Sruvavati and Arundhati!! | Shalya-Parva-Section-48 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : பதரபாசனத் தீர்த்தத்திற்குச் சென்ற பலராமன்; பரத்வாஜரின் மகளான சுருவாவதி, இந்திரனை நினைத்துக் கடுந்தவம் இயற்றியது; அருந்ததியிடம் இலந்தைப் பழங்களைச் சமைத்துத் தரக் கேட்ட சிவன்; இமயத்தில் தவம்செய்வோர் அடையும் புண்ணியத்தை அடைந்த அருந்ததி; பதரபாசனத் தீர்த்தத்தின் மகிமை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “(முன்பு சொன்னதைப் போலவே) ராமன் {பலராமன்}, தவசிகள் மற்றும் சித்தர்கள் பலரும் வசிக்கும் பதரபாசனம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான். அங்கே, பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவளும், சுருவாவதி {சுருதாவதி} என்ற பெயரைக் கொண்டவளுமான பரத்வாஜரின் மகள் கடுந்தவம் செய்து கொண்டிருந்தாள். அவள், ஒரு பிரம்மச்சாரினியின் வாழ்வை நோற்று வந்த கன்னிகையாவாள்.(1,2) அந்த அழகிய காரிகை {சுருதாவதி}, தேவர்களின் தலைவனை {இந்திரனைத்} தன் கணவனாக அடையும் விருப்பத்தால், பல்வேறு வகை நோன்புகளை நோற்று, கடுந்தவத்தைப் பயின்று வந்தாள்.(3) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பெண்கள் பயில மிகக் கடுமையான பல்வேறு நோன்புகளைத் தொடர்ச்சியாக அவள் நோற்றாள். பல வருடங்களும் கடந்து சென்றன.(4) இறுதியாக, பகனைத் தண்டித்தவனான போற்றுதலுக்குரியவன் {இந்திரன்}, அவளது அந்நடத்தை மற்றும் தவம் ஆகியவற்றின் விளைவாக அவளிடம் மனம் நிறைந்து, அவளை உயர்வாகக் கருதினான்.(5)
பலமிக்க அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவரான உயர் ஆன்ம வசிஷ்டரின் வடிவத்தை ஏற்று, {சுருவாவதி இருந்த} அந்த ஆசிரமத்திற்கு வந்தான்.(6) தவசிகளில் முதன்மையானவரும், கடுந்தவங்களைக் கொண்டவருமான வசிஷ்டரைக் கண்ட அவள், ஓ! பாரதா {ஜனமேஜயா}, தவசிகளால் நோற்கப்படும் முறையான சடங்குகளின் படி அவரை வழிபட்டாள்.(7) நோன்புகளை அறிந்தவளும், மங்கலமானவளும், இனிய பேச்சுடையவளுமான அந்தக் காரிகை, அவரிடம் {வசிஷ்டரின் வடிவத்திலிருந்த இந்திரனிடம்}, "ஓ! போற்றுதலுக்குரியவரே, ஓ! தவசிகளில் புலியே, ஓ! தலைவா, உமது ஆணைகளை எனக்குச் சொல்வீராக.(8) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, என் வலிமைக்குத்தக்கவாறு நான் உமக்குத் தொண்டாற்றுவேன். எனினும், சக்ரன் மீது கொண்டுள்ள மதிப்பின் {பக்தியின்} விளைவாக நான் {திருமணம் செய்து கொள்வதற்காக} உமக்கு என் கரத்தைத் தர மாட்டேன்.(9) என் நோன்புகள், நியமங்கள், கடும் தவம் ஆகியவற்றின் மூலம் மூவுலகங்களின் தலைவரான சக்ரனை, மனநிறைவு கொள்ளச் செய்வேன்" என்றாள்.(10)
அவளால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {இந்திரன்}, அவளது நோன்புகளை அறிந்து கொண்டு, சிரித்துக்கொண்டே அவள் மீது தன் கண்களைச் செலுத்தி, ஓ! பாரதா {ஜனமேஜயனிடம்}, அவளிடம் இனிமையாக,(11) "நீ கடும் வகையிலான தவத்தைப் பயில்கிறாய். ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே {சுருதாவதியே}, அதை நான் அறிவேன். ஓ! மங்கலமானவளே, உன் இதயத்தில் இருக்கும் நோக்கமும், ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, எதை அடைய நீ முயல்கிறாயோ, அதுவும் உன்னால் அடையப்படும். தவங்களாலாயே அனைத்தும் அடையப்படுகின்றன. அனைத்தும் தவங்களைச் சார்ந்தே இருக்கின்றன.(12,13) ஓ! அழகிய முகத்தைக் கொண்டவளே, தேவர்களுக்குச் சொந்தமான அருள் உலகங்கள் அனைத்தையும் தவங்களால் அடைய முடியும். பெரும் மகிழ்ச்சியின் வேராகத் தவங்களே இருக்கின்றன.(14) ஓ! மங்கலமானவளே, கடுந்தவங்களைச் செய்து, தங்கள் உடலைக் கைவிட்ட மனிதர்கள், தேவர்களின் நிலையை அடைகிறார்கள். இந்த என் வார்த்தைகளை மனத்தில் கொள்வாயாக.(15) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இப்போது நீ எனக்கு இந்த ஐந்து இலந்தைப்பழங்களையும் சமைத்து {பக்குவம் செய்து) தருவாயாக" என்றான் {வசிஷ்டரின் வடிவில் இருந்த இந்திரன்}.
{அசுரன்} பலனைக் கொன்றவனான போற்றுதலுக்குரியவன், இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட மந்திரங்களை மனத்தால் உரைப்பதற்காக அந்த ஆசிரமத்தின் அருகில் இருக்கும் சிறந்த தீர்த்தத்திற்குச் சென்றுவிட்டான். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {ஜனமேஜயா}, அந்தத் தீர்த்தமானது, இந்திரனின் பெயராலேயே மூன்று உலகங்களிலும் அறியப்படுகிறது.(16,17) உண்மையில், அந்தத் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, அந்தக் காரிகையின் {சுருவாவதியின்} அர்ப்பணிப்பைச் சோதிக்கும் காரியத்திற்காகவே அந்த இலந்தைப் பழங்களைச் சமைப்பதைத் தடுக்கும் வழியில் அவ்வாறு செயல்பட்டான்.(18) அந்தக் காரிகை, ஓ! மன்னா, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பேச்சைத் துறந்து, அதில் {சமைப்பதில்} கவனத்தை நிலைக்கச் செய்து, தன் பணியைச் செய்யத் தொடங்கி, களைப்பெதையும் உணராதவளாக அப்பணியைச் செய்து கொண்டிருந்தாள்.(19) ஓ! மன்னர்களில் புலியே, இவ்வாறே உயர்ந்த நோன்புகளைக் கொண்ட அந்தக் காரிகை, அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள். ஓ! மனிதர்களில் காளையே, தன் பணியில் அமர்ந்திருந்த அவளுக்கு, பகல்வேளை முடியப் போனாலும், மென்மையானதற்கான எந்த அறிகுறிகளையும் அந்த இலந்தைகள் காட்டவில்லை.(20)
அங்கே அவள் வைத்திருந்த எரிபொருள் {விறகு} அனைத்தும் எரிக்கப்பட்டுவிட்டது. எரிபொருளில்லாமல் நெருப்பு அணையப் போவதைக் கண்ட அவள் {சுருதாவதி}, தன் அங்கங்களையே எரிக்கத் தொடங்கினாள்.(21) அந்த அழகிய காரிகை முதலில் தன் கால்களை நெருப்புக்குள் நுழைத்தாள். அந்தப் பாவமற்ற காரிகை, தனது கால்கள் எரியும்போது அசையாமல் அமர்ந்திருந்தாள்.(22) அந்தக் களங்கமற்ற பெண், தன் கால்கள் எரிவதைக் கருத்தில் கொள்ளவே இல்லை. செய்வதற்குக் கடினமான அதை {அக்காரியத்தை}, (விருந்தினராக வந்த) அந்த முனிவருக்கு {வசிஷ்டரான இந்திரனுக்கு} நன்மை செய்யும் விருப்பத்தால் செய்தாள்.(23) வலி நிறைந்த அந்தச் செய்கையின் போது, அவளது முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அக்காரியத்தால் அவள் உற்சாகத்தையும் இழக்கவில்லை. நெருப்புக்குள் தன் அங்கங்களைத் திணித்த அவள், ஏதோ அவற்றைக் குளிர்ந்த நீருக்குள் முக்கியிருப்பதைப் போலப் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தாள்.(24) ஓ! பாரதா, "இந்த இலந்தைகளை நன்றாகச் சமைப்பாயாக" என்ற அம்முனிவரின் வார்த்தைகளை மட்டுமே அவள் தன் மனத்தில் சுமந்திருந்தாள்.(25)
அந்தப் பெரும் முனிவரின் வார்த்தைகளை மனத்தில் சுமந்த அந்த மங்கலமான காரிகை, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த இலந்தைகள் மென்மையாவதற்கு எந்த அறிகுறியையும் காட்டவில்லையெனினும் சமைத்துக் கொண்டேயிருந்தாள்.(26) போற்றுதலுக்குரிய அக்னி, அவளது கால்களை உண்டான் {எரித்தான்}. எனினும் இக்காரியத்தில் அந்தக் கன்னிகை சிறு வலியையும் உணரவில்லை.(27) மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, அவளது இச்செயல்பாட்டைக் கண்டு பெரிதும் மனநிறைவடைந்தான். பிறகு அவன், அந்தக் காரிகைக்குத் தன் சொந்த வடிவத்தை வெளிப்படுத்தினான்.(28)
அப்போது தேவர்களின் தலைவன் , கடும் நோன்புகளைக் கொண்ட அந்தக் கன்னிகையிடம் {இந்திரன் சுருவாவதியிடம்}, "உன் அர்ப்பணிப்பு, தவம் மற்றும் நோன்புகளால் நான் நிறைவடைந்தேன்.(29) எனவே, ஓ! மங்கலமானவளே{சுருதாவதியே}, நீ பேணிவளர்க்கும் விருப்பமானது நிறைவை அடையும். ஓ! அருளப்பட்டவளே, உன் உடலைத் துறந்து, சொர்க்கத்தில் நீ என்னோடு வாழ்வாய்.(30) இந்த ஆசிரமமானது, அனைத்துப் பாவங்களையும் அகற்றவல்லதாக உலகத்தில் முதன்மையான தீர்த்தமாக இருக்கும். ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, இது பதரபாசனம் என்ற பெயரில் அறியப்படும். இது மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டுப் பெரும் முனிவர்களால் புகழப்படும்.(31)
ஓ! மங்கலமானவளே {சுருதாவதியே}, பாவமற்றவளே, உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஒரு சந்தர்ப்பத்தில் ஏழு முனிவர்களும் இமயமலைக்குச் செல்லும் போது, (அவர்களில் ஒருவரின் {வசிஷ்டரின்} மனைவியான) அருந்ததியை இந்தத் தீர்த்தத்தில்தான் விட்டுச் சென்றனர்.(32) கடும் நோன்புகளைக் கொண்டோரான அந்த உயர்ந்த அருளாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கான கனிகளையும், கிழங்குகளையும் சேகரிக்கச் சென்றனர்.(33) தங்கள் வாழ்வாதாரத்தை அடைவதற்காக இமயமலையின் காடொன்றில் அவர்கள் வாழ்ந்து வந்தபோது, பனிரெண்டு வருடங்களுக்கு நீடித்த பஞ்சம் ஏற்பட்டது.(34) அந்தத் தவசிகள் தங்களுக்கென ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு, அங்கேயே வாழத் தொடங்கினர். அதேவேளையில் அருந்ததியானவள், (தான் விட்டுச் செல்லப்பட்ட அந்த இடத்திலேயே) கடுந்தவத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தாள்.(35) வரமளிப்பவனான முக்கண் தேவன் (மஹாதேவன்), கடும் நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அருந்ததியைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அங்கே வந்தான்.(36)
அந்தச் சிறப்புமிக்க மஹாதேவன், ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று, அவளிடம் வந்து, "ஓ! மங்கலமானவளே, நான் பிச்சையை விரும்புகிறேன்" என்றான்.(37) அதற்கு அந்த அழகிய அருந்ததி, அவனிடம், "ஓ! பிராமணரே, சேகரித்து வைத்திருந்த எங்கள் உணவு தீர்ந்துவிட்டது. இந்த இலந்தைகளை உண்பாயாயாக" என்றாள்.(38) மஹாதேவன், "ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவளே, இந்த இலந்தைகளைச் சமைப்பாயாக" என்று பதிலுரைத்தான். இந்த வார்த்தைகளுக்குப் பிறகு, அந்தப் பிராமணருக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவள் அந்த இலந்தைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.(39) கொண்டாடப்பட்டவளான அருந்ததியானவள், அந்த இலந்தைகளை நெருப்பிலிட்டு, (மஹாதேவனின் உதடுகளில் இருந்து) பல்வேறு அற்புதமான, அழகிய, புனிதமான உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். (ஏதோ அஃது ஒரு நாள் என்பதைப் போல) அந்தப் பனிரெண்டு வருட பஞ்சம் கழிந்துவிட்டது.(40)
உணவில்லாமல், சமைப்பதிலும், அந்த மங்கலமான உரைகளைக் கேட்பதிலும் ஈடுபட்டிருந்த அவளுக்கு {அருந்ததிக்கு}, அந்தப் பனிரெண்டு வருடங்களும், ஒரு நாளை போலக் கடந்து சென்றன.(41) பிறகு அந்த ஏழு முனிவர்களும் {சப்தரிஷிகளும்}, மலையில் இருந்து கனிகளை அடைந்து அந்த இடத்திற்குத் திரும்பி வந்தனர். போற்றுதலுக்குரிய மஹாதேவன், அருந்ததியிடம் மிகவும் நிறைவடைந்து, அவளிடம்,(42) "ஓ! அறமறிந்தவளே, இந்த முனிவர்களை முன்பு போலவே அணுகுவாயாக. உன் தவங்களாலும், நோன்புகளாலும் நான் நிறைவடைந்தேன்" என்றான்.(43) போற்றுதலுக்குரிய ஹரன், அப்போது தன் சொந்த வடிவை ஏற்று நின்று கொண்டிருந்தான். நிறைவடைந்தவனான அவன், அவர்களிடம் உன்னத நடத்தை கொண்ட அருந்ததியைக் குறித்து (இவ்வார்த்தைகளில்),(44) "மறுபிறப்பாளர்களே {பிராமணர்களே}, இந்த மங்கை ஈட்டியிருக்கும் தவத்தகுதியானது, இமயத்தின் சாரலில் நீங்கள் ஈட்டியதைவிட மிகப் பெரியது என நான் கருதுகிறேன்.(45) இவள், பனிரெண்டு வருடங்களாக உண்ணாமல், சமைத்துக் கொண்டே பனிரெண்டு வருடங்களைக் கடத்தி, கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாள்" என்றான்.(46) பிறகு, அருந்ததியிடம் பேசிய அந்தத் தெய்வீக மஹாதேவன், அவளிடம், "ஓ! மங்கலமான பெருமாட்டியே, உன் இதயத்தில் இருக்கும் வரத்தைக் கேட்பாயாக" என்று சொன்னான்.(47)
அப்போது சிவந்த நிறத்தில் அகன்ற கண்களைக் கொண்டிருந்த அந்த மங்கை, ஏழு முனிவர்களுக்கு மத்தியிலும் வைத்து, அந்தத் தேவனிடம், "ஓ! தெய்வீகமானவனே, நீ என்னிடம் நிறைவுகொண்டிருந்த இந்த இடமானது சிறந்த தீர்த்தமாகட்டும். பதரபாசனம் என்ற பெயரில் இஃது அறியப்படட்டும். இது சித்தர்கள் மற்றும் தெய்வீக முனிவர்களுக்குப் பிடித்தமான ஓய்விடமாக இருக்கட்டும்.(48) மேலும், ஓ! தேவர்களின் தேவா, எவன் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, நோன்பை நோற்று மூன்று இரவுகள் இங்கே தங்கியிருக்கிறானோ, அவன் பனிரெண்டு வருடங்கள் நோன்பிருந்ததற்கான கனியை அடையட்டும்" என்று கேட்டாள்.(49) அந்தத் தேவன் {மகாதேவன்}, "அப்படியே ஆகட்டும்" என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்த ஏழு முனிவர்களாலும் புகழப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்றான்.(50) உண்மையில், அம்முனிவர்கள், அந்தத் தேவனைக் கண்டும், களைப்படையாமல், நிறம் மாறாமல், பசி தாகத்தைத் தாங்கவல்லவளாக இருந்த அருந்ததியைக் கண்டும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(51) ஓ! உயர்ந்த அருளைக் கொண்ட பெண்ணே, இவ்வாறே பழங்காலத்தில் தூய ஆன்மா கொண்ட அருந்ததியானவள், ஓ! கடும் நோன்புகளைக் கொண்ட காரிகையே {சுருதாவதியே}, என் நிமித்தமாக நீ அடைந்தது போலவே உயர்ந்த வெற்றியை அடைந்தாள்.(52)
எனினும், ஓ! இனிய கன்னிகையே {{சுருதாவதியே}, நீ இன்னும் கடுமையான தவத்தைச் செய்திருக்கிறாய். உன் நோன்புகளால் நிறைவடைந்த நான், ஓ! மங்கலமானவளே, அருந்ததிக்கு அருளப்பட்ட வரத்தைவிட மேம்பட்ட வரத்தை உனக்குத் தருவேன். ஓ! இனிமையானவளே, அருந்ததிக்கு வரத்தை அருளிய அந்த உயர் ஆன்ம தேவனின் சக்தியின் மூலமும், உனது ஆற்றலின் மூலமும் நான் உனக்கு, "இந்தத் தீர்த்தத்தில் ஓரிரவு மட்டுமே வசித்து, (தியானத்தில்) ஆன்மாவை நிலைக்கச் செய்பவன், தன் உடலைக் கைவிட்டு, (வேறு வழிகளில்) அடைவதற்குக் கடினமான பல அருள் உலகங்களை அடைவான்" என்ற மற்றொரு வரத்தையும் இப்போது கொடுப்பேன்" என்றான் {இந்திரன்}.(53-55)
பிறகு, பெரும் சக்தியைக் கொண்டவனான ஆயிரங்கண் சக்ரன் {இந்திரன்}, தூய்மையடைந்த சுருவாவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, சொர்க்கத்திற்குத் திரும்பிச் சென்றான்.(56) ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வஜ்ரதாரி சென்றதும், அங்கே இனிய நறுமணமிக்க தெய்வீக மலர்மாரி பொழிந்தது.(57) தெய்வீகத் துந்துபிகளும் பேரொலியுடன் அங்கே முழங்கின. ஓ! ஏகாதிபதி, மங்கலமான நறுமணமிக்கத் தென்றலும் அங்கே வீசியது.(58) அந்த மங்கலமான சுருவாவதி, தன் உடலைக் கைவிட்டு, இந்திரனின் மனைவியானாள். கடுந்தவத்தால் அந்நிலையை அடைந்த அவள், எப்போதும் அவனுடன் {இந்திரனுடன்} விளையாடிக் கொண்டு தன் காலத்தைக் கழிக்கத் தொடங்கினாள்" {என்றார் வைசம்பாயனர்}.(59)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சுருவாவதியின் தாயார் யார்? அந்த அழகிய சுருவாவதி எவ்வாறு வளர்ந்தாள்? ஓ! பிராமணரே, என் ஆவல் அதிகமாக இருப்பதால், இதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(60)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஒரு காலத்தில், மறுபிறப்பாளரும், உயர் ஆன்மா கொண்ட முனிவருமான பரத்வாஜருக்கு, அகன்ற கண்களையுடையவளான கிரிடாச்சி {கிருதாசி} என்ற அப்சரஸ் கடந்து செல்வதைக் கண்டு உயிர்நீர் வெளியேறியது.(61) அதன்பேரில் அந்தத் தவசிகளில் முதன்மையானவர் {பரத்வாஜர்} அதைத் தன் கைகளில் ஏந்தினர். மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட ஒரு குடுவையில் அது வைக்கப்பட்டது. அந்தக் குடுவையிலேயே சுருவாவதி என்ற பெண் பிறந்தாள்.(62) தவத்தை செல்வமாகக் கொண்ட பரத்வாஜர், பிறப்புக்குப் பிறகு நடத்தப்படும் சடங்குகளைச் செய்து அவளுக்கு ஒரு பெயரைச் சூட்டினார்.(63) அறஆன்மா கொண்ட அம்முனிவர் {பரத்வாஜர்}, தேவர்களுக்கு முன்னிலையில் வைத்து சுருவாவதி என்ற பெயரைச் சூட்டினார். பரத்வாஜர், அப்பெண்ணைத் தன் ஆசிரமத்தில் வைத்து இமயத்தின் காடுகளுக்குச் சென்றார்.(64) யாதவர்களில் முதன்மையானவனும், பெரும் கண்ணியமும் மிக்கப் பலதேவன் {பலராமன்}, அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிராமணர்களில் முதன்மையானோர் பலருக்கு அதிகச் செல்வத்தைக் கொடுத்து, ஆன்மாவைத் தியானத்தில் நிலைக்கச் செய்து, சக்ரனின் {இந்திரனின்} தீர்த்தத்திற்குச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(65)
---------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 48 ல் உள்ள சுலோகங்கள் : 65
சல்லிய பர்வம் பகுதி – 48 ல் உள்ள சுலோகங்கள் : 65
ஆங்கிலத்தில் | In English |