Aswatthama became the generalissimo! | Shalya-Parva-Section-65 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : துரியோதனன் கிடந்த இடத்திற்குக் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர் வந்தது; விழுந்திருக்கும் துரியோதனனைக் கண்டு அஸ்வத்தாமன் புலம்பியது; துரியோதனனின் மறுமொழி; பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனைப் படைத்தலைவனாக்குமாறு கிருபரிடம் கேட்டுக் கொண்ட துரியோதன்; மூன்று வீரர்களும் துரியோதனனைத் தனிமையில் விட்டு அகன்றது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கூரிய கணைகள், கதாயுதங்கள், வேல்கள் மற்றும் ஈட்டிகளால் மிகவும் காயமடைந்தும், கொல்லப்படாமல் கௌரவப் படையில் எஞ்சியிருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் சாத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோர் மூவரும், துரியோதனனின் வீழ்ச்சியைக் கேட்டு,(1,2) தங்களின் வேகமான குதிரைகளில் ஏறி விரைவாகப் போர்க்களத்திற்கு வந்தனர். அங்கே அவர்கள், காட்டில் சூறாவளியால் வீழ்த்தப்பட்ட பெரும் சால மரத்தைப் போல அந்த உயர் ஆன்ம திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, தரையில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள், காட்டில் வேடனால் வீழ்த்தப்பட்ட ஒரு வலிமைமிக்க யானையைப் போலக் குருதியில் நனைந்து, வெறுந்தரையில் கிடந்து துடித்துக் கொண்டிருக்கும் அவனைக் கண்டனர். அவன், அபரிமிதமான இரத்த ஓடையில் குளித்தவனாக, வேதனையில் உருண்டு புரண்டு கொண்டிருப்பதைக் கண்டனர்.(3-5)
உண்மையில் அவர்கள், அவனைப் {துரியோதனனைப்} பூமியில் விழுந்த சூரியனைப் போலவோ, பெருங்காற்றால் வற்றிய பெருங்கடலைப் போலவோ, ஆகாயத்தில் மூடுபனியால் வட்டில் மறைக்கப்பட்ட முழு நிலவைப் போலவோ கண்டனர். ஆற்றலில் யானைக்கு இணையானவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான அந்த மன்னன், புழுதியால் மறைக்கப்பட்டுப் பூமியில் கிடந்தான்.(6,7) ஒரு நாட்டின் ஏகாதிபதியைச் சுற்றி, செல்வத்தில் ஆசை கொண்டோர் இருப்பதைப் போல அவனைச் சுற்றிலும் ஊனுண்ணும் பல்வேறு பயங்கர விலங்குகளும், உயிரினங்களும் இருந்தன.(8) அவனது நெற்றி சினத்தால் ஆழ்வடுக்களைப் போலச் சுருங்கியிருந்தது, அவனது கண்கள் கோபத்தால் உருண்டு கொண்டிருந்தன. மனிதர்களில் புலியான அந்த மன்னன், (வேடர்களால்) வீழ்த்தப்பட்ட புலியைப் போலச் சினம் நிறைந்தவனாக இருப்பதைக் கண்டனர்.(9) பெரும் வில்லாளிகளான கிருபரும், பிறரும், பூமியில் வீழ்ந்து கிடந்த அந்த ஏகாதிபதியைக் கண்டு திகைப்படைந்தனர்.(10)
அவர்கள் தங்கள் தேர்களில் இருந்து இறங்கி மன்னை {துரியோதனனை} நோக்கி ஓடினர். துரியோதனனைக் கண்ட அவர்கள் அனைவரும் அவனைச் சுற்றி பூமியில் அமர்ந்தனர்.(11) அப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீர் நிறைந்த கண்களுடன், ஒரு பாம்பைப் போல மூச்சு விட்டுக் கொண்டு, பூமியில் கிடப்பவனும், மன்னர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான அந்தப் பாரதக் குலத் தலைவனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(12) "ஓ! மனிதர்களில் புலியே, புழுதிக்கறை படிந்து வெறுந்தடையில் நீ கிடப்பதால், மனிதர்களின் உலகில் நிலையானது ஏதுமில்லை என்பது உண்மையே.(13) மொத்த உலகிற்கும் ஆணை பிறப்பிக்கும் மன்னனாக நீ இருந்தாய். பிறகு ஏன், ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இத்தகு தனிமையான காட்டில் வெறுந்தரையில் தனியனாக நீ கிடக்கிறாய்?(14) உன் அருகில் துச்சாசனனையோ, பெரும் தேர்வீரனான கர்ணனையோ, உன் நூற்றுக்கணக்கான நண்பர்களையோ நான் காணவில்லை. ஓ! மனிதர்களில் காளையே, இஃது என்ன?(15)
ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவனே {துரியோதனனே}, புழுதிக் கறைபடிந்து வெறுந்தரையில் நீ இவ்வாறு கிடப்பதால், யமனின் {விதியின்} வழிகளை அறிவது கடினம் என்பதில் ஐயமில்லை.(16) ஐயோ, மணிமுடிசூட்டுவிழாவில் புனித நீர் தெளிக்கப்பட்ட கேசங்களைக் கொண்ட க்ஷத்திரியர்கள் அனைவருக்கும் தலைமையில் இந்த எதிரிகளை எரிப்பவன் {இந்தத் துரியோதனன்} செல்வான். ஐயோ இப்போது அவன் புழுதியை உண்கிறான். காலம் அதன் வழியில் கொண்டு வரும் முரண்களைப் பாருங்கள்.(17) தூய்மையான உன் வெண்குடை எங்கே? ஓ! மன்னா {துரியோதனா}, காற்றை வீசும் வெண்சாமரம் எங்கே? ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, உனது பரந்த படையானது இப்போது எங்கே?(18) உலகின் தலைவனாக இருந்த நீ, இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், புத்தகம் {சாத்திரங்களைச்} சாராத காரணங்களைக் கொண்ட நிகழ்வுகளின் வழிகள் புதிர் நிறைந்தவையே என்பது நிச்சயம்.(19) சக்ரனுக்கு இணையான நீ, பரிதாபகரமான இத்தகு அவல நிலைக்குக் குறைக்கப்பட்டதால், மனிதர்கள் அனைவரின் செழிப்பும் நிலையில்லாததே என்பதில் ஐயமில்லை" என்றான் {அஸ்வத்தாமன்}.(20)
அஸ்வத்தாமனின் இந்தக் கவலைநிறைந்த வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் {துரியோதனன்}, அச்சந்தர்ப்பத்திற்குத் தகுந்த இந்த வார்த்தைகளை அவனுக்குப் பதிலாக அளித்தான்.(21) அவன் தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மறுபடியும் சோகத்தால் கண்ணீர் சிந்தினான். பிறகு அந்த மன்னன், கிருபர் தலைமையிலான அந்த வீரர்களிடம்,(22) "(உயிரினங்கள் அனைத்தின்) மரணக்கட்டுப்பாடு படைப்பாளனால் விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காலத்தின் வழியில் அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் நேர்கிறது.(23) அந்த மரணமே இப்போதும் உங்கள் அனைவரின் கண்களுக்கு முன்பாக எனக்கு நேர்கிறது. மொத்த உலகையும் ஆட்சி செய்த நான் இந்த அவல நிலைக்குக் குறைக்கப்பட்டிருக்கிறேன்.(24) என்ன பேரிடர் நேரிட்டாலும், நான் போரில் இருந்து ஒருபோதும் புறமுதுகிடாதது நற்பேறாலேயே. குறிப்பாக வஞ்சகத்தின் துணையைக் கொண்டு அந்தப் பாவிகளால் நான் கொல்லப்பட நேர்ந்ததும் நற்பேறாலேயே.(25)
பகைமையில் ஈடுபட்டபோதும், நான் வீரத்தையும், விடாமுயற்சியையும் எப்போதும் வெளிப்படுத்தியது நற்பேறாலேயே. நான் என் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் போரில் கொல்லப்பட்டதும் நற்பேறாலேயே.(26) இந்தப் பெரும்படுகொலையில் உயிரோடு தப்பியவர்களாக, பாதுகாப்பாக, உடல்நலத்துடன் இருப்பவர்களாக உங்களை நான் காண்பதும் நற்பேறாலேயே.(27) இஃது எனக்கு மிகவும் ஏற்புடையதாகும் {இனிமையானதாகும்}.(27) பாசத்தால் என் மரணத்திற்காக வருந்தாதீர்கள். வேதங்களுக்கு அதிகாரம் இருக்குமானால், நான் நிச்சயம் அழிவில்லாத பல உலகங்களை அடைந்திருக்கிறேன்.(28) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணனின் மகிமையை நான் அறியாதவனல்ல. அவன், க்ஷத்திரியக் கடமைகளை முறையாக நோற்று என்னை விழச் செய்யவில்லை.(29) நான் அவனை அடைந்துவிட்டேன். எக்காரணத்திற்காகவும், எவரும் எனக்காக வருந்தக்கூடாது. உங்களைப் போன்ற மனிதர்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதையே நீங்கள் செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் வெற்றிக்காக எப்போதும் முயற்சி செய்தீர்கள். எனினும், விதி கலங்கடிக்கப்பட முடியாததாகும்" என்றான் {துரியோதனன்}.(30)
இவ்வளவே சொன்ன அந்த மன்னன் {துரியோதனன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கண்ணீரால் அலைமோதும் கண்களுடன், மரணவேதனையால் கலக்கமடைந்து அமைதியை அடைந்தான்.(31) மன்னனின் கண்ணீரையும், துயரத்தையும் கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அண்ட அழிவின்போது காணப்படும் நெருப்பைப் போலக் கோபத்தால் சுடர்விட்டெரிந்தான்.(32) சினத்தில் மூழ்கிய அவன் {அஸ்வத்தாமன்} தன் கரங்களைப் பிசைந்து கொண்டே, கண்ணீரால் கரகரப்பான குரலுடன் மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(33) "ஒரு கொடூர சதியின் மூலம் அந்த இழிந்தவர்களால் என் தந்தை {துரோணர்} கொல்லப்பட்டார். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, இந்த அவலநிலைக்கு நீ குறைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது எரிக்கப்படுவதைப் போல அச்செயல் கூட என்னை இவ்வளவு அதிகமாக எரிக்கவில்லை.(34) ஓ! தலைவா, உண்மையின் மீதும், என் பக்திச் செயல்கள் அனைத்தின் மீதும், என் தானங்கள், என் அறம், நான் வென்ற அறத்தகுதிகள் அனைத்தின் மீதும் ஆணையிட்டு நான் சொல்லப் போகும் இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக.(35) நான் இன்று, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வைத்து, என் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், பாஞ்சாலர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவைப்பேன். ஓ! ஏகாதிபதி, எனக்கு அனுமதி அளிப்பதே உனக்குத் தகும்" என்றான் {அஸ்வத்தாமன்}.(36)
துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} சொன்னதும், தன் இதயத்திற்கு மிகவும் ஏற்புடையதுமான இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குரு மன்னன், கிருபரிடம், "ஓ! ஆசானே, ஒரு குடம் நிறைந்த நீரைத் தாமதமில்லாமல் என்னிடம் கொண்டு வாரும்" என்றான்.(37) மன்னனின் இந்த வார்த்தைகளின் பேரில் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவர் {கிருபர்}, ஒரு பாத்திரம் நிறைந்த நீரை விரைவாகக் கொண்டு வந்து, மன்னனை அணுகினார்.(38) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்}, அந்தக் கிருபரிடம், "ஓ! பிராணர்களில் முதன்மையானவரே, நீர் அருளப்பட்டிருப்பீராக, நீர் எனக்கு நன்மையை விரும்பினால், என் உத்தரவின் பேரில் இந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} படைத்தலைவனாக நிறுவப்படட்டும்.(39) மன்னனின் உத்தரவின் பேரில், ஒரு பிராமணன் கூடப் போரிடலாம், அதிலும் குறிப்பாக க்ஷத்திரியப் பயிற்சிகளைப் பின்பற்றுபவர்கள் {நிச்சயம்} போரிடலாம். சாத்திரங்களைக் கற்றோர் இதைச் சொல்கின்றனர்" என்றான் {துரியோதனன்}.(40)
சரத்வான் மகனான கிருபர், மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, அம்மன்னனின் உத்தரவின் பேரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைப்} படைத்தலைவனாக நிறுவினார்.(41) பட்டஞ்சூட்டல் முடிந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்களில் சிறந்தவனை ஆரத்தழுவிக் கொண்ட அஸ்வத்தாமன், தன் சிங்க முழக்கங்களால் பத்து புள்ளிகளையும் எதிரொலிக்கச் செய்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.(42) மன்னர்களில் முதன்மையானவனான துரியோதனன், அபரிமிதமான குருதியால் மறைக்கப்பட்டு, அனைத்துயிர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அவ்விரவை அங்கேயே கழிக்கத் தொடங்கினான்.(43) போர்க்களத்தில் இருந்து விரைவாகச் சென்ற அவ்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துயரத்தால் கலங்கிய இதயங்களுடன், கவலையுடனும், மெய்யுறுதிப்பாடுடனும் சிந்திக்கத் தொடங்கினர்" {என்றான் சஞ்சயன்}.(44)
**********கதாயுத்த உப பர்வம் முற்றும்**********
********** சல்லியபர்வம் முற்றிற்று **********
சல்லிய பர்வம் பகுதி – 65 ல் உள்ள சுலோகங்கள் : 44