The commencement of the eighteenth day war! | Shalya-Parva-Section-09 | Mahabharata In Tamil
(சல்லிய வத பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : பதினெட்டாம் நாள் போர் தொடங்கியது; இரு தரப்பிலும் நேர்ந்த பயங்கரமான அழிவு; அர்ஜுனனும், பீமசேனனும் கௌரவப் படையைப் பிளந்து தப்பி ஓடச் செய்தது; குரு தலைவர்கள் தங்கள் துருப்புகளை மீண்டும் அணிதிரட்ட முயற்சித்தது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதன் பிறகு, தேவர்கள் மற்றும் அசுரர்களுக்கு இடையில் நடைபெற்றதைப் போன்றதும், கடுமையானதும், பயங்கரமானதுமான ஒரு போர் குருக்களுக்கும், சிருஞ்சயர்களுக்கும் இடையில் நடைபெற்றது.(1) மனிதர்கள், தேர்க்கூட்டங்கள், யானைகள், யானைவீரர்கள், ஆயிரக்கணக்கான குதிரைவீரர்கள், பெரும் ஆற்றலைக் கொண்ட குதிரைகள் ஆகியன யாவும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.(2) பயங்கர வடிவிலான யானைகள் பேரொலியுடன் விரைந்து கொண்டிருப்பது, மழைக்காலங்களில் ஆகாய மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பாகக் கேட்டது.(3) யானைகளால் தாக்கப்பட்ட சில தேர்வீரர்கள் தங்கள் தேர்களை இழந்தனர். அந்த மதங்கொண்ட விலங்குகளால் முறியடிக்கப்பட்ட சில துணிச்சல் மிக்கப் போராளிகள் களத்தில் ஓடிக் கொண்டிருந்தனர்.(4)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், தங்கள் கணைகளுடன் கூடியவர்களுமான தேர்வீரர்கள், பெரும் குதிரைப்படையையும், யானைகளைத் தூண்டி அவற்றைப் பாதுகாத்துவந்த காலாட்படைவீரர்களையும் அடுத்த உலகத்திற்கு அனுப்பினர்.(5) ஓ! மன்னா, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைவீரர்கள், களத்தில் திரிந்து கொண்டிருந்த பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, சூலங்கள், ஈட்டிகள் மற்றும் வாள்களால் அவர்களைத் தாக்கிக் கொன்றனர்.(6) விற்களைத் தரித்திருந்த சில போராளிகள் பலரும் ஒன்று சேர்ந்து, பெரும் தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, தனித்தனியாக இருந்த அவர்களை ஒவ்வொருவராக யமலோகம் அனுப்பிவைத்தனர்.(7) வேறு சில பெருந்தேர் வீரர்கள், யானைகளையும், தங்கள் வகையைச் சேர்ந்த முதன்மையான போர்வீரர்களையும் சூழ்ந்து கொண்டு, களத்தில் போரிட்டபடி திரிந்து கொண்டிருநண அவர்களில் வலிமைமிக்கச் சிலரைக் கொன்றனர்[1].(8) அதே போலவே, ஓ! மன்னா, யானை வீரர்கள், கோபத்தால் தூண்டப்பட்ட தன்னந்தனி தேர்வீரர்களைச் சூழ்ந்து கொண்டு, கணைகளை இறைத்து அவர்களை அடுத்த உலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.(9) அந்தப் போரில் யானை வீரர்களை எதிர்த்து யானை வீரர்களும், தேர்வீரர்களை எதிர்த்து தேர்வீரர்களும் எதிர்த்துச் சென்று, ஈட்டிகள், வேல்கள் மற்றும் துணிக்கோல் கணைகளால் {நாராசங்களால்} ஒருவரையொருவர் கொன்றனர்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "சில மஹாரதர்கள் சிறந்தவர்களுடன் கூடி யானைகளையும், சிறந்த ரதிகர்களையும் சூழ்ந்து கொண்டு யுத்தத்தில் ஓடுகின்ற மஹாரதனை மிகப் புடைத்தார்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "மஹாரதர்கள் யானைகளையும், சிறந்த தேர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் போர்வீரர்களின் தலையை அறுத்து பெரும் முழக்கத்துடன் அவர்களை விரட்டி விட்டனர்" என்றிருக்கிறது.
போருக்கு மத்தியில், யானைகளும், குதிரைகளும், திகைத்துப் போயிருந்த காலாட்படைகளை மிதித்துக் கொண்டு அதிகக் குழப்பத்தைச் செய்து கொண்டிருந்தன.(11) சாமரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குதிரைகள், இமய அடிவாரத்தின் சமவெளிகளில் காணப்படும் அன்னங்களைப் போல அனைத்துப் பக்கங்களிலும் விரைந்தன. பூமியையே விழுங்கிவிட ஆயத்தமாகத் தெரியும்படி அவ்வளவு வேகத்துடன் அவை விரைந்தன.(12) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தக் குதிரைகளின் குளம்படிகளால் துளைக்கப்பட்ட போர்க்களமானது, மேனியில் (தன் காதலனின்) நகக்குறிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணைப் போல மிக அழகாகத் தெரிந்தது.(13) வீரர்களின் நடை, தேர்ச்சக்கரங்கள், காலாட்படை வீரர்களின் கூச்சல், யானைகளின் பிளிறல்,(14) பேரிகைகளின் முழக்கம் மற்றும் பிற இசைக்கருவிகள், சங்கொலி ஆகியவற்றால் உண்டான ஒலியானது, செவிடாக்கும் இடியின் முழக்கங்களைப் போலப் பூமியில் எதிரொலிக்கத் தொடங்கியது.(15)
விற்களின் நாணொலிகள், கத்திகளின் கீற்றுகள், போராளிகளுடைய கவசங்களின் பளபளப்பு ஆகியவை அனைத்தும் சேர்ந்து எதையும் காணமுடியாதபடி குழப்பத்தை ஏற்படுத்தின.(16) யானைகளின் தந்தங்களைப் போலத் தெரிந்தவையும், மனித உடல்களில் இருந்து வெட்டப்பட்ட விழுந்தவையுமான கரங்கள், உயரக்குதித்து, நடுங்கியபடியே சீற்றத்துடன் நகர்ந்தன.(17) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போர்க்களத்தில் விழுந்த தலைகளால் உண்டான ஒலியானது, பனை மரங்களில் இருந்து விழும் கனிகளின் ஒலிக்கு ஒப்பானவையாக இருந்தன.(18) அந்த விழுந்த தலைகளால் விரவி, இரத்தச் சிவப்பாகக் கிடந்த பூமியானது, பருவ காலத்தில் தங்க நிறத் தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(19) உண்மையில், அதிகமாகச் சிதைக்கப்பட்டு, விழி பிதுங்கியிருந்த அந்த உயிரற்ற தலைகளால், ஓ! மன்னா, போர்க்களமானது முற்றும் மலர்ந்திருந்த தாமரைகள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(20)
சந்தனம் பூசப்பட்டவையும், விலைமதிப்புமிக்கக் கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தவையுமான போராளிகளின் விழுந்த கரங்களால், அந்தப் பூமியானது, இந்திரனைக் கௌரவிப்பதற்காக நடப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமான கம்பங்கள் விரவிக் கிடப்பதைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(21) யானைகளின் துதிக்கைகளைப் போல வழவழப்பாகத் தெரிந்தவையும், அந்தப் போரில் வெட்டப்பட்டவையுமான மன்னர்களின் தொடைகளால் அந்தப் போர்க்களம் மறைக்கப்பட்டது.(22) நூற்றுக்கணக்கான தலையற்ற முண்டங்கள் நிறைந்ததும், குடைகளும் சாமரங்களும் விரவிக் கிடந்ததுமான அந்தப் பரந்த படையானது, மலர்ந்திருக்கும் காட்டைப் போல அழகாகத் தெரிந்தது.(23) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கங்கள் குருதியில் குளித்திருந்ததால் மலர்ந்திருக்கும் கின்சுகங்களைப் போலத் தெரிந்த போர்வீரர்கள் அச்சமில்லாமல் அந்தப் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(24) கணைகள் மற்றும் வேல்களால் பீடிக்கப்பட்ட யானைகளும் கூட, வானத்தில் இருந்து விழும் சிதறிய மேகங்களைப் போல இங்கேயும், அங்கேயும் விழுந்து கொண்டிருந்தன.(25)
உயர் ஆன்மப் போர்வீரர்களால் கொல்லப்பட்ட யானைப்படைப்பிரிவுகள், காற்றால் கலக்கப்பட்ட மேகங்களைப் போல அனைத்துத் திசைகளிலும் பிரிந்து சென்றன.(26) மேகங்களைப் போலத் தெரிந்த அந்த யானைகள், ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, யுக முடிவில் உலகம் அழியும் தருணத்தில் இடியால் பிளக்கப்படும் மலைகளைப் போலப் பூமியில் விழுந்து கொண்டிருந்தன.(27) தரையில் சாரதிகளுடன் குவியல் குவியலாக விழுந்து கிடக்கும் குதிரைகள் மலைகளைப் போலத் தெரிந்தன.(28) அந்தப் போர்க்களத்தில், அடுத்த உலகத்தை நோக்கிப் பாயும் ஆறு ஒன்று தோன்றியது. குருதியே அதன் நீரானது, தேர்கள் அதன் சுழிநீர்களாகின. கொடிமரங்கள் அதன் மரங்களாகவும், எலும்புகள் அதன் கூழாங்கற்களாகவும் ஆகின.(29) (போராளிகளின்) கரங்கள் அதன் முதலைகளாகவும், விற்கள் அதன் நீரோட்டமாகவும், யானைகள் அதன் பெரும்பாறைகளாகவும், குதிரைகள் சிறிய பாறைகளாகவும் ஆகின. கொழுப்பும், ஊனீரும் அதன் சகதியாகவும், குடிகள் அதன் அன்னங்களாகவும், கதாயுதங்கள் அதன் தெப்பங்களாகவும் ஆகின.(30)
நிறைந்திருந்த கவசங்கள், தலைக்கவசங்கள், கொடிகள் ஆகியன அதன் அழகிய மரங்களாகின. அதிகமாக இருந்த சக்கரங்கள் அதன் சக்கரவாகப் பறவைகளாகின. அது திரிவேணுகளாலும், தண்டங்களாலும் மறைக்கப்பட்டிருந்தது.(31) துணிவுள்ளோரின் மகிழ்ச்சியைத் தூண்டியும், மருண்டோரின் அச்சங்களை அதிகரித்தும், குருக்களையும், சிருஞ்சயர்களையும் தன் கரையில் அதிகமாகக் கொண்டிருந்த அந்த ஆறு சீற்றத்துடன் ஓடியது.(32) பரிகங்களுக்கு ஒப்பான கரங்களைக் கொண்ட அந்தத் துணிச்சல் மிக்கப் போர்வீரர்கள், தெப்பங்கள் மற்றும் படகுகளாகச் செயல்படும் தங்கள் வாகனங்கள் மற்றும் விலங்குகளின் துணையுடன், இறந்தோரின் உலகத்தை நோக்கிப் பாய்ந்த அந்தப் பயங்கர ஆற்றைக் கடந்தனர்.(33) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, யாராலும் எவருக்கும் எந்தக் கருணையையும் காட்டப்படாததும், நால்வகைப் படைகளுக்கும் பேரழிவைத் தந்ததுமான அந்தப் போர், பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கு இடையில் நடந்ததற்கு ஒப்பாக நடந்தது.(34) ஓ! எதிரிகளை எரிப்பவரே, போராளிகளில் சிலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் உரக்க அழைத்தனர். சிலர், அழுது கொண்டிருக்கும் உறவினர்களால் அழைக்கப்பட்டு அச்சத்தால் பீடிக்கப்பபட்டனர்.(35)
கடுமையும், பயங்கரமும் நிறைந்த அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அர்ஜுனனும், பீமசேனனும் தங்கள் எதிரிகளை மலைப்படையச் செய்தனர்.(36) ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, இவ்வாறு கொல்லப்பட்ட உமது பரந்த படையானது, மது மயக்கத்தில் உள்ள ஒரு பெண்ணைப் போலப் போர்க்களத்தில் மயங்கி விழுந்தது.(37) பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்தப் பட்டையை மலைப்படையச் செய்து தங்கள் சங்குகளை முழக்கி, சிங்க முழக்கம் செய்தனர்.(38) அந்த உரத்த இடி முழக்கத்தைக் கேட்ட திருஷ்டத்யும்னனும், சிகண்டியும், தங்களுக்குத் தலைமையில் மன்னன் யுதிஷ்டிரனை நிறுத்திக் கொண்டு, மத்ரர்களின் ஆட்சியாளனை எதிர்த்து விரைந்தனர்.(39) ஓ! ஏகாதிபதி, அந்தப் போர்வீரர்கள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் சல்லியனுடன் போரிட்ட விதம் மிக அற்புதமானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(40) பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களும், போரில் வெல்லப்பட முடியாதவர்களுமான மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, வெற்றியடையும் விருப்பத்தால் தூண்டப்பட்டு, உமது படையை எதிர்த்துப் பெரும் வேகத்துடன் சென்றனர்.(41)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அப்போது வெற்றியில் ஆவலுள்ள பாண்டவர்களின் கணைகளால் பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்ட உமது படையானது, போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கியது.(42) உறுதிமிக்க வில்லாளிகளால் இவ்வாறு தாக்கப்பட்டு, பிளக்கப்பட்ட அந்தப் படையானது, உமது மகன்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடியது.(43) ஓ! பாரதரே, முறியடிக்கப்பட்ட போராளிகளுக்கு மத்தியில் இருந்த சிறப்புமிக்க க்ஷத்திரியர்கள், வெற்றி மீது கொண்ட விருப்பத்தால், "நில்லுங்கள், நில்லுங்கள்" என்று சொல்லி கூச்சலிட்டபோது, உமது போர்வீரர்களுக்கு மத்தியில் "ஓ!" என்றும் "ஐயோ!" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(44) இவை அனைத்திற்கும் பிறகு, பாண்டவர்களால் பிளக்கப்பட்ட உமது படையானது, தன் அன்பு மகன்களையும், சகோதரர்களையும், தாய்மாமன்களையும், சகோதரியின் மகன்களையும், திருமணத்தால் ஏற்பட்ட பந்தங்களையும், சில உறவினர்களையும் கைவிட்டுவிட்டுப் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியது.((45) ஓ! பாரதக் குலத்தின் காளையே, தங்கள் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆயிரக் கணக்கான போர்வீரர்கள், தங்கள் குதிரைகளையும், யானைகளையும் பெரும் வேகத்தில் தூண்டியபடியே அங்கிருந்து தப்பி ஓடினர்" {என்றான் சஞ்சயன்}.(46)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 46
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |