Six Indications of friendship! | Udyoga Parva - Section 45 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 5)
பதிவின் சுருக்கம் : வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகள் எவை? புலன்களில் தொலைந்து பாவச்செயல்களைப் புரியும் மனிதர்கள் எவர்? செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்? பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும் தீய மனிதர்கள் யார்? முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்? அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை? மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை? நட்பின் ஆறு அறிகுறிகள் எவை? மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது? வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன? பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது? யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை? என்பன போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது...
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “கவலை, கோபம், பேராசை, காமம், அறியாமை, சோம்பேறித்தனம், கெடுநோக்கு, இறுமாப்பு, தொடர்ச்சியாக ஆதாயம் பெறும் ஆசை, பாசம், பொறாமை, தீய பேச்சு ஆகிய இந்தப் பனிரெண்டும்{12}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனிதர்களின் வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகளாகும். இவை ஒவ்வொன்றும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனித குலத்தைப் பீடிக்கச் சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவற்றின் பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் தங்கள் புலன்களில் தொலைந்து பாவச் செயல்களைப் புரிகின்றனர்.
{செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்?}
பேராசை கொண்டவன், மூர்க்கமானவன், கடுஞ்சொல் பேசுபவன், அதிகமாகப் பேசுபவன் {அதிகப்பிரசங்கி}, மனதில் கோபத்தை வைத்திருப்பவன், தற்பெருமை பேசுபவன் ஆகிய ஆறு {6} தீய மனநிலை கொண்ட மனிதர்கள் செல்வத்தை அடையும்போது பிறரை மரியாதையாக நடத்த மாட்டார்கள்.
{பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும் தீய மனிதர்கள் யார்?}
புலன் நிறைவே வாழ்வின் இறுதி எனக் கருதுபவன், ஆணவம் கொண்டவன், தானமளித்துவிட்டு அதைத் தற்பெருமையாகப் பேசுபவன், செலவு செய்யாதவன் {கஞ்சன்}, பலமற்ற மனதைக் கொண்டவன், தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவன், தனது மனைவியை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு பேரும், பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்ட தீய மனிதர்களாகக் கருதப்படுவார்கள்.
{முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்?}
நீதி, உண்மை, தவம், தற்கட்டுபாடு, மனநிறைவு, பணிவு, துறவு, பிறரிடம் அன்பு செலுத்தல், தானம், சாத்திரம் அறிதல், பொறுமை, மன்னிக்கும் மனநிலை ஆகிய பனிரெண்டும் பிராமணர்களின் நடைமுறைகளாகும். இந்தப் பனிரெண்டில் இருந்தும் வீழாதவன் இந்த முழு உலகத்தையும் ஆளும் திறன் பெறுவான். இவற்றில் மூன்றோ, இரண்டோ, அல்லது ஒன்றே ஒன்றோ கூடக் கொண்டிருந்தாலும் அவன், பிறரை விலக்கியபடி, எதையும் தனதாகக் கருதமாட்டான். [1]
[1] பற்றற்றவனாக இருப்பான்
{அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை?}
தற்கட்டுப்பாடு, துறவு, அறிவு ஆகிய இவற்றிலேயே முக்தி {விடுதலை [அ] மோட்சம்} வசிக்கிறது. இவையே, பிரம்மமே அடையத்தக்கதில் உயந்தது என்று கருதும் அறிவுள்ள அந்தணர்களின் பண்புகள்.
{மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை?}
உண்மையோ பொய்யோ, {அது எதுவாக இருந்தாலும்} பிறரைப் பழித்துப் பேசுதல் அந்தணனுக்கு மெச்சத்தகுந்ததல்ல. அதைச் செய்பவர்கள் நரகத்தையே தங்கள் வசிப்பிடமாகக் கொண்டிருப்பார்கள். மதம் [2] பதினெட்டு தவறுகளைக் கொண்டது. அதை இதுவரை நான் விவரிக்கவில்லை. பிறரிடம் பகைமை கொள்ளுதல், அறச்செயல்களின் வழிகளில் தடையேற்படுத்தல், இகழ்ச்சி, பேச்சில் பொய்மை, காமம், கோபம், சார்ந்திருத்தல், பிறரைப் பழித்துப் பேசுதல், பிறரின் குறை அறிந்து உரைத்தல், செல்வத்தை விரயமாக்கல், சச்சரவு, செருக்கு, வாழும் உயிரினங்களுக்குச் செய்யப்படும் கொடுமை, கெடுநோக்கு, அறியாமை, மதிக்கத்தக்கோரிடம் குறை காணுதல், நன்று தீதில் அறிவை இழத்தல், எப்போதும் பிறருக்குத் தீங்கிழைக்க முனைதல் ஆகியவையே அவை {அந்தப் பதினெட்டுத் தவறுகள் மேற்கண்டவையே}. எனவே, அறிவுள்ள மனிதன் ஒருவன், மதத்திற்கு [2] ஆட்படக்கூடாது. மதத்தைத் துணைக்கழைப்பது கண்டிக்கத்தக்கது.
[2] இங்கே மதம் என்பதற்கு வெறி என்று பொருள் கொள்ள வேண்டும்.
{நட்பின் ஆறு அறிகுறிகள் எவை?}
நட்பு ஆறு அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1. முதன்மையானது, நண்பர்களின் செழிப்பில் இனிமை கொள்வது,
2. இரண்டாவது, அவர்களின் வறுமையில் வருந்துவது.
3. {மூன்றாவது}, தனது அன்புக்குரிய ஒன்றை ஒருவன் தன்னிடம் கேட்டால், உண்மையான நண்பன் ஒருவன் அதையும் கொடுத்துவிடுவான்.
4. நான்காவதாக, நெறிசார்ந்த மனநிலைகொண்ட உண்மையான நண்பன் ஒருவன், தனது செழிப்பையோ, தனது அன்புக்குரிய மகன்களையோ, ஏன் தனது சொந்த மனைவியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.
5. ஐந்தாவதாக, ஒரு நண்பன், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்த தனது நண்பனின் வீட்டில் வசிக்கக்கூடாது. ஆனால் தானே ஈட்டியதைக் கொண்டு இன்பமடைய வேண்டும்.
6. ஆறாவதாக, (தனது நண்பனுக்காக}, ஒரு நண்பன் தனது சொந்த நன்மையைத் தியாகம் செய்வதை நிறுத்த மாட்டான்.
4. நான்காவதாக, நெறிசார்ந்த மனநிலைகொண்ட உண்மையான நண்பன் ஒருவன், தனது செழிப்பையோ, தனது அன்புக்குரிய மகன்களையோ, ஏன் தனது சொந்த மனைவியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.
5. ஐந்தாவதாக, ஒரு நண்பன், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்த தனது நண்பனின் வீட்டில் வசிக்கக்கூடாது. ஆனால் தானே ஈட்டியதைக் கொண்டு இன்பமடைய வேண்டும்.
6. ஆறாவதாக, (தனது நண்பனுக்காக}, ஒரு நண்பன் தனது சொந்த நன்மையைத் தியாகம் செய்வதை நிறுத்த மாட்டான்.
{மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது?}
செல்வம் கொண்ட ஒரு மனிதன் {man of wealth} ஒருவன், அந்த நல்ல குணங்களை அடைய முயன்றால், ஈகையாளனாகவும், நெறிசார்ந்தவனாகவும் மாறி, தனது ஐந்து புலன்களை அதனதன் நோக்கங்களில் {நுகர் பொருட்களில்} இருந்து காத்துக் கொள்வான். புலன்களின் அத்தகு கட்டுப்பாடே தவமாகும். அஃது அலகில் உயரும் போது, (வெற்றிக்கு வழிவகுக்கும் அறிவைப் போல அல்லாமல், இங்கே) மறுமையில் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றதாக அது {புலன்களைக் கட்டுப்படுத்தும் தவம்} இருக்கும்.
பொறுமையில் இருந்து வீழ்ந்தவர்கள் (அதனால், அறிவை அடைய திறனற்றவர்கள்), தாங்கள் உபசரிக்கும் நோக்கத்தின் {பயனில் ஆசை கொண்டதன்} விளைவாக, இதன் பிறகு அமையும் உயர்ந்த உலகங்களின் அருளை அடைவதற்கு இதே போன்ற தவத்தை அடைவார்கள்.
{வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன?}
எதில் வேள்விகள் செழிப்படையுமோ, அந்த உண்மையை(பிரம்மத்தை) பற்றும் தனது திறனின் விளைவாக, ஒரு யோகி தன் மனதிலேயே வேள்விகளைச் செய்யும் திறன் பெற்றவனாகிறான். மற்றுமொருவன் வேள்விகளைச் சொற்களால் {ஜெபம்} செய்கிறான். வேறொருவன் வேலையால் {கர்மத்தால்} அதைச் செய்கிறான்.
{பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது?}
பண்புகள் உள்ளடங்கிய பிரம்மத்தை அறிந்தவனிடம் உண்மை (பிரம்மம்) வசிக்கிறது. பண்புகளற்ற பிரம்மத்தை அறிந்தவனிடம் மேலும் முழுமையாக அது {பிரம்மம்) வசிக்கிறது.
இப்போது என்னிடம் இருந்து வேறு விஷயங்களைக் கேள். கொண்டாடப்படும் இந்த உயர்ந்த தத்துவம் (சீடர்களுக்கு) கற்பிக்கப்பட வேண்டும். மற்ற அமைப்புகள் அனைத்தும் சொற்களின் கதம்பம் மட்டுமே.
{யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை?}
இவை (அண்டம்) முழுமையும் யோக தத்துவத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. இவற்றை {யோக தத்துவத்தினை} அறிந்தவர்கள் மரணத்திற்கு ஆட்படுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, என்னதான் ஒருவன் வேலையால் {கர்மாவால்} நன்கு நிறைவு பெற்றிருந்தாலும், அவனால் உண்மையை (பிரம்மத்தை) அடைய முடியாது.
அறிவற்ற மனிதன், ஹோம காணிக்கைகளைச் செலுத்தினாலும், அல்லது வேள்விகளைச் செய்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வேலையால் {கர்மத்தால்} அவன் அழியா நிலையை {முக்தியை} அடையவே முடியாது. அதே போல, இறுதியில் அவன் பேரின்பத்தையும் அனுபவிப்பதில்லை.
தனிமையில், வெளிப்புலன்கள் அனைத்தையும் அடக்கி, ஒருவன் பிரம்மத்தை நாட வேண்டும். வேலையைக் கைவிட்டு, ஒருவன் மனதால் முயற்சிக்கக்கூடாது [3]. (இப்படி ஈடுபட்டிருக்கும்போது) ஒருவன் புகழில் இன்பத்தையும், பழியில் கோபத்தையும் அடைவதைத் தவிர்க்க வேண்டும்.
[3] ஒருவனாக இருந்து மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், மனதினாலும் சலிக்கக்கூடாது.
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடுத்தடுத்த படிநிலைகளின் படி அந்த வழியில் தன்னைச் செலுத்துபவன் இங்கேயே கூடப் பிரம்மத்தை அடைந்துவிடுவான். ஓ! கற்றவனே {திருதராஷ்டிரா}, இவற்றையே நான் உனக்குச் சொல்கிறேன்.