பட்டிருக்கிறது. முழு வானமே இந்தப் பதாகையால் மூடப்பட்டது போல எனக்குத் தெரிகிறது. அனைத்தும் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதைப் போல எனக்குத் தோன்றுகிறது. காண்டீவத்தின் நாணொலியால் எனது காதும் செவிட்டு நிலையை அடைந்துவிட்டது” என்றான் {உத்தரன்}.
அர்ஜுனன் {உத்தரனிடம்}, “நான் மீண்டும் எனது சங்கை ஊதப் போகிறேன். ஆகையால், பாதங்களைத் தேரில் அழுத்தி உறுதியாக நில். கடிவாளத்தை இறுக்கமாக பற்றிக் கொள்” என்றான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு அர்ஜுனன் மீண்டும் தனது சங்கை ஊதினான். அந்தச் சங்கு, எதிரிகளைத் துன்பத்தால் நிறைத்து, நண்பர்களின் இன்பத்தை அதிகரித்தது. மலைகளைப் பிளப்பது போலவும், மலைக்குகைகளையும், திசைப்புள்ளிகளையும் துளைப்பது போலவும் அவ்வொலி பெருத்த ஒலியாக இருந்தது. அந்தச் சங்கொலியாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பாலும், காண்டீவத்தின் நாணொலியாலும் பூமி நடுங்குவதாகத் தெரிந்தது. உத்தரனின் அச்சத்தைக் கண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளித்தான்.
அதே வேளையில் துரோணர், “தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியாலும், மேகங்கள் வானத்தை மூடியிருக்கும் விதத்தாலும், இந்தப் பூமியே நடுங்குகிறது. இந்தப் போர்வீரன் சவ்யசச்சினை {அர்ஜுனனைத்} தவிர வேறு யாருமில்லை. நமது ஆயுதங்கள் ஒளிரவில்லை; நமது குதிரைகள் உற்சாகமிழந்திருக்கின்றன; நமது நெருப்புகளுக்கு எரிபொருள் கொடுக்கப்பட்டாலும் அவை சுடர்விடவில்லை. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. நமது விலங்குகள் அனைத்தும் சூரியனை நோக்கி வெறித்துப் பார்த்தபடி, பயங்கரமாக அலறுகின்றன. நமது பதாகைகளில் காக்கைகள் அமர்கின்றன. இவையாவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. இதோ, அது {நரி} அடிபடாமல் தப்பி விட்டது.
நமது படைகளுக்கு மத்தியில் பரிதாபமாக ஊளையிட்டபடியே நரி ஓடுகிறது.
நரி ஊளையிடுதல் |
இவையாவும் கடுமையான பேரிடரை முன்னறிவிக்கின்றன. உங்கள் அனைவருக்கும் மயிர்ச்சிலிர்த்திருக்கிறது. நிச்சயமாக, இது போரில் க்ஷத்திரியர்களுக்கு ஏற்படும் பெரும் அழிவை முன்குறிக்கிறது. ஒளிகொண்ட அனைத்துப் பொருட்களும் மங்கியிருக்கின்றன; விலங்குகளும் பறவைகளும் பார்ப்பதற்குக் கடுமையாக இருக்கின்றன; க்ஷத்திரிய அழிவுக்கு அறிகுறியாகப் பல பயங்கர அத்தாட்சிகள் சாட்சியாகக் காணப்படுகின்றன. இந்தச் சகுனங்கள், நமக்கு மத்தியில் நிகழப்போகும் பெரும் அழிவை முன்னறிவிக்கின்றன. ஓ! மன்னா {துரியோதனா}, எரியும் விண்கற்களால் உனது அணிகள் குழப்பத்துக்கு ஆழ்வதாகத் தெரிகிறது.
உனது விலங்குகள் உற்சாகமிழந்ததாகத் தெரிகிறது. அவை அழுகின்றன. கழுகுகளும் பறவைகளும் உனது துருப்புகளைச் சுற்றிப் பறக்கின்றன. பார்த்தனின் கணைகளால் உனது படை துன்புறுவதைக் கண்டு நீ வருந்த வேண்டியிருக்கும். உண்மையில், நமது அணிகள் ஏற்கனவே வெல்லப்பட்டதாகவே தெரிகிறது. அவர்களில் யாரும் போரிட ஆவலாக இல்லை. நமது வீரர்களின் முகங்கள் அனைத்தும் மங்கிப்போய் உணர்விழந்து இருக்கின்றன. பசுக்களை முன்னே விட்டு, நமது வீரர்களைப் போருக்காக அணிவகுக்கச் செய்து, தாக்குவதற்குத் தயாராக நாம் இங்கேயே நிற்கலாம்” என்றார் {துரோணர்}.
கழுகு |
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.