Fools, who are accomplished in the science of argumentation! | Shanti-Parva-Section-19 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 19)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் ஆயுதங்களையும் போரையும் மட்டுமே அறிந்தவன் என்றும், அவனால் தவத்துறவுகளின் உண்மையை உணர முடியாது என்றும் அவனிடம் சொன்ன யுதிஷ்டிரன்; முக்தியை அடைய யோகமே சிறந்த வழிமுறை; சாத்திரங்கள் அறிந்தவர்களும் முற்பிறவி வினையால் உண்மையை அறிந்து கொள்வதில்லை; பற்றைத் துறந்து, ஆன்மாவைத் தன்னை நோக்கித் திருப்பினால் முக்தி அடையலாம் என்றது...
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, "பிரம்மத்தை அடைய வழிகோலும் வேதங்களையும், சாத்திரங்களையும் நான் அறிவேன். செயல்பாடு, துறவு ஆகிய இரண்டு வகை விளக்கங்களும் வேதங்களில் இருக்கின்றன.(1) அறிவை அடிப்படையாகக் கொண்ட சாத்திரங்களின் தீர்மானங்கள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. எனினும், உண்மையில் நான் மந்திரங்களை முறையாக அறிந்திருக்கிறேன்.(2) நீ ஆயுதங்களை மட்டுமே அறிந்தவனாக, வீரர்களின் நடைமுறைகளை நோற்கிறாய். சாத்திரங்களின் உண்மைப்பொருளை நீ புரிந்து கொள்ள இயலாதவனாக இருக்கிறாய்.(3) நீ உண்மையில் கடமையை அறிந்தவனாக இருந்தால், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும், அறத்தின் உண்மைகளையும் தெளிவாக அறிந்த ஒருவனைப் போல என்னிடம் பேசியிருப்பாய்.(4) எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, சகோதரப்பாசத்தால் தூண்டப்பட்டு, முறையான தகுந்த வார்த்தைகளை நீ பேசியிருக்கிறாய். ஓ! அர்ஜுனா, நான் உன்னிடம் நிறைவடைந்தேன்.(5)