The support of Pandya! | Udyoga Parva - Section 19 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 19)
பதிவின் சுருக்கம் : சாத்வத குல சாத்யகி, சேதி நாட்டு திருஷ்டகேது, மகத நாட்டு ஜெயத்சேனன், பாஞ்சால நாட்டின் துருபதன், மத்ஸ்ய நாட்டு விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடனும், பாண்டிய மன்னன் பெரும்படையுடனும் என ஏழு அக்ஷௌஹிணி படைகள் பாண்டவர்களிடம் வந்தது; பிராக்ஜோதிஷ {காமரூப} நாட்டின் மன்னன் பகதத்தன், பால்ஹீக நாட்டுப் பூரிஸ்ரவஸ், மத்ர நாட்டு சல்லியன், அந்தகக் குலத்துக் கிருதவர்மன், சிந்து சௌவீர நாட்டின் ஜெயத்ரதன், காம்போஜத்தின் சுதக்ஷிணன், மாஹிஷ்மதீயின் மன்னன் நீலன், கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும், அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் இரண்டு அக்ஷௌஹிணிகளோடும் மற்றும் பிற மன்னர்கள் கொண்டு வந்த படைகள் எனப் பதினோரு அக்ஷௌஹிணி படைகள் கௌரவர்களிடம் வந்தது; படைகள் நிற்க இடமில்லாமல் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைகப்பட்டிருந்தது; துருபதனால் அனுப்பப்பட்ட புரோகிதர் கௌரவர்களின் படையைக் கண்டது......
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, சாத்வத குலத்தைச் சார்ந்த பெரும் வீரனான யுயுதனன் {சாத்யகி}, காலாட்படை, குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் படையுடன் யுதிஷ்டிரனிடம் வந்தான். பல்வேறு விதமான ஆயுதங்களைத் தாங்கி, பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்த பெரும் வீரம் கொண்ட அவனது {சாத்யகியின்} படையின் வீரர்கள், தங்கள் வீரக்களையால் பாண்டவப் படையை அழகுபடுத்தினர். சிறந்த நிலையில் உள்ள போர்க்கோடரிகள் {Battleaxes - பரசு}, ஏவுகணைகள் {Missiles - பிண்டிபாலங்கள்}, ஈட்டிகள் {Spears - சூலாயுதங்கள்}, வேல்கள் {lances - தோமரங்கள்}, சம்மட்டிகள் {mallets - இரும்பு உலக்கைகள்}, தண்டாயுதங்கள் {Clubs – பரிகங்கள்}, தடிகள் {Staves}, கயிறுகள் {cords – பாசங்கள்}, துருப்பிடிக்காத கைவாள்கள் {swords}, பட்டாகத்திகள் {daggers}, பல்வேறு வகையான கணைகள் {arrows} ஆகியவற்றின் காரணத்தால் அந்தப் படையைக் காண அற்புதமாக இருந்தது. அந்த ஆயுதங்களால் அழகுற்றதும், மேகம் போன்ற நிறத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தப் படை, மேகங்களின் பெருந்திரளுக்கு மத்தியில் இருக்கும் மின்னல் கீற்றுகளைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது. அந்தப் படையில் ஓர் அக்ஷௌஹிணி அளவு துருப்புகள் இருந்தன. பிறகு கடலுக்குள் நுழையும் சிறு நதியைப் போல, யுதிஷ்டிரனின் துருப்புகளுடன் அது {அந்தப்படை} கலந்த போது மொத்தமாக மறைந்தே போனது.
அதே போலச் சேதி நாட்டவரின் வலிமைமிக்கத் தலைவனான திருஷ்டகேது, ஓர் அக்ஷௌஹிணி படையின் துணையுடன், அளவிடமுடியாத சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களிடம் {பாண்டவர்களிடம்} வந்தான். மகத மன்னனான, பெரும்பலமிக்க ஜெயத்சேனன், யுதிஷ்டிரனுக்காகத் தன்னுடன் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளைக் கொண்டு வந்தான். அதே போல, கடல் அருகே கரையோர நிலத்தில் வசித்த பாண்டியன், மன்னர்களின் மன்னனான யுதிஷ்டிரனுக்காகப் பல்வேறு வகையான துருப்புகளுடன் வந்தான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்தத் துருப்புகளெல்லாம் கூடிய போது, நன்கு உடுத்தி அதீத பலத்துடன் இருந்த அவனது {பாண்டியனின்} படை கண்ணுக்கு இனிய தோற்றத்தை அடைந்தது.
மேலும், துருபதனின் படையும், பல்வேறு நிலங்களில் {நாடுகளில்} இருந்து வந்திருந்த வீரர்களாலும், அவனது {துருபதனின்} மகன்களாலும் அழகு பெற்றிருந்தது. அதே போல, மத்ஸ்யர்கள் மன்னனும் துருப்புகளுக்குத் தலைவனுமான விராடனும், மலைப்பகுதிகளின் மன்னனுடன் சேர்ந்து பாண்டுவின் மகன்களிடம் வந்தான். உயர்ந்த ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன்களுக்காகப் பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு வடிவங்களைக் கொண்ட பதாகைகள் நிறைந்த ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளும் இப்படியே அங்கே ஒன்று கூடின. குருக்களுடன் போரிட ஆவல் கொண்ட அவர்கள் பாண்டவர்களின் இதயங்களை மகிழ்வித்தனர்.
பாண்டவர்களிடம் ஏழு அக்ஷௌஹிணி படை சேர்ந்தது எனப் பார்க்கிறோம். 1.சாத்யகி, 2. திருஷ்டகேது, 3.ஜெயத்சேனன், 4.துருபதன், 5. விராடன் ஆகியோர் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணியுடன் வந்ததாக குறிப்பு இருக்கிறது. எனவே அவர்கள் மூலம் 5 அக்ஷௌஹிணி படை சேர்ந்து விட்டது. மீதம் இரண்டு அக்ஷௌஹிணியைப் பாண்டிய மன்னன் கொண்டு வந்தானா? அல்லது வேறு சில மன்னர்களின் சிறு படைகள் ஒன்றிணைந்து இரண்டு அக்ஷௌஹிணி சேர்ந்ததா? என்பதற்கு இப்பகுதியில் தெளிவில்லை.
இதே போலவே, மன்னன் பகதத்தனும், திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இதயத்தை மகிழ்வுறச்செய்யும் வகையில் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளை அவனிடம் {துரியோதனனிடம்} கொடுத்தான். மேலும், குறையற்ற நிறை கொண்ட அவனது துருப்புகளில், சீனர்களும் {chins}, வேடர்களும் {kiratas} நிறைந்திருந்தனர். பொன்னிற உருவம் கொண்ட அவர்கள் அனைவரும் சேர்ந்த போது, அந்தப் படை, கோங்கு {Karnikara} மரங்கள் நிறைந்த காட்டின் அழகைப் பெற்றது. அதே போல, வீரமிக்கப் பூரிஸ்ரவஸ்ஸும், சல்லியனும், ஓ! குருவின் மகனே {ஜனமேஜயா}, ஆளுக்கொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தார்கள். மேலும், ஹிருதிகனின் {ஹார்த்திகயனின்} மகனான கிருதவர்மனும், போஜர்கள், அந்தகர்கள், குகுரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் வந்தான். அவனது {கிருதவர்மனது} துருப்புகளில் பலவண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிந்தவர்களான பெரும் பலமிக்க வீரர்களைப் பார்ப்பதற்குக் காடுகளில் விளையாடும் அருள்நிறைந்த யானைகளைப் போல இருந்தது.
ஜெயத்ரதனால் வழிநடத்தப்பட்டு வந்த சிந்துசௌவீர நிலத்தில் வசிப்பவர்களும், பிறரும், தங்கள் நடையால் மலைகளையே நடுங்கச் செய்தபடி வந்து கொண்டிருந்தனர். ஓர் அக்ஷௌஹிணி எண்ணிக்கை கொண்ட அவர்களின் படை, காற்றால் தள்ளப்படும் மேகத்திரள் போல நகர்ந்து வந்தது. மேலும், காம்போஜர்களின் மன்னான சுதக்ஷிணன், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, யவனர்கள், சகர்கள் ஆகியோர் அடங்கிய ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் குரு தலைவனிடம் {துரியோதனனிடம்} வந்தான். வெட்டுக்கிளிகள் {[அ] மின்மினிப்பூச்சிகள்} பறப்பதைப் போலப் பறந்து வந்த அவனது {சுதக்ஷிணனின்} துருப்புகள், குரு படையைச் சந்தித்ததும், அதற்குள் உறிஞ்சப்பட்டுக் காணாமல் போனது.
அதே போல, மாஹிஷ்மதீ {Mahishmati} நகரில் குடியிருப்பவனான மன்னன் நீலனும், தென்னாட்டைச் சேர்ந்த, அழகிய ஆயுதங்களை ஏந்திய பெரும்பலமிக்க வீரர்களுடன் வந்தான். பெரும் படைகளோடு கூடிய அவந்தீ நாட்டு மன்னர்கள் இருவரும், தனித்தனியே ஆளுக்கோர் அக்ஷௌஹிணி துருப்புகளைத் துரியோதனனுக்காகக் கொண்டு வந்தார்கள். மனிதர்களில் புலிகளைப் போன்ற ஐந்து அரசச் சகோதரர்களான கேகய இளவரசர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் துரியோதனனிடம் விரைந்து வந்து, அவனது இதயத்தை மகிழச் செய்தனர். ஓ! பாரதக் குலத்திற்சிறந்தவனே {ஜனமேஜயா}, பிற பகுதிகளைச் சேர்ந்த ஒப்பற்ற மன்னர்களும், மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்ட துருப்புகளுடன் அங்கே வந்தனர்.
1. பகதத்தன், 2. பூரிஸ்ரவஸ், 3. சல்லியன், 4. கிருதவர்மன், 5. ஜெயத்ரதன், 6. சுதக்ஷிணன், 7. நீலன், 8. கேகய நாட்டு இளவரசர்கள் ஆகியோர் ஓர் அக்ஷௌணியோடும் வந்தார்கள் என்றால் அவர்கள் மூலமே 8 அக்ஷெஹிணி படை திரண்டு விட்டது. இதனுடன் அவந்தீ நாட்டின் அரசர்கள் இருவரும் கொண்டு வந்த 2 அக்ஷௌஹிணிகளைச் சேர்த்தால் 10 அக்ஷௌஹிணி படை சேர்ந்துவிட்டது. மீதம் ஒரு அக்ஷௌஹிணி குரு படை மற்றும் பிற மன்னர்களின் சிறு படைகள் இணைந்ததாக இருக்க வேண்டும். இங்கே கேகய இளவரசர்கள் துரியோதனன் பக்கம் இருந்ததாக குறிப்பு இருக்கிறது. உத்யோக பர்வம் பகுதி 22ல் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் இருந்ததாக திருதராஷ்டிரன் சொல்வதாக வருகிறது. கேகய இளவரசர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் என்பதைப் பின்பு வரப்போகும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
பல்வேறு வடிவங்களிலான கொடிகள் சடசடக்கக் குந்தியின் மகன்களோடு {பாண்டவர்களோடு} போரிட விரும்பிய அனைவரும் அடங்கிய துரியோதனனின் படை, எண்ணிக்கையில் பதினோரு அக்ஷௌஹிணிகள் கொண்டதாகியது. ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, அப்பொழுது, துரியோதனனுடைய படையின் முக்கியத் தலைவர்களுக்குக்கூட ஹஸ்தினாபுரம் நகரில் நிற்பதற்கு அங்கே இடமில்லாமல் இருந்தது. அதற்காக ஐந்து நதிகளைக் கொண்ட நிலத்திலும் {பஞ்சாபிலும்}, குருஜாங்கல நாடு முழுவதிலும், சீரான ரோஹிதம் என்கிற காட்டிலும், அஹிச்சத்ரம், காலகூடம், கங்கைக்கரை, வாரணம், வாடதானம், யமுனையை அடுத்த மலைத்தொடர்கள் ஆகியவற்றிலும் எனச் சோளமும், செல்வமும் அபரிமிதமாக இருந்த அனைத்து இடங்களிலும் கௌரவர்களின் படை நிரம்பியிருந்தது. பாஞ்சாலர்களின் மன்னனால் {துருபதனால்} குருக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்த புரோகிதர், இப்படி அணிவகுக்கப்பட்டிருந்த அந்தப் {கௌரவப்} படையைக் கண்டார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.