Sacred bath in tirthas! | Shalya-Parva-Section-49 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “'அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)
அங்கே முறையாக நீராடிய பலதேவன், சிறந்த உணவும் மற்றும் ஆடைகளைத் தானமளித்துப் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன், ராமரின் {பரசுராமரின்} பெயரால் அழைக்கப்பட்டதும், மங்கலமானதுமான முதன்மையான தீர்த்தத்திற்குச் சென்றான்.(6) உயர்ந்த அருளையும், பெரும் தவத் தகுதியையும் கொண்ட பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, மீண்டும் மீண்டும் பூமியைப் பணியச் செய்து, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்றார்.(7) (அத்தகு அருஞ்செயல்களைச் செய்த) ராமர், முனிவர்களில் சிறந்தவரும், தன் ஆசானுமான கசியபரின் துணையுடன் ஒரு வாஜபேய வேள்வியையும், நூறு குதிரை வேள்விகளையும் அந்தத் தீர்த்தத்தில்தான் செய்தார். அங்கே ராமர் {பரசுராமர்}, தன் ஆசானுக்குக் கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் வேள்விக்கூலியாகக் கொடுத்தார்.(8) ஓ! ஜனமேஜயா, அந்தப் பெரும் ராமர் {பரசுராமர்}, அங்கே முறையாக நீராடி, பிராமணர்களுக்குத் தானமளித்து அவர்களை வழிபட்டார்.(9) அவர், பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், யானைகள், பெண் பணியாட்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகிய பல்வேறு தானங்களை அளித்த பிறகு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.(10)
தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் வந்து போகும் இடமானதும், புனிதமானதுமான அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடிய பிறகு, பலதேவன் {பலராமன்}, அங்கே இருந்த தவசிகளை முறையாக வழிபட்டு, யமுனா என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(11) ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், பெரும்பிரகாசத்தைக் கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனும், அதிதியின் மகனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் ராஜசூய வேள்வியைச் செய்தான்.(13) ஓ!மன்னா {ஜனமேஜயா}, போரில் மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களை அடக்கியவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் தன் மகத்தான வேள்வியைச் செய்தான். அந்த முதன்மையான வேள்வி தொடங்கியதும், மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.(14) வேள்விகளில் முதன்மையான (வருணனின்) ராஜசூயம் நிறைவடைந்ததும், ஓ! ஜனமேஜயா, க்ஷத்திரியர்களுக்கிடையில் ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(15)
எப்போதும் தயாளமாக இருப்பவனும், பலமிக்கவனுமான பலதேவன், அங்கே முனிவர்களை வழிபட்டு, தானத்தை விரும்பியோருக்கு பல தானங்களை அளித்தான்.(16) மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனும், காட்டு மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீரனுமான அந்தப் பலதேவன் அடுத்ததாக ஆதித்தியம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(17) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, போற்றுதலுக்குரியவனும், பெருங்காந்தியைக் கொண்டவனுமான சூரியன் அங்கே ஒரு வேள்வியைச் செய்து, (அண்டத்தின்) ஒளிக்கோள்கள் அனைத்தின் மீதான அரசுரிமையையும், தனக்கான பெரும் சக்தியையும் அடைந்தான்.(18)
அந்த ஆற்றின் {சரஸ்வதி ஆற்றின்} கரையில் அமைந்துள்ள அந்தத் தீர்த்தத்தில், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள்,(19) தீவில் பிறந்தவர் (வியாசர்), சுகர், மதுசூதனனான கிருஷ்ணன், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா},(20) ஆயிரக்கணக்கான பலர் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோர் எப்போதும் வசிக்கின்றனர். உண்மையில், பழங்காலத்தில் விஷ்ணுவானவன், மது, கைடபன் என்ற அசுரர்கள் இருவரைக் கொன்று, மங்கலமானதும், புனிதமானதுமான அந்தச் சரஸ்வதியின் தீர்த்தத்தில் நீராடி {பாவம் விலகுவதற்காகத்} தனக்கான தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(21,22) அற ஆன்மா கொண்டவரான தீவில் பிறந்தவரும் ((துவைபாயனரான} வியாசரும்) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பெரும் யோக சக்திகளையும், உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(23) பெரும் தவத் தகுதியை உடையவரான முனிவர் அசித தேவலரும், உயர்ந்த யோகத் தியானத்தில் தன் ஆன்மாவை நிலைக்கச் செய்து அந்தத் தீர்த்தத்தில் நீராடியே பெரும் யோக சக்திகளை அடைந்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(24)
----------------------------------------------------------------------------------------------------சல்லிய பர்வம் பகுதி – 49 ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |