The seed called ‘Tath’! | Udyoga Parva - Section 46a | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 6)
பதிவின் சுருக்கம் : ஆத்மா, பராமத்மா, தத் எனும் விதை குறித்து சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு உரைப்பது…
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “மஹாயசஸ் என்று அழைக்கப்படும் (அண்டத்தின்) முதன்மை {ஆதி} விதை, விபத்துகளற்றதும், தூய அறிவானதும், சுடர்மிகும் பிரகாசம் கொண்டதுமாகும்.
அதுவே {ஆதி விதையே/ Cosmic egg} புலன்களை வழிநடத்துகிறது. அந்த விதையின் விளைவாலேயே சூரியனும் ஒளிர்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) {Yogins (by their mental eye)} காணப்படுகிறான்.
அதுவே {ஆதி விதையே/ Cosmic egg} புலன்களை வழிநடத்துகிறது. அந்த விதையின் விளைவாலேயே சூரியனும் ஒளிர்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) {Yogins (by their mental eye)} காணப்படுகிறான்.
(இன்பத்தின் உருவமாக இருக்கும்) அந்த விதையின் விளைவாலேயே, பிரம்மம் படைப்புத் திறனைப் பெறுகிறது. அதன் வழியாகவே பிரம்மம் தன்னை விரிவு படுத்திக் கொள்கிறது. ஒளிரும் பொருட்களுக்குள் நுழையும் அந்த விதையே ஒளியையும், வெப்பத்தையும் கொடுக்கிறது. வேறு ஒரு பொருளில் இருந்து ஒளியையும் வெப்பத்தையும் பெறாத அந்தத் தன்னொளி {சுய ஒளி}, அனைத்து ஒளிரும் பொருட்களுக்கும் பயங்கரத்தை அளிக்கும் பொருளாக இருக்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
பூமி மற்றும் சொர்க்கம், திசைகள் மற்றும் அண்டம் முழுமையும், ஆகியவற்றின் இரு தேவர்களை இந்த விதை உறுதிப்படுத்துகிறது. அந்த விதையில் இருந்தே திசைகளும், நதிகளும் உற்பத்தியாகின்றன. பரந்த கடல்களும் தங்கள் தோற்றத்தை அந்த விதையிலேயே பெறுகின்ற. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அழிவடைய விதிக்கப்பட்ட தேர் போன்றதே உடல். ஆனால் அதன் செயல்களோ அழிவற்றவையாகும். (கடந்த வாழ்வுகளின் {முன்ஜென்ம} செயல்களைக் குறிக்கும்) அந்தத் தேரின் சக்கரங்களில், புலன்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவையே {புலன்களே} குதிரைகளாகி, உணர்வு என்ற பகுதியின் வழியாக ஞானம் கொண்ட மனிதனை பிறப்பற்ற, மாற்றமற்றவனை {பரமாத்மாவை} நோக்கி அழைத்துச் செல்கின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அந்த ஒருவனின் {நித்தியமானவனின்} வடிவத்தை எந்தவித ஒப்பீட்டினாலும் வெளிக்காட்ட முடியாது. யாரும் அவனைக் கண்ணால் கண்டதில்லை. ஆழ்ந்த மெய்மறந்த சிந்தனை, மனம், இதயம் மூலமாக அவனை அறிபவர்கள் மரணத்தில் இருந்து விடுபட்டவர்களாகிறார்கள் {முக்தியடைகிறார்கள்}. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
மாயையின் ஓடை கொடூரமாக இருக்கிறது; தேவர்களால் பாதுகாக்கப்படும் அது {மாயை}, பனிரெண்டு கனிகளை {பலன்களைக்} கொண்டது [1]. அதன் {மாயையின்} நீரைப் பருகி, அதன் மத்தியில் உள்ள பல இனிமையான பொருட்களைக் கண்டு, மனிதர்கள் அதனுடனேயே முன்னும் பின்னுமாக நீந்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓடையும் அந்த விதையில் இருந்தே பாய்கிறது. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
[1] 1. சித்தம் , 2. நினைவு, 3. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள் =மெய், வாய், கண், மூக்கு, செவி}, 4. ஞானம், 5. செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள் = வாய், கை, கால், மலவாய், கருவாய்}, 6. காரியம், 7. தன்மாத்திரைகள் {விஷயம் = சுவை, ஒளி, ஊறு, உணர்வு, ஓசை, நாற்றம்}, 8. ஐம்பூதங்கள், 9. பிராணன், 10. சுவாசம், 11. பழைய வாசனைக்கூட்டம், 12. பாவ புண்ணியங்கள் {பார்க்க: தத்துவங்கள் 96 : இவையாவும் அடக்கம் என்றே நினைக்கிறேன்}
முன்னும் பின்னும் செல்ல விதிக்கப்பட்ட ஓர் உயிரான்மா {ஜீவாத்மா}, (பிற உலகத்தின்) இன்பங்களை நினைத்துப் பார்த்து, தனது செயல்களின் பாதிக் கனிகளையே {பலன்களையே) அனுபவிக்கிறது. அந்த உயிராத்மா, அண்டத்தின் அனைத்திலும் ஊடியிருக்கும் ஈஸ்வரனாகவே இருக்கிறது. அந்த ஈஸ்வரனே வேள்விகளை விதித்திருக்கிறான். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
விபத்துகளற்ற ஆன்மாக்கள், தங்க இலைகள் கொண்ட மரத்தைப் போன்ற அவித்யையில் {கல்வியற்ற [அ] கல்வியல்லாதவற்றில்} ஈடுபட்டு, விபத்துகளை நினைத்து, தங்கள் பற்றுதலுக்கேற்றபடி {ஆசைக்கேற்றபடி} பல்வேறு வகைப் பிறப்புகளை எடுக்கின்றன. (யாரிடம் அனைத்து ஆன்மாக்களும் ஒன்றுபடுமோ, அந்தத்) தெய்வீகத்தன்மை கொண்ட நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
முழுமையாக இருக்கும் பிரம்மத்தால் பரிபூரணமடையும் அண்டத்தின் விளைவாக விபத்துகள் (பிரம்மத்தின் தொடர்பு ஏற்படுவதால் பல வடிவங்களைப் பெற்று) எழுகின்றன. அந்த விபத்துகளும், தங்கள் நிறைவால் பரிபூரணப் பிரம்மத்தில் இருந்து எழுகின்றன. ஒருவன், எப்போதும் பரிபூரணமாக இருக்கும் பிரம்மத்திடம் இருக்கும் அனைத்து விபத்தையும் வெல்லும்போது, பரிபூரணப் பிரம்மத்தில் எஞ்சியிருக்கும் தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அந்த விதையிலிருந்தே ஐம்பூதங்களும் உதித்தன. அவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி அவற்றின் உள்ளேயே இருக்கிறது. (அக்னி என்றும் சோமம் என்றும் அழைக்கப்படும்) நுகர்வோன் மற்றும் நுகர்பொருள் ஆகிய இரண்டும் இந்த விதையில் இருந்தே எழுந்தன. புலன்களுடன் கூடிய உயிரினங்கள் அதனுள்ளேயே ஓய்ந்திருக்கின்றன. அனைத்தும் இதில் இருந்து எழுந்தன எனவே கருதப்பட வேண்டும். வேதங்களில் தத் {THAT (Tad)} என்று அழைக்கப்படும் அந்த விதையை நாம் விளக்கும் திறனற்றவர்களாக இருக்கிறோம். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
அபானன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்று, பிராணன் என்று அழைக்கப்படும் காற்றால் விழுங்கப்படுகிறது. பிராணன் விருப்பத்தால் {மனம் எனும் சந்திரனால்} விழுங்கப்படுகிறது, விருப்பம் {மனம்} அறிவாலும் {புத்தியான சூரியனாலும்}, அறிவு {புத்தி} பரமாத்மாவாலும் {பிரம்மத்தாலும்} விழுங்கப்படுகின்றன. தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகிகளால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம், தூய உணர்வு {துரியம்} {Turiya} [2] ஆகியவற்றைத் தனது நான்கு கால்களாகக் கொண்ட பரமாத்மா, உலகளாவிய விவகாரங்கள் எனும் அளவிட முடியாத கடலின் மேல் நடந்து செல்லும் அன்னம் போலத் தனது கால்களில் ஒன்றை ஆழ மறைக்கிறான். மீதம் மூன்று கால்களை வழிநடத்தும் காரணத்திற்காக விடப்பட்ட (துரியம் என்ற) அந்தக் காலைக் காண்பவனுக்கு இறப்பும் முக்தியும் ஒன்றாகவே இருக்கும். தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.
[2] இந்து தத்துவ மரபின்படி, துரியம் என்றால் சம்ஸ்க்ருதத்தில் நான்காவது என்று பொருள். இது சதுரியம், சதுர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தூய உணர்வு நிலையை அனுபவிப்பது என்று இது பொருள் தரும். விழிப்புணர்வு, கனவு காணுதல், கனவற்ற உறக்கம் ஆகிய உணர்வுகளின் மூன்று பொதுவான நிலைகளுக்குள் அடங்கியிருக்கவும், அவற்றைக் கடந்து செல்லவும் பின்னணியாக இருப்பதே துரியமாகும்.
கட்டைவிரலளவு உள்ள அஃது, எப்போதும் பரிபூரணமாக இருந்து, அழியாத உயிரினங்களில் இருந்து வேறுபட்டு, உயிர் காற்றுகள் {வாயுக்கள்}, விருப்பம் {மனம்}, அறிவு {புத்தி}, பத்துப் புலன்கள் {அறிவுப் புலன்கள் 5 மற்றும் செயற்புலன்கள் 5} ஆகியவற்றோடு தொடர்பு கொண்டு, இங்கும் அங்கும் அசைகிறது. புகழத்தக்க பாடல்களுக்குத் தகுந்தவனும், அனைத்தையும் செய்யும் திறன்வாய்ந்தவனுமான பரமாத்மா, விபத்துகள் நேரும் போது, அனைத்துக்கும் காரணமாகியவன் {பரமாத்மா}, உயிரினங்களின் ஆன்மாக்களில் அறிவாக வெளிப்படுகிறான். முட்டாள்கள் மட்டுமே அவனைக் காண்பதில்லை; தெய்வீகத்தன்மை கொண்ட அந்த நித்தியமானவன் {அழிவில்லாத பரமாத்மா} யோகியரால் (அவர்களது மனக்கண்ணால்) காணப்படுகிறான்.