Sapta-Saraswata! | Shalya-Parva-Section-38 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 7)
பதிவின் சுருக்கம் : சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை என ஏழு வடிவங்களாக வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தோன்றிய சரஸ்வதி ஆறு; அந்த ஏழு ஆறுகளும் ஒன்று கலந்த சப்தசாரஸ்வதத் தீர்த்தம்; மங்கணகர் வரலாறு; சிவனின் அருள்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஏன் அந்தத் தீர்த்தம் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்டது? யாரந்தத் தவசி மங்கணகர்? எவ்வாறு அந்தப் போற்றுதலுக்குரியவர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டார் {எவ்வாறு சித்தரானார்}? அவரது நோன்புகளும், நியமங்களும் என்ன?(1) அவர் யாருடைய குலத்தில் பிறந்தவராவார்? மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரான அவர் எந்தெந்த புத்தகங்களைப் படித்தார் {எவற்றை அத்யயனம் செய்தார்}? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, இவையாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா, இந்த அண்டத்தை ஏழு சரஸ்வதிகள் மறைக்கின்றன. பெரும் சக்தி மிக்க மனிதர்களால் அந்தச் சரஸ்வதி எங்கெல்லாம் அழைக்கப்பட்டாளோ, அங்கெல்லாம் அவள் தோன்றினாள்.(3) சுப்ரபை, காஞ்சனாக்ஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு, விமலோதகை ஆகிய இவையே சரஸ்வதியின் ஏழு வடிவங்களாகும்.(4)
ஒரு காலத்தில் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஒரு பெரும் வேள்வியைச் செய்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நிலத்தில் அந்த வேள்வி நடந்து கொண்டிருந்தபோது, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மறுபிறப்பாளர்கள் {பிராமணர்களால்} பலர் அங்கே வந்தனர்.(5) அங்கே பாடப்பட்ட புனிதமான பாடல்களும், ஓதப்பட்ட வேதங்களும் அந்த இடத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அந்த வேள்விச் சடங்குகளில், தேவர்கள் தங்கள் நிதானத்தை இழந்தனர் (அந்த அளவுக்கு ஆயத்தங்கள் நடந்தன).(6) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பெரும்பாட்டன் வேள்வியில் நிறுவப்பட்டு, செல்வத்தையும், அனைத்து விருப்பங்களையும் அளிக்கவல்ல அந்த மகத்தான விழாவை நடத்திக் கொண்டிருந்தபோது,(7) அறம், பொருள் குறித்த அனைத்தையும் அறிந்த குறிப்பிட்ட சிலர் அங்கே இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்கள் நினைத்தவுடன், அவர்களுக்கு முன்பு அவை உடனே தோன்றின.(8) கந்தர்வர்கள் பாடினர், அப்சரஸ்களில் பல்வேறு இனத்தவர் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் பல்வேறு தெய்வீக இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டிருந்தனர்.(9) அந்த வேள்வியில் கொணரப்பட்ட பொருட்செல்வத்தில் தேவர்களேகூட மனம்நிறைந்தனர். அப்படியிருக்கையில் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வது? தேவர்களே கூட ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(10)
ராஜஸ்தானில், ஜெய்பூர்-புஷ்கர் 145கிமீ |
(மற்றொரு நேரத்தில்) ஓ! மன்னா, நைமிசத்தில் பல முனிவர்கள் ஒன்றாகக் கூடி அங்கே தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர். அங்கே வேதங்களைக் குறித்து அவர்களுக்குள் ஆய்வுக்குரிய பல இனிமையான விவாதங்கள் நடந்தன.(16) பல்வேறு சாத்திரங்களை அறிந்தவர்களான அம்முனிவர்கள் வசித்த இடத்தில் அவர்கள் சரஸ்வதியைக் குறித்துச் சிந்தித்தனர்.(17) வேள்வியைச் செய்யும் அம்முனிவர்களால் இவ்வாறு நினைக்கப்பட்டதும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், புனிதமானவளுமான சரஸ்வதி, அவர்களுக்கு உதவி செய்வதற்காக அந்த உயர் ஆன்ம முனிவர்கள் ஒன்றுதிரண்டிருந்த நைமிசத்தில் தோன்றி காஞ்சனாக்ஷி என்று அழைக்கப்பட்டாள்.(18,19) ஓ! பாரதா, இவ்வாறே அனைவராலும் வழிபடப்பட்ட முதன்மையான ஆறான அவள் அங்கே வந்தாள்.
கயாவில் (மன்னன்) கயன் ஒரு பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருந்தபோது, ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி அந்தக் கயனின் வேள்வியில் அழைக்கப்பட்டாள் (அவ்வாறே அங்கே தோன்றவும் செய்தாள்). அங்கே இருந்தவர்களான கடும் நோன்புகளை நோற்கும் முனிவர்கள் கயாவில் தோன்றிய அவளது அந்த வடிவத்துக்கு விசாலை என்று பெயரிட்டனர்.(21) அந்த ஆற்றின் வேகமான நீரோட்டம் இமயத்தின் சாரலில் இருந்து பாய்கிறது.
ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஔத்தாலகர் என்பவரும் ஒரு வேள்வியைச் செய்தார்.(22) உயர் ஆன்ம ஔத்தாலகரின் வேள்வி கோசலத்தின் வட பாகத்தில் உள்ள புனிதமான பகுதியில் நடைபெற்றது.(23) முனிவர்களின் பெருங்கூட்டம் அங்கே திரண்டது. ஔத்தாலகர் தன் வேள்வியைத் தொடங்கும் முன்னர்ச் சரஸ்வதியை நினைத்தார். ஆறுகளில் முதன்மையான அவள், அந்த முனிவர்களின் நிமித்தமாக அந்தப் பகுதிக்கு வந்தாள்.(24) மரவுரிகளையும், மான்தோல்களையும் உடுத்தியிருந்த அம்முனிவர்கள் அனைவராலும் வழிபடப்பட்ட அவள், அம்முனிவர்கள் தங்கள் மனத்தால் அழைத்தபடியே மனோரமை என்ற பெயரில் அறியப்படலானாள்.(25)
மேலும் உயர் ஆன்ம குரு, குருக்ஷேத்திரத்தில் ஒரு வேள்வியைச் செய்தபோது, ஆறுகளில் முதன்மையானவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளுமான சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(26) ஓ! ஏகாதிபதி, (குருவின் வேள்வியில் உதவி செய்து கொண்டிருந்த) உயர் ஆன்ம வசிஷ்டரால் அழைக்கப்பட்டவளும், தெய்வீக நீர் நிரம்பியவளுமான சரஸ்வதி, அந்தக் குருக்ஷேத்திரத்தில் ஓகவதி எனும் பெயரில் தோன்றினாள்.(27)
ஒரு சமயம் தக்ஷன், கங்கை தோன்றும் இடத்தில் {கங்கோத்ரியில்} ஒரு வேள்வியைச் செய்தான். வேகமாகப் பாயும் சுரேணு எனும் பெயரில் சரஸ்வதி அங்கே தோன்றினாள்.(28)
பிரம்மன் புனிதமான இமயமலைக் காட்டில் மீண்டும் ஒரு வேள்வியைச் செய்தபோது, (அவனால் {பிரம்மனால்}) அழைக்கப்பட்டவளான போற்றுதலுக்குரிய சரஸ்வதி {விமலோதகை என்ற பெயரில்} அங்கே தோன்றினாள்.(29)
இந்த ஏழு வடிவங்கள் அனைத்தும், பலதேவன் {பலராமன்} வந்திருந்த அந்தத் தீர்த்தத்தில் {சப்த சாரஸ்வத்ததில்} ஒன்று கலந்தது. அவ்விடத்தில் {சரஸ்வதியின்} ஏழு வடிவங்கள் ஒன்று கலந்ததால் அந்தத் தீர்த்தப் இப்பூமியில் சப்தசாரஸ்வதம் என்ற பெயரில் அறியப்படுகிறது.(30) இவ்வாறே ஏழு சரஸ்வதிகளையும், அவர்களின் பெயர் வரிசையில் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். மேலும் நான் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்படும் அந்தப் புனிதமான தீர்த்தம் குறித்தும் உனக்குச் சொல்லிவிட்டேன்.(31)
இப்போது இளமையில் இருந்தே பிரம்மச்சரிய வாழ்வுமுறையை ஏற்று வாழ்ந்த மங்கணகரின் அருஞ்செயலைக் குறித்துக் கேட்பாயாக. அவர், (ஒரு நாள்) ஆற்றில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தபோது,(32) களங்கமற்ற அங்கங்கள் மற்றும் அழகிய புருங்களைக் கொண்ட ஒரு பெண், திறந்த மேனியுடன் அந்நதியில் நீராடிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டதும், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்முனிவரின் உயிர்நீர் சரஸ்வதியில் {சரஸ்வதி நதியில்} விழுந்தது.(33) அந்தப் பெரும் தவசி அஃதை எடுத்து தனது மண்குடத்திற்குள் வைத்தார். அந்தப் பாத்திரத்திற்குள் வைக்கப்பட்ட அந்த உயிர்நீர் ஏழுபகுதிகளாகப் பிரிந்தது.(34) அந்த ஏழு பகுதிகளில் இருந்து ஏழு முனிவர்கள் பிறந்தனர். அவர்களில் இருந்து (நாற்பத்தொன்பது) மருத்துக்கள் தோன்றினர். அந்த ஏழு முனிவர்களும், வாயுவேகன், வாயுபலன் வாயுஹன், வாயுமண்டலன்,(35) வாயுஜாதன் {வாயுஜ்வாலன்}, வாயுரேதஸ், பெரும் சக்தி கொண்ட வாயுசக்கிரன் எனப் பெயரிடப்பட்டனர். இவ்வாறே பல்வேறு மருத்துக்களின் தந்தைமார் தோன்றினர்.(36)
அந்தப் பெரும் முனிவரின் நடத்தை குறித்ததும், பூமியில் மிக அற்புதமானதும், மூவலங்களாலும் நன்கு அறியப்பட்டதுமான ஒரு ஆச்சரியமான காரியத்தை இப்போது கேட்பாயாக.(37) பழங்காலத்தில், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த மங்கணகர் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில், குசப்புல்லால் {தர்ப்பையால்} அவரது கை துளைக்கப்பட்டது. அதன்பேரில் அந்தக் காயத்தில் இருந்து (சிவப்பான இரத்தம் வராமல்) காய்கறிச்சாறு {சாகரசம் - மூலிகைச்சாறு} வந்தது.(38) அந்த மூலிகைச் சாற்றைக் கண்ட அந்த முனிவர், மகிழ்ச்சியால் நிறைந்து, அந்த இடத்தில் நர்த்தனம் {நடனம்} செய்தார். அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும், அவர் ஆடுவதைக் கண்டு, அவரது சக்தியால் மயக்கமடைந்து ஆடத் தொடங்கின.(39)
அப்போது பிரம்மனின் தலைமையிலான தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும் மகாதேவனிடம் சென்று, ஓ! மன்னா, அந்த (மங்கணக) முனிவரின் செயலைக் குறித்துச் சொன்னார்கள். அவர்கள் அவனிடம் {மகாதேவனிடம்}, "ஓ! தேவா, அம்முனிவரை ஆடுவதிலிருந்து தடுப்பதே உனக்குத் தகும்" என்றனர்.(40) பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் அம்முனிவரைக் கண்ட மகாதேவன் {சிவன்}, தேவர்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில், அவரிடம் {மங்கணகரிடம்},(41) "ஓ! பிராமணரே, உமது கடமைகளைக் குறித்த அறிந்த நீர் ஏன் இவ்வாறு நர்த்தனம் செய்கிறீர்? ஓ! தவசியே, ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, அறப்பாதையில் நடப்பவரும், தவசியுமான நீர் இவ்வாறு செயல்படும் அளவிற்கு என்ன முக்கியக் காரணத்தால் இவ்வளவு மகிழ்ச்சியை அடைந்திருக்கிறீர்?" என்று கேட்டான்.(42)
அம்முனிவர் {மங்கணகர்}, "ஓ! பாஹ்மணா {சிவனே}[1] என் காயத்தில் இருந்து மூலிகைச் சாறு பாய்வதை நீ காணவில்லையா? ஓ! தலைவா, இதைக் கண்டே நான் பெரும் மகிழ்ச்சியில் நர்த்தனம் செய்கிறேன்" என்றார்.(43) அந்தத் தேவன், அதிக விருப்பத்தால் மயங்கியிருந்த அந்த முனிவரிடம் சிரித்துக் கொண்டே, "நான் இஃதில் எந்த அதிசயத்தையும் காணவில்லை. என்னைப் பார்ப்பீராக" என்றான்.(44) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான மகாதேவன், அந்த முதன்மையான முனிவரிடம் இதைச் சொல்லி, தன் விரல்களின் நுனியைக் கொண்டு தன் கட்டைவிரலை அடித்தான்.(45) அதன்பேரில், ஓ! மன்னா, அக்காயத்தில் இருந்து சாம்பலும், வெண்பணியும் வெளிவந்தன. ஓ! ஏகாதிபதி, இதைக் கண்ட அம்முனிவர் நாணமடைந்து, அந்தத் தேவனின் காலில் விழுந்தார்.(46) வந்தது மகாதேவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அவர் அறிந்து கொண்டார்
[1] இங்கே மங்கணகர் சிவனை "பிராமணரே" என்று அழைக்கிறார். கங்குலியின் பதிப்பில் Bhahmana என்றே இருக்கிறது. இருப்பினும், கும்பகோணம் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இது பிராமணரே என்றே இருக்கிறது. ஒரு வேளை சிவன் பிராமண வேடத்தில் வந்திருக்கலாம்.
ஆச்சரியத்தால் நிறைந்த அவர்{மங்கணகர்}, "பெரியவனும், பரம்பொருளுமான ருத்ரனையன்றி நீ வேறு எவனுமில்லை என நான் நினைக்கிறேன்.(47) ஓ! திரிசூலபாணியே, தேவர்களும், அசுரர்களும் அடங்கிய இந்த அண்டத்தின் புகலிடம் நீயே. இந்த அண்டத்தைப் படைத்தவன் நீயே என ஞானியர் சொல்கின்றனர்.(48) அண்ட அழிவின் {பிரளயத்தின்} போது, மீண்டும் அனைத்தும் உன்னுள் நுழைகின்றன. தேவர்களாலேயே அறியப்பட முடியாதவனான உன்னை நான் மற்றும் அவ்வாறு அறிந்து கொள்வேன்?(49) இந்த அண்டத்தில் உள்ள வடிவங்கள் அனைத்தும் உன்னில் தெரிகின்றன. ஓ! பாவமற்றவனே, பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் வரமருள்பவனான உன்னையே வழிபடுகின்றனர்.(50) அனைத்தும் நீயே. தேவர்களைப் படைத்தவன் நீயே, அவர்கள் படைக்கப்படக் காரணமானவனும் நீயே. தேவர்கள் தங்கள் காலத்தை மகிழ்ச்சியாகவும், முற்றிலும் அச்சமற்ற நிலையிலும் கடத்துவது உன் அருளாலேயே" என்றார். இவ்வாறு அந்த முனிவர் மகாதேவனைத் துதித்து வணங்கினார்.(51)
மேலும், "ஓ! தேவா, நான் வெளிப்படுத்திய இந்த மிக அற்பமான பணிவின்மை என் தவத்தகுதியை அழித்துவிட வேண்டாம். இதற்காக நான் உன்னிடம் வேண்டுகிறேன்" என்று கேட்டார்.(52) அந்தத் தேவன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், மீண்டும் அவரிடம், "ஓ! பிராமணரே, என் அருளால் உமது தவத்தகுதி ஆயிரம் மடங்காக அதிகரிக்கட்டும். நான் எப்போதும் உம்மோடு இந்த ஆசிரமத்தில் வசித்திருப்பேன்.(53) சப்த சாரஸ்வதம் எனும் இந்தத் தீர்த்தத்தில் என்னை வழிபடும் ஒரு மனிதனால், இவ்வுலகிலும் {இம்மையிலும்}, அடுத்தவுலகிலும் {மறுமையிலும்} அடையமுடியாதது எதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒருவன் இறந்ததும் (சொர்க்கத்தில்) சாரஸ்வதம் என்றழைக்கப்படும் பகுதிக்குச் {சாரஸ்வதலோகத்துக்குச்} செல்வான் என்பதில் ஐயமில்லை" என்றான் {சிவன்}.(54) இதுவே, அபரிமிதமான சக்தி கொண்டவரான மங்கணகரின் வரலாறாகும். அவர் சுகன்யையிடத்தில் காற்றுத் தேவனால் {வாயுவால்} பெறப்பட்ட மகனாவார்" {என்றார் வைசம்பாயனர்}[2].(55)
----------------------------------------------------------------------------------------------------[2] சரஸ்வதி ஆற்றின் படம் ஜிஜித் நடுமுறி ரவி Jijith Nadumuri Ravi அவர்களால் http://indiafacts.org/yamuna-study-links-sarasvati-findings/ என்ற சுட்டியில் செய்யப்பட்ட ஆய்வை ஒட்டியும், ஆங்கிலத்தில் அவர் கொடுத்திருக்கும் வரைபடங்களை ஒட்டியும் மீண்டும் தமிழில் உத்தேசமாக வரையப்பட்டதாகும்.
சல்லிய பர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள்: 55
ஆங்கிலத்தில் | In English |