Pandya, hardly inferior to Indra! | Udyoga Parva - Section 22 | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 22)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடமும், உபப்லாவியத்தில் கூடியிருக்கும் மன்னர்களிடமும் சஞ்சயன் என்ன பேச வேண்டும் என்பதைத் திருதராஷ்டிரன் சொல்வது; பாண்டவர்களின் நலனை விசாரிக்கச் சொன்னது; துரியோதனனின் அறியாமையை இகழ்வது; பாண்டவர்களின் செல்வத்தைக் கொடுப்பதே சிறந்தது என்று சொல்வது; அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரின் பலத்தைப் புகழ்வது; திருஷ்ட்டத்யும்னன், துருபதன், விராடன், கேகய இளவரசர்கள் ஆகியோரையும் வீரமிக்க மிலேச்ச குலத்தவரின் வீரத்தையும் புகழ்வது; இந்திரனுக்குச் சற்றும் குறையாதவன் பாண்டியன் என்று சொல்வது; சாத்யகியைப் புகழ்வது; சிசுபாலன் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவது; கிருஷ்ணனின் பெருமையை மீண்டும் சொல்வது; கிருஷ்ணன் அர்ஜுனன் ஆகியோரைக் கண்டு அஞ்சுவதாகவும், ஆனால் இவர்கள் அனைவரை விடவும் யுதிஷ்டிரனை நினைத்தால்தான் தான் பெரிதும் அஞ்சுவதாகவும் சொல்வது; போரைத் தவிர்க்க, பாண்டவர்களின் கோபத்தைத் தணிக்க என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அனைத்தையும் சொல்லுமாறு திருதராஷ்டிரன் சஞ்சயனைப் பணித்தது...
திருதராஷ்டிரன் {சஞ்ஜயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பாண்டவர்கள் உபப்லாவ்யத்திற்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே சென்று அவர்களை விசாரிப்பாயாக. நீ அஜாதசத்துருவை {யுதிஷ்டிரனைப்} பின்வரும் சொற்களுடன் சந்திக்க வேண்டும், “நற்பேறாலேயே நீ (காட்டில் இருந்து வெளிவந்து) இத்தகு நகரை {உபப்லாவ்யத்தை} அடைந்திருக்கிறாய்” என்று சொல்லி, அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரிடமும் ஓ! சஞ்சயா, இவ்வார்த்தைகளைச் சொல். “அத்தகு துன்பங்களுக்குத் தகுதியில்லாத நீங்கள், துன்பமிக்கதான அந்தச் சொற்பகால வாழ்வைக் கழித்துப் பிறகு நன்றாக இருக்கிறீர்களா?” என்று கேள்.
அவர்கள் {பாண்டவர்கள்} நீதிமான்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பதால், என்னதான் (எதிரிகளால்) அவர்களுக்குத் துரோகமிழைக்கப்பட்டாலும் குறுகிய காலத்தில் நம்மிடம் அவர்கள் அமைதியடைவார்கள். ஓ! சஞ்சயா, எச்சந்தர்ப்பத்திலும் நான் பாண்டவர்கள் தரப்பில் பொய்மையைக் கண்டதில்லை. தங்கள் சொந்த வீரத்தாலேயே அவர்கள் தங்கள் செழுமையை அடைந்தார்கள். இருப்பினும், அவர்கள் எப்போதும் என்னிடம் கடமை உணர்ச்சியுடனேயே இருந்தனர். அவர்களது நடத்தையை நான் ஆராய முற்பட்டாலும், அவர்களிடம் எந்த ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைப் பழிக்கும் வண்ணம் ஒரு தவறையேனும் நான் அவர்களிடம் காணவில்லை. அவர்கள் எப்போதும் அறம், பொருளுக்கு இசைவான மனதுடனேயே செயல்பட்டு வருகின்றனர்; அவர்கள் எப்போதும் சிற்றின்பங்களிலோ, குளிர், பசி, தாகம் ஆகியவற்றால் ஏற்படும் இன்பங்களிலோ மூழ்கியதில்லை; தூக்கம், சோம்பல், கோபம், கவனமின்மை ஆகியவற்றை அடக்கியிருக்கின்றனர்.
அறம் பொருள் ஆகியவற்றில் கவனமாக இருப்பவர்களான பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அனைவருக்கும் இனிமையானவர்களாகவே இருக்கின்றனர். சரியான சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் நண்பர்களுக்குச் செல்வத்தைப் பிரித்துக் கொடுக்கின்றனர். ஒவ்வொருவரின் தேவையறிந்து, செல்வத்தையும், மரியாதையையும் அளிப்பதால், அவர்களுக்குள் உள்ள நட்பு நீண்ட காலமானாலும் இதயப்பூர்வமாகவே இருக்கிறது. தீயவனும், நிலையில்லாதவனும், மந்த புத்தி கொண்டவனுமான துரியோதனனையும், அவனை விட இன்னும் அதிகமான குறுகிய மனம் கொண்ட கர்ணனையும் தவிர, அஜமீட குலத்தைச் சேர்ந்த எந்த ஆன்மாவும் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} வெறுப்படைவதில்லை. நண்பர்கள் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் இழந்த அந்த உயர் ஆன்மா கொண்டோரின் {பாண்டவர்களின்} சக்தியை {கோபத்தை} இவர்கள் இருவரும் {துரியோதனனும் , கர்ணனும் } எப்போதும் அதிகரிக்கவே செய்கின்றனர்.
அனைத்துவகையிலும் ஆவலுடனும் நல்ல முறையிலும் வளர்க்கப்பட்டதால், அந்த {துரியோதனன் தான் வாழும் விதம்} அனைத்தும் நன்றாகச் செய்யப்படுவதாகவே துரியோதனன் நினைக்கிறான். பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய நியாயமான பங்கை, அவர்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கும்போது அபகரிக்க இயலும் என்று நினைப்பது துரியோதனனின் சிறுபிள்ளைத்தனமாகும். யுதிஷ்டிரனைத் தொடர்ந்து அர்ஜுனன், கிருஷ்ணன், பீமன், சாத்யகி, மாத்ரியின் இருமகன்கள்{நகுலன், சகாதேவன்} மற்றும் சிருஞ்செய குலத்து வீரர்கள் ஆகியோர் வருவார்கள் என்பதால், போருக்கு முன்பே அவனுக்குச் {யுதிஷ்டிரனுக்குச்} சேர வேண்டிய பங்கை, அவனுக்குக் கொடுத்து விடுவதே விவேகமாகும்.
காண்டீவம் தாங்கிய சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தேரில் அமர்ந்து வந்தால், இந்த முழு உலகத்தையும் தனியாகவே அழித்துவிடுவான். அதே போல, வெற்றியாளனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும், வீழ்த்தப்பட முடியாதவனும், மூன்று உலகங்களின் தலைவனுமான கிருஷ்ணனும் அதையே செய்வான். அனைத்து உலகங்களிலும் தகுதி வாய்ந்த மனிதனான அவன் {அர்ஜுனன்}, மேகங்களைப் போலக் கர்ஜிக்கும் பல கணைகளைச் சீறிப்பாயும் வெட்டுக்கிளிகளைப் போலப் பறக்கச் செய்து, அனைத்துப் புறங்களையும் மூடினால், அவன் முன்பு யாரால் நிற்க முடியும்?
அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, தனியனாகவே தேரில் வடபகுதி சென்று, வடக்குக் குருக்களை வீழ்த்தி, அவர்களுடைய செல்வங்களையெல்லாம் எடுத்து வந்தான். திராவிட நிலத்தைச் {Dravida land}சார்ந்த மக்களை, தனது படையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டான். காண்டீவத்தைத் தாங்குபவனான பல்குனன் {அர்ஜுனன்}, தேவர்கள் அனைவருடன் கூடிய இந்திரனைக் காண்டவ வனத்தில் தோற்கடித்து, அக்னிக்குக் காணிக்கைகள் அளித்து, பாண்டவர்களின் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தினான்.
கதாயுதம் தாங்குவோர் அனைவரிலும் பீமனுக்கு நிகரான வேறு எவனும் கிடையாது. யானைகளை ஓட்டுவதில் அவனக்கு நிகரான நிபுணன் எவனும் கிடையாது. தேரைப் பொருத்த வரை அர்ஜுனன் கூட அவனுக்கு {பீமனுக்கு} இணையில்லை என்றே சொல்கின்றனர். கரங்களின் பலத்தால் அவன் {பீமன்} பத்தாயிரம் {10000} யானைகளுக்கு நிகரானவனாக இருக்கிறான். நன்கு பயிற்சி செய்து, சுறுசுறுப்பாக இருக்கும் அவனிடம் {பீமனிடம்}, மீண்டும் கசப்பான பகைமை பாராட்டப்பட்டால், கோபத்தால் விரைவில் அவன் {பீமன்} தார்தராஷ்டிரர்களை {திருதராஷ்டிரர்களை} எரித்துவிடுவான். எப்போதும் கோபத்துடன் இருக்கும் அந்த வலிய கரங்கள் கொண்டவன் {பீமன்}, இந்திரனாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான்.
பெரும் இதயமும், பலமும், கைலாவகமும் கொண்டவர்களும், அர்ஜுனனால் கவனமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்களும், மாத்ரியின் மகன்களுமான இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர்}, பறவைகளின் பெரும் கூட்டத்தை வேட்டையாடும் இரு பருந்துகள் {ராஜாளிகள்} போல எதிரி எவனையும் உயிரோடு விடமாட்டார்கள். உனக்கு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்படி நிறைந்திருக்கும் நமது படை, அவர்களிடம் மோதினால் காணாமல் போய்விடும் {என்றே நினைக்கிறேன் என்றான் }.
அவர்கள் புறத்தில் இருக்கும் திருஷ்டத்யும்னன் பெரும் செயல்பாடுகளை உடையவனாவான். அவனும் {திருஷ்டத்யும்னனும்} பாண்டவர்களில் ஒருவனாகவே கருதப்படுகிறான். தனது தொண்டர்களுடன் {அமைச்சர்களுடன்} கூடிய சோமக குலத்தின் தலைவன் {துருபதன்}, பாண்டவர்களுடைய காரியத்தின் மீது கொண்ட அர்ப்பணிப்பால், தன் உயிரையும் விடத் தயாராக இருக்கிறான் என்று கேள்விப்படுகிறேன். விருஷ்ணி குலத்தின் சிறந்தவனை (கிருஷ்ணனைத்) தனது தலைவனாகக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை எதிர்த்து நிற்க யாரால் முடியும்? மத்ஸ்யர்கள் தலைவனான விராடனுடன் பாண்டவர்கள் சிறிது காலம் வாழ்ந்தனர்; அவனது {விராடனின்} விருப்பங்களை அவர்கள் {பாண்டவர்கள்} நிறைவேற்றினர்; வயது முதிர்ந்த அவன் {விராடன்}, பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புக் கொண்டு, தனது மகன்களுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பின்பற்றுபவனாகிவிட்டான் என்று நான் கேள்விப்படுகிறேன்.
கேகய நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, பழைய நிலையை அடைய விரும்புபவர்களான அந்நிலத்தின் {கேகய நாட்டின்} ஐந்து பலமிக்கச் சகோதரர்கள் {கேகய இளவரசர்கள்}, போருக்குத் தயாராகப் பலமிக்க விற்களைத் தாங்கிக் கொண்டு, பிருதையின் {குந்தியின்} மகன்களை {பாண்டவர்களை} இப்போது தொடர்ந்து வருகிறார்கள். பூமியின் தலைவர்களில் வீரமிக்க அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுப் பாண்டவர்களின் காரியத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். அறம்சார்ந்த மன்னனான யுதிஷ்டிரனிடம் கூட்டணி அமைத்திருக்கும் அவர்கள் அனைவரும் துணிவுள்ள, தகுதியுள்ள, மரியாதைக்குரியவர்கள் என்றும், பாசத்தாலேயே அவர்கள் அவனுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன்.
உத்யோக பர்வம் பகுதி 19ல் கேகய இளவரசர்கள் துரியோதனனிடம் ஓர் அக்ஷௌஹிணி படையுடன் சேர்ந்ததாக வருகிறது.
மலைகள் மற்றும் அணுகவியலாத காடுகளிலும் வசிப்பவர்களும், உயர்ந்த வம்ச வழியும், வயதில் முதிர்ச்சியும் கொண்ட பல மிலேச்ச குல வீரர்கள் ஒன்றாகக் கூடி, பல்வேறு ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு, பாண்டவர்களின் காரியத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
போர்க்களத்தில் இந்திரனுக்குச் சற்றும் குறையாதவனும், போரிடும்போது வீரமிக்க எண்ணற்ற வீரர்களால் தொடரப்படுபவனுமான பாண்டியனும் அங்கே வந்திருக்கிறான். குறிப்பிடத்தக்க வீரம் கொண்டவனும், பராக்கிரமமிக்கவனும், ஒப்பற்ற சக்திமிக்கவனுமான அவன் {பாண்டியன்}, பாண்டவர்களின் காரியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருக்கிறான்.
துரோணர், அர்ஜுனன், கிருஷ்ணன், கிருபர், பீஷ்மர் ஆகியோரிடம் ஆயுதங்களைப் பெற்றவனும், கிருஷ்ணனின் மகனுக்கு {பிரத்யும்னனுக்கு} நிகரானவனுமான சாத்யகி, பாண்டவ காரியத்தில் தன்னை அர்ப்பணிப்புடன் பிணைத்துக் கொண்டிருக்கிறான்.
அங்கே கூடியிருக்கும் சேதி மற்றும் கரூஷ {கரூசக} குல மன்னர்கள் அனைவரும் தங்கள் வளங்கள் அனைத்துடன் பாண்டவர்கள் தரப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில், சூரியனைப் போல அழகொளி வீசிக் கொண்டு, போர்க்களத்தில் அசைக்கமுடியாதவனாக அனைவராலும் கருதப்பட்டு, இந்தப் பூமியில் வில்லை இழுப்பவர்களில் மிகச் சிறந்தவனாக, தனது சொந்த பலத்தால் க்ஷத்திரிய மன்னர்கள் அனைவரின் துணிச்சல் மிக்க ஆவிகளையும் இல்லையென்று சொல்லுமளவுக்குச் செய்தவன் {க்ஷத்திரிய மன்னர்களின் துணிச்சலை சற்றும் எண்ணிப்பாராதவனான சிசுபாலன்}, கிருஷ்ணனால் ஒரு நொடிப்பொழுதில் கொல்லப்பட்டான். அந்தச் சிசுபாலன் மீது கண்களைச் செலுத்திய கேசவன் {கிருஷ்ணன்}, பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} புகழையும், மதிப்பையும் மேம்படுத்தும் வண்ணம் அவனை {சிசுபாலனை} அடித்தான். கரூஷ குல மன்னன் தலைமையில் நின்ற மன்னர்களால் உயர்வாக மதிக்கப்பட்டவன் அதே சிசுபாலன்தான். சுக்ரீவம் மற்றும் பிற குதிரைகளால் இழுக்கப்படும் தேரில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணன், தாக்கப்பட முடியாதவன் என்று கருதிய பிற மன்னர்கள், சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகள் போலச் சேதிகள் தலைவனை {சிசுபாலனை} விட்டு ஓடினர். இப்படியே, தனது துடுக்கால், கிருஷ்ணனை எதிர்த்து அவனுடன் மோதி, காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போலக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டு உயிரற்று கீழே விழுந்தான் {சிசுபாலன்}.
ஓ! சஞ்சயா, ஓ! கவல்கணன் மகனே {சஞ்சயா}, பாண்டு மகன்களின் காரியத்திற்காகக் கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்து அவர்களால் எனக்குச் சொல்லப்பட்டதையும், அவனது {கிருஷ்ணனின்} கடந்த காலச் சாதனைகளையும் நினைத்துப் பார்த்தால், என் மனம் அமைதியடையவில்லை. விருஷ்ணி குல சிங்கத்தின் {கிருஷ்ணனின்} தலைமையின்கீழ் இருப்பவர்களை எந்த எதிரியாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இரு கிருஷ்ணன்கள் {கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன்}, ஒரே தேரில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து, அச்சத்தால் எனது இதயம் நடுங்குகிறது.
மந்த புத்தியுடைய எனது மகன் {துரியோதனன்} அந்த இருவருடன் போரிடாமல் இருந்தால் நன்றாக இருப்பான். இல்லையேல், இந்திரனும், உபேந்திரனும் சேர்ந்து தைத்திய படையை எரித்தது போல, குரு குலம் அந்த இருவரால் பொசுக்கப்படும். தனஞ்சயனை {அர்ஜுனனை} நான் இந்திரனுக்கு நிகராகக் கருதுகிறேன். விருஷ்ணி குலத்தின் மிகப் பெரியவனான கிருஷ்ணனை, நான் நித்திய விஷ்ணுவாகவே கருதுகிறேன்.
அறமும் துணிவும் கொண்ட யுதிஷ்டிரன் பழி தரும் செயல்களைத் தவிர்ப்பவனாவான். ஓ! சூதா {சஞ்சயா}, நான் அந்த மன்னனின் {யுதிஷ்டிரனின்} கோபத்துக்கு அஞ்சுவது போல அர்ஜுனனுக்கோ, பீமனுக்கோ, கிருஷ்ணனுக்கோ, இரட்டையர்களுக்கோ அஞ்சவில்லை. அவனது தவம் பெரிதானது; அவன் பிரம்மச்சரிய பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தவனாவான். அவனது இதய விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். ஓ! சஞ்சயா, அவனுடைய கோபத்தையும், அவன் எப்படிப்பட்ட நீதிமான் என்பதையும் நினைக்கும்போதெல்லாம், நான் அச்சத்தால் நிறைகிறேன்.
என்னால் அனுப்பப்படும் நீ, ஒரு தேரில், பாஞ்சாலர்கள் மன்னனின் {துருபதனின்} துருப்புகள் தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்து செல். யுதிஷ்டிரனின் நலத்தை விசாரி. நீ அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பாசத்துடன் மீண்டும் மீண்டும் பேசுவாயாக. ஓ! குழந்தாய் {சஞ்சயா}, துணிச்சல் மிக்க அனைவரின் தலைவனும், பெருந்தன்மையுள்ள ஆன்மா கொண்டவனுமான கிருஷ்ணனையும் நீ சந்திக்க வேண்டும். எனது சார்பாக நீ அவனிடம் நலம் விசாரித்து, பிறகு அவனிடம் பாண்டு மகன்களுடன் {பாண்டவர்களுடன்} திருதராஷ்டிரன் அமைதியை விரும்புகிறான் என்று சொல்ல வேண்டும்.
ஓ! சூதா {சஞ்சயா}, கிருஷ்ணன் சொல்லும் சொற்களில் குந்தியின் மகனான யுதிஷ்டிரன் இதைச் செய்ய மாட்டான், என்பது எதுவும் கிடையாது. தங்கள் உயிரின் மேல் கொண்ட அன்பைப் போல, கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அவர்கள் அன்பு கொண்டவர்கள். பெரும் கல்வியுடைய அவன் {கிருஷ்ணன்}, அவர்களது காரியத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடனேயே இருக்கிறான். அங்கே கூடியிருக்கும் பாண்டு மகன்கள், சிருஞ்சயர்கள், சாத்யகி, விராடன், திரௌபதியின் ஐந்து மகன்கள் ஆகியோரின் நலத்தை எனது தூதனாக இருந்து விசாரிப்பாயாக. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவை என்றும், பாரதக் குலத்திற்கு நன்மையானவை என்றும் நீ கருதும் அனைத்தையும், ஓ! சஞ்சயா, உகந்ததல்லாததும், போர் செய்ய ஆத்திரமூட்டும் அனைத்தையும் தணிக்கும் வகையில் அந்த மன்னர்களுக்கு மத்தியில் நீ பேச வேண்டும்” என்றான் {திருதராஷ்டிரன்}