"Charvaka will certainly avenge my death" said Duryodhana! | Shalya-Parva-Section-64 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் : தொடைகள் முறிந்து களத்தில் கிடக்கும் துரியோதனனுடைய புலம்பல்களைத் திருதராஷ்டிரனிடம் உரைத்த சஞ்சயன்; துரியோதனன் தன் பெற்றோருக்குச் சொல்லியனுப்பிய செய்தி; கௌரவப் படையில் எஞ்சியிருந்த மூவருக்கு தெய்திதாங்கிகளின் மூலம் அவன் சொல்லியனுப்பிய செய்திகள்; தன் நண்பனான சார்வாகனிடம் தன் மரணச் சூழ்நிலையைச் சொல்லுமாறு சொன்ன துரியோதனன்; துரியோதனனின் இறுதி வார்த்தைகளை அஸ்வத்தாமனிடம் சொன்ன தூதர்கள்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, தலையில் மிதிக்கப்பட்டுத் தன் தொடைகள் முறிக்கப்பட்டு, தரையில் நெஞ்சாண்கிடையாகக் கிடந்தவனும், மிகவும் செருக்குடையவனுமான என் மகன் {துரியோதனன்} அப்போது என்ன சொன்னான்?(1) மன்னன் துரியோதனன் மிகவும் கோபம் நிறைந்தவனாகவும், பாண்டு மகன்களிடம் ஆழமாக வேர் விட்டிருந்த பகைமை கொண்டவனாகவும் இருந்தான். எனவே, அவனுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தபோது, அந்தக் களத்தில் அடுத்து என்ன சொன்னான்?" என்று கேட்டான்.(2)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நான் உமக்குச் சொல்லும்போதே கேட்பீராக. ஓ! மன்னா, பேரிடர் நேர்ந்தபோது, துரியோதனன் என்ன சொன்னான் என்பதைக் கேட்பீராக.(3) ஓ! ஏகாதிபதி, தொடைகள் முறிந்திருந்த அம்மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டவனாகக் கலைந்த தன் தலைமயிரைக் கோதிவிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டிருந்தான்.(4) சிரமத்துடன் குழலை {கேசத்தைத்} திரட்டிய அவன் {துரியோதனன்}, ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவன் சினத்தால் நிறைந்தவனாக, தன் கண்களில் இருந்து வேகமாகக் கண்ணீர் பெருகியவனாக {சஞ்சயனான} என்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிறிது நேரம் ஒரு மதங்கொண்ட யானையைப் போலப் பூமியில் தன் கரங்களை அடித்துக் கொண்டிருந்தான்.(5)
தளர்ந்திருந்த தலைமயிரை அசைத்துக் கொண்டும், பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டும், பாண்டுவின் மூத்த மகனை {யுதிஷ்டிரனை} அவன் நிந்திக்கத் தொடங்கினான். பிறகு அவன், பெருமூச்சுவிட்டுக்கொண்டே,(6) "ஐயோ, என் பாதுகாவலரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், கௌதமர் மகன் {கிருபர்}, சகுனி, ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வரான துரோணர்,(7) அஸ்வத்தாமன், வீர சல்லியன், கிருதவர்மன் ஆகியோரும் நானும் கூட இந்த அவலநிலையை அடைந்துவிட்டோம். காலம் தடுக்கப்பட முடியாததாகத் தெரிகிறது.(8) நான் பதினோரு சமுக்களின் தலைவனாக இருந்தும், இந்த அவல நிலையை அடைந்திருக்கிறேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {சஞ்சயா}, காலத்திற்கு மேல் மேன்மையாக எழ எவராலும் முடியாது.(9) இப்போரில் என் தரப்பில் உயிரோடு தப்பியவர்களிடம், நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நான் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டிருக்கிறேன் என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.(10)
பூரிஸ்ரவஸ், பீஷ்மர், பெருஞ்செழிப்பைக் கொண்ட துரோணர் ஆகியோருக்கு இழைக்கப்பட்ட பாவம் நிறைந்த, நியாயமற்ற செயல்கள் பலவாகும்.(11) பாண்டவர்களால் இழைக்கப்பட்ட மற்றுமொரு மிக இழிந்த செயலான இது, நல்லோர் அனைவரின் நிந்தனைக்கும் உள்ளாகும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(12) நியாயமற்ற வகையில் நடந்து கொண்டு ஈட்டப்பட்ட வெற்றியால் அறவோன் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்பட முடியும்? மேலும், நியாயவிதிகளுக்கு முரண்படும் ஒரு மனிதனை எந்த ஞானிதான் ஏற்பான்?(13) இழிந்த பாவியான பாண்டுவின் மகன் விருகோதரனை {பீமனைப்} போல, எந்தக் கல்விமான அநீதியினால் வெற்றியடைந்து இவ்வாறு மகிழ்வான்?(14) தொடைகள் முறிந்து கிடக்கும் என்னைப் போன்ற ஒருவனின் தலையைப் பீமசேனன் கோபத்துடன் தன் காலால் தீண்டியதைவிட ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?(15) ஓ! சஞ்சயா, மகிமையும், செழிப்பும் கொண்டவனும், நண்பர்களுக்கு மத்தியில் வாழ்பவனுமான ஒரு மனிதனிடம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடிய ஒருவன் மரியாதைக்குத் தகுந்தவனா?(16)
என்னைப் பெற்றோர் போர்க்கடமைகளைக் குறித்து அறியாதவர்களல்ல. ஓ! சஞ்சயா, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக:(17) "நான் வேள்விகளைச் செய்திருக்கிறேன், பெரும் எண்ணிக்கையிலான பணியாட்களை முறையாக ஆதரித்திருக்கிறேன், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் ஆட்சி செய்திருக்கிறேன். உயிரோடு இருக்கும் என் எதிரிகளின் தலைக்கு மேலேயே நான் நிலைத்திருக்கிறேன்.(18) என் ஆற்றலை விரிவுபடுத்த என் சொந்தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தேன், நண்பர்களுக்கு ஏற்புடையதை {இனிமையானதைச்} செய்தேன். என் எதிரிகள் அனைவரையும் நான் தாக்குப்பிடித்தேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(19) பகைவரின் நாடுகளில் முன்னேறி, மன்னர்களை அடிமைகளைப் போல நான் ஆணையிட்டிருக்கிறேன். நான் விரும்பிய மற்றும் அன்புடன் இருந்த அனைவரிடமும் நல்ல முறையில் நடந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(20)
நான் என் சொந்தங்கள் அனைவரையும் மதித்திருக்கிறேன் மற்றும் என்னைச் சார்ந்திருந்தோர் அனைவரின் நன்மையையும் கவனித்திருக்கிறேன். மனித இருப்பின் எல்லைகளான அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்றையும் நான் கவனித்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(21) பெரும் மன்னர்களுக்கு நான் ஆணையிட்டேன், பிறரால் அடைய முடியாத கௌரவம் என்னுடையதானது. நான் எப்போதும் என் பயணங்களை மிகச் சிறந்த குதிரைகளிலேயே செய்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(22) நான் வேதங்களைக் கற்றிருக்கிறேன், விதிப்படி தானங்களையும் அளித்திருக்கிறேன். என் வாழ்வு மகிழ்ச்சியிலேயே கழிந்தது. என் வகைக்காகக் கடமைகளை நோற்ற நான், இதன் பிறகு பல அருள் உலகங்களை அடைவேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(23) போரில் வெல்லப்பட்டு, என் எதிரிகளைத் தலைவர்களாகக் கொண்டு தொண்டு புரியும் நிலை எனக்கு ஏற்படாதது நற்பேறாலேயே. ஓ! தலைவா, பெருகியிருக்கும் செழிப்பானது, என் மரணத்திற்குப் பிறகு மட்டுமே என்னைக் கைவிட்டு மற்றொருவனுக்காகக் காத்திருக்கப் போகிறது.(24) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கும் நல்ல க்ஷத்திரியர்களால் விரும்பப்படும் மரணத்தையே நான் அடைந்திருக்கிறேன். என்னைவிட நற்பேறு பெற்றவன் வேறு எவன் இருக்க முடியும்?(25)
பகைமையின் பாதையில் இருந்து விலகாமலும், சாதாரண மனிதனைப் போல வெல்லப்படாமலும் நான் இருப்பது நற்பேறாலேயே. சில வம்புகள் செய்திருந்தாலும் நான் வெல்லப்படாமல் இருப்பது நற்பேறாலேயே.(26) நியாயமான போர்விதிகளுக்கு முரணாக நியாயமற்ற வகையில் நான் கொல்லப்பட்டிருப்பதால், என் படுகொலையானது உறங்கிக் கொண்டிருப்பவனையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ கொல்வதைப் போன்றதோ, நஞ்சூட்டிக் கொல்லப்படுவதைப் போன்றதோ ஆகும்.(27) உயர்ந்த அருளைக் கொண்டவர்களான அஸ்வத்தாமர், சாத்வத குலத்தின் கிருதவர்மன் மற்றும் சரத்வான் மகனான கிருபர் ஆகியோரிடம்,(28) "விதிகளை மீறியவர்களும், அநீதிமிக்கச் செயல்களைச் செய்தவர்களுமான பாண்டவர்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை வைக்காதீர்கள்" என்ற இந்த என் வார்த்தைகள் சொல்லப்பட வேண்டும்" என்று {சஞ்சயனிடம் துரியோதனன்} சொன்னான்.(29)
அதன்பிறகு, உண்மையான ஆற்றலைக் கொண்டவனான உமது அரச மகன் {துரியோதனன்} செய்தி தாங்கிகளிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,: "போரில் நான் பீமசேனனால் மிக அநியாயமாகக் கொல்லப்பட்டேன்.(30) ஏற்கனவே சொர்க்கத்திற்குச் சென்று விட்டவர்களான துரோணர், கர்ணன், சல்லியன், பெரும் சக்தி கொண்ட விருஷசேனன், சுபலனின் மகனான சகுனி, பெரும் வீரம் கொண்ட ஜலசந்தன், சோமதத்தர் மகனான மன்னர் பகதத்தர், வலிமைமிக்க வில்லாளியான சிந்துமன்னன் ஜெயத்ரதன், துச்சாசனன் தலைமையிலானவர்களும், எனக்கு இணையானவர்களுமான என் தம்பிகள் அனைவர், பேராற்றலைக் கொண்டவனான துச்சாசனன் மகன், என் மகன் லக்ஷ்மணன், மற்றும் என்னுடன் சேர்ந்து போரிட்ட ஆயிரக்கணக்கானோரின் வழியைப் பின்பற்றிப் பணமற்ற வழிப்போக்கனைப் போல நான் இப்போது செல்லப் போகிறேன்.(31-34)
ஐயோ, துன்பத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என் தங்கையானவள், அவளது சகோதரர்கள் மற்றும் கணவனின் படுகொலையைக் கேட்டுக் கவலை நிறைந்தவளாக எவ்வாறு வாழ்வாள்?(35) ஐயோ, காந்தாரி மற்றும் மருமகள்கள், மற்றும் பேரர்களின் மனைவிமார்கள் ஆகியோருடன் கூடியவரும், என் தந்தையுமான முதிர்ந்த மன்னர் {திருதராஷ்டிரர்} எவ்வளவு அவலநிலையில் இருக்கப் போகிறார்?(36) அழகியும், அகன்ற கண்களைக் கொண்டவளும், மகன்களற்று, கணவனற்றுப் போனவளுமான லக்ஷ்மணனின் தாய் {பானுமதி}, விரைவில் தன் மரணத்தைச் சந்திப்பாள் என்பதில் ஐயமில்லை.(37) பேச்சில் வல்லவரும், அர்ப்பணிப்பு கொண்டவரும், துறவியுமான சார்வாகர்[1], அனைத்தையும் அறிந்தால், அந்த அருளப்பட்ட மனிதர் நிச்சயம் என் மரணத்திற்காகப் பழிதீர்ப்பார்.(38) மூவுலகங்களிலும் கொண்டாடப்படும் புனிதக் களமான சமந்தபஞ்சகத்தில் இறப்பதால், நான் நிச்சயம் அழிவில்லாத உலகங்களை அடைவேன்" என்றான் {துரியோதனன்}.(39)
[1] சார்வாகன் பிராமண வேடத்தில் இருந்த ஓர் அரக்கனாவான் என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்புச் சொல்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பொருள்முதல்வாதம் மற்றும் நாத்திக சம்பிரதாயத்தை நிறுவிய ஒரு சார்வாகர் மிகப் புகழ்பெற்றவராகத் திகழ்ந்தார். இங்கே குறிப்பிடப்படுபவர் அவர் அல்ல. "சார்வாகன்" என்ற சொல்லின் பொருள் "அழகாகப் பேசுபவன்" என்பதாகும்.
அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, மன்னனின் இந்தப் புலம்பல்களைக் கேட்டு, ஆயிரக்கணக்கான மனிதர்கள் கண்கள் நிறைந்த கண்ணீருடன் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(40) காடுகள், கடல்கள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த உலகமும், பேரொலியை உண்டாக்கியபடியே பயங்கரமாக நடுங்கத் தொடங்கியது. திசைகளின் புள்ளிகள் அனைத்தும் இருளடைந்தன.(41) அந்தத் தூதர்கள் {செய்திதாங்கிகள்} துரோணரின் மகனிடம் {அஸ்வத்தாமனிடம்} சென்று, கதாயுத மோதல் நடந்த விதம், மன்னனின் {துரியோதனனின்} வீழ்ச்சி ஆகியவை அனைத்தையும் {நடந்தவாறே} சொன்னார்கள்.(42) அவர்கள், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரோணரின் மகனிடம் அனைத்தையும் சொன்னபிறகு, நீண்ட நேரத்திற்குச் சிந்தித்தவாறே அங்கிருந்த பிறகு, துயரால் பீடிக்கப்பட்டு, தாங்கள் எங்கிருந்து வந்திருந்தனரோ அங்கேயே சென்றுவிட்டனர்" {என்றான் சஞ்சயன்}.(43)
சல்லிய பர்வம் பகுதி – 64 ல் உள்ள சுலோகங்கள் : 43
ஆங்கிலத்தில் | In English |