Mahodara and Usanga Munis! | Shalya-Parva-Section-39 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 8)
பதிவின் சுருக்கம் : கபாலமோசனத் தீர்த்தத்தை அடைந்த பலராமன்; முனிவர் மஹோதரரின் வரலாறு; தசரதராமன் வெட்டிய ராட்சசனின் தலை; மஹோதரர் விடுபட்டது; ருசங்கு முனிவரின் தீர்மானம்; பிருதூதகத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனான ராமன் {பலராமன்}, அங்கே {சப்தசாரஸ்வதத்தில்} ஓரிரவைக் கழித்து, அந்தத் தீர்த்தத்தில் வசிப்போரை வழிபட்டு, மங்கணகரிடம் தான் கொண்ட மரியாதையைக் காட்டினான்.(1) கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரன் {பலராமன்}, செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்து, முனிவர்களால் வழிபடப்பட்டு அந்த இரவை அங்கே கடத்தினான்.(2) காலையில் எழுந்து தவசிகள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட அவன் {பலராமன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, புனித நீரைத் தீண்டி பிற தீர்த்தங்களை நோக்கி வேகமாகப் புறப்பட்டான்.(3)
பலதேவன் பிறகு உசனஸ் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தத்துக்குச் சென்றான். அது கபாலமோசனம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் (தசரதனின் மகனான) ராமன், ஒரு ராட்சசனைக் கொன்று, அவனது தலையைப் பெரும் தொலைவில் எறிந்தான். அந்தத் தலையானது, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மஹோதரர் என்ற பெயருடைய பெரும் தவசி ஒருவரின் தொடையில் விழுந்து, அதனுடன் ஒட்டிக் கொண்டது {தொடையைக் கவ்விக் கொண்டது}. அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்}, அந்தத் தீர்த்தில் நீராடி, அந்தச் சுமையில் இருந்து விடுபட்டார். உயர் ஆன்ம கவி (சுக்கிரன்) இங்கே தன் தவத்தைச் செய்துள்ளார்.(4,5) அங்கேதான் (சுக்கிரனின் பெயரால் அறியப்படும்) அரசியல் மற்றும் நெறிகள் ஆகியவற்றின் மொத்த அறிவியலும் அவருக்கு {சுக்கிரனுக்கு} உள்ளொளியில் தோன்றியது. சுக்கிரன் அங்கே வசித்தபோது, (தேவர்களுடன்) தைத்திய தானவப் போரைக் குறித்துத் தியானித்தார்.(6) தீர்த்தங்களில் முதன்மையான அந்தத் தீர்த்தத்திற்கு வந்த பலதேவன், ஓ! மன்னா, உயர் ஆன்ம பிராமணர்களுக்கு முறையாகத் தானமளித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(7)
பலராமன் |
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "(ராட்சசன் தலையிடமிருந்து) அந்தப் பெரும் முனிவர் {மஹோதரர்} விடுபட்ட இடம் கபாலமோசனம் என்று ஏன் அழைக்கப்படுகிறது? எந்தக் காரணத்திற்காக, எவ்வாறு அந்தத் தலை அவரிடம் ஒட்டிக் கொண்டது" என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முன்பொருசமயம், ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, (தசரதன் மகனான) உயர் ஆன்ம ராமன், ராட்சசர்களைக் கொல்லும் விருப்பத்தோடு தண்டக வனத்தில் வாழ்ந்தான்.(9) ஜனஸ்தானத்தில் அவன் அந்தத் தீய ஆன்மா கொண்ட ராட்சசனின் தலையைப் பெரும் கூர்மை கொண்ட ஒரு கத்தித் தலைக் கணையால் வெட்டினான். அந்தத் தலையானது ஆழ்ந்த கானகத்தில் சென்று விழுந்தது.(10) மஹோதரர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது (ஆகாயத்தின் ஊடாக) வந்த அந்தத் தலை அவரது தொடையில் விழுந்தது. ஓ! மன்னா, அவரது தொடையைத் துளைத்து, அதனுடன் ஒட்டிக் கொண்டு அங்கேயே நீடித்திருந்தது.(11) அந்தத் தலை இவ்வாறு அவரது தொடையில் ஒட்டிக் கொண்டதன் விளைவால், பெரும் ஞானம் கொண்ட அந்தப் பிராமணரால் (மஹோதரரால்} தீர்த்தங்களுக்கும், பிற புண்ணியத்தலங்களுக்கும் (எளிதாகச்) செல்ல முடியவில்லை.(12) பெரும் வலியால் பீடிக்கப்பட்டும், தொடையில் அழுகிய ஊனீர் வழிந்து கொண்டும் அவர் {மஹோதரர்} பூமியில் உள்ள தீர்த்தங்கள் அனைத்திற்கும் (ஒன்றன்பின் ஒன்றாகச்) சென்றார் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(13)
அவர் {மஹோதரர்} ஆறுகள் அனைத்திற்கும், பெருங்கடலுக்கும் கூடச் சென்றார். (எந்த நிவாரணத்தையும் காணாத) அந்தப் பெரும் தவசி, தூய ஆன்மாக்களைக் கொண்ட முனிவர்கள் பலரிடம் தனது பாடுகளைக் குறித்தும்,(14)அனைத்துத் தீர்த்தங்களில் நீராடியும் தான் வேண்டிய நிவாரணத்தை அடைய முடியாதது குறித்தும் பேசினார். அப்போது அந்த முதன்மையான பிராமணர், அந்தத் தவசிகளிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைக் கேட்டார்.(15) சரஸ்வதியில், முதன்மையான தீர்த்தமாக அமைந்திருப்பதும், அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கவல்லதும், உசனாஸம் என்ற பெயரில் அறியப்படுவதும், (தவ) வெற்றியை அடைய சிறந்த இடமுமான அந்தத் தீர்த்தத்தைக் குறித்துக் கேள்விப்பட்டார்.(16) பிறகு அந்த ஔசனஸ {உசனஸ} தீர்த்தத்திற்குச் சென்ற அந்தப் பிராமணர் அங்கே அதன் நீரில் நீராடினார். அதன் பேரில் அந்த ராட்சசனின் தலையானது, அவனது தொடையை விட்டகன்று நீரில் விழுந்தது.(17) அந்த (உயிரில்லா) தலையிடம் இருந்து விடுபட்ட அந்த முனிவர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தார். அந்தத் தலையைப் பொறுத்தவரால், அஃது அந்த நீரில் தொலைந்து போனது.(18)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, ராட்சசனின் தலையிடம் இருந்து விடுபட்ட அந்த மஹோதரர், தூய்மையாக்கப்பட்ட ஆன்மாவோடும், தன் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டும், வெற்றியை அடைந்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பினார்.(19) இவ்வாறு விடுபட்ட அந்தப் பெரும் தவசி, தன் புனிதமான ஆசிரமத்திற்குத் திரும்பியதும், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் குறித்துப் பேசினார்.(20) அங்கே கூடியிருந்த முனிவர்கள், அவரது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தீர்த்தத்திற்குக் கபாலமோசனம் என்ற பெயரை அளித்தனர்.(21) அந்தப் பெரும் முனிவர் மஹோதரர், மீண்டும் அந்த முதன்மையான தீர்த்தத்திற்கு {ஔசனஸம் [அ] உசனஸம் என்ற தீர்த்ததிற்குச்} சென்று, அதன் நீரைப் பருகி, பெரும் தவ வெற்றியை அடைந்தார்.(22)
அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைத் தானமளித்து, அவர்களை வழிபட்ட பிறகு, ருசங்குவின் {உசங்குவின்} ஆசிரமத்திற்குச் சென்றான்.(23) முன்பொருகாலத்தில் அங்கே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்துவந்தார். அங்கேதான் (முன்பு க்ஷத்திரியராக இருந்த) பெரும் முனிவரான விஷ்வாமித்திரர் பிராமணரானார்.(24) அந்தப் பெரும் ஆசிரமம், அனைத்து விருப்பங்களுக்கும் கனியை அருளவல்லதாகும். ஓ! தலைவா, அஃது எப்போதும் முனிவர்கள் மற்றும் பிராமணர்களின் வசிப்பிடமாக இருந்தது.(25) பிராமணர்களால் சூழப்பட்டவனும், பேரழகனுமான பலதேவன் {பலராமன்}, முன்பொரு காலத்தில் ருசங்கு எங்குத் தன் உடலை விட்டாரோ அங்கே அந்த இடத்திற்குச் சென்றான்.(26)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, ருசங்கு, எப்போதும் கடுந்தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த ஒரு முதிய பிராமணராவார். தன் உடலைக் கைவிடத் தீர்மானித்த அவர், நீண்ட காலமாக அதுகுறித்து ஆலோசித்திருந்தார்.(27) பெரும் தவத்தகுதியைக் கொண்ட அவர், தன் மகன்கள் அனைவரையும் அழைத்து, நீரானது அபரிமிதமாக இருக்கும் இடத்திற்குத் தன்னைக் கொண்டு போகச் சொன்னார்.(28) தங்கள் தந்தை மிகவும் முதிர்ந்துவிட்டதை அறிந்த அந்தத் தவசிகள், அவரைச் சரஸ்வதியில் இருக்கும் ஒரு தீர்த்தத்திற்குக் கொண்டு சென்றனர்.(29) நூறு தீர்த்தங்களைக் கொண்டவளும், உலகுடன் தொடர்பில்லாத முனிவர்கள் வசித்த கரைகளைக் கொண்டவளுமான புனிதமான சரஸ்வதியிடம் தம் மகன்களால் கொண்டுவரப்பட்டவரும், கடுந்தவங்களைச் செய்தவரும், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களைக்} குறித்து அறிந்தவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அந்த நுண்ணறிவுமிக்கத் தவசி {ருசங்கு}, முறையான சடங்குகளின்படி அந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஓ! மனிதர்களில் புலியே, கடமையுணர்வுடன் தமக்காகக் காத்திருந்த தமது மகன்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகளை உற்சாகமாகச் சொன்னார்:(30,31) "புனிதமான மந்திரங்களை மனத்தில் ஓதிக் கொண்டிருக்கும்போது, அபரிமிதமான நீரைக் கொண்ட சரஸ்வதியின் வடகரையில் தன் உடலைக் கைவிடும் ஒருவன், மீண்டும் ஒருபோதும் இறப்பால் பீடிக்கப்படமாட்டான் {மறுபிறவி அடையமாட்டான்}" என்றார்.(32)
அற ஆன்மா கொண்ட பலதேவன் அத்தீர்த்தத்தின் {ருசங்கு} நீரைத் தீண்டி, அதில் நீராடி, பிராமணர்களிடம் அர்ப்பணிப்புக் கொண்டவனான அவன் அவர்களுக்கு மிகுதியான செல்வத்தைக் கொடுத்தான்.(33) பெரும் வலிமையையும், பெரும் ஆற்றலையும் கொண்ட அந்தப் பலதேவன், போற்றுதலுக்குரிய பெரும்பாட்டன் {பிரம்மன்} எங்கு லோகாலாகம் என்ற மலைகளை உண்டாக்கினானோ, கடும் நோன்புகளைக் கொண்டவரும், முனிவர்களில் முதன்மையானவருமான ஆர்ஷ்டிஷேணர் கடுந்தவங்களைச் செய்து எங்குப் பிராமணத் தன்மையை அடைந்தாரோ, அரசமுனியான சிந்துத்வீபனும், பெரும் தவசியான தேவாபியும், போற்றுதலுக்குரியவரும், கடுந்தவத்தையும், கடும் சக்தியையும் கொண்டவருமான சிறப்புமிக்க முனிவர் விஷ்வாமித்திரரும் எங்கு அதே நிலையை {பிராணத்தன்மையை} அடைந்தனரோ அந்தத் தீர்த்தத்திற்கு {பிருதூதகத் தீர்த்தத்திற்குச்} சென்றான்[1]" {என்றார் வைசம்பாயனர்}.(34-36)
------------------------------------------------------------------------------------------[1] இந்தச் சுலோகம் க்ஷத்திரியர்களான ஆர்ஷ்டிஷேணர், சிந்துத்வீபன் மற்றும் விஷ்வாமித்திரர் ஆகியோர் பிராமணராக மாறியதைக் குறிக்கிறது. மேலும் கங்குலியில் இந்தத் தீர்த்தத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. லோகாலோகம் என்ற மலைகளைப் பற்றிய குறிப்பே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்தத் தீர்த்தம் பிருதூதகத் தீர்த்தம் என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ளது.
சல்லிய பர்வம் பகுதி – 39ல் உள்ள சுலோகங்கள்: 36
ஆங்கிலத்தில் | In English |