Saraswati entered Naimisha! | Shalya-Parva-Section-37 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 6)
பதிவின் சுருக்கம் : விநாசனை,ஸுபூமிகை, கந்தர்வம், கர்க்கஸ்ரோதம், சங்கம், துவைதத்தடாகம், நாகதன்வானம் ஆகிய தீர்த்தங்களை அடைந்து, நீராடி, தானமளித்த பலராமன்; கர்க்கரைக் குறித்த சிறு விளக்கம்; நைமிசவனத்தில் நுழைந்த சரஸ்வதி; சரஸ்வதி நதிக்கரையை முழுமையாக ஆக்ரமித்த தவசிகள்; சரஸ்வதி ஆறு திடீரெனக் கிழக்கு நோக்கிப் பாய்ந்து, மீண்டும் மேற்கில் பாய்வதற்கான காரணம்; சப்தசாரஸ்வதத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சூத்திரர்கள் மற்றும் ஆபிரர்களின் மேல் சரஸ்வதி கொண்ட வெறுப்பினால் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து போனாளோ, அந்த விநாசனத்திற்குப் பலதேவன் {பலராமன்} சென்றான்.(1) இத்தகு வெறுப்பின் விளைவால், சரஸ்வதி அந்த இடத்தில் தொலைந்து போனவளாக இருப்பதால், ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் எப்போதும் அந்த இடத்தை விநாசனை {விநாசனம்} என்ற பெயரால் அழைக்கின்றனர்[1].(2) சரஸ்வதியின் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய வலிமைமிக்கப் பலதேவன், அதே ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுபூமிகத்திற்கு {சுபூமிகம் என்ற இடத்திற்குச்} சென்றான்.(3) நல்ல நிறத்தையும், அழகிய முகத்தையும் கொண்ட பல அப்சரஸ்கள், எந்த இடைவேளையும் இல்லாமல் தூய தன்மை கொண்ட விளையாட்டுகளில் அங்கே எப்போதும் ஈடுபடுகின்றனர்.(4)
[1] விநாசனை என்றால் மறைந்து போதல் என்பது பொருளாம்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {ஜனமேஜயா}, தேவர்களும், கந்தர்வர்களும், பிரம்மனின் ஓய்விடமான அந்தப் புனிதமான தீர்த்தத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கின்றனர்.(5) ஓ! மன்னா, கந்தர்வர்களும், பல்வேறு அப்சரஸ் இனங்களும் ஒன்றாகக் கூடி, தாங்கள் விரும்பியவாறு மகிழ்ச்சியாகத் தங்கள் நேரத்தைக் கடத்துவதை அங்குக் காணலாம்.(6) அங்கே தேவர்களும், பித்ருக்களும், தங்கள் மேல் பொழியப்படும் புனிதமான, மங்கலமான மலர்களுடன் இன்பமாக விளையாடுவர்,(7) அங்கே செடிகொடிகள் அனைத்தும் மலர்க்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ! மன்னா, சரஸ்வதியின் அற்புத ஆற்றங்கரையில், அப்சரஸுகளின் அழகிய விளையாட்டுக் களமாக அந்தத் தீர்த்தம் இருப்பதால், அது சுபூமிகை {ஸுபூமிகை} என்று அழைக்கப்படுகிறது.(8) மதுகுலத்தின் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடையளித்து, அந்தத் தெய்வீகப் பாடல்கள் மற்றும் இசைக்கருவிகளின் ஒலியைக் கேட்டான்.(9) மேலும் அவன், தேவர்கள், கந்தவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலரின் நிழல்களையும் அங்கே கண்டான்.
பிறகு அந்த ரோகிணியின் மகன் {பலராமன்}, கந்தர்வர்களின் தீர்த்தத்திற்குச் சென்றான்.(10) விஸ்வாவசுவின் தலைமையிலானவர்களும், தவத்தகுதியைக் கொண்டவர்களும் கந்தர்வர்கள் பலரும், மிக அழகானவகையில் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அங்கே இருக்கின்றனர்.(11) அங்கே பல்வேறு வகையான செல்வங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பசுக்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றையும் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்து,(12) பிராமணர்கள் பலருக்கு உணவளித்து, அவர்கள் விரும்பிய விலையுயர்ந்த பல பரிசுகளைக் கொடுத்து அவர்களை நிறைவு செய்த மதுகுலத்தின் பலதேவன் {பலராமன்}, பல பிராமணர்கள் சூழ, அவர்களால் துதிக்கப்பட்டபடியே அங்கிருந்து சென்றான்.(13)
ஒரே காது குண்டலத்தைக்[2] கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவன், கந்தர்வத் தீர்த்ததிலிருந்து புறப்பட்டு, கர்க்கஸ்ரோதம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற தீர்த்தத்திற்குச் சென்றான்.(14) அங்கே அந்தப் புனிதமான சரஸ்வதியின் தீர்த்தத்தில், வயதால் மதிப்புமிக்கவரும், தவத்துறவுகளால் ஆன்மத் தூய்மையடைந்தவருமான சிறப்புமிக்கக் கர்க்கர், காலம் மற்றும் அது செல்லும் பாதை, (ஆகாயத்தின்) ஒளிக்கோள்களுடைய மாறுதல்கள், மங்கல மற்றும் அமங்கல சகுனங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்தார்.(15,16) இந்தக் காரணத்தினாலே அந்தத் தீர்த்தம், அவரது பெயரையே கொண்டு கர்க்கஸ்ரோதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஓ மன்னா {ஜனமேஜயா}, சிறந்த நோன்புகளையும், உயர்ந்த அருளையும் கொண்ட முனிவர்கள், ஓ!தலைவா, காலத்தின் அறிவை அடைந்திருந்த கர்க்கருக்காக அங்கே எப்போதும் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}[3].(17) வெண்சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு அந்தத் தீர்த்தத்திற்குச் சென்ற பலதேவன், தூய ஆன்மாக்களைக் கொண்ட பல தவசிகளுக்குச் செல்வத்தை முறையாகத் தானமளித்தான்.(18)
[2] மூலத்தில் ஏக்குண்டலீ என்றிருப்பதாகவும், அதற்குச் சிறந்த காதுகுண்டலங்களைக் கொண்டவன் என்று பொருள் என்றும் கும்பகோணம் பதிப்பில் இருக்கிறது.[3] "கர்க்கர், பழங்கால இந்தியாவின் கொண்டாடப்பட்ட வானியல் வல்லுனரும், சோதிடக் கணியரும் ஆவார். அவர் விட்டுச் சென்றுள்ள பிறவிநூல்கள் {ஜாதகங்கள்}, காலவெளியின் {காலவரிசை குறித்த} முக்கிய அடையாளங்களைக் கிழக்கத்திய அறிஞர்களுக்குக் கொடுக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீல ஆடை உடுத்தியிருந்த அந்தச் சிறப்புமிக்கவன், பல வகைகளிலான விலையுயர்ந்த உணவுவகைகளைப் பிராணர்களுக்குக் கொடுத்த பிறகு, சங்கம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(19) பனைமரக் கொடியைக் கொண்ட அந்த வலிமைமிக்க வீரன், அங்கே அந்தச் சரஸ்வதியின் ஆற்றங்கரையில், மஹாசங்கம் என்று அழைக்கப்பட்டதும், மேருவைப் போல நெடிதுயர்ந்ததும், வெண்மைலையைப் போலத் தெரிந்ததும், பல முனிவர்களால் அடையப்பட்டதுமான ஒரு பெரும் மரத்தைக்[4] கண்டான்.(20) அங்கே ஆயிரக்கணக்கான யக்ஷர்களும், வித்யாதரர்களும், அளவிலா சக்தி கொண்ட ராட்சசர்களும், அளவிலா வலிமை கொண்ட பிசாசங்களும், சித்தர்களும் வசித்தனர்.(21) பிற வகை உணவுகளைக் கைவிட்ட அவர்கள் அனைவரும், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, நோன்புகளையும், ஒழுங்கு கட்டுப்பாடுகளையும் நோற்று, உரிய காலங்களில் அந்தக் கானகத் தலைவனின் {அந்தப் பெரும் மரத்தின்} கனிகளை உண்டு, மனிதர்களால் காணப்படாதவாறு, தனித்தனி குழுக்களாகத் திரிந்து வந்தனர். ஓ! மன்னா, அந்தக் கானகத்தின் ஏகாதிபதி {அந்தப் பெரும் மரம்} இதற்காகவே உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கிறான்.(22,23) சரஸ்வதியில் இருக்கும் அந்தத் தீர்த்தமானது {சங்கத் தீர்த்தம்} இக்காரணத்திற்காகவே புனிதமானதாகக்[5] கொண்டாடப்படுகிறது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனும், யதுகுலத்தின் புலியுமான அந்தப் பலதேவன், அந்தத் தீர்த்தத்தில் பல கறவை பசுக்களையும், தாமிர மற்றும் இரும்பு பாத்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பிற பாத்திரங்களையும் தானமளித்து, பிராமணர்களை வணங்கி, பதிலுக்கு அவர்களாளும் வணங்கப்பட்டான்.
[4] பிபேக்திப்ராயின் பதிப்பில், இஃது ஒரு மரமாகவோ, மலையாகவோ இருக்கலாம் என்றும், நாகம் என்ற சொல் இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டாகவும் பொருள் கொள்ளலாம் என்றும், இருப்பினும் இங்கே மரமே குறிப்பிடப்படுகிறது என்றும் அடிக்குறிப்பில் சுட்டிக்காட்டுகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "அந்த இடத்தில் ஸரஸ்வதி தீர்த்தமானது பாவனமென்று உலகத்தில் பிரசித்திப் பெற்றிருக்கிறது" என்றிருக்கிறது.
பிறகு அவன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, துவைதத் தடாகத்திற்கு {நைஸர்க்கிகத் தீர்த்தத்திற்குச்}[6] சென்றான்.(24,25) அங்கே வந்த பலன் {பலராமன்}, பல்வேறு வகைகளிலான ஆடைகளில் பல்வேறு வகையான தவசிகளைக் கண்டான். அவன், அதன் நீரில் நீராடி, பிராமணர்களை வழிபட்டான்.(26) மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்கு அபரிமிதமாகக் கொடையளித்த பலதேவன், பிறகு சரஸ்வதியின் தென் கரைவழியாகச் சென்றான்.(27)
[6] கும்பகோணப் பதிப்பில், இது நைஸர்க்கிகமென்கிற தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. மன்மதாநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது துவைதவனம் என்று சொல்லப்படுகிறது.
மங்கா மகிமையையும், வலிய கரங்களையும், அற ஆன்மாவையும் கொண்ட அந்தச் சிறப்புமிக்க ராமன் {பலராமன்}, அடுத்ததாக நாகதன்வானம் என்றழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் சென்றான்.(28) எண்ணற்ற பாம்புகள் நிறைந்த அது, பெரும் காந்தியைக் கொண்ட பாம்புகளின் மன்னன் வாசுகியின் வசிப்பிடமாகும். அங்கே பத்தாயிரத்து நான்கு முனிவர்கள் தங்கள் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருந்தனர்.(29) (பழங்காலத்தில்) அங்கே வந்த தேவர்கள், சிறந்த பாம்பான {நாகமான} வாசுகியை அனைத்துப் பாம்புகளின் அரசனாக நிறுவினர். ஓ! குரு குலத்தோனே, அவ்விடத்தில் பாம்புகளால் எந்த அச்சமும் கிடையாது.(30) பிறகு மதிப்புமிக்கப் பல பொருட்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்த பலதேவன், கிழக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அடுத்தடுத்த ஒவ்வொரு அடியிலும் தோன்றிய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புகழ்பெற்ற தீர்த்தங்களை அடைந்தான்.(31) அந்தத் தீர்த்தங்கள் அனைத்திலும் நீராடி, முனிவர்களால் சொல்லப்பட்ட நோன்புகளையும், நியமங்களையும் நோற்று, அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்து,(32) அங்கே தங்கள் வசிப்பிடங்களைக் கொண்ட தவசிகள் அனைவரையும் வணங்கிய பலதேவன், கிழக்குத்திசையில் சரஸ்வதி திரும்பும் இடத்தை அடைவதற்காக, காற்றின் செயல்பாட்டால் வழிநடத்தப்படும் மழைத்தாரைகளைப் போல அந்தத் தவசிகளால் சுட்டிக்காட்டப்பட்ட வழியில் சென்றான். அந்த நதியானது, நைமிசவனத்தில் வசிக்கும் உயர் ஆன்ம முனிவர்களைக் காண்பதற்காக அவ்வழியில் சென்றது.(33,34) எப்போதும் வெண்சந்தனக் குழம்பைப் பூசியிருந்தவனும், கதாயுதத்தைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான பலன் {பலராமன்}, ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} தன் பாதையை மாற்றிக் கொள்வதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(35)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, ஏன் சரஸ்வதி தன் பாதையைக் கிழக்குத் திசையை நோக்கி திருப்பிக் கொண்டாள்? ஓ! அத்வர்யுக்களுள் சிறந்தவரே, இது குறித்த அனைத்தையும் நீர் எனக்குச் சொல்வதே தகும்.(36) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {பலராமன்} எக்காரணத்தால் வியப்படைந்தான்? உண்மையில், ஆறுகளில் முதன்மையான அவள் {சரஸ்வதிதேவி} இவ்வாறு தன் பாதையை மாற்றிக் கொண்டது ஏன்?" என்று கேட்டான்.(37)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முன்பொரு காலத்தில், கிருதயுகத்தில், ஓ! மன்னா, நைமிச வனத்தில் வசிக்கும் தவசிகள் பனிரெண்டு வருடங்கள் நீடிக்கும் மகத்தான வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.(38) ஓ! மன்னா, அந்த வேள்விக்கு வந்த முனிவர்கள் பலராவர். முறையான சடங்குகளுடன் அந்த வேள்வியை நடத்தித் தங்கள் நாட்களைக் கழித்து வந்த பேரருளாளர்கள்,(39) நைமிசத்தில் நடந்த வேள்வியின் அந்தப் பனிரெண்டு வருடங்களையும் நிறைவு செய்து, தீர்த்தயாத்திரை {புனிதநீர்நிலைகளுக்குப் பயணம்} செய்யப் புறப்பட்டனர்.(40) ஓ! மன்னா, முனிவர்களின் எண்ணிக்கையின் விளைவால், சரஸ்வதியின் தென்கரையில் இருந்த தீர்த்தங்கள் அனைத்தும், நகரங்களைப் போலத் தோன்றின.(41) ஓ! மனிதர்களில் புலியே, அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர்கள், தீர்த்தங்களின் தகுதிகளை {புண்ணியங்களை} அனுபவிக்கும் ஆவலின் விளைவால் சமந்தபஞ்சகம் வரை அந்நதியின் கரைகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டனர்.(42)
வேள்வி நெருப்புகளில் ஆகுதிகளை ஊற்றிக் கொண்டிருந்த தூய ஆன்மா கொண்ட முனிவர்களால் ஓதப்பட்ட வேதப் பேரொலியானது அந்த மொத்தப் பகுதிகளிலும் எதிரொலிப்பதாகத் தெரிந்தது.(43) அந்த உயர் ஆன்ம தவசிகளால் தெளிந்த நெய்யானது ஆகுதியாக ஊற்றப்பட்டதன் விளைவாகச் சுடர்விட்ட ஹோம நெருப்புகளால் அந்த ஆறுகளில் முதன்மையானவள் மிக அழகானவளாகத் தெரிந்தாள்.(44) வாலகில்யர்கள், அஸ்மகுட்டர்கள், தந்தோலூகலினர்கள், சம்பிராக்ஷியானர்கள்,[7] பிற தவசிகள்,(45) காற்றை உண்டு வாழ்ந்தவர்கள், நீரை உண்டு வாழ்ந்தவர்கள், மரங்களின் உலர்ந்த இலைகளை உண்டு வாழ்ந்தவர்கள், பல்வேறு வகையான நோன்புகளை நோற்றவர்கள், படுக்கையைத் துறந்து வெறுந்தரையை ஏற்றுக் கொண்டவர்கள்,(46) ஆகியோர் அனைவரும் சரஸ்வதிக்கு அருகில் இருந்த அந்த இடங்களுக்கு வந்தனர். அவர்கள், மந்தாகினி என்றழைக்கப்படும் தெய்வீக ஓடையை (தங்கள் இருப்பால்) அழகாக்கிய தேவர்களைப் போல அந்த முதன்மையான ஆற்றை {சரஸ்வதி ஆற்றை} மிக அழகானதாக்கினார்கள்.(47)
[7] "வாலகில்யர்கள் என்போர் கட்டைவிரல் அளவுள்ளவர்கள், அஸ்மகுட்டர்கள் என்போர், ஒருவேளை தங்கள் தானியங்களை இரு கற்களை மட்டுமே பயன்படுத்தி உமி நீக்கிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். தந்தோலூகலினர்கள் என்பவர்கள் உமிநீக்கப்படாத தானியங்களைத் தங்கள் பற்களைக் கொண்டே உமிநீக்கி உண்பவர்கள், நான்காவது வகையினரைக் குறித்து எனக்கு ஏதும் தெரியவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேள்விகளைச் செய்யத் தங்களை அர்ப்பணித்தவர்களான முனிவர்கள் நூற்றுக்கணக்கில் அங்கே வந்தனர். எனினும், உயரந்த நோன்புகளைப் பயில்பவர்களான அவர்கள் சரஸ்வதி ஆற்றங்களையில் போதுமான இடத்தை அடைவதில் தவறினார்கள்.(48) அவர்கள், தங்கள் புனிதமான நூல்களை {யஜ்ஞோபவீதங்களைக்} கொண்டு, நிலத்தின் சிறு பகுதிகளை அளந்து தங்கள் அக்னிஹோத்ரங்களையும், பல்வேறு பிற சடங்குகளையும் செய்தனர்.(49) தங்கள் சடங்குகளைச் செய்வதில் (அகன்ற தீர்த்தம் வேண்டி) கவலையில் மூழ்கியிருந்த பெரும் எண்ணிக்கையிலான முனிவர்களை அந்தச் சரஸ்வதி கண்டாள். அவர்களின் நிமித்தமாகவே,(50) புனித தவத்தைச் செய்யும் அந்த முனிவர்களிடம் கருணை கொண்ட அந்த முதன்மையான ஓடை {சரஸ்வதி}, ஓ! ஜனமேஜயா, அவ்விடங்களில தனக்கான பல்வேறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டாள் {திரும்பினாள்}.(51) இவ்வாறு ஆறுகளில் முதன்மையான அந்தச் சரஸ்வதி, அவர்களின் நிமித்தமாகத் தன் வழியைத் திருப்பிக் கொண்டு, மீண்டும் மேற்கு திசை நோக்கிப் பாய்ந்தாள்.(52)
{அப்படி அவள் மீண்டும் திரும்பும்போது}, "இந்த முனிவர்களின் வருகை பலனற்றுப்போவதைத் தவிர்த்துவிட்டேன், இனி நான் செல்ல வேண்டும்" என்று அவளே சொல்வது போல இருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்த அற்புதம் நிறைந்த அருஞ்செயல் அந்தப் பெரும் நதியால் அங்கே நிறைவேற்றப்பட்டது.(53) இவ்வாறே, ஓ! மன்னா, அந்த நீர்க்கொள்ளிடங்கள் நைமிசத்தில் {நைமிசவனத்தில்} உண்டாகின. ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அங்கே அந்தக் குருக்ஷேத்திரத்தில் நீயும் மகத்தான வேள்விகளையும், சடங்குகளையும் செய்வாயாக.(54) நீர்க்கொள்ளிடங்கள் பலவற்றையும், அந்த முதன்மையான நதி தன் பாதையைத் திருப்பிக் கொண்டதையும் கண்ட அந்த உயர் ஆன்ம ராமன் {பலராமன்} ஆச்சரியத்தால் இதயம் நிறைந்தான்.(55) யது குலத்தை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் அவன் {பலராமன்}, அத்தீர்த்தங்களில் முறையாக நீராடி, செல்வத்தையும், மகிழ்ச்சிக்குரிய பல்வேறு பிற பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்து,(56) மேலும் அவர்களுக்குப் பல்வேறு வகைகளிலான உணவையும், அவர்களின் விருப்பத்துக்குகந்த பல்வேறு பொருட்களையும் கொடுத்தான்.
அந்த மறுபிறப்பாளர்களால் {பிராமணர்களால்} வழிபடப்பட்ட அந்தப் பலன் {பலராமன்}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, சரஸ்வதியிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் முதன்மையான (சப்த சாரஸ்வதம் என்ற) தீர்த்ததிற்குப் புறப்பட்டான். இறகு படைத்த எண்ணற்ற உயிரினங்கள் அங்கே தங்கள் இல்லங்களைக் கொண்டுள்ளன. அங்கே அந்தச் சரஸ்வதி ஆற்றங்கரையில் பதரி {இலந்தை}, இங்குதம், காஸ்மாரியம் {ஸ்யாமாகம்}, பிலக்ஷம், அஸ்வதம் {அரசம்}, விபிதகம் {தான்றி}, கக்கோலம் {கங்கோலம்}, பலாசம், கரீரம் {இளமூங்கில்}, பீலு ஆகிய மரங்களும், பல்வேறு பிறவகை மரங்களும் நிறைந்திருந்தன.(57-59) மேலும் அது கரூசகம், வில்வம், ஆம்ராதகம், அதிமுக்தகம், காஷந்தம், பாரிஜாதம் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(60) காட்சிக்கு இனிமையானதாக, மிக அழகியதாக இருந்த அதில் வாழைத் தோப்புகள் நிறைந்திருந்தன. காற்றையுண்டு வாழும் சிலர், நீரில் வாழும் சிலர், கனியில் வாழும் சிலர், இலைகளில் வாழும் சிலர், உமிநீக்கப்படாத தானியங்களை வெறும் கற்களின் துணை கொண்டு உமி நீக்கி உண்டு வாழும் சிலர் வானேயர்கள் என்று அழைக்கப்பட்ட சிலர் ஆகியோரைக் கொண்ட பல்வேறு தவசிகள் வந்து செல்லும் இடமாக அஃது இருந்தது. மேலும் அது வேதமோதலை எதிரொலித்தபடியே பல்வேறு வகையான விலங்குகள் நிறைந்ததாக இருந்தது.(61-62) அப்பழுக்கற்றவர்களும், அறத்திற்கு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மனிதர்களுக்குப் பிடித்தமான இடமாக அஃது இருந்தது. கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட பலதேவன், பெரும் தவசியான மங்கணகர் எங்குத் தன் தவத்தைச் செய்து வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டாரோ அந்தச் சப்தசாரஸ்வதம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்தை வந்தடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(63)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 37 ல் சுலோகங்கள் : 63
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 37 ல் சுலோகங்கள் : 63
ஆங்கிலத்தில் | In English |